Tuesday, May 9, 2017

சிறுகதை உத்திகள் 08.

சிறுகதை உத்திகள் chiRukathai uthtikaL

சிறுகதை உத்திகள்

ரமணி
(இலக்கிய வேல், மே 2017)

08. கதைச் சூழ்நிலை

தைச் சூழ்நிலை என்பது கதை நிகழும் களம், காலம், சூழல் ஆகும். இவை முக்கிய பாத்திரத்தின் நிலை, எண்ணங்கள், உணர்வுகளை பாதிப்பதாகவும் அவற்றுடன் பொருந்துவதாகவும் அமையவேண்டும். அவ்வாறு அமைந்து, சூழல் கதையின் குரலையும் உணர்வையும் தாங்குவதாக இருந்தால், வாசகரைக் கதையினுள் ஈர்க்க முடியும்.

ஒரு சித்திரத்தின் பின்னணி அசையா ஜடப்பொருளாகிய சித்திரப்படாம் (canvas). அதில் சித்திரத்தின் சூழலை ஓவியன் வண்ணங்களாலும் கோடுகளாலும் விளக்குகிறான். அதில் ஒலிகள் இல்லை, உணர்வு பார்ப்பவன் ரசனையைப் பொறுத்தது.

ஒரு திரைப்படத்தின் பின்னணி அசையும் ஜடப்பொருளாகிய திரை. இங்குச் சூழலை விளக்க இயக்குனன் சலனம், சித்திரம், வண்ணம், கோடுகளை ஒளியுடன், ஒலியுடன், இசையுடன் இழைக்கிறான். சூழலில் அவனுக்குள்ள பரிச்சயத்தைப் பொறுத்து, பார்ப்பவனின் உணர்வு வலு நிறைந்தோ குறைந்தோ அமையும். திரைப்படத்தில் காட்சிகள் மாறிக்கொண்டே இருப்பதால், பார்ப்பவன் பார்ப்பதை நிறுத்தி முன்னால் சென்றவற்றை மனத்தில் மீண்டும் அசைபோட்டு உணரமுடியாது. (படத்தட்டாகவோ கணினித் திரையிலோ பார்த்தால் முன்பின் செல்லமுடியும்.)

சூழலின் பின்னணி ஒரு சிறுகதையில்--பெருங்கதையிலும்--எப்படி அமைகிறது என்றால்,

வெள்ளித் திரையைவிடச் சிறந்த வாசகன் மனமானது,

  • சித்திரம், வண்ணம், கோடுகள், ஒளி, ஒலியுடன் உணர்வையும் தன்னுள் எழுப்பி,
  • வருணனை, உரைநடை, காட்சி இவற்றை,
  • கதையாசிரியன் எதிர்பார்க்கும் அளவிலோ, அல்லது
  • இன்னும் நுண்மையாகவோ ஈடுபட்டுத் தோய்கிறது.
  • திரைப்படம் போலின்றி, அவ்வப்போது சூழல் விரிப்பில் நின்றும் நகர்ந்தும் திரும்பிவந்தும் புலன்-மன உணர்வுகளை நுகர்ந்து திளைக்கிறது.

சிறுவயதில் என்னை ஓட்டலுக்குச் சென்று இட்லி-சாம்பார் பார்சல் வாங்கிவர அனுப்பினார்கள். ’சாம்பாருக்காகத்தான் இட்டிலி என்று சொல்!’ என்று தந்தை சொல்லி அனுப்பியதன் தாத்பரியம் பிடிபடாமல் நான் ஓட்டலில் ’இட்டலிக்காகத்தான் சாம்பார்’ என்று மாற்றிச்சொல்லி, வாங்கிக் கட்டிவந்து, வீட்டில் வாங்கிக்கட்டிக்கொண்டேன்!

சிறுகதையும் அதன் சூழலும் இட்டிலி, சாம்பார்-சட்னி-மிளகாய்ப்பொடி போலத்தான்! சாம்பார் இட்லியாகச் செய்தால், பின்னணியான சாம்பாரின் சுவையில் இட்டிலியின் சுவை மூழ்கிவிடுகிறது! இதுவே இட்டிலியை விண்டு சட்னி வகைகள், மிளகாய்ப்பொடி சேர்த்தோ, சாம்பாரில் தோய்த்தோ உண்ணச் செய்தால் இட்டிலியின் தனிச்சுவை அதிகரிக்கிறது! சாம்பார்-சட்னி-மிளகாய்ப்பொடி இல்லாமல் இட்லியைத் தனியாக உண்ணமுடியாது என்றாலும், பின்னணி சேர்த்து உண்பதில் இட்லியின் சுவையே பிரதானமாக இருக்கவேண்டும்.

சூழ்நிலையும் வருணனையும்

சிறுகதையின் சூழ்நிலையை நிறுவதே வருணனை என்பதால் அதைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். பாத்திர வருணனை பற்றி விவரமாகக் ’கதைப் பாத்திரங்கள்’ இயலில் பார்த்தோம். இங்கு மற்ற வருணனைகள் பற்றி.

விரித்துரைப்பது (discourse) என்பது புனைகதையில் நான்கு விதங்களில் அமையும்:

  • பொது வருணனை (description),
  • கதை வருணனை (narration),
  • எடுத்துரைத்தல் (exposition), மற்றும்
  • விவாதித்தல் (argumentation).
ஒரு பெண்ணைப் பற்றி விரித்துரைக்கும் போது நான்

  • அவள் முகவிலாசம், அங்க லாவண்யங்களை விவரித்தால் அது பொது வருணனை
  • அவள் வாழ்க்கை, கதைக்குள் வந்தது பற்றி விவரங்களைச் சொன்னால் அது கதை வருணனை
  • அவள் என்னுள் எழுப்பும் ஆசை, மரியாதை, அன்பு, தெய்வீக உணர்வுகளை விவரித்தால் அது எடுத்துரைத்தல்
  • அவள் குன நலன்களையோ சிதைவுகளையோ சொல்லி ஆராய்ந்தால் அது விவாதித்தல்.
ஒரு சிறுகதையில் ஆசிரியரின் தேவையப் பொறுத்து வருணனை இந்த நான்கு விதங்களில் அமையலாம். அப்படி அமையும் வருணனை கீழுள்ள வகைகளில் அமையும்.

  1. குறிப்பால் உணர்த்துவதாக
  2. அடைமொழிகளால் ஆனதாக
  3. ஓர் எளிய சூசனத்தில் அறிவதாக
  4. நேரடியாக
  5. விளைவுகள் மூலம் உணர்த்துவதாக
  6. உவமை, உருவகம் போன்றோர் அணியைக் கொண்டதாக
  7. தன்மை, படர்க்கை போன்று கதைசொல்லும் நோக்கைப் பொறுத்ததாக
  8. ஏழு விதக் கூறுகளைக் கொண்டு எழுந்ததாக.

1. குறிப்பால் உணர்த்துவதாக

தி. ஜானகிராமன்: ’அதிர்வு’

இருள் இல்லை. ஒளியில்லை. வெள்ளை இல்லை; கறுப்பு இல்லை; வேறு வர்ணமும் இல்லை. வேலியும் வரம்பும் மேலும் கீழும் இல்லாத வெறும் வெளியொன்றில் நிற்பது போலிருந்தது. அவளுடைய உடலில் பகபகவென்று பரந்துகொண்டிருந்த அதிர்வு மட்டும் நிற்கவில்லை. பற்றியிருந்த விரல் வழியாகப் பாய்ந்து அவள் உடல் முழுவதையும் நடுக்கி அதிர வைத்துவிட்டது.

2. அடைமொழிகளால் ஆனதாக

மௌனி: ’பிரபஞ்ச கானம்’

அடிக்கடி அவன் தன் வாழ்க்கைப் புத்தகத்தைப் பிரித்து வெறித்துத் திகைத்து திண்ணையில் நிற்பதுண்டு. பின் புரட்டுதலில் கவலைக் கண்ணீர் படிந்து, மாசுபட்ட ஏடுகள், அவன் மனக்கண்முன் தோன்றும். முன்னே எழுதப்படாத ஏடுகளில், தன் மனப்போக்குக் கொண்டு எழுதுவதால், பளீரெனத் தோன்றுபவை சில, மங்கி மறைதல் கொள்ளுபவை சில. இரண்டுமற்று சில நேரத்தில், எதையோ நினைத்து உருகுவான்.

3. ஓர் எளிய சூசனத்தில் அறிவதாக

ஜெயகாந்தன்: ’சுமைதாங்கி’

காலனின் தூதுவன்போல் ஒரு போலீஸ்காரன் அந்தக் காலனிக்குள் வந்து ஒவ்வொரு வீடாகக் கேட்டான். கேட்டான்... கேட்டானா?... அவன் தன் நெஞ்சும் உடலும் பதைபதைக்க ஒவ்வொரு வீட்டின் முன்பும் நின்று, "அம்மா! உங்க வீட்டிலே ஏதாவது கொழந்தை, ஆம்பளைக் கொழந்தை, பத்து வயசு இருக்கும், காக்கி நிசாரும் வெள்ளைச் சட்டையும் போட்டுக்கிட்டு... உண்டுங்களா?" என்று திணறினான் போலீஸ்காரன்.

4. நேரடியாக

சுஜாதா: ’இரண்டணா’

"இரண்டணா ஒரு தனி நாணயம். பித்தளை. சதுர வடிவில் இருக்கும். ஒரணா போல அசிங்கமான நெளிநெளிகள்-இல்லாமல் கூர்மையான முனைகளை மழுப்பி ஒருபக்கத்தில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் தன் தலையில் கிரீடத்துடன் சைடுவாகாக பார்த்துக்கொண்டிருப்பார். அவர் கிரீடத்தை தூக்கிப் பார்த்தால் அப்போது தான் கிராப்பு வெட்டிக் கொண்டிருக்கலாம் என்று தோன்றும்."

5. விளைவுகள் மூலம் உணர்த்துவதாக

சுஜாதா: ’இரண்டணா’

நான் சொல்லும் நாட்களில் சீரங்கம் திருச்சி பஸ் கட்டணம் இரண்டணா. பெனின்சுலர் கபேயில் தோசை இரண்டணா . கிருஷ்ணன் கோட்டை வாசலில் இலந்தைப்பழம் லேக்கா உருண்டை-கொடுக்காப்புளி எல்லாமே காலணாதான் அதாவது இரண்டணாவில் எட்டில் ஒரு பங்கு.

6. உவமை, உருவகம் போன்றொரு அணியைக் கொண்டதாக

சுஜாதா: ’அம்மா மண்டபம்’

திகட்டியது பரமேஸ்வரிக்கு. டூரிஸ்ட் பஸ்ஸில்தான் எத்தனை குதூகலம்! வாத்தியக் கோஷ்டி, இளமைக் கலாட்டா, உள்ளத்தை, நெஞ்சத்தை வலிக்காமல் பற்றவைத்ததுபோல், ஐஸ் வைத்து ஜ்வாலைகள் அமைத்ததுபோல். அல்லது கடற் காற்றில் மைசூர் பாக்கு செய்ததுபோல், கிறுக்குப் பிடித்த கன்றுக்குட்டி சந்தோஷங்கள்...

சுஜாதாவில் வருணனைகள் போல்-எனும் சொல்லால் உவமைகளாக அமைந்தாலும், அவை hyperbole என்னும் உயர்வு நவிற்சி அணியைச் சார்ந்தவை.

7. தன்மை, படர்க்கை போன்று கதைசொல்லும் நோக்கைப் பொறுத்ததாக

முன்னிலை நோக்கில் சிறுகதை பெரும்பாலும் எழுதப்படுவதில்லை. சிறுகதையைப் படர்க்கை நோக்கில் எழுதும்போது ஆசிரியர் கடவுளின் பார்வையில் எதையும் எங்கும் கண்டு விவரிக்கலாம். தன்மை நோக்கில் அதே கதையை எழுதும்போது அந்த ’நான்’ அறிந்தவற்றை மட்டுமே ஆசிரியர் விவரிக்கமுடியும்.

கதை சொல்லும் நோக்கு எதுவாயினும் ஆசிரியர் ஓர் உச்சநிலையில் இருந்துகொண்டு எல்லாவற்றையும் பார்ப்பது போலவோ, நெடுஞ்சாலைப் பயணத்தில் பார்ப்பவரும் பொருட்களும் நகர்வது போலவோ, சாலையின் ஓரத்தில் நிலையாக நிற்பவன் தன்னைக் கடந்து வாகனங்கள் செல்லுவதைக் காண்பதுபோல், பொருட்களைச் சலனத்தில் காண்பதாகவோ, அல்லது இவற்றின் கலவையாகவோ வருணனை அமையலாம்.

8. ஏழு விதக் கூறுகளைக் கொண்டு எழுந்ததாக

சிறுகதையின் வருணனை ஏழு விதமான கூறுகளை உள்ளடக்கியது: உற்றுநோக்கல், வாசிப்பு, கற்பனை, ஒப்புமை, தேர்வு, ஒருங்கிணைப்பு, சுருக்கம். புதிதாக எழுதுவோரும், தொடக்கநிலையில் உள்ளோரும் இந்த ஏழு விதத்திலும் தம் கதைசொல்லும் ஆற்றலை வளர்த்துக்கொள்ளும்போது, அவற்றின் உந்துதலில் எழும் சிறுகதைகள் சிறப்பாக அமையும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

வருணனையின் விவரங்கள் சொன்னபின், இந்த இயலின் தொடக்கத்தில் சொன்னதுபோல், களம், காலம், பின்னணிச் சூழல் இவற்றுடன் கதைச் சூழ்நிலைக்கு உள்ள தொடர்பைக் காண்போம்.

கதைச் சூழ்நிலைக் கூறுகள்: களம்

கதை நிகழும் களத்தைப் பற்றிச் சொல்லும் விவரங்கள் அதன் வட்டார வண்ணத்தில் மொழி, பழக்கவழக்கங்கள், உடை போன்ற எல்லாவற்றையும் தொடுவதாகப் பரந்திருக்கவேண்டும். இரண்டு உதாரணங்கள்
சுந்தர ராமசாமி: ’பிரசாதம்’

எழுபத்திமூன்று நாற்பத்தியேழு சுற்றிச் சுற்றி வந்தான். அன்றிரவுக்குள் அவன் ஐந்து ரூபாய் சம்பாதித்தாக வேண்டும்.
...
சந்திலிருந்து ஒரு குதிரை வண்டி திரும்பி மெயின் ரஸ்தாவில் ஏறிற்று. சாரதி சிறுபயல். மீசை முளைக்காத பயல். அவனும் விளக்கேற்றி வைத்திருக்கிறான்! வண்டி அருகே வந்தது.

"லேய், நிறுத்து." குதிரை நின்றது.
"ஒங்கப்பன் எங்கலே?" “வரலே."
"ஏனாம்?" "படுத்திருக்காரு/"
"என்ன கொள்ளே?" "வவுத்தெ வலி."
"எட்டணா எடு." "என்னாது?"
"எட்டணா எடுலே." "ஒம்மாண இல்லை."
"ஒங்கம்மெ தாலி. எடுலே எட்டணா."
"இன்னா பாரும்" என்று சொல்லிக்கொண்டே பயல் நுகக்காலில் நின்றுகொண்டு வேஷ்டியை நன்றாக உதறிக் கட்டிக்கொண்டான்.
"மோறையைப் பாரு. ஓடுலெ ஓடு. குதிரை வண்டி வச்சிருக்கான் குதிரை வண்டி. மனுசனாப் பொறந்தவன் இதிலே ஏறுவானாலே."

குதிரை நகர்ந்தது.

சுஜாதா: குண்டு ரமணி

ரமணி பார்த்து, சட்டி மூஞ்சி நிறையச் சிரித்து, ‘வாரும் கிருஷ்ணா! மத்தெடுத்துண்டு வரேள்! வாரும்!’ என்றவள், நாணு சற்றும் எதிர்பாராத விதத்தில் மத்தைப் பிடுங்கி உடைத்துப் போட்டு, அவரை அலாக்காகத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டாள். அப்புறம் எங்கிருந்தோ வந்த வெறியில் அப்படியே அவரைப் பந்தாடுவது போலக் கீழே எறிந்துவிட்டுப் புடைவை மண்ணைத் தட்டிக்கொண்டு புறப்பட்டுச் சென்றாள்.

நாணு வெலவெலத்துப் போய்,இதற்கப்புறம் இரண்டுநாள் ஜுரமாய் படுத்திருந்தாள். குஞ்சம்மாள் அவருக்கு ராத்திரியெல்லாம் ‘தூக்கித் தூக்கி’ப் போடுவதாக அருணாச்சல டாக்டரைக் கூப்பிட்டச் சொன்னாள்.

கதைச் சூழ்நிலைக் கூறுகள்: காலம்

கால விவரணம் நான்கு விதங்களில் அமையும்: கடந்த, நிகழ், எதிர் போன்ற பொதுக்காலம்; பருவம்; பகல், இரவு போன்ற வேளை; வரையறுத்த நேரம்.

சரித்திரக் கதைகள் போலோ அல்லது வேறு வகையிலோ கடந்த காலத்தில் அமையும் சிறுகதைகளில் அக்காலத்திற்கு ஒவ்வாத நிகழ்வுகளோ, வருணனைகளோ இருக்காது. சமகாலக் கதைகளில் இக்காலச் சமூக, அரசியல், தனிமனிதச் சூழலில் நிகழ்வுகளும் வருணனையும் அமையும். அதீத கற்பனை (fantasy), அறிவியல் கதைகள் பெரும்பாலும் எதிர்காலத்தில் அமைந்தாலும் கதையின் நிகழ்வுகளும் வருணனையும் ’லாஜிகல்’-ஆக அமையும்.

கதை நிகழும் பருவம் நேரடியாகவோ, குறிப்பாகவோ, கதைமாந்தரின் உடல்-மன உணர்வுகளாலோ வருணிக்கப்படும். கதை நிகழ்வுகளின் வேளையும் அவ்வாறே.

கதையில் வரையறுத்த நேரம் சில மணிகளாக, ஒன்று அல்லது மேற்பட்ட நாட்களாக, மாதங்கள்-வருடங்களாகக் கூட இருக்கலாம். பொதுவாகக் கதை நிகழும் நேரம் குறைந்த அளவில், கதை முடிவுக்கு வெகுதூரத்தில் இல்லாததாகவும் அமையும்.

கதைச் சூழ்நிலைக் கூறுகள்: பின்னணிச் சூழல்

கதைமாந்தரின் இயல்பை வருணிப்பதுபோல் அவர்களின் செயல் வருணனையும் பின்னணிச் சூழலாக அமையும். ஒரு பாத்திரத்தின் அலுவலக, இல்லற, சமூகப் பணிகள் பற்றிய வருணை ஏனோதானோ என்றில்லாமல் அந்தச் சூழலைச் சார்ந்து நம்பத்தகுந்த வகையில் அமையும்.
*** *** ***

Thursday, April 27, 2017

சிறுகதை உத்திகள் 07.

சிறுகதை உத்திகள் chiRukathai uthtikaL

சிறுகதை உத்திகள்

ரமணி
(இலக்கிய வேல், ஏப். 2017)

07. கதைத்திட்டம் (plot)

ரு கதைக்கருவைச் சிறுகதையாக்கும் போது, முக்கிய பாத்திரத்துக்கு நிகழ்ந்த எல்லாவற்றையும் அவை நிகழ்ந்த அதே கால வரிசையில் சொல்ல முடியாது என்பதால், அவற்றில் தேவையான சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, நிகழ்வுகள், அவற்றின் காலம், களம் இவற்றை முன்னும் பின்னும் அமைத்துச் சொல்ல வேண்டியதாகிறது. கதை நிகழ்வுகளை இப்படி வேண்டும் நிரலில் அமைப்பதே கதைத்திட்டம்.

இவ்வகையில் கதைத்திட்டம் என்பது

  • கதை அதன் போக்கில் வருணனை, உரையாடல், பாத்திரப் படைப்பு என்று விரிவதாகும்.
  • நிஜ வாழ்வின் நிகழ்வுகள் போலின்றிக் கதையின் நிகழ்வுகள் திட்டமிட்ட ஒழுங்கில் சிக்கலாகி, முடிவில் ஒரு விளைவை ஏற்படுத்த அமைவதாகும்.
  • உச்ச நெருக்கடியை நோக்கிச் செல்லும் நிகழ்வுகளுக்கும் அவற்றை எதிர்கொள்ளும் கதைமாந்தர்களுக்கும் இடையில் உள்ள தொடர்பாகும்.
  • கட்டுக்கோபாக உள்ள கதைத் திட்டத்தில் ஏதேனும் ஒரு நிகழ்வை எடுத்துவிட்டாலும், அது முழுத்திட்டத்திற்கே வேட்டுவைப்பதாய் அமைவதாகும்.

எனவே, கதைத்திட்டம் என்பது, கதைத் தொடக்கத்தில் ஏற்படுத்தப்படும் முரண்பாடு, கதை நிகழ்வுகளால் ஏற்படும் உச்ச நெருக்கடி, அதன்பின் கதை முடிவாக எழும் இறுதித் தீர்வு (அல்லது புரிதல் உணர்வு) ஆகிய மூன்று அடிப்படைக் கூறுகளையும் உள்ளடக்கிய நிகழ்வுகளைத் திறம்பட வெளிப்படுத்துவதாக அமைவதாகும்.

கதைத்திட்ட அமைப்பு

அ. கதைத்திட்டம் கதை நிகழ்வுகளால் ஆவது.

அந்த நிகழ்வுகள் வெறும் வருணனைகளோ, உரையாடல்களோ, அல்லது திறமையுடன் சொல்லப்படும் ஆசிரியர் கூற்றோ அல்ல. அவை ஒரு நெருக்கடியான நிலையில் உள்ள முக்கியப் பாத்திரத்தின் வினையாற்றலாக, அதன் விளைவு-எதிர் விளைவாகத் தொடர்ந்து எழுவன. அவை வெளிநிகழ்வுகளாக இன்றி உள்மனதில் நிகழும் போராட்டமாக இருக்கலாம். ஆனால் அதுபோன்ற மனப்போராட்டத்தைக் கதைப்பாத்திரம் வெளிப்படுத்துவது ஒரு வெளிநிகழ்வாக இருக்கும்.

ஆ. கதைத்திட்ட நிகழ்வுகள் செயற்கையாக ஏற்படுத்தப்படும் ஒரு நிரலில் அமைவன.

செயற்கையாக என்பது இயற்கைக்கு மாறுபட்ட (unnatural) என்பதன் குறிப்பல்ல; மாறாக, அது கலைத்திறன் பெற்ற செயற்கை (art-ificial) என்பதைக் குறிப்பதாகும். ஓர் ஓவியன் வரைவதுபோல், ஒரு சிற்பி செதுக்குவதுபோல், கதையின் உட்கூறுகள் தகுந்தவோர் நிரலில் அமைந்து கதையின் பெரும் சித்திரத்தை (the big picture) வாசகர் மனத்தில் பதியவைப்பதாக அந்த நிரல் அமையவேண்டும்.

இ. கதைத்திட்டம் என்பதன் நோக்கமே கதையைப் படிக்கும் வாசகர் மனத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதே. அந்தத் தாக்கம் இல்லையென்றால் அந்தக் கதைத் திட்டத்தால் பயனில்லை.

ஈ. கதைத்திட்டம் மேற்சொன்னதுபோல் ஓர் உச்ச நெருக்கடியையும், அதன் பின் வரும் இறுதித் தீர்வையும் உள்ளடக்கியதாக அமையும்.

அவளைப் பார்க்கக் கடற்கரைக்குப் போனேன், பார்த்தேன், பேசினேன், இருவரும் ஓட்டலில் சாப்பிட்டோம், பின் வீடு திரும்பினோம் போன்ற சாதாரண நிகழ்வுகள் ஒரு கதைத் திட்டத்தை அமைப்பதில்லை.

அவளைப் பார்க்க நான் போனபோது...

  • அவள் வரவில்லை என்றால் அது உடனே பல சாத்தியங்களை விளைவிக்கிறது.
  • அவள் அவனுடன் அன்னியோன்னியமாகப் பேசிக்கொண்டிருந்தாள் என்றால் சாத்தியங்கள் இன்னும் அதிகரிக்கின்றன.
  • அவள் வரவில்லை, அவள் அவனுடன்... என்னும் இரு நிகழ்வுகளும் அதன் பின் வரும் நிகழ்வுகளுடன் சேர்ந்து உச்ச நெருக்கடியை ஏற்படுத்துகின்றன்.
  • இரண்டிலும் நான் என்ன செய்தேன் என்பது கதையின் இறுதித் தீர்வாக அமையும் சாத்தியம் இருக்கிறது.
  • அந்த இறுதித் தீர்வு இழுவையாக இல்லாமல் போட்ட முடிச்சைச் சட்டென்று அவிழ்ப்பதாக இருக்குமாறு கதைத் திட்டத்தை அமைக்கவேண்டும்.

உன்னதக் கதைத்திட்டம்

ஒரு கதைத்திட்டம் எப்போது உன்னதம் என்னும் அந்தஸ்தைப் பெறுகிறது?

1. எளிமை (Simplicity)

சுஜாதாவின் ’வழி தெரியவில்லை’ சிறுகதையின் திட்டத்தை ஓர் அஞ்சல் அட்டையில் எழுதிவிடலாம்! ஒருவன் சினிமா பார்க்கப் புறநகர் செல்லுகிறான். சினிமா முடிந்து வரும்போது இருளில் வழியைத் தவறவிட்டுத் தான் வந்திறங்கிய ரயில் நிலையத்தைத் தேடுகிறான். சற்றும் எதிர்பாராத ஓர் அனுபவத்தில் அவன் அதைக் கண்டறிகிறான்.

இவ்வளவுதான் கதையின் ப்ளாட். இதை வைத்து கருத்தைக் கவரும் ஒரு சிறுகதையை சுஜாதா பின்னி அதைச் சட்டென்று முடிக்கிறார்.

2. நம்பவைக்கும் தகைமை (Plausibility)

சித்தர் கருவூர்த்தேவர் பொதுமக்கள் அவரை தரிசனம் செய்யுமாறு நேரில் தோன்றுவது இந்நாளில் சாத்தியமா என்ன? ஆயினும் ’அதிர்வு’ சிறுகதையின் தி. ஜானகிராமன் அதை நம்பத்தக்க வகையில் அமைத்திருப்பது அவர் கதைத் திட்டத்தின் உயர்வாகும்.

3. தன்முதலாவது (Originality)

ஒரு ரயில் பயணத்தில் எதிரில் அமரும் நபரைச் சந்தித்து உரையாடுவது என்பது நம் எல்லோருக்கும் பொதுவான அனுபவம். அதை ’சிலிர்ப்பு’ என்ற தலைப்பில் தி. ஜானகிராமன் ஒரு சிறுகதையாகப் பின்னும்போது, அவர் கதைத்திட்டம் ஒரிஜினலாக அமைகிறது.

சுஜாதாவின் ’வழி தெரியவில்லை’ சிறுகதையை அதுபோன்ற எளிமையான கதைத் திட்டத்துடன், வேறு வகையில் அவராலேயே எழுதமுடியாது என்பது அதன் தன்முதலாகும் தன்மை.

4. கதையுச்சி (Climax)

முரண்பாட்டில் தொடங்கும் ஒரு சிறுகதை படிப்படியான நிகழ்வுகளால் ஓர் உச்சியை அடைந்து பின் சரேலென இறங்கி முடிகிறது. இந்த உச்சியும், உடன்முடிவும் ஓர் உன்னத கதைத் திட்டத்தில் சிறப்பாக அமையும்.

சுஜாதாவின் ’வழி தெரியவில்லை’ சிறுகதையின் கதைநாயகனை அந்த ரிக்‍ஷாக்காரன் இருளில் தன் வீட்டின் கதவைத் தட்டித் தன் மனைவியிடம் அழைத்துச் செல்லும்போது நாயகனும் வாசகரும் சம்பிரதாயமாக எதிர்பார்ப்பது எது என்பதில் கதையின் உச்சி அமைகிறது. அதன் பின், சற்றும் எதிர்பாராத விதமாக, மிக இயல்பாகக் கதை ஓரிரு வரிகளில் முடிகிறது!

5. ஈடுபாடு (Interest)

ஓர் உன்னதக் கதைத்திட்டம் கதையில் நுழைந்த உடனேயே வாசகர் அதை ஒரே மூச்சில் படித்துமுடிப்பதான ஈடுபாட்டை விளைவிப்பதாக அமையும். ஆசிரியர் எதிர்பார்க்கும் விதத்தில் அது வாசகரைத் தொடுவதாக அமையும்.

கதைத்திட்ட அமைப்பில் செய்யக்கூடாதவை

புதிதாகக் கதை எழுதுபவர்களும் சிறுகதையைச் சரியாகப் புரிந்துகொள்ளாது எழுதுபவர்களும் பொதுவாகச் செய்யும் தவறுகள் இவை.

  • கதைக்கு சம்பந்தம் இல்லாதவற்றைச் சொல்லுவது
  • வார்த்தை ஜாலங்களால் ஒரு மெலிந்த கதையுச்சியை மறைக்கப் பார்ப்பது
  • கதையின் சிக்கல் சரியாக அமையாததால் முடிவு நம்ப முடியாததாகிவிடுவது
  • கதையின் வியப்பாக அமையும் சிக்கலும் தீர்வும் இழுபறியாகி விடுவது
  • கதை நிகழ்வுகள் தற்செயலாவோ, திடீர் நிகழ்வாகவோ இருப்பது
  • கதையைத் தேவையில்லாமல் வளர்த்துவது
  • காலம், களம், சூழ்நிலை, கதைமாந்தர் இவற்றின் ஒருமைப்பாட்டை மறந்துவிடுவது
  • பிறர் எழுத்தைக் காப்பியடிப்பது, சாதாரண எழுத்தாளர்களைப் பின்பற்றுவது
  • எளிதில் தெரிந்துவிடுவதை வரிந்துகட்டிக்கொண்டு சொல்லுவது
  • சிறுகதையின் போதனையாக ஒரு செய்தியை ஆசிரியர் கூற்றாகச் சொல்லுவது.

கதைத்திட்ட வகைகள்

1. எதிர்பாராத திருப்பக் கதைத்திட்டம்

இந்த வகையில் கதையின் முடிவில் ஓர் எதிர்பாராத திருப்பம் இருக்கும். அது இயல்பாக அமையாதது புதியோர் செய்யும் தவறு.

சுஜாதாவின் ’கால்கள்’, ’எல்டொராடோ’; ஜெயகாந்தனின் ’சுமைதாங்கி’ போன்ற சிறுகதைகள் இவ்வகை.

2. பிரச்சினைக் கதைத்திட்டம்

கதையின் மையப் பாத்திரம் சந்திக்கும் ஒரு பிரச்சனையை மையமாக வைத்தெழும் இவ்வகையில் பிரச்சினை வாசகரைக் கவர்வதாகவும், தீர்வு முதலிலேயே புலப்படாதவாறும், ஆசிரியர் தரும் தீர்வு திருப்தி அளிப்பதாகவும் அமையும்.

தி. ஜானகிராமனின் ’குழந்தைக்கு ஜுரம்’. சுஜாதாவின் ’நிஜத்தைத் தேடி’, இரா.முருகனின் ’ஆழ்வார்’ போன்ற சிறுகதைகள் இவ்வகை.

3. மர்மக் கதைத்திட்டம்

ஒரு ரகசியத்தை மையமாக வைத்து முடிவில் அதை வெளிப்படுத்தும் இவ்வகையில் துப்பறியும் கதை, அமானுஷக் கதை, இவையல்லாத மர்மக் கதை போன்றவை அமையும்.

இத்தொடரின் உதாரணக் கதைகளில் ரமணியின் ’நாடியது கேட்கின்’, புதுமைப் பித்தனின் ’காஞ்சனை’ போன்ற சிறுகதைகள் இவ்வகை.

4. அதீத-கற்பனைக் கதைத்திட்டம் (fantasy)

இயல்புக்குப் புறம்பான நிகழ்வுகளையோ, எதிர்கால உலகையோ அல்லது ஓர் ஆதர்ச உலகையோ விவரிக்கும் இவ்வகையில் அறிவியல் கதைகளும், அதீத கற்பனையுடன் பின்னப்படும் பிறவகைக் கதைகளும் அமையும். சுஜாதாவின் ’ஜில்லு’, புதுமைப் பித்தனின் ’கட்டிலை விட்டிறங்காக் கதை’, ’கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ போன்ற சிறுகதைகள் இவ்வகை.

5. சரித்திரக் கதைத்திட்டம்

பண்டைய வரலாற்றில் உள்ள ஒரு நிகழ்வையோ, பாத்திரத்தையோ வைத்தெழும் இவ்வகையில் அமைவன தி. ஜானகிராமனின் ’அதிர்வு’, புதுமைப் பித்தனின் ’கனவுப் பெண்’ போன்ற சிறுகதைகள்.

6. நகைச்சுவைக் கதைத்திட்டம்

கதை நிகழ்வுகளையும் பாத்திரங்களையும் நகைச்சுவை ஒன்றை மட்டும் இலக்காக வைத்து மிகைப்படக் காட்டும் இவ்வகையை அமைப்பது எளிதல்ல. சுஜாதாவின் ’குதிரை’, ரமணியின் ’புதிய கோணங்கி’, ’கைக்கு எட்டியது!’, ’ஏட்டுச் சுரைக்காய்’ போன்ற சிறுகதைகள் இவ்வகை.

7. உணர்வுக் கதைத்திட்டம்

குணவியல்புகளும், உணர்ச்சிகளும் தூக்கலாக அமையும் இவ்வகையில் காதல், குடும்ப, சமூகக் கதைகள் அடங்கும்.

இத்தொடரில் உள்ள உதாரணக் கதைகளில் தி. ஜானகிராமனின் ’குழந்தைக்கு ஜுரம்’, எம்.ஏ. நுஃமானின் ’சதுப்பு நிலம்’, பிரமிளின் ’காடன் கண்டது’ போன்ற கதைகள் இவ்வகை.

8. குறியீட்டுக் கதைத்திட்டம்

கதைத்திட்டத்தில் அமையும் பொருட்களும், பாத்திரங்களும், நிகழ்வுகளும் குறியீடுகளாக அமையும் இவ்வகையில் சுந்தர ராமசாமியின் ’ரத்னாபாயின் ஆங்கிலம்’, மாலனின் ’கரப்பாம்பூச்சி’, கி. ராஜநாராயணனின் ’கதவு’ போன்ற பல சிறுகதைகள் அமைகின்றன.

*** *** ***

Wednesday, March 15, 2017

சிறுகதை உத்திகள் 06.

சிறுகதை உத்திகள் chiRukathai uthtikaL

சிறுகதை உத்திகள்

ரமணி
(இலக்கிய வேல், மார். 2017)

06. கதைப் பாத்திரங்கள்

ழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ’நூறு சிறந்த சிறுகதைகள்’ என்றொரு பட்டியல் வெளியிட்டுள்ளார். அதிலுள்ள சில கதைத் தலைப்புகள் இவை:

காசி, செல்லம்மாள், அக்கினிப் பிரவேசம், நகரம், கதவு, புலிக்கலைஞன், ஞானப்பால், பிரசாதம், புயல், நாயனம், பூனைகள் இல்லாத வீடு, நீக்கல்கள், கனகாம்பரம், முள், புற்றிலுறையும் பாம்புகள், பலாப்பழம், இறகுகளும் பாறைகளும், புலிக்கட்டம், நுகம், சோகவனம், பாற்கடல்.

இத்துடன் நம் ஒன்பது உதாரணக் கதைத் தலைப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்:
அதிர்வு, வழி தெரியவில்லை!, சுமைதாங்கி, நாடியது கேட்கின்..., உயிர், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், சதுப்பு நிலம், காடன் கண்டது, ஜில்லு.

ஒரு கணம் இந்தத் தலைப்புகளை ஆராயப் புகுந்தால், அவற்றில் பெரும்பாலானவை ஒரு மனிதரையோ, அல்லது மானுட நாட்டத்தையோ (human interest) விவரிக்கும் சிறுகதையைப் பற்றியது என்று புரியும். கி. ராஜநாராயணனின் ’கதவு’ கதையும் அதை நேசிக்கும் குழந்தைகளைப் பற்றியதாக அமைகிறது. இதுபோல் கோபி கிருஷ்ணனின் ’புயல்’ கதையும் மனிதர்களைப் பற்றித்தான். எழுதப்படும் சிறுகதைகளில் 99% சதவிகிதம், இங்ஙனம் கதை மாந்தரைப் பற்றி அமைவதாலேயே சிறக்கிறது என்று எளிதில் கண்டுகொள்ளலாம்.

சிறுகதை மாந்தர்

ஒரு கதைக்கரு எவ்வளவுதான் வற்புறுத்துவதாக இருந்தாலும் ஒரு முக்கிய கற்பனைப் பாத்திரத்தைப் படைத்து அதன் மூலம்தான் கருவைக் கதையாக வளர்க்கமுடியும். இந்த முக்கியப் பாத்திரத்தின் எண்ணங்கள், உணர்வுகள், தூண்டுதல்கள், எதிர்வினைகள்--இவையே கருவாக இருக்கும் கதையை வளர்த்து உருவாக்கி நகர்த்துகின்றன. கதையின் முரண்பாடு, உச்ச நெருக்கடி, இறுதித் தீர்வு யாவும் இந்த முக்கிய பாத்திரத்திற்கே நிகழ்கின்றன.

சிறுகதை என்பது பெரும்பாலும் ஒரு மையக் கதைப் பாத்திரத்தைச் சுற்றி அமைவதாகும். வாசகரின் கவனம் முழுவதும் இந்த மையப் பாத்திரத்தின் மீதே இருக்கும்.

இந்தப் பாத்திரத்திற்கு எதிராகவும், இதனுடன் கதையில் ஊடாடுவதாகவும் மேலும் ஓரிரு துணைப் பாத்திரங்கள் சிறுகதையில் அமையலாம். பாத்திரங்கள் அதிகமானால் அவை, மையப் பாத்திரம் மீதுள்ள வாசகரின் கவனத்தைச் சிதைத்துக் கதையின் ஒருமையைக் குலைத்துவிடலாம்.

பாத்திரம் (character) என்று சொல்லும் போது அது ஓர் உயர்திணை அல்லது அஃறிணை உயிராகவோ அல்லது ஒரு சடப் பொருளாகவோ இருக்கலாம். கதையின் மையப் பாத்திரம் ஒரு சடப் பொருளாகவோ அல்லது அஃறிணை உயிராகவோ இருந்தாலும், அவை மனிதரைப் பற்றிப் பேசுவதாகவே பெரும்பாலும் கதை அமையும்! கதையை எழுதுவது ஒரு மனிதனே என்பதால் தானில்லாத ஓர் உலகத்தைப் பற்றி எழுதுவதை அவனது அகங்காரம் தடுக்கிறதோ என்னவோ?

கதைமாந்தர் தேர்வு

நம் வாழ்க்கையில் நாம் உறவு, நட்பு, சுற்றம், அலுவல், சமூகம் போன்ற பல வகைகளில் பலவிதமான மனிதர்களுடன் நெருங்கிப் பழகுகிறோம். இவர்கள் தவிர, தினமும் நம் பார்வையில், பேச்சில், பழக்கத்தில், புத்தகத்தில், ஊடகத்தில் என்று பல வகைகளில் பலவிதமான மனிதர்களை எதிர்கொள்கிறோம். இவர்கள் எவ்வளவு தூரம் சிறுகதையில் கற்பனைப் பாத்திரங்களாகப் பரிணமிக்கக் கூடும் என்பதை அறிய, சிறுகதை எழுத முனைவோர் இந்த மனிதர்களைக் கூர்ந்து நோக்கி அவர்களின் குணவியல்புகளைப் பற்றி மனத்தில் நினைத்துப்பார்க்கும் பழக்கத்தை மேற்கொள்ளவேண்டும். இதுபோல் தமது குண, மன இயல்புகளைப் பற்றியும் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

எந்தவொரு மனிதரையும் அப்படியே நேரடியாக ஒரு சிறுகதையில் கையாள முடியாது. ஏனெனில், ஒரு மனிதரின் ஆசாபாசங்கள், பிரச்சினைகள், துன்பங்கள் போன்றவை பெரிதும் எல்லோர்க்கும் பொதுவாக அமைவதால், அவற்றைப் பற்றிப் படிப்பதில் சுவாரஸ்யம் இருக்காது. எனவே, ஒரு சிறுகதையில் பாத்திரம் இயல்பாக அமையவேண்டுமானால் அதை மிகைப்படுத்தி வரையவேண்டும்.

இவ்வாறு மிகைப்படுத்திப் படைக்கும் சிறுகதை மாந்தர்

  • மனத்தைக் கவரும் விதத்தில் ஒரு செயலை, ஓரிடத்தில், ஒரு சூழ்நிலையில் செய்வர்.
  • நல்லது, அல்லது எது செய்தாலும் இவர்கள் வலுவானதோர் தனித்தன்மையுடன் இருப்பர்.
  • தோற்றத்திலேயே இவர்கள் இயல்பு தெரியும் (இதற்கு விதிவிலக்குகளும் உண்டு).
  • தாம் சார்ந்த வகையோரின் இயல்புகளுடன் அவர்களில் தனியாக நிற்பர்.
  • இவர்களின் விருப்பு, வெறுப்பு, ஆசை, குறிக்கோள், நகைச்சுவை போன்ற குணவியல்புகள் எதிர்பாராத, ஆனால் பொருத்தமான வழிகளில் செல்லும்.

சிறந்த நகைச்சுவை எழுத்தாளரும் பத்திரிகை ஆசிரியருமான சாவி என்னும் சா.விசுவநாதன் அவர்கள் 1997-இல் ’கேரக்டர்’ என்றொரு நூல் வெளியிட்டார். பலவிதமான மனிதர்களை, தமக்கே உரிய கூரிய நோக்கில், நகைச்சுவடியுடன் அவர் இந்நூலில் வருணித்துள்ளார். சிறுகதை எழுத்தாளர்களுக்கு இந்த நூல் ஒரு வரப்பிரசாதம். இணையத்தில் தேடினால் இதன் அச்சுப்பிரதியை வாங்கலாம். அல்லது நூலை இந்த வலைதளத்தில் பதிவிறக்கலாம். https://commons.wikimedia.org/wiki/File:kErakTar.pdf

சிறுகதை மாந்தர், அவர்களுக்கு இடையிலுள்ள தொடர்பு

ஒரு சிறுகதையில் ஒரு மையப் பாத்திரமும், அதனுடன் ஊடாடும் ஓரிரு துணைப் பாத்திரங்களும் இருக்கும். இவை தவிர, கதையின் சூழலை நிறுவுவதில் இன்னும் சில பாத்திரங்கள் பொதுவாகக் குறிக்கப்பட்டோ ஆங்காங்கே தோன்றுவதாகவோ இருக்கும். இவ்வாறு எழும் கதைமாந்தர் இடையில் உள்ள தொடர்பு, கதையின் ஒருமையைக் குலைக்காத வகையில் அமையும்.

ஒரு சிறுகதையின் பாத்திரங்கள்

  • கதையில் வந்து பேசுவதாக அமையலாம்.
  • கதையில் வந்து பேசாமல் இருப்பதாக அமையலாம்.
  • கதையில் வராது குறிக்கப்படுவதாக இருக்கலாம்.

நம் ஒன்பது உதாரணச் சிறுகதைகளின் பாத்திரங்கள் மேலுள்ள மூன்று வகைகளில் இவ்வாறு அமைகின்றனர்:

கதைமாந்தர் இடையிலுள்ள தொடர்பை ஓர் உதாரணம் மூலம் விளக்கலாம்.

ஐந்து வயதுப் பெண்குழந்தை ஜனனி, தன் பெற்றோர் படுக்கை அறையில் காலையில் கண் விழித்ததும், கட்டிலை விட்டு இறங்கி, அன்னையின் அழகுசாதன மேசைக் கண்ணாடி முன் நின்றுகொண்டு, தனக்குத் தானே ஏதோ பேசியவண்ணம், அழகுகாட்டித் தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்து ரசிக்கிறது. தந்தை இன்னும் தூங்கிக்கொண்டிருக்க, அருகில் தொட்டிலில் குட்டிப் பாப்பாவும் தூங்குகிறது. குழந்தை ஜனனிக்குத் தெரியாமல், அறையின் நிலைப்படி அருகில் நின்று, ஜனனியின் அன்னை தன் குழந்தையின் சேட்டைகளை ரசித்தபடி மெய்மறக்கிறாள்.

இந்த நிகழ்ச்சியை ஒரு சித்திரமாக மனத்தில் வரைந்து பாருங்கள். அந்தச் சித்திரத்தின் கவனமெல்லாம் குழந்தை ஜனனியில் மேல் என்பதால், அவளது உருவம் மிகுந்த விவரங்களுடன் பரிமளிக்கும். அடுத்த துணைப் பாத்திரமாக அவள் அன்னையின் உருவம் பின்னணியில் விளங்கும். அவள் தந்தை மற்றும் குட்டிப் பாப்பா தொலைவில் மழுப்பலாகத் தெரிவார்கள். இப்படித்தான் ஒரு சிறுகதையின் கதைமாந்தரும் அவர்களுக்கு இடையில் உள்ள தொடர்பும் அமையவேண்டும்.

கதைமாந்தர் வகைகள்

வாழ்வில் நாம் காணும் எந்தவொரு மனிதரும் தனியாக நிற்பவராக இல்லாமல்,
  • குடும்பம், சாதி, சமூகம், குலம், இனம், மொழி, நாடு, ஊர், மதம், நாத்திகம் என்று நம் முன்னோர் ஏற்படுத்தி இன்றும் நிலவும் வகுப்புகளிலும்
  • அரசியல், தொழில், அலுவகப்பணி, வேளாண்பணி, கல்வி, சேவை போன்ற இன்றைய வகுப்புகளிலும்
சிலவற்றைச் சார்ந்தவராக இருப்பார்.

இப்படிப் பொதுமனிதனாக இருக்கும் ஒருவனே தன்னளவில் ஒரு நாயகன், ஊர்சுற்றிப் பார்ப்பவன், ஆராய்ச்சியாளன், பாதுகாவலன், சாதிப்பவன், துன்புறுபவன், காதலிப்பவன் அல்லது வேறொரு வகையினன் என்று தனித்து நிற்பவனாக இருப்பான்.

இவ்வாறு தன் வகுப்புகளின் பொதுவியல்புகளுடன் தனது தனிப்பட்ட இயல்புகளும் சேர்ந்த கலவையே மனிதன். இந்தக் கலவைப் பாத்திரத்தை மூன்று விதங்களில் படைக்கலாம்.

அ. வகுப்பியல்புகள் தூக்கலாக

இவ்வகைப் பாத்திரங்கள் இலட்சியக்காரர்களாகவோ, சராசரி மனிதர்களாகவோ இருக்கலாம். ஆனால் முற்றிலும் வகுப்பியல்புகளைக் கொண்டே அமையும் பாத்திரங்கள் தம்மளவில் சுவாரஸ்யமானவராக ஒரு சிறுகதையில் அமைவது அரிது.

ஆ. தனி இயல்புகள் தூக்கலாக

மேற்சொன்ன பழைய, புதிய வகுப்புகளில் எவ்விதத்திலும் சேராதவனாக ஒரு மனிதனைப் பற்றி எழுதலாம். ஆனால் ஏதேனும் ஒரு வகுப்பின் பின்புலம் எதுவும் இல்லாது அமையும் பாத்திரம் இயற்கைக்கு மாறாகவே (eccentric) இருக்குமாதலால் அது வாசகரைக் கவர்வது அரிது.

இ. இரண்டின் கலவையாக

இவ்வகைப் பாத்திரங்களே வாசகர்களுக்குத் திருப்தியாக அமையக் கூடியவர்கள். வகுப்பியல்புகளையும், தனிமனித இயல்புகளையும் கலந்து கதைமாந்தரை உருவாக்கும் வாய்ப்பு ஒரு சிறுகதை எழுத்தாளருக்குப் பெரும்புதையல் கிடைத்தது போல.

நான் முதலில் ஓர் இந்தியன். அதற்குள்ளோர் கணினி மென்பொருள் வல்லுனன். தமிழன். அதுவும் தஞ்சை மண்ணைச் சேர்ந்தவன். தாழ்ந்த சாதி. பொறுப்பாகப் படித்ததால் முன்னுக்கு வந்தவன். என் சாதிமக்களில் மூத்தோரின் வெகுளித்தனம் மற்றும் அறியாமையையும், இளஞர்களின் அரசியல், சினிமாக் கவர்ச்சியையும் மூலதனமாகக் கொண்டு அரசியல்வாதிகள் தம் பிழைப்பை நடத்துவது குறித்து நான் எதுவும் செய்ய இயலாத வகையில் என் வேலை அமைந்திருப்பது என்னுள் சினத்தை எழுப்புகிறது. முதலில் என் வாழ்க்கையை நிலைப்படுத்திக்கொண்டு பின்னர் இந்த அநியாயங்களைத் தட்டிக்கேட்கவேண்டும் என்னும் விவேகம் விரவிய எழுச்சி என்னிடம் இருக்கிறது.

இதுபோன்று உருவாகும் பாத்திரங்கள் வாசகர் மனத்தில் நிற்கும் வாய்ப்புகள் அதிகம். இவை தவிர, கதாசிரியரின் தனிப்பட்ட இயல்புகளும், சமூக, மானுடப் பார்வைகளும் கதைப்பாத்திரங்களில் எதிரொளிக்கும் என்றும் சிறுகதை முனைவோர் புரிந்துகொள்ளவேண்டும்.

பாத்திரப் படைப்பு

சிறுகதைப் பாத்திரப் படைப்பு என்பது புறமும் அகமும் சேர்ந்தவொரு விஷேசமான வருணனை. இந்த வருணனையின் குறிக்கோள் கண்முன் வாழ்வது போன்ற (lifelike) கதைமாந்தர்களை உருவாக்குவது. ஒரு கதைப்பாத்திரம் கதையில் வரும் பிற பாத்திரங்களிடையே தூண்டும் உணர்வுகளை ஆசிரியரும் வாசகரும் அனுபவிப்பது நிஜம்போல் தோன்றவைக்கும் இந்தப் படைப்பின் உச்சம்.

இதில் ஆசிரியரின் நோக்கம் பொறுத்து அந்தப் பாத்திரம்

  • வாழ்வில் காண்பது போன்ற யதார்த்தம் (realism)
  • காணவேண்டுவது போன்ற கோட்பாடு (idalism)
  • அசாதாரண சூழலில் காணும் கற்பனை சார்ந்த தன்முனைவு (romanticism)
  • கேலிச்சித்திரம் (caricature)
என்னும் நான்கு வகைகளில் ஒன்றானதாகவோ அல்லது இவை கலந்த வகையாகவோ அமையும்.

பாத்திரப் படைப்பின் கூறுகள்

அ. பாத்திர வருணனை

ஒரு கதைப்பாத்திர வருணனை மூன்று வழிகளில் அமையலாம்.

  • நேரடி வருணனை
  • ஆசிரியரே பாத்திரத்தை நேரடியாக வருணிப்பது.

    "பெரியசாமிப் பிள்ளை வாயைத் திறந்து பேச ஆரம்பித்தால், அதுவும் அந்த நரைத்துப்போன, சுருட்டுப் புகையால் பழுப்பேறிய பெரிய மீசையை முறுக்கிக் கொண்டு பேச ஆரம்பித்துவிட்டால்– நிச்சயம், அவர் பேசுகின்ற விஷயம் இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த இரண்டு உலக மகா யுத்தங்களிலும் நேச தேச ராணுவத்தினர் புரிந்த வீரதீரச் சாகசங்கள் பற்றியதாகத்தான் இருக்கும்." என்று தொடங்கும் ’பூ உதிரும்’ சிறுகதையில் ஜெயகாந்தனின் பாத்திரப் படைப்பு இவ்வகை.

  • மறைமுக வருணனை
  • ஒரு பாத்திரத்தை இன்னொன்று வருணிப்பது
    அல்லது பாத்திர வருணனை கதைப்போக்கில் வளருமாறு அமைப்பது

    "என்னையே இரண்டு நிமிடங்களாகப் பார்த்துக்கொண்டிருந்தார், அந்த ஸ்வெட்டர் அணிந்த கிழவர். கலங்கிய வெண்பச்சைக் கண்கள், மெல்லிய உதடுகள், முகத்தில் வரிவரியாக சுமார் எண்பது வயதின் சுவடுகள், புருவம் இல்லை, புருவத்துக்குப் பதில் இரண்டு கீறல்கள், நரம்பு தெரியும் கைகள்,..." என்று செல்லும் சுஜாதாவின் ’கால்கள்’ சிறுகதைப் பாத்திரம் இவ்வகை.

  • குறிப்புகள் மூலம் உணர்த்துவது
  • பாத்திரம் பற்றிய முக்கியக் குறிப்புகளை மட்டும் ஆசிரியர் தந்து மற்றவற்றை வாசகர் கற்பனைக்கு விட்டுவிடுவது.

    "நான் முத்துவேல். என் நண்பன் மனோகரன். இருவரும் நெருங்கிய நண்பர்கள், அதுதான் ஆச்சரியம்!

    ஏனெனில் நான் (மனோகரன் மூடநம்பிக்கைகள் என்று மறுக்கும்) அனைத்து ஆன்மிக விஷயங்களையும் நம்புபவன்: எனக்குக் கோவில் ஸ்தல புராணங்கள், சாயி பாபா போன்ற மகான்கள் நிகழ்த்தும் அதிசயங்கள், பேய்-பிசாசுகள் பிடிப்பது அவற்றை ஓட்டுவது, மந்திரித்து வைத்தியம் செய்வது, மறுபிறவி--இன்னும் எது வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளுங்கள்--போன்ற அனைத்து விஷயங்களும் உண்மை.

    மனோகரனுக்கோ ஒரு நியூட்டன், ஒரு ஐன்ஸ்டின், ஒரு ஸ்டீஃபன் ஹாகிங்--இன்னும் யாரை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளுங்கள்--போன்று யாராவது உறுதிப்படுத்தி யிருந்தால்தான் அது உண்மை, அறிவியல், நிச்சயம் நம்பலாம். எல்லாத் துறைகளிலும் பற்பல விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் முரண்பட்டுக் கருத்துக்களைச் சொல்கிறார்களே மனோ, இவற்றில் எதுதான் உண்மை என்று கேட்டால் ஜகா வாங்கிவிடுவான்! காலம் காலமாக நிறுவப்பட்டதாகக் கருதப் பட்ட விஞ்ஞான உண்மைகள் ஒரு நாள் தூக்கியெறியப் படுவதே விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்பது அவன் கட்சி.

    சரி, விஷயத்துக்கு வருகிறேன். நாங்கள் இருவரும் சேர்ந்து வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி ஜோதிடம் பார்க்க முடிவுசெய்தோம்!"

    ரமணியின் ’நாடியது கேட்கின்...’ சிறுகதையில் அதன் இரண்டு முக்கியப் பாத்திரங்களைப் பற்றி இதற்குமேல் வருணனையில்லை. பாத்திரங்களின் புறத்தோற்றம் வாசகர்கள் கற்பனைக்கு.

ஆ. பாத்திரப் பகுப்பாய்வு

என்பது புறத்தோற்றத்தின் பின்னுள்ள மனத்தையும் குணக்கூறுகளையும் ஆசிரியர் நேரடியாகவோ, உரையாடல்கள் மூலமோ, அல்லது பிற பாத்திரங்களைக் கொண்டு பகுத்தாய்ந்து வருணிப்பதாகும். தன்மை நோக்கில் (first person point of view) கதை சொல்லும்போது பாத்திரங்கள் தம்மைத் தாமே பகுத்தாய்ந்துகொள்வது எளிதாக, இயல்பாக அமைகிறது.

பாத்திரங்களின் மனவோட்டம் மூலமே பெரிதும் கதையை நகர்த்திச்செல்வது எழுத்தாளர் உஷாதீபன் அவர்களுக்கு ஏராளமான வாசகர்களை சம்பாத்தித்துக் கொடுத்திருக்கிறது எனலாம். அவரது ’ரகசியம்’ சிறுகதையின் தொடக்கம் இது:

"படுக்கையில் தூக்கமின்றிப் புரண்டு கொண்டிருந்தான் ராகவன். அருகே மெயின் ஹாலில் அப்பாவும் அம்மாவும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். தான் உறக்கமின்றி இருக்கிறோம் என்பது எவ்வகையிலும் அவர்களுக்குத் தெரிந்து விடக் கூடாது. குறிப்பாக அம்மாவுக்கு. அவள் தனது ஒவ்வொரு சிறு அசைவையும் கூட எடை போட்டு விடுவாள். தன் முகத்தை வைத்தே என்ன பிரச்னை? என்று கேட்டு விடுவாள். வந்து இரண்டு நாட்கள் ஆன இந்தப் பொழுதில் அவள் கேட்காமல் இருப்பதுதான் ஆச்சரியம். அப்படியானால் தன் முகத்திலிருந்து எதையும் கண்டு பிடிக்க முடியவில்லையா? அல்லது ரெண்டு நாள் போகட்டும் பிறகு சாவகாசமாய் கேட்டுக் கொள்ளலாம் என்று இருக்கிறாளா? அல்லது அவன் பாடு, அவன் பெண்டாட்டி பாடு, நமக்கெதற்கு? என்று விட்டு விட்டாளா? இருக்கலாம். அவளுக்கும் வயசாயிற்று. எத்தனையோ பிரச்னைகளைச் சுமந்து, அனுபவித்து, கடந்து வந்தாயிற்று. பெண்டுகளுக்கும் பையன்களுக்கும் திருமணம் செய்து கொடுத்து அனுப்பி இப்பொழுதுதான் ஓய்ந்திருக்கிறாள்."

இ. நாடக வழி

உரையாடல், செயல்கள் மூலம் பாத்திரம் படைப்பது கடினமான, அதேசமயம் பலன்தரும் இலக்கிய உத்தியாகும்.

சுஜாதாவின் ’எல்டொராடோ’, ’எப்படியும் வாழலாம்’ கதைகளின் பாத்திரப் படைப்பில் உரையாடல் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பாத்திரம், களம், காலம், நிகழ்ச்சிகள் இவற்றின் ரசவாதம் பற்றிச் சுஜாதா சொல்வது:

"முழுக்க முழுக்க கற்பனையான எழுத்தில் எழுத முடியாது. இந்தத் தொகுப்பில் உள்ள அத்தனை கதைகளும் நான் பார்த்த, கேட்ட, பங்குபெற்ற சம்பவங்கள். அவைகளை அப்படியே எழுதாமல் பெயர், இடம், காலம் இவைகளை மாற்றி மற்ற நிஜவாழ்க்கை சம்பவங்களையும் உரையாடல்களையும் கலந்து எழுதியிருக்கிறேன். இந்த முறைதான் என் வெற்றிக்குக் காரணம்."

*** *** ***

Friday, March 3, 2017

சிறுகதை உத்திகள் 05.

சிறுகதை உத்திகள் chiRukathai uthtikaL

சிறுகதை உத்திகள்

ரமணி
(இலக்கிய வேல், பிப். 2017)

05. இறுதித் தீர்வு (அல்லது புரிதல் உணர்வு)

ரு சிறுகதையின் மூன்று அடிப்படைக் கூறுகளில் மூன்றாவதான இறுதித் தீர்வு (அல்லது புரிதல் உணர்வு) என்பது என்னவென்று இரண்டாம் இயலில் பார்த்தோம். அதாவது:

இறுதித் தீர்வு என்பது கதையின் முக்கிய பாத்திரம் விழைந்தது

  • நிகழ்வதாக இருக்கலாம்.
  • நிகழாமல் போவதாக இருக்கலாம்.
  • நிகழ்ந்ததன் விளைவுகளாக இருக்கலாம்.
  • நிகழாததன் காரணத்தை முக்கிய பாத்திரம் புரிந்துகொள்வதால் அதன் மனதில் தங்கும் இறுதியான புரிதல் உணர்ச்சியாக இருக்கலாம்.

இன்றைய கதைகளில் பல சமயம் இறுதித் தீர்வினை வாசகனிடமே விட்டுவிடுவது உண்டு. அப்படி வரும்போது அந்தப் புரிதல் உணர்வு வாசகனுக்கு ஏற்படுகிறது.

முதலில் ஏற்பட்ட முரண்பாடு ஓர் உச்ச நெருக்கடியை அடைந்ததும் தீர்வாக

  • ஒரு மாற்றம் கதையில் நிகழவேண்டும், இது முக்கியம்.
  • அல்லது இந்த மாற்றம் நிகழ்வதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும்.
  • ஒரு முடிவு அல்லது அதற்கான வாய்ப்பு கதையின் முக்கிய பாத்திரத்துக்கோ வாசகனுக்கோ பிரத்யட்சமாக வேண்டும்.

இறுதித் தீர்வு உதாரணங்கள்

மேலே கண்ட உதாரணக் கதைகளில் இறுதித் தீர்வு எவ்வாறு அமைந்துள்ளது என்று பார்க்கலாம். இந்தக் கதைகளின் முரண்பாடும், உச்ச நெருக்கடியும் எவ்வாறு அமைந்தன என்று ஒரு முறை பார்த்துவிட்டுக் கதையின் முடிவைப் படித்தால், சிறுகதையின் மூன்று மூலக்கூறுகள் பற்றிய புரிதல் உங்களுக்குக் கிடைக்கும்.

அதிர்வு
>தி. ஜானகிராமன்

"...மனிதர்களின் ஆசையைக் கெடுக்க வேண்டாம். நான் செங்கமலத்தின் மஞ்சத்துக்கு ஆசைப்பட்டு வந்ததாகவே அவர்கள் நினைத்து ஆறுதல் அடையட்டும். உனக்கும் தொல்லையில்லாமல் இருக்கும். இந்தக் கடவுள் வியாதியை எல்லாரும் தாங்கமாட்டார்கள். ஒண்டிக்கட்டையான செங்கமலம் தாங்கலாம். கருவூர்ப்பித்தும் சற்றுத் தாங்க முடியும்" என்று சொல்லிக்கொண்டே நகர்ந்தார் அவர்.

வழி தெரியவில்லை!
சுஜாதா

நான் வரும் வரை காத்திருந்து, வந்ததும் சரேல் என்று அந்தக் கதவைத் திறந்தாள்.

என் மேல் குளிர்ந்த காற்று வீசியது.

சுமைதாங்கி
ஜெயகாந்தன்

உள்ளே போனதும் இருவரும் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டு ’ஓ’வென்று கதறியழுதனர். திடீரெனத் திரும்பிப் பார்த்த போலீஸ்காரன் வாசலிலும் சன்னல் புறத்திலிருந்தும் கும்பல் கூடி நிற்பதைப் பார்த்து எழுந்து போய்க் கதவைப் ’படீர் படீர்’ என்று அறைந்து சாத்தினான்.

போலீஸ்காரன் வீட்டு முன்னே கூடியிருந்த கும்பல் மீண்டும் விபத்து நடந்த இடத்துக்கே ஓடியது.

- ஆமாம்; கும்பலுக்கு எல்லாமே ஒரு வேடிக்கைதான்.

நாடியது கேட்கின்...
குருநாதன் ரமணி

மனோவின் கடைசி ஆசையைப் பூர்த்தி செய்யும் எண்ணத்தில் நான் விவரங்களை எடுத்துக்கொண்டு அந்த தம்பி ஜோதிடரிடம் சென்றேன். வெகுநேரம் தேடிவிட்டு அவர் ஒரே ஒரு ஓலையைக் கட்டினார். அதில் இப்படி எழுதியிருந்தது:

சாளுக்கிய தேசச் செலவின் போது மாளுதல் நிகழும் மனமும் மாறும்.

உயிர்
கந்தர்வன்

அவள் முகம் வெளிறி நின்றாள். அடித்து பிடித்துப் படகில் ஏற எவ்வளவு முயன்றும் இரண்டாம் முறையாகவும் முடிய வில்லை. இதற்குள் படகுத்துறையில் பெரும் அலைகளைடிக்கத் துவங்கி திமிங்கலம் இந்தப் பக்கமாக வந்து கொண்டிருப்பதாகப் பிள்ளைகளோடு நின்றவர்கள் பயந்தபடி முணங்கத் துவங்கி இஷ்டதெய்வங்களைக் கூப்பிட்டுத் திசை நோக்கி வணங்கினார்கள்.

அவர்கள் ஏறியதுதான் கடைசிப்படகு. தீவு வெறிச்சோடிக் கிடந்தது. அந்த ஒரு குடிசையும் இரண்டு மெலிந்த ஆட்களும் வற்றிய இரண்டு நாய்களும் மட்டும் அந்தப் படகை வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றார்கள்.

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
புதுமைப்பித்தன்

"உங்களிடமெல்லாம் எட்டி நின்று வரம் கொடுக்கலாம்; உடன் இருந்து வாழ முடியாது" என்றார் கடவுள்.

"உங்கள் வர்க்கமே அதற்குத்தான் லாயக்கு" என்றார் கந்தசாமிப் பிள்ளை.

அவருக்குப் பதில் சொல்ல அங்கே யாரும் இல்லை.

சதுப்பு நிலம்
எம்.ஏ. நுஃமான்

’நெடுகப் போனால் அவளுகளைப் பின்தொடர்ந்து போவது போல இருக்கும். நாம் சென்றால் கொலிச்சால போவம்’ என்று அவன் குறுக்கு வீதியால் திரும்பி நடக்கத் தொடங்கினான். நெடுகவும் போய் இருக்கலாம் என்றும் ஒரு மனம் சொல்லியது. அவளுடைய இடை அசைந்து செல்லுவது மிகவும் அழகாக இருப்பதாக அப்போது அவன் நினைத்தான். ஆயினும் அவன் குறுக்கு வீதியால் நடந்து கொண்டிருந்தான். இவளுகளப் பாத்தாத்தான் என்ன? பாக்காட்டித்தான் எனக்கென்ன? என்று நினைத்தவாறே அவன் தன்பாட்டில் நடந்தான்.

’சே! எப்பவும் இப்பிடித்தான். நான் ஒரு மடையன்’ என்று அவன் வாய் முணுமுணுத்தது.

காடன் கண்டது
பிரமிள்

"...பச்சை லுங்கிதாண்டா டீக்கடைப் பயலுக்கு வெள்ளைவேட்டி எஸ்டேட்டிலிருந்து திருடி பத்திரம் சப்ளை பண்றான். நான் அதிலேருந்து அடுத்த சப்ளை. வெள்ளை வேட்டி திருடு போவுது போவுதுன்னு பார்த்து மோப்பம் புடிச்சுட்டான் பச்சை லுங்கியை. அதாண்டா எல்லா நடமாட்டமும். ஏண்டா, சீ, நாயே! இளுத்துட்டுக் கை மாத்துன்னா எரிய விட்டுக்கிட்டேருக்கே"ன்னு சுக்கான் என் கையிலிருந்த சுருளைக் கபக்குனு புடுங்கிக்கிட்டான்.

ஜில்லு
சுஜாதா

ஹெலிகாப்டர்கள் வானத்தில் புள்ளிகளாக மறைய குமார் பெஞ்சின் அடியில் பதுங்கியிருந்தவன் ஜில்லுவைத் தடவிக் கொடுத்துக்கொண்டே வெளியே வந்தான்.

"கவலைப்படாதே ஜில்லு.அப்பா அம்மா ஊருக்குப் போய்ட்டு வந்துருவா.நாம வீட்டுக்குப் போகலாம் வா."

சிறுவனும் நாயும் மெல்ல உற்சாகமாக நடந்து செல்ல யாருமில்லாத பிஸ்கட் கடையில் அடுக்கி வைத்திருந்த பிஸ்கட்களில் நிறைய எடுத்துக்கொண்டு ஜில்லுவுக்கும் கொடுத்து தானும் சாப்பிட்டுவிட்டு வீட்டை நோக்கி நடக்கையில் வந்த மழையில் சிறுவனும் நாயும் ஆனந்தமாக நனைந்தார்கள்.

*** *** ***

Sunday, January 22, 2017

சிறுகதை உத்திகள் 04.

சிறுகதை உத்திகள் chiRukathai uthtikaL

சிறுகதை உத்திகள்

ரமணி
(இலக்கிய வேல், ஜன. 2017)

04. உச்ச நெருக்கடி

ரு சிறுகதையின் மூன்று அடிப்படைக் கூறுகளில் இரண்டாவதான உச்ச நெருக்கடி என்பது என்னவென்று இரண்டாம் இயலில் பார்த்தோம். அதாவது:

முரண்பாட்டைத் தீர்க்கக் கதையின் முக்கிய பாத்திரம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், செய்யும் காரியங்கள், பிற நிகழ்வுகள் போன்றவை அதை ஓர் உச்ச நெருக்கடியை நோக்கிச் செலுத்துகின்றன. கதையின் இறுதிப் பகுதியில் வரும் இந்த உச்ச நெருக்கடி

  • இதுவரை கதையில் வந்த நிகழ்வுகள், விளைவுகள் இவற்றின் உச்சி நிகழ்வாக அமையும்.
  • கதையில் ஒரு திருப்பமாக அமையும்.
  • கதையின் முக்கிய பாத்திரம் இனி முன்னிருந்த தன் நிலைக்குச் செல்ல முடியாதவாறு அமையும்.
  • இனி என்னவாகுமோ என்ற உணர்வை வாசகரிடம் ஏற்படுத்தும்.
  • இனி வருவன கதையின் முடிவை நோக்கி வீழும் நிகழ்வுகளாக அமையும்.
  • இதன் பின் சிறுகதை சட்டென்று முடிவதாக இருக்கும். அதாவது,

இந்த உச்ச நெருக்கடி

  • முக்கிய பாத்திரம் மேற்கொள்ளும் செயல்களின் விளைவாக இருக்கலாம்.
  • வெளியிலிருந்து வருவதாக இருக்கலாம்,
  • அல்லது மனதில் நிகழ்வதாக இருக்கலாம்.
  • எப்படியாயினும் இது இயல்பாக நிகழ வேண்டும், கதாசிரியர் திணித்ததாக இருக்கக் கூடாது.

கதாபாத்திரங்கள் ஒருவருக்கொருவர் உடாடிச் செயல்படுவதன் விளைவாக இது நிகழ வேண்டும். சில சமயங்களில் இது இயற்கையால்/கடவுளால் ஏற்படுத்தப் பட்டதாக இருக்கலாம், ஆனால் அப்போதும் அது இயல்பாக நிகழ வேண்டும்.

இயல்பாக என்றால் இப்படி நிகழ்ந்தது நியாயமே அல்லது தவிர்க்க முடியாததே என்ற எண்ணத்தை, உணர்வை கதையின் முக்கிய பாத்திரத்திடமும் வாசகர் மனதிலும் தோன்றச் செய்வது.

உச்ச நெருக்கடி உதாரணங்கள்

சிறுகதையின் முதல் மூலக்கூறான முரண்பாடு பற்றி மேலே கண்ட உதாரணக் கதைகளில் இரண்டாவது மூலக்கூறான உச்ச நெருக்கடி எவ்வாறு அமைந்துள்ளது என்று பார்க்கலாம்.

அதிர்வு
தி. ஜானகிராமன்

’அப்பாடா!’ என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டே அவர் கரத்தைப் பற்றினாள். என்ன இது!

கரத்தைச் சற்று அழுத்திப் பற்றிப் பார்த்தாள்.

...

பிருபிருவென்று அந்தக் கரம் வேகமாக அதிர்ந்துகொண்டிருந்தது. கண்ணால் உற்றுப் பார்த்தாள். ஒன்றும் தெரியவில்லை. சாதாரணமாக இருந்தது. ஆனால் உள்ளுக்குள்ளே அதே அதிர்வு. புஜத்தைத் தொட்டாள். ஆமாம்! கணுக்காலைத் தொட்டாள். பிடரியைத் தொட்டாள். முதுகைத் தொட்டாள். தொட்ட இடமெல்லாம் படபடவென்று அதிர்ந்துகொண்டேயிருந்தது. நான்கைந்து விநாடிகளுக்கு மேல் பொறுக்க முடியாமல் கை தானாகத் தொட்ட இடத்தினின்று மீண்டது. ஆனால் மீண்டும் தொடும் ஆசை உந்தியது.

...

கருவூர்த்தேவர் அவளைப் பார்த்தார்.

"என்ன இது?" என்றாள் அவள்.

"கிணற்று நீரை வெள்ளம் கொண்டுபோய் விட்டது."

...

"என் ஊடலையும் உயிரையும் தொட்ட மாத்திரத்தில் உலுக்கின அந்த அதிர்வு?"

"ரத்த ஓட்டமில்லை, எல்லையில்லாத வடிவத்தின் ஒரு சிறிய புள்ளியைக் கண்ட அதிர்ச்சி."

வழி தெரியவில்லை!
சுஜாதா

"கடைசி வண்டி போய்டுமே? உன்னால நடந்து போக முடியாது. வா, நான் குறுக்கு வழில போறேன், ஏறு. 12 அணா கொடு. ஒரே மிதியா மிதிக்கிறேன்."

...

அவன் என்னை எங்கு அழைத்துச் செல்கிறான்?

சற்று நேரத்தில் எனக்குத் தெரிய வந்தது. ஒரு வீட்டின் எதிரே ரிக்ஷாவை நிறுத்தினான். இறங்கிவிட்டான். ரிக்ஷாவின் முன் பக்கத்தின் விளக்கை ஊதி அணைத்தான்.

...

கதவு பாதி திறந்திருந்தது. அவள் என்னிடம் "வாங்க" என்றாள்.

"என்னப்பா?" என்றேன் சைக்கிள் ரிக்ஷாவில் உட்கார்ந்திருந்த நான். எனக்கு வேறு வார்த்தை கிடைக்கவில்லை. தொண்டை அடைத்திருந்தது.

"சும்மா போ! அட!" என்றான்.

சுமைதாங்கி
ஜெயகாந்தன்

"பாவி! ஒரு குழந்தையைப் பெத்துக் கொஞ்சறத்துக்குத்தான் பாக்கியம் செய்யாத மலடி ஆயிட்டேன், செத்துப்போன ஒரு குழந்தைக்கு அழக்கூட எனக்குச் சொந்தமில்லையா?" என்று திமிறிய அவளை வலுக்கட்டாயமாய் இழுத்துச் சென்றான் போலீஸ்காரன்.

அந்தத் தெருக்கோடியில் உள்ள தன் வீட்டருகே மனைவியை அழைத்து வரும்போது, தூரத்தில் விபத்து நடந்த இடத்திலிருந்து அந்த ’டைம்பாம்’ வெடித்தது! போலீஸ்காரன் காதுகளை மூடிக் கொண்டான். "ஐயோ! என் ராசா!" என்று காலனியில் ஒலித்த அதே குரல் வீதியே அதிர வெடித்தெழுந்தபோது, தன் பிடியிலிருந்து திமிறியோட முயன்ற மனைவியை இரு கைகளிலும் ஏந்தித் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான் போலீஸ்காரன்.

நாடியது கேட்கின்...
குருநாதன் ரமணி

யஜமானர் தந்த விவரங்களை எடுத்துக்கொண்டு ஊர்போய்ச் சேர்ந்தோம். மனோவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. தனக்குச் சொல்லப்பட்ட பலன்களை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் அவன் மீதமுள்ள சாந்திக்காண்டத்தை சாளுக்கிய தேசத்தில் பார்த்துவிடத் தீர்மானித்து, அடுத்த மாதமே இருவரும் இன்டர்-ஸ்டேட் சொகுசுப் பேருந்தில் கிளம்பினோம்.

என்ன சொல்வது? பாதி வழியில் ஒரு லாரி மோதி விபத்தில் எங்கள் பேருந்து சிக்கிக்கொள்ள, என் அருமை நண்பன் மனோ உட்பட இருபது பேர் மாண்டனர். வண்டியிலேயே என் அருகில் உயிர்விட்ட மனோ உரக்கக் கத்திய கடைசி வார்த்தை, "மூத்துவேலா!" என்பதுதான். அவன் அருகில் அமர்ந்திருந்த நான் காயங்களுடன் தப்பினேன்.

மனோவின் கடைசி ஆசையைப் பூர்த்தி செய்யும் எண்ணத்தில் நான் விவரங்களை எடுத்துக்கொண்டு அந்த தம்பி ஜோதிடரிடம் சென்றேன்.

உயிர்
கந்தர்வன்

இன்னும் ஐம்பது அடிதூரம் இருக்கையில் அவர்கள் கண்முன்னே அந்தப் பிரதேசமே நடுங்கும்படி அது நிகழ்ந்து கொண்டிருந்தது. ரத்தம் ஒழுகியவாறும் மூச்சு விடவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்த திமிங்கலம் சரேலென்று உதறிக்கொண்டு வெகு உயரத்திற்கு எழுந்தது. திமிங்கலத்தின் முதுகில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் சிதறி விழுந்துகரை நோக்கி நீந்தியும் ஓடியும் வந்தார்கள். படகுகள் கவிழ்ந்துவிட்டன. படகுக்காரர்கள் கரை நோக்கி நீந்தினார்கள். படகுகளைப் போட்டுவிட்டு படகுகளில் திமிங்கல முதுகில் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளுக்காகக் காத்திருந்த பெற்றோர்கள் பதறியபடி கடலுக்குள் விழுந்து கரைக்கு வந்து கொண்டிருந்தார்கள்.

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
புதுமைப்பித்தன்

சில விநாடிகளுக்கெல்லாம் உள்ளிருந்து கணீரென்று கம்பீரமான குரலில் இசை எழுந்தது.

மயான ருத்திரனாம் - இவன்
மயான ருத்திரனாம்!

கதவுகள் திறந்தன.

கடவுள் புலித்தோலுடையும் திரிசூலமும் பாம்பும் கங்கையும் சடையும் பின்னிப் புரள, கண்மூடிச் சிலையாக நின்றிருந்தார்.

மறுபடியும் இசை, மின்னலைச் சிக்கலெடுத்து உதறியது போல, ஒரு வெட்டு வெட்டித் திரும்புகையில் கடவுள் கையில் சூலம் மின்னிக் குதித்தது; கண்களில் வெறியும், உதட்டில் சிரிப்பும் புரண்டோ ட, காலைத் தூக்கினார்.

கந்தசாமிப் பிள்ளைக்கு நெஞ்சில் உதைப்பு எடுத்துக் கொண்டது. கடவுள் கொடுத்த வாக்கை மறந்துவிட்டார் என்று நினைத்துப் பதறி எழுந்தார்.

"ஓய் கூத்தனாரே, உம் கூத்தைக் கொஞ்சம் நிறுத்தும்."

சதுப்பு நிலம்
எம்.ஏ. நுஃமான்

அவன் கடிகாரத்தைப் பார்த்தான். நாலரை மணி. ஐந்து மணிக்கெல்லாம் ஆஸ்பத்திரியில் நிற்கவேண்டும். அவனுடைய சகோதரிக்கு நேற்று ஓப்பரேஷன் நடந்தது. அவளைப் பார்ப்பதற்காகத்தான் கல்முனையில் இருந்து காலையில் வந்தான். ஆறேகால் கல்லோயா எக்ஸ்பிரசில் திரும்பிப் போகவேண்டும். அவன் எழுந்து கீழே சென்றான். அவளும் தோழிகளும் பள்ளிவாசல் வாகையின்கீழ் நின்று கதைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் நிற்கும்போது அவன் அவர்களைக் கடந்துபோக விரும்பவில்லை. இப்போது போனால், `தங்களைப் பார்ப்பதற்காகத்தான் இவன் வருகிறான்’ என்று ஒருவேளை அந்தப் பெட்டைகள் நினைக்கக்கூடும் என்று அவன் எண்ணினான்.

வாசிகசாலைக்கு வெளியே நாட்டி இருந்த விளம்பரப் பலகையை வாசிக்கத் தொடங்கினான்.

காடன் கண்டது
பிரமிள்

இப்ப பாத்தமே, அந்த ஆளு? அவனும் இன்னும் நாலஞ்சு பேருமா டீக்கடையை தூள் பண்ணிட்டாங்க. டீக்கடைக்காரப் பயகிட்ட சும்மா, ஏண்டா பச்சை லுங்கி கட்டின ஆளு இங்கே ராவிலே வந்து போறானே எங்கேடா பகல் வேளைக்குப் போறான்னு, சும்மா கேட்டான் இந்த ஆளு. அதுலேர்ந்து அரைமணி நேரமா டீக்கடைக்காரன்கிட்டே கேள்வி. டீக்கடைக்காரன் ஒம்பது பச்சை லுங்கிகாரனுக அட்ரஸு குடுக்கான். இந்தா வா, இந்தா வான்னு பதிலு குடுத்து எருமைக் குட்டைக்கு இட்டுக்குனு போகுது பேச்சு. இந்த ஆளு திடீர்னு டீக்கடைக்காரனை இழுத்து தெருவிலே தள்ளி அறைஞ்சான் பாரு. அதுக்கு அப்புறம் பதிலே வல்லே. பேசுடா பேசுடான்னு டீக்கடையை முடிச்சு, ’இதுதாடா உனக்கு கடைசி ஓணம்’னு அவனை மிதிபோட்டு மிதிச்சாங்க. சின்னப் பயல், டீக்கடைக்காரன். என்னா அமுத்தல்ங்கறே. ஆளுங்க போனப்புறம் ஆரோ டீக்கடைக்காரனை சைக்கிள்ளே ஏத்திக்கினு போனாங்க. ராத்திரி நான் வேளை கழிச்சுத்தான் மரத்தடிக்கு வந்தேன். ரெண்டு ராவா பக்கத்தூரு போன நம்ப கூட்டமும் இல்லே. கண்ணு சொக்கறப்போ, காலடிலே இருட்டு பிச்சுக்கிட்டு வந்து நின்னு, ஆளுயர தடிக் கம்பாலே என் காலைத் தொட்டு, ’பத்திரம் எவ்வளோ இருக்கு?’ங்குது.

ஜில்லு
சுஜாதா

"ஆத்மா வலிக்கிறதா?" என்றாள் நித்யா.ஏகப்பட்ட ஜனங்கள் அடைந்திருந்தார்கள். நித்யாவும் ஆத்மாவும் ஒரு ஓரத்தில் பதிய நின்று கொணடு மேலே கிடைத்ததைப் பற்றிக் கொள்ள ஹெலிகாப்டர் மேலே மேலே செல்ல,வயிற்றுக்குள் பயப்பந்து சுருட்டிக் கொள்ள "குமார் நாம் ஊருக்குப் போனதும் வேற நாய் வாங்கிக்கலாம்" என்றான் ஆத்மா.

"குமார்?"

"ஏய் குமார்! நித்யா குமார் எங்கே?"

"உங்க கூடத்தானே இருந்தான்"

"இல்லையே உன் கையைன்னா பிடிச்சிட்டிருந்தான்"

"குமார் ? குமார்! குமா ஆ‌ஆ‌ஆ‌ஆ ர்!"

நித்யாவின் அலறல் அந்த மெஷின் படபடப்பில் கரைந்தது.

*** *** ***

Monday, January 16, 2017

சிறுகதை உத்திகள் 03.

சிறுகதை உத்திகள் chiRukathai uthtikaL

சிறுகதை உத்திகள்

ரமணி
(இலக்கிய வேல், டிச. 2016)

03. சிறுகதையில் முரண்பாடு

ரு சிறுகதையின் மூன்று அடிப்படைக் கூறுகளில் முதலாவதான முரண்பாடு என்பது என்னவென்று இரண்டாம் இயலில் பார்த்தோம். அதாவது:

முரண்பாடு என்பது வேறொன்றுமில்லை:

  • கதையின் முக்கிய பாத்திரம் தான் இப்போது இருக்கும் நெருக்கடியான நிலையில் இருந்து மீள்வதற்காக, ஒன்றை எதிர்பார்ப்புடன் விழைந்து செயல்படத் தொடங்க, அந்த மீட்சி நிகழ, நிகழலாமலிருக்க, சாத்தியக் கூறுகள் இருப்பதுதான்.
  • அந்த விழைவும் செயல்பாடும் பொதுவாக, வன்முறை சார்ந்ததாகவோ பகட்டாகவோ இருக்க வேண்டுவதில்லை. மிகவும் எளியதாகக் கூட இருக்கலாம்.
  • விழைவின் திண்மையும் செயல்பாடுமே முக்கியம்.

முரண்பாடு உதாரணங்கள்

அதிர்வு
தி. ஜானகிராமன்

பள்ளிகொண்ட ரங்கநாதனை யாரும் பார்த்ததாகத் தெரியவில்லை. கோவிலுக்கு வந்த அத்தனை பேரும் தூணோரமாக அமர்ந்திருந்த மனிதனை மொய்த்துக் கொண்டிருந்தார்கள். நெடுஞ்சாண்கிடையாக அவன் முன் விழுந்து எழுந்தார்கள். எழுந்து அங்கேயே நின்றார்கள்.

...

விலகுமோ என்று கூட்டத்தின் வெளி வட்டத்தின் அருகே சற்று நின்றாள். அவளைத் திரும்பிப் பார்த்தவர்கள் ஏதோ கல்லை மண்ணைப் பார்ப்பதுபோல் பார்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டார்கள். செங்கமலத்துக்குச் சற்று அதிர்ச்சியாக இருந்தது. அவளைப் பார்த்து எந்தக் கண் இரண்டாம் தடவை அவளைத் திரும்பிப் பார்க்காமல் இருந்தது?

வழி தெரியவில்லை!
சுஜாதா

ஆனால், இந்தக் கதை அந்த சினிமாவைப் பற்றியது அல்லவே. சினிமா பார்த்துவிட்டு நான் ஸ்டேஷனுக்குத் திரும்பியபோது, எனக்கு ஏற்பட்ட விநோத அனுபவத்தைப் பற்றியது. படம் சற்று நீளமான படம். முடிந்து திரும்பும்போது, எனக்கு நல்ல பசி. கடைசி ரயிலைத் தவறிவிடப் போகிறேனே என்கிற கவலை. மாம்பலத்துக்குப் போய்ச் சப்பாத்தி சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று வேகமாக நடந்தேன்.

சுமைதாங்கி
ஜெயகாந்தன்

காலனின் தூதுவன்போல் ஒரு போலீஸ்காரன் அந்தக் காலனிக்குள் வந்து ஒவ்வொரு வீடாகக் கேட்டான். கேட்டான்... கேட்டானா?...அவன் தன் நெஞ்சும் உடலும் பதைபதைக்க ஒவ்வொரு வீட்டின் முன்பும் நின்று, "அம்மா! உங்க வீட்டிலே ஏதாவது கொழந்தை, ஆம்பளைக் கொழந்தை, பத்து வயசு இருக்கும், காக்கி நிசாரும் வெள்ளைச் சட்டையும் போட்டுக்கிட்டு... உண்டுங்களா?" என்று திணறினான் போலீஸ்காரன்.

கதையின் முதல் பக்கத்தில் அமைக்கப்படும் முரண்பாடு,
  • வாசகரைக் கதைக்குள் ஈர்க்கும் விதத்தில் அமையவேண்டும்.
  • ’என்ன ஆச்சோ?’ என்று கதைக்குள் நுழைந்து பார்க்கச் செய்வதாய் இருக்கவேண்டும்.
  • கதை எதைப் பற்றியது என்று ஓரளவுக்கு உணர்த்தும் வகையில் இருக்கவேண்டும்.
  • சில சமயம் கதையின் முதல் வரிகளிலேயே முரண்பாடு அமையும்: மேலுள்ள ஜானகிராமனின் அதிர்வு சிறுகதையில் உள்ளது போல.
  • அல்லது ஒரு விவரமான பீடிகையுதன் தொடங்கிக் கதைக்குள் வரலாம்: சுஜாதாவின் இரண்டணா சிறுகதை போல.

முரண்பாடு வகைகள்

முரண்பாடுகளைப் பொதுவாக இப்படிப் பாகுபடுத்தலாம்:
  • மனிதன்-மனிதன் முரண்பாடு
  • மனிதன்-இயற்கை முரண்பாடு
  • மனிதன்-கடவுள் முரண்பாடு
  • மனிதன் தனக்குள் முரண்பாடு
  • மனிதன்-சமூகம் முரண்பாடு
  • மனிதன்-இயந்திரம் முரண்பாடு
சிறுகதையின் முரண்பாடு
  • தொடக்கத்திலேயே ஏற்படுத்தப்படுகிறது.
  • கதையோட்டத்தில் விரிக்கப்படுகிறது.
  • ஓர் உச்ச நெருக்கடி நிலையை அடைகிறது.
  • கடைசியில் தீர்வு காணப்படுகிறது.
கதையின் முரண்பாடு, உச்ச நெருக்கடி, இறுதித் தீர்வு மூன்றும் கதையின் முக்கிய பாத்திரத்திற்கே நிகழ்கின்றன. இந்த முரண்பாடு முக்கிய பாத்திரத்திற்கு ஏற்படுமாறு ஓர் எதிர்ப் பாத்திரமாக இன்னொரு மனிதனோ, இயற்கையோ, கடவுளோ, மனமோ, சமூகமோ அல்லது இயந்திரத் தொழில்நுட்பமோ அமைகிறது.

முக்கிய பாத்திரம் முரண்பாட்டைத் தீர்க்கச் செயல்படுகிறது. எதிர்பாத்திரம் தடைகளை உருவாக்குகிறது. இத்தகைய வினை-எதிர்வினை நிகழ்வுகளின் சாத்தியங்கள் வாசகரை ஈர்த்து, அவர் கதையில் தோய்ந்து தன்னை முக்கிய பாத்திரத்துடன் இணைத்துக் கொள்ளுமாறு செய்கிறது.

முரண்பாடு வகைகளுக்கு உதாரணங்கள்

மனிதன்-மனிதன் முரண்பாடு

நாடியது கேட்கின்...
குருநாதன் ரமணி

நான் முத்துவேல். என் நண்பன் மனோகரன். இருவரும் நெருங்கிய நண்பர்கள், அதுதான் ஆச்சரியம்!

ஏனெனில் நான் (மனோகரன் மூடநம்பிக்கைகள் என்று மறுக்கும்) அனைத்து ஆன்மிக விஷயங்களையும் நம்புபவன்: எனக்குக் கோவில் ஸ்தல புராணங்கள், சாயி பாபா போன்ற மகான்கள் நிகழ்த்தும் அதிசயங்கள், பேய்-பிசாசுகள் பிடிப்பது அவற்றை ஓட்டுவது, மந்திரித்து வைத்தியம் செய்வது, மறுபிறவி--இன்னும் எது வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளுங்கள்--போன்ற அனைத்து விஷயங்களும் உண்மை.

மனோகரனுக்கோ ஒரு நியூட்டன், ஒரு ஐன்ஸ்டின், ஒரு ஸ்டீஃபன் ஹாகிங்--இன்னும் யாரை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளுங்கள்--போன்று யாரவது உறுதிப்படுத்தி யிருந்தால்தான் அது உண்மை, அறிவியல், நிச்சயம் நம்பலாம். எல்லாத் துறைகளிலும் பற்பல விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் முரண்பட்டுக் கருத்துக்களைச் சொல்கிறார்களே மனோ, இவற்றில் எதுதான் உண்மை என்று கேட்டால் ஜகா வாங்கிவிடுவான்! காலம் காலமாக நிறுவப்பட்டதாகக் கருதப் பட்ட விஞ்ஞான் உண்மைகள் ஒரு நாள் தூக்கியெறியப் படுவதே விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்பது அவன் கட்சி.

சரி, விஷயத்துக்கு வருகிறேன். நாங்கள் இருவரும் சேர்ந்து வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி ஜோதிடம் பார்க்க முடிவுசெய்தோம்!

மனிதன்-இயற்கை முரண்பாடு

உயிர்
கந்தர்வன்

ஒரு உச்சி வெயிலில் கடலோடித் திரும்பிய மீனவர் ஒருவர் தான் போட் ஜெட்டியில் அந்த சேதியைச் சொன்னார். தீவில் ஒரு திமிங்கலம் ஒதுங்கிக் கிடப்பதாக.

...

திமிங்கலம் ஒதுங்கிய மூன்றாம் நாள்தான் அவன் குடும்பத்தோடு தீவுக்குப் பயணமானான் புறப்படுமுன் இரண்டு நாளாய்ப் பிள்ளைகள் விடிந்து எழுந்ததும் திமிங்கலம் குறித்து கூடிக் கூடி உட்கார்ந்து கற்பனையும் பேத்தல்களுமாய் வாயொழுகப் பேசித் திரிந்ததை அவள் அடிக்கடி பார்த்துவிட்டு வாய் பொத்தித் திரும்பிக்கொண்டு சிரித்து வைத்தாள்.

மனிதன்-கடவுள் முரண்பாடு

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
புதுமைப்பித்தன்

மேலகரம் மே. க. ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே. க. ரா. கந்தசாமிப் பிள்ளையவர்கள், ’பிராட்வே’யும் ’எஸ்பிளனேடு’ம் கூடுகிற சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு வெகு தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்.

...

இப்படியாக மேற்படியூர் மேற்படி விலாசப் பிள்ளையவர்கள் தர்ம விசாரத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுதுதான் அவருக்குக் கடவுள் பிரசன்னமானார்.

திடீரென்று அவருடைய புத்தி பரவசத்தால் மருளும்படித் தோன்றி, "இந்தா, பிடி வரத்தை" என்று வற்புறுத்தவில்லை.

"ஐயா, திருவல்லிக்கேணிக்கு எப்படிப் போகிறது?" என்று தான் கேட்டார்.

மனிதன்-தனக்குள் முரண்பாடு

சதுப்பு நிலம்
எம்.ஏ. நுஃமான்

அவனுக்குச் `சுரீர்’ என்றது. தான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்ததை அவள் பார்த்துவிட்டதைக் கண்டதும் அவன் கண்கள் உயர்த்தி மேலே சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தான். பிறகு தனது மணிக்கூட்டையும் அதனோடு ஒப்பிட்டுப் பார்த்தான். தன்னைப்பற்றி அவள் பிழையாக நினைக்கக்கூடும் என்று அவன் நினைத்தான். அந்த நினைப்பு அவனைச் சுட்டது. அவள் அவ்வாறு நினையாமலும் இருக்கலாம். அவளுக்கும் என்னைப் பார்ப்பதில் ஒரு கவர்ச்சி உண்டாகி இருக்கலாம். நான் அவளைப் பார்த்ததனால் கவர்ச்சிகொண்டு அவள் மீண்டும் என்னைப் பார்க்கக்கூடும் என்றெல்லாம் அவன் நினைத்தான்.

மனிதன்-சமூகம் முரண்பாடு

காடன் கண்டது
பிரமிள்

நான் கும்புட்டேன். "என்னை உடுங்க சாமி"ன்னேன்.

"சொன்னவங்ககிட்டே போய் சொல்லுடா, கபர்தார்னு சொல்லு."

"சரி சாமி"ன்னேன். அப்புறமா ஆரு சொன்னவன்ங்கறாங்க. ஆருமில்லீங்க, நானு பார்த்தேனுங்கன்னேன். பேச்சை மாத்திட்டாங்க.

"நீங்க ஏண்டா ஓணான், நாயி, பூனையைத் திங்கிறீங்க? ஆடு மாடு இல்லியா?"

"அதுக்கேதுங்க பைசா?"ன்னேன்.

கொஞ்ச நேரம் பேச்சில்லே, அப்புறம் மெதுவா கேள்வி. "நீ எப்படா கடேசி வாட்டி மலைக்காடு பக்கமாய் போனே? யார்றா மலைக்காட்டுக்குப் போறவன் வாறவன்? சுக்கானுக்கு யார்றா மலைக் காட்லேருந்து வந்து கஞ்சா பத்திரம் சப்ளை பண்றவன்?"

சுக்கான், பத்திரம், அது இதுன்னதும் - நல்ல பாம்பைப் புடிக்கறதுக்கு சாரைப் பாம்பு விடறாங்கடா காடான்னு உஷாராயிட்டேன்.

"சுக்கான் நல்லபாம்புத் தோலை வித்து வயத்தைக் களுவுற பாவி சாமி. எங்களுக்கு இப்பல்லாம் பாடேதுங்க? எங்காவது வயலிலே வரப்பிலே பாம்பைப் புடிச்சாதாஞ் சாமி"ன்னு கும்புட்டேன்.

"எலக்சனுக்கு நில்லுடா. ஓட் போடுவான், அப்புறம் நாட்டை எல்லாம் காடா மாத்துடா. போடா! போயி கரப்பான் பூச்சியைத் துண்ணுடா"ங்கறாரு ஏட்டு.

மனிதன்-இயந்திரம் முரண்பாடு

ஜில்லு
சுஜாதா

ஜன்னலுக்கு வெளியே தொடுவானத்தில் ஒரே ஒரு மேகம் கருப்புத் தீற்றலாகத் தெரிந்தது.ஆத்மா கதவைச் சார்த்தினான். வரப்போகிறது. தெரிந்துவிட்டது. அவர்கள் கணக்குப்படி சாயங்காலம் மழை வந்து விடும். அதற்குள் புறப்பட்டுவிட வேண்டும்.

திரும்பினான். நித்யா பெட்டியில் துணிகளை அடைத்துக் கொண்டிருந்தாள்.

"சீக்கிரம் நித்யா!"

"எதை எடுத்துக்கறது எதை விடறது?"

"மொத்தமே மூணு பேருக்கும் எட்டு கிலோதான். ரொம்ப அவசியமானதை மட்டும் எடுத்துக்க"

"அவசியமானதுங்கறது எது?"

அந்த கேள்விக்கு இந்த சந்தர்ப்பத்தில் ’மூச்சு’ என்பதைத் தவிர ஆத்மாவிடம் வேறு பதில் இல்லை .

முரண்பாடு அமைக்க உத்திகள்

கதையின் முரண்பாடு சரியாக அமையவும் விரியவும் கீழ்வரும் உத்திகள் பயன்படும்.

01. உறுதியான, வலியுறுத்தும் நெருக்கடி, விழைவு

02. விழைவு-விளைவுகள் பற்றி வாசகர் பரிச்சயம்

03. ஏன் இந்த விழைவு என்பதன் செய்தி

04. விழைவு நிகழ, நிகழாமல் இருக்க என்று இருவித சாத்தியங்கள்

05. விழைவை முயல்வதில் உருவாகும் பற்பல, விதவிதமான தடைகள்

06. விளைவுகளுக்குப் பாத்திரங்கள் பொறுப்பேற்றல்

07. வாசகர் ஊகிக்க முடியாது வியப்புறும் வண்ணம் கதை நிகழ்வுகள்

08. முக்கிய பாத்திரத்துடன் வாசகர் ஒன்றுதல்

09. மனித இயல்பின் ஒரு கூறினை வெளிப்படுத்துதல்

10. கதை ஓர் இடம்-காலம் சார்ந்ததாகினும் போராட்டம் எல்லோர்க்கும் பொதுவானதாக அமைதல்

*** *** ***