Friday, November 20, 2015

014. கைக்கு எட்டியது!

ரமணியின் கதைகள்: ramaNiyin kathaikaL

கைக்கு எட்டியது!

சிறுகதை
ரமணி (மே 2015)

(இலக்கிய வேல், நவ 2015)

வீட்டின் சின்னத் தோட்டத்தில் ஒரு பெரிய பங்கணபள்ளி மாமரம். ஒவ்வோர் ஆண்டும் அது எங்கள் நாக்குத் தினவைத் தீர்த்துவைக்கும். அதுவும் போன வருடம் நாங்கள் ஒரு மாம்பழம் கூடக் கடையில் வாங்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

முன்னொரு காலம் நாங்கள் லாயிட்ஸ் சாலையில் ஒரு வாடகை வீட்டில் மாடியில் குடியிருந்தோம். பக்கத்து வீட்டில் ஒரு பெரிய மாமரம். மாம்பழ சீசனில் அந்த மரத்தில் எண்ணி மாளாத பழங்கள் கொத்துக் கொத்தாகத் தொங்கும். மரமே பொன்னால் வேய்ந்ததுபோல் மிளிரும்! அந்த மரம் காலை முதல் மாலை வரை கிளிகளின் மகிழ்ச்சிக் கூவலுக்கும், அணிலின் சண்டித்தனத்துக்கும் ஈடு கொடுத்து நிற்கும்.

கீழ் தளம் மட்டுமே கட்டியிருந்த அந்த வீட்டில் ஓர் இளம் ஜோடி. கூட அவர்கள் பெற்ற ஐந்து வயதுப் பெண் குழந்தை. மாலை வேளைகளில் அவர்கள் மூவரும் மொட்டை மாடிக்கு வந்து காற்றாடப் பேசிக்கொண்டிருந்தும், குழந்தையோடு விளையாடிக் கொண்டிருந்தும் பொழுது போக்குவர். அந்தப் பெண் மாங்கனிகளை விட நிறமாகவும் அழகாவும் இருந்தாள். அவனும் வாட்டசாட்ட இளைஞனாக முகத்தில் ஒளியும் தலையில் லேசான முன்வழுக்கையும் மின்ன இருந்தான். நாங்கள் முதல் மாடியில் வசித்ததால் நான் அவர்களை ஒரு கழுகுப் பார்வையிலேயே நோட்டம் போட முடிந்தது. நான் பார்ப்பதை என் மனைவிக் கழுகு பார்த்துவிட்டு என்னுடன் சேர்ந்துகொள்ளும்! எங்கள் மூன்று வயது மகன் ஹால் போன்று பெரிதாக இருந்த முன் அறையில் மூன்று சக்கர சைக்கிள் ஓட்டிக்கொண்டிருப்பான்!

ஹலோ, இந்தக் கதை அந்தப் பெண்ணைப் பற்றி இல்லை! கதை என்னைப் பற்றி! அதற்கு முன் எங்கள் வீட்டு மாமரம் பற்றிச் சில வார்த்தைகள் சொல்லியாக வேண்டும்.

எங்கள் வீட்டு மாமரத்தை இன்னமும் கிளிகள் நாடவில்லை. என்றாலும் அணில்கள் ஓயாது ஓடித் திரிந்து ஒரு மாங்காயும் முழுதாகக் கனிய விடாது குதறித் தின்று மீதியைக் கீழே போட்டுவிடும். போவோர் வருவோர் எங்களுக்குத் தெரியாமல் காய்களைப் பறித்துச் செல்வதும் உண்டு. இதனால் லாய்ட்ஸ் ரோடு வீடு போல மரத்தில் கனிகள் தொங்குவதைக் பார்ப்பது எனக்கோர் கனவாகவே இருந்து வருகிறது.

எங்கள் மாமரக் காய்கள் இப்படி மரத்திலேயே பழுக்க விடுவது முடியாததால், அவை உள்ளங்கையை விடப் பெரிதானவுடன், நாங்கள் காய்களைப் பறித்து அவற்றைத் ’தாம்பரம் டைம்ஸ்’ செய்தித் தாளில் சுற்றிவைத்துக் கனியவைப்போம். வீட்டில் கனியவைத்த பழங்கள் ஏராளமாக இருந்ததால் சென்ற வருடம் நாங்கள் ஒரு மாம்பழம் கூடக் கடையில் வாங்கவில்லை. அக்கம் பக்கத்தார்க்கும் கொடுத்தோம். சீசன் தப்பிப் பெய்த மழையால் இந்த வருடம் அவ்வளவாகக் காய்கள் இல்லை. எனவே இருந்த காய்களையும் அவற்றில் சில கைக்கெட்டும் தூரத்தில் சுற்றுச் சுவர் அருகில் தொங்குவதையும் நாங்கள் தினமும் கண்காணிப்பது வழக்கமாகியது.

*** *** ***

போன வாரம் ஒரு நாள் மாலை. கையில் பத்திரிகையுடன் ஒரு சினிமாப் பாடலை முணுமுணுத்தபடியே நான் வாசலுக்கு வந்தபோது கவனித்தேன். பத்துப் பன்னிரண்டு வயதுள்ள ஒரு பள்ளிச் சிறுவன் சுற்றுச் சுவரை ஒட்டி நின்றுகொண்டு அருகில் தொங்கிய இரண்டு மாங்காய்களைக் கண்ணால் ஆராய்ந்துகொண்டிருந்தான். அருகில் சைக்கிளுடன் அவன் நண்பன்.

"தம்பீ! என்ன வேணும்?"

"ஒரு மாங்காய் வேணும்."

"இதெல்லாம் அடுத்த சில நாட்கள்ல பழுக்கக் கூடிய பங்கணபள்ளி பழக்காய்கள். அதைக் காயாய்ப் பறிக்கக்கூடாது. இந்த மாம்பழ சீசன்ல எதுக்கு உனக்கு இப்போ மாங்காய்?"

"புதைக்க!"

முதல்நாள் இரவு தாரை தப்பட்டை வாண வேடிக்கையுடன் பின்னால் போலீஸ் ஜீப் தொடர ஒரு சவ ஊர்வலம் எங்கள் தெரு வழியாகப் போனது நினைவுக்கு வந்தது. ஒரு வேளை இவன் வீட்டில் அது மாதிரி யாராவது காலமாகி, அவர் வாழ்வில் மிகவும் விரும்பிய மாங்காய் ஒன்றையும் அவருடன் புதைக்கவேண்டிக் கேட்கிறானோ?

"எதுக்கு மாங்காயைப் புதைக்கணும்?"

"ஒரு மாங்காயை எங்க வீட்ல புதைச்சு வெச்சா அதிலேர்ந்து கொஞ்சநாள்ல செடி வரும் இல்ல? அதுக்குத்தான்!"

அவனது அறியாமை என்னை வியக்கவைத்தது! எந்த ஸ்கூல், என்ன க்ளாஸ் என்றெல்லாம் கேட்கும் துடிப்பை அடக்கிக்கொண்டு பொறுமையுடன் சொன்னேன்.

"தம்பீ! நீ நினைக்கற மாதிரி மாஞ்செடி மாங்காய்லேர்ந்து வர்றதில்ல. அது மாம்பழத்தோட கொட்டைலேர்ந்து வர்றது... ஒண்ணு செய். நேரா சேலையூர் கடைத்தெருவுக்குப் போ. அங்க கடையில மாம்பபழம் கிடைக்கும். நல்ல பங்கணபள்ளிப் பழமா பார்த்து வாங்கிச் சாப்பிடு. அப்புறம் அந்தக் கொட்டையை உங்க வீட்ல மண்ணுல புதைச்சு வெச்சு தினமும் தண்ணி ஊத்து. கூடிய சீக்கிரம் அது முளைச்சுச் செடியாகும். என்ன, செய்யறியா?"

"தாங்க்ஸ்" என்று சொல்லிவிட்டுப் பையன்கள் இருவரும் சைக்கிளை மிதித்துக்கொண்டு கிளம்பிவிட்டார்கள்.

*** *** ***

ன் மனைவி வங்கியில் இருந்து வீடு திரும்பியதும் அந்தப் பையனின் அறியாமை பற்றிச் சொன்னேன். சிரித்தாள்.

"அறியாமை அவனுக்கா உங்களுக்கா?"

"என்ன சொல்ற நீ?"

"இவ்ளோ அப்பாவியா இருக்கீங்களே! மாங்கொட்டைலேர்ந்து மாஞ்செடி வரும்னு ரெண்டாம் வகுப்புப் பிள்ளைக்குக் கூடத் தெரியும்! அந்தப் பையன் உங்களை செமத்தியா கிண்டல் பண்ணியிருக்கான். அதுகூடத் தெரியாம அவனுக்குப் பாடம் எடுத்தீங்களாக்கும்!"

"என்னைக் கிண்டலா பண்ணினான் அவன்?"

"ஆமாம்! இன்னும் ரெண்டு நாள்ல பாருங்க. அந்த ரெண்டு மாங்காயும் மரத்தில இருக்காது. ஐயா சாயங்காலம் நாலு-நாலரை மணிவரைக்கும் ஹாய்யா ஏஸியைப் போட்டுகிட்டுத் தூங்குவார் இல்ல. அப்படியே தூங்காட்டியும் நான் வரும்போதுதான் கம்ப்யூட்டர் ரூமை விட்டு வெளில வருவார் இல்ல? அந்த ரெண்டு காயையும் நீங்களே அவனுக்குப் பறிச்சுக் கொடுத்திருக்கலாம்."

"அப்படியா சொல்ற? நாளைக் காலைலேர்ந்து விடாம வாட்ச் பண்ணி அந்தப் பசங்களைக் கையும் களவுமாப் பிடிக்கறேன் பார். என்ன பந்தயம்?"

"அந்த மாங்காய் இன்னும் ரெண்டு நாளைக்கு அப்புறம் மரத்தில இருந்தா நான் உங்கள் கவிதைகளை யெல்லாம் பொறுமையா, நிதானமாப் படிக்கறேன். அப்படி அந்த மாங்காய் ரெண்டும் காணாமப் போச்சுன்னா நீங்க எனக்கு ஒரு புடவை வாங்கித் தரணும்! சம்மதமா?"

*** *** ***

ன் மனம் ஒரு புதிய கோணத்தில் வேலை செய்தது. போன வாரம் இன்டர்நெட்டில் "உங்கள் வெப்-காமிராவால் வீட்டைக் கண்காணிப்பது எப்படி?" என்று விளக்கிய ஓர் ஆங்கிலக் கட்டுரை படித்தது ஞாபகம் வர என் மனதில் ஒரு லைட்-பல்ப் எரிவது போல் பொன்னிற மாம்பழம் தெரிந்தது!

விளக்கம் மிகவும் எளிதாக இருந்தது. மறுநாள் காலை கம்ப்யூட்டரின் மானிட்டர் மேல் ஒரு சின்னக் குருவி போல் உட்கார்ந்திருந்த வெப்-காமெராவை எடுத்து ஜன்னலில் பொருத்தி டேப் போட்டு ஒட்டினேன். காமிராவை மறைவாக ஆனால் சுற்றுச் சுவர் மாங்காய்களை எளிதாகப் படம் எடுக்கும் விதத்தில் அமைத்தேன். அதன் USB கேபிளுடன் ஒரு எக்ஸ்டென்ஷன் சேர்த்ததால் எளிதில் ஜன்னலில் பொருத்த முடிந்தது

அடுத்து, ISPY என்னும் இலவச மென்பொருளைத் தரவிறக்கி நிறுவினேன். அந்த மென்பொருளின் உபயத்தில் இப்போது எங்கள் வீட்டு வாசல் சுவர் திரையில் தெளிவாகத் தெரிந்தது. பத்து வினாடிகளுக்கு மேல் அசைவு தெரிந்தால் அதை வெப்கேம் படம் எடுக்கும்படி மென்பொருளை அமைத்தேன். காற்றில் அசைவுகள் போன்ற சிறு சலனங்களைக் வெப்கேம் பதிவுசெய்யாத வகையில் மென்பொருள் அமைந்தது அதன் சிறப்பு. சுற்றுச் சுவரில் வந்து உட்கார்ந்த ஒரு புறாவை வெப்கேம் படம் எடுத்து ஒரு விடியோ கோப்பாகச் சேமித்ததில் எனக்கு இந்த முயற்சியில் பரம நம்பிக்கை!

என் மனைவியிடம் காட்டிய போது அசந்துவிட்டாள்! "ஐயோ, நூறுக்கு மேல் நீங்கள் எழுதித் தள்ளிய கவிதைகளை நான் படிக்கணுமா? கடவுளே!" என்றாள். மனதில் ஏதோ தோன்றக் கொஞ்சம் ஆறுதல் அடைந்து சிரித்தாள். "எப்படியும் ஐயா மதியம் தூங்க முடியாதில்ல? கம்ப்யூட்டர் பக்கத்திலேயே உக்காந்து கண்காணிக்கணும் இல்லையா?"

"நம்ம பந்தயம் அந்த ரெண்டு பசங்களைப் பத்திதான். அதனால நான் ஒரு மணிக்குப் படுத்திட்டு மூணு மணிக்கு எழுந்திடுவேன். அதுக்கு அப்புறம் தானே ஸ்கூல் விடும்?"

"பசங்க பறிக்கறாங்களோ இல்ல வேறு யாரோ, ரெண்டு நாள் கழிச்சு மாங்காய் மரத்துல இல்லேன்னா எனக்குப் புடவை நிச்சயம்!"

"அதுக்கென்ன வாங்கிட்டாப் போறது!"

*** *** ***

ுதல் நாள் மாலை வரை தூங்காமல் கணிணியில் உட்கார்ந்து முகநூலில் மேய்ந்தவாறே கண்காணித்தேன். அந்தப் புறா தவிர வேறு எதுவும் சலனப் படக் கோப்புகளை வெப்கேம் பதியவில்லை. வெளியே அந்த இரண்டு மாங்காய்களும் சற்றுப் பருத்து, பத்திரமாக இருந்தன. மாங்காய் புதைக்கக் கேட்ட பையனைக் காணோம்!

வெப்கேம் தந்த நம்பிக்கையில் இரண்டாம் நாள் மதியம் ஒரு மணிக்குக் கண்ணயர்ந்தேன். வெம்மையைப் பொருட்படுத்தாது கணிணி அறையில் இருந்த கட்டிலில் படுத்தேன். அடுத்த சில நிமிடங்களில் தூங்கிவிட்டேன். மூன்று மணிக்கு செல்ஃபோன் அலாரம் எழுப்பியது. மாங்காய்கள் அப்படியே இருந்தன.

தொடர்ந்து வெப்கேம் திரையில் பார்ப்பது அயர்ச்சியாக இருந்தது. எனக்கு மாங்காய்கள் திருடு போவது பற்றிக் கவலையில்லை. திருடியது அந்தப் பையன்களா என்று தெரிந்தால் போதும். பந்தயத்தில் நான் தோற்று மனைவிக்குப் புடவை வாங்கித் தருவதும் எனக்கு மகிழ்ச்சியே. எனவே என் கற்பனைக் குதிரையில் ஏறிக் கனவுலகை வலம்வந்து எழுதியதில் பாதியில் நின்ற கவிதைகளையும், சிறுகதைகள் இரண்டையும் தொடர்வதில் ஆர்வம் காட்டினேன்.

"மாங்காய் அப்படியே இருக்கே! எனக்கு வேற வழியில்லை போலிருக்கே?" என்றாள் மனைவி மாலை வீடு திரும்பியதும்.

"கவலைப் படாதே விஜயா! மாங்காய் இருக்கோ போச்சோ, என் கதைகளைப் படிக்கற மாதிரி நீ என் கவிதைகளையும் நிறுத்திப் பொறுமையாப் படிச்சா நான் உனக்கு ஒண்ணு என்ன ரெண்டு புடவை வாங்கித் தர்றேன். உன் பொறந்தநாள் வேற அடுத்தவாரம் வருது இல்லையா?"

*** *** ***

றுநாள் காலை கோலம் போட வாசல் பக்கம் சென்ற என் மனைவி என்னைக் கூப்பிட்டுக் காட்டினாள். "ஒரு மாங்காயைக் காணோம்! ஒண்ணுதான் இருக்கு."

"அப்படீன்னா நீ என் கவிதைகள்ல பாதிதான் படிப்பியா?"

"நீங்க எனக்கு ஹாஃப்ஸாரிதான் வாங்கித் தருவீங்களா?"

"அடுத்த வருஷம் ரிடயர் ஆற வயசில உனக்கு அதுவேற ஆசையா? வா, கம்ப்யூட்டர்ல பார்ப்போம்."

நேற்று மாலை தெருவிளக்கைப் போடும் நேரம் வரை இருந்த அந்த மாங்காயை அதன் பின் யார் எடுத்தது என்று நான் எங்கள் வெப்கேம் சேமித்த சலனப் படக்கோப்புகளைத் தேடினேன். இரண்டு கோப்புகள் பதிவாகி இருந்தன. பதிவான நேரம் இரவு எட்டரை மணி. நாங்கள் இருவரும் சாப்பிட்டுக்கொண்டிருந்த நேரம். வெளியே இருளாக இருந்தபோதும், வீட்டின் எதிரில் இருந்த சோடியம்-வேப்பர் தெருவிளக்கில் நடந்தது அடையாளம் காணும் அளவுக்குத் தெளிவாகவே தெரிந்தது.

அந்த இரண்டு பையன்கள்தான்! சைக்கிளை ஸ்டாண்டு போட்டு நிறுத்திவிட்டு ஒரு பையன் அதன் மேல் ஏறி ஒரு மாங்காயைப் பறித்தது கண்டோம். அதன் பின் அவர்கள் வெளிப்பக்கம் அசையாது நின்றுவிட்டதால் படக்கோப்பு அத்துடன் முடிந்தது. அவர்கள் இன்னும் அங்கேயே இருந்ததால் இன்னொரு மாங்காயையும் பறித்துச் செல்வது பற்றி ஆலோசித்திருப்பார்கள் என்று தோன்றியது.

அடுத்த கோப்பைத் திறந்தேன். ஒரு வினாடி அந்த ’மாங்காய் புதைக்கக் கேட்ட’ பையனின் முகம் தெரிந்து பின் ஒரே இருட்டாகி விட்டது.

"நேத்து இந்த நேரத்துக்குத்தான் பத்து நிமிஷம் கரண்ட் கட்டாச்சு. ஞாபகம் இருக்கா?" என்றாள் விஜயா.

"ஆமாம்!" மறுபடியும் அந்த இரண்டாவது படக்கோப்பை ஓட்டினேன். மின்சாரம் துண்டிக்கப்பட்டு வெளியில் இருளானாலும் அறையில் இன்வர்ட்டர் தயவில் ஒளிர்ந்த வெண்குழல் விளக்கின் ஒளியில் ஜன்னல் அருகில் நிழலாக ஏதோ மூடுவது போல் பதிவாகி இருந்தது.

சட்டென்று கலவரமாகி எழுந்து ஜன்னலில் வெப்கேம் பொருத்திய இடத்தைப் பார்த்தேன். ஒரு பல்லியின் தலைபோல் USB கேபிள் முனை மட்டும் பார்த்துக் கொண்டிருக்க, ஆயிரத்தி ஐநூறு ரூபாய்க்குப் போன மாதம் மவுன்ட்ரோடு ரிச்சி தெருவில் வாங்கிய வெப்கேம் காணாமல் போயிருந்தது!

*** *** ***

Monday, October 5, 2015

016. திருட்டுப் பட்டம்!

ரமணியின் கதைகள்: ramaNiyin kathaikaL

திருட்டுப் பட்டம்!

ரமணி (ஆக 2015)
(வல்லமை: http://www.vallamai.com/?p=62600)

சைதாப்பேட்டை டாட்‍ஹண்டர் நகர் ’மாதிரி உயர்நிலைப் பள்ளி’யில் எட்டாவது வகுப்பில் படிக்கும்போது நானும் கைலாசமும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். கடைசியில் ஒருவருக்கொருவர் ’காய் விட்டுக்கொண்டு’ பிரிந்தோம். காலப்போக்கில் ஒருவரை ஒருவர் மறந்தே போனோம். என் வாழ்வில் இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு சோகமான, சுமையான நிகழ்ச்சி நடந்தது. பழைய தோழமையைப் புதுப்பித்துக்கொள்ள அது ஒரு தூண்டுதலாக அமைந்தது.

நிகழ்ச்சி நடந்த மறுவாரம் ஒரு நாள் மாலை கைலாசத்துடன் தொலைபேசினேன். அவனைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னேன். மிகுந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஒலித்த குரலில் என்னை ஒருமையில் ’டா போட்டு’ அழைத்து அந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை சாப்பிட வரச்சொன்னான்.

ஞாயிற்றுக் கிழமை சென்னை கிழக்கு தாம்பரம் சாலையில் சேலையூர் அருகில் கைலாசம் வீட்டைக் கண்டுபிடித்து அழைப்பு மணியை ஒலித்தேன். ஓடி வந்தான். "ரங்கா, உன்னைப் பார்த்து முப்பது வருஷமாச்சுடா!" என்றான். "இப்ப நீ என் பேச்சு ’பழம்’ தானே?"

"கொஞ்ச நாளாவே நான் உன்கூட ’பழம்’தான்", என்றேன். "அதனாலதான் உன் டெலிஃபோன் நம்பர் கண்டுபிடிச்சு அன்னிக்கு உன்னோட பேசினேன். நீ தமிழ்க் கதையுலக வாசகர்களுக்கு நல்லாப் பரிச்சயமான ஒரு எழுத்தாளன் ஆச்சே! நானும் உன் வாசகன். ’இன்றைய தமிழ் எழுத்தாளர்கள்’ புத்தகத்தில உன் சுயவிவரம், தொலைபேசி எண், விலாசம் பார்த்தேன். உன் படைப்புகளைச் சிலாகித்து அந்த புத்தகத்தில ரெண்டு ரெவ்யூ வந்திருந்ததே!"

"ஆமாம், நீ என்னைத் தொலைபேசில தொடர்புகொண்டப்ப நம்பவே முடியலைடா! இப்ப நேர்ல பாக்கறப்ப, உன் குரல் அப்படியே இருக்கு. உன் உருவம்தான் முழுக்க மாறிடுத்து!"

"ஆனால் உன் குரல், உருவம் ரெண்டும் ஸ்கூல்ல பார்த்த மாதிரியே இன்னமும் இருப்பது ஆச்சரியம்!" என்றேன்.

"அப்படியா! அப்பா போனதும் கண்ணாடி போட்டுக்கிட்டேன். கல்லூரி நாள்லேர்ந்து வெச்சிருந்த மீசையை அம்மா போனதும் எடுத்துட்டேன்."

"உங்கப்பா அம்மா ரெண்டு பேருமே கதை எழுதுவான்னு நீ என்கிட்ட ஸ்கூல் படிக்கும்போதே சொன்னே இல்ல?"

"ஞாபகம் வெச்சிருக்கயே! வா, கூடத்து ஷோகேஸ்ல அவங்க படம் இருக்கு, பாரு", என்று கூட்டிச்சென்று அவன் பெற்றோர் கல்யாண போட்டோவைக் காட்டினான். "அப்பா சின்ன வயசிலயே போய்ட்டதால ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கற மாதிரி இந்த ஒரு படம்தான் கிடைச்சுது."

"ஷோகேஸ்ல மற்ற பொருட்கள்லாம் பாரு. இதோ வரேன். விமலா!" என்று விளித்தபடியே விலகி சமையல்கட்டை நோக்கிச் சென்றான்.

கைலாசத்தின் பெற்றோர் போட்டோவில் அம்மா பக்கம் ஓர் ஊதாநிற ரைட்டர் ஊற்றுப் பேனாவும், அப்பா பக்கம் ஒரு கருப்புநிற பைலட் பேனாவும் லாமினேட் செய்யப்பட்ட போட்டோ சட்டத்துடன் இணைந்திருந்தன. அந்த பேனாக்களைப் பார்த்ததும் என் கண்கள் கலங்கிக் கண்ணீர் துளிர்த்தது.

"இவள் விமலா, என் இல்லத்தரசி. சீனு எங்களுக்கு ஒரே பிள்ளை. எட்டாவது படிக்கறான். இப்ப கோடை விடுமுறைல திருச்சிக்குப் போயிருக்கான், அவன் சித்தி வீட்டுக்கு."

"வாங்கோ!" என்றாள் விமலா. "நீங்க ரெண்டு பேரும் ஸ்கூல காய் விட்டுண்டதுக்கப்பறம் முப்பது வருஷம் கழிச்சு இப்போதான் சந்திக்கறது மஹா ஆச்சரியம்!"

சிரித்தேன். "என் பிள்ளை மாதுவும் எட்டாவதுதான் படிக்கறான். அவன் தங்கை கமலா நாலாம் கிளாஸ். என் மனைவி பெயர் மாலினி, ஹோம்மேக்கர். கைலாசம், உன்னை மாதிரியே நானும் அரசு வங்கில கிளார்க் வேலை பார்க்கிறேன். வீடு நங்கநல்லூர்ல இருக்கு."

நான் வாங்கியிருந்த பழங்கள் பையை விமலாவிடம் தந்தேன். "கைலாசம், உனக்கு ஒரு சின்ன கிஃப்ட்" என்று சொல்லி அவனிடம் ஒரு சின்ன பார்சலைத் தந்தேன்.

உடனே பிரித்துப் பார்த்து வியந்தான். "எதுக்குடா எனக்கு விலை உயர்ந்த பார்க்கர் பேனா?"

"நன்கு அறியப்பட்ட எழுத்தாளனுக்கு ஓர் வாசக நண்பனின் எளிய பரிசு."

"தாங்க்யு ரங்கா" என்றான். "வா, மணி பன்னிரண்டாகப் போறது. சாப்பிட்டபடி பேசுவோம்."

*** *** ***

சாப்பாட்டு மேசையில் கைலாசம் நாங்கள் பள்ளியில் காய் விட்டுக்கொண்டது பற்றிக் கலகலப்பாக மனைவியிடம் சொன்னான். "எட்டாம் வகுப்பு முழுக்க நாங்க ரொம்ப நெருங்கிய நண்பர்கள் விமலா! அந்த வகுப்பு முழுவருடத் தேர்வில் இவன் என்னைவிடக் கணக்கிலும் ஆங்கிலத்திலும் அதிக மார்க். ஆனால் ரெண்டு பேரும் ஒரே டோட்டல் மார்க்...."

"அறுநூறுக்கு நானூத்தி எண்பது" என்றேன். "உனக்கு ஞாபகம் இருக்கா? ஆனால் மற்ற தேர்வுகள்ல நீ என்னைவிட ஒவ்வொரு பாடத்லயும் அதிக மார்க். அதனால கடைசிப் பரீட்சைக்கு நான் விழுந்து விழுந்து படிச்சேன்."

"ஒன்பதாம் வகுப்பு ஆரம்பிச்சு மூணு மாசத்தில இவன் திடீர்னு ஒரு நாள் ’கைலாசம், இந்த க்ஷணத்லேர்ந்து நான் உன் பேச்சு காய். என்னோட பேச முயற்சி பண்ணாதே, சொல்லிட்டேன்’, அப்படீன்னான். ஏண்டான்னு கேட்டதுக்கு பதில் சொல்லாமப் போயிட்டான். அதுக்கப்புறம் நாங்க கடைசிவரை பேசிக்கவே இல்லை!"

"ஆனால் மத்த பசங்க ஒரு பத்துநாள் நம்ம ரெண்டு பேரையும் சேர்த்துவைக்கப் படாத பாடு பட்டாங்க, இல்லயா?" என்றேன்.

"ஆமாமாம். நாங்க பேசிக்காட்ட கூட முன்ன இருந்த மாதிரி ரெண்டு பேரும் பக்கத்தில பக்கத்திலதான் உக்காரணும்னு கிளாஸ் வாத்தியார் சொல்லிட்டார். அது மஹா அவஸ்தையா இருந்தது. பசங்க எங்க ரெண்டு பேர் செருப்பையும் ஒளிச்சு வெச்சுத் தேட வெச்சாங்க..."

"ஒரு நாள் ஒரு செருப்பை மட்டும் ரெண்டுபேர்க்கும் மாத்தி வெச்சு அப்படியே போட்டுண்டு கொஞ்ச தூரம் போய்ட்டோம்", என்றேன். "அப்புறம் கண்டுபிடிச்சு, தூரத்லேர்ந்து கடுப்பாப் பார்த்து ஒருத்தர் மேல ஒருத்தர் மாறின செருப்பை எறிஞ்சு மண்ணை வீசி எறிஞ்சி மௌனமாத் திட்டிக்கிட்டோம்!"

"டெய்லி சாயங்காலம் கடைசி பீரியட் விளையாட்டு. அப்போ கால்பந்து விளையாடும் போது பசங்க எங்களை ஒருத்தர் மேல ஒருத்தர் விழனும்னு பிடிச்சுத் தள்ளுவாங்க!"

"ராஜேந்திரன்னு எங்க ரெண்டு பேர்க்கும் ஒரு காமன் ஃப்ரெண்டு இருந்தான்", என்றேன். "எட்டாம் வகுப்பு பரீட்சை, டெஸ்ட்கள்ல நாங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி முதல் ரெண்டு ரேங்க் வாங்கின போது ராஜேந்திரன் மூணாவது ரேங்க் வாங்கினான். அவன் எங்களைச் சேர்த்துவைக்க ரொம்பவும் முயற்சி பண்ணி முடியாம ஒரு நாள் எங்களுக்கு எதிர்லயே அழுதுட்டான். அப்பவும் நாங்க சேரக்கூடாதுங்கற திமிர்ல இருந்தோம்!"

"ஏண்டா ரங்கா திடீர்னு என் பேச்சு காய் விட்டே?"

"என்னத்தச் சொல்லறது? இப்ப நினைச்சுப் பார்த்தா வேடிக்கையாவும் வேதனையாவும் இருக்கு", என்றேன். "ஒன்பதாம் வகுப்பு முதல் மூணு மாசத்ல நாம மொத்தம் பத்து தேர்வுகள் எழுதியிருப்போமா? அதுல எல்லாத்லயும் நீ முதல் ரேங்க் வாங்கினதை என்னால சகிச்சுக்க முடியலைங்கறது முதல் காரணம். அப்புறம் எல்லா வாத்தியாரும் உன்கிட்ட அன்பா பழகின மாதிரி என்கிட்ட பழகலைங்கறது ரெண்டாவது காரணம். அப்புறம் எட்டாம் வகுப்பு படிச்சப்ப பள்ளி ஆண்டுவிழாவுல கட்டுரை, கவிதை, பேச்சு மூணு போட்டிலயும் நீ முதல் பரிசு வாங்கின இல்லையா? பேச்சுப்போட்டியின் தரத்தை வெச்சுப் பார்த்தா நான்தான் முதல்பரிசு வாங்கியிருக்கணும். ஆனால் நீ எடுத்த எடுப்பிலேயே கலிங்கத்துப் பரணியோட ’எடுமெடு மெடுவென வெடுத்தவோர்’ பாட்ல ஆரம்பிச்சு ஆடியன்ஸ், ஜட்ஜை மயக்கி முதல் பரிசு வாங்கினது எனக்கு மஹா எரிச்சல்!"

"அப்படியா சேதி! நீ முதல்ல காய் விட்டதும் எனக்கு ரொம்ப வருத்தமா இருந்தது. அப்புறம் எனக்கும் உன்னமாதிரியே விரோதமும் வெறுப்பும் உண்டாச்சு."

கைகள் வாய்பேச்சை நடுநடுவே மீற விமலா சமைத்திருந்த அறுசுவை உணவை ஒருகை பார்த்துப் பாராட்டினேன். சாப்பிட்டு எழுந்ததும் மூவரும் ஹாலில் சோஃபாவில் வசதியாக அமர்ந்துகொண்டு பேச்சைத் தொடர்ந்தோம்.

"திடீர்னு இவரோட காய்விட்ட மாதிரியே முப்பது வருஷம் கழிச்சு, திடீர்னு பழம்விடத் தோணித்தாக்கும்! அது எப்படி?" என்றாள் விமலா.

"ஆமாண்டா, நேத்து வரைக்கும் ரெண்டு பேரும் ஆள் அட்ரஸ் தெரியாம இருந்திட்டு எப்படிடா திடீர்னு என்கூட நம்ம பழைய நட்பைப் புதுசு பண்ணிக்கணும்னு உனக்குத் தோணித்து? யு ஆர் கிரேட் ரங்கா!"

"அதை நான் உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியலைடா", என்றேன். "ஆனால் சொல்லித்தான் ஆகணும்; அப்பதான் என் மனசு ஆறும்."

"என்னடா புதிர் போடறே? விஷயத்தைச் சொல்லேன், எருமை மாடு!"

"சொல்றேண்டா கழுதை!"

அந்த எருமை மாடும் கழுதையும் எங்கள் நட்பு பழையபடி ராசியாகி விட்டது என்று காட்டியது. ஆனாலும் எனக்குள் இருந்த குற்ற உணர்ச்சி குறையவில்லை.

"பதினஞ்சு நாள் முன்ன எம்பிள்ளை மாது அவன் பர்த்டேக்கு நான் வாங்கித்தந்த காஸ்ட்லி வில்சன் பேனாவத் தொலச்சிட்டான். எனக்கு வந்த கோவத்துல அவனை அடி பின்னிட்டேன்! அப்புறம் மறுநாள் அவன் பேனா கெடச்சதும் ரொம்ப ஃபீல் பண்ணினேன். மாதுவைப் பிடிக்காத இவன் கிளாஸ் பையன் ஒருத்தன் இவன் புதுப் பேனாவை எடுத்து இவன் குளோஸ் ஃப்ரெண்ட், பக்கத்து சீட் ராகவன் ஸ்கூல் பையில போட்டானாம். அதை இன்னொரு பையன் மறைஞ்சு இருந்து பார்த்து மாதுட்ட சொன்னானாம். இவன் பொய்க்கோவத்தோட ’ஏண்டா என் புதுப் பேனாவைத் திருடினே?’ன்னு ராகவன்ட்ட கேட்டப்ப அவன், ’சத்தியமா நான் திருடலைடா! நமக்குள்ள சண்டை மூட்டிவிட யாரோ என் பைல போட்டிருக்கணும்டா, ஐ ஸ்வேர்’ அப்படின்னு சொல்ல, இவன் உண்மையைச் சொல்லி ராகவனைக் கட்டிண்டு ’நமக்குள்ள இருக்கற நட்பை யாரும் குலைக்க முடியாதுடா!’ அப்படீன்னு கிளாஸ்ல எல்லோருக்கும் கேக்கற மாதிரி உரக்கச் சொன்னானாம்..."

கைலாசம் என்னை மேலே பேச விடவில்லை.

"ரங்கா, இதே மாதிரி நான் ஒன்பதாவது படிச்சபோது ஒரு நிகழ்ச்சி நடந்ததுடா! நாம ரெண்டு பேரும் அப்ப ஒருத்தரோட ஒருத்தர் பேசாம இருந்தோம். உன் பையன் பேனாவைத் தொலைச்சான். ஆனால் என் பையில யாரோ ரெண்டு பேனாவைப் போட்ட கதையை உனக்கு இப்ப விளக்கிச் சொல்லறேன் கேளு", என்று தொடர்ந்தான்...

*** *** ***

கைலாசம் சொன்னது:

ன்று மாலை ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்தேன். காலையில் அம்மா கொடுத்து அனுப்பிய சாக்லெட் இரண்டையும் சாப்பிட மறந்தது ஞாபகம் வந்தது. உடனே அவசரமாக என் ஸ்கூல் பையைத் தலைகீழாகக் கவிழ்த்துத் தரையில் கொட்டித் தேடினேன். அன்று விடுமுறையில் இருந்த என் தந்தை அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அம்மா சமையல் கட்டில் எனக்காகப் பாலைக் காய்ச்சிக் கொண்டிருந்தாள்.

"ஏண்டா உன் பையிலேர்ந்து ரெண்டு பேனா விழறதே!" என்று என் தந்தை சொன்னபோதுதான் கவனித்து எடுத்துப் பார்த்தேன். ஊதா நிறத்தில் ஒரு ரைட்டர் பேனாவும், கறுப்பு நிறத்தில் ஒரு பைலட் பேனாவுமாக இரண்டு புதிய ஊற்றுப் பேனாக்கள்.

"உன்னோடது மெரூண்கலர் ரைட்டர் பேனா தானே? அதுவும் போன வருஷம் வாங்கினது. ஏது இந்த ரெண்டு பேனா?" என்றார் என் தந்தை.

"தெரியலைப்பா!" என்று நான் சொன்னதை அவர் நம்பவில்லை.

"யாரோட பேனாவோ? ரெண்டும் எப்படீடா உனக்குத் தெரியாம உன் பைக்குள்ள வந்தது?" தந்தையின் குரலில் சூடு ஏறியது.

"நெஜமா எனக்குத் தெரியலைப்பா!"

"பொய் சொல்லாதே! திருடினயா? சாயங்காலம் கடைசி பீரியட்ல பசங்க வெளையாடப் போனப்ப கிளாஸ்ல டெஸ்க் மேல இருந்த இந்தப் பேனா உன் கண்ணுல பட்டது. ஏதோ ஓர் ஆசைல நீ சத்தம் போடாம எடுத்துப் பையில போட்டுண்டு வந்துட்டே, அப்படித்தானே?"

"ஐயோ அதெல்லாம் இல்லைப்பா! நான் திருடலை!"

"அப்புறம் எப்படிடா பேனா ரெண்டும் உன் பைக்கு வந்தது?"

"அதுதான் எனக்குத் தெரியலைப்பா!"

என் அம்மா கையில் பால் டம்ளர்-டபராவுடன் வந்தவள், "கைலாசம், உண்மையைச் சொன்னா அப்பா புரிஞ்சுப்பார். அப்பாக்குக் கோவம் வந்தா உன்னால தாங்க முடியாது!"

"என்னம்மா நீயும் இப்படிக் கேக்கறே? நான் திருடலைம்மா", என்றேன். "பேனா எப்படி என் பைக்குள்ள வந்ததுன்னு எனக்குத் தெரியலையே அம்மா!"

பொங்கிவரும் பாலாக என் தந்தைக்குக் கோபம் தலைக்கேறி அவர் கண்களில் வழிந்தது. பளார் என்று என் கன்னத்தில் அவர் அறைந்தபோது எனக்குத் தலை சுற்றியது.

"திருடவும் செஞ்சிட்டுப் பொய் வேற சொல்லறயாடா, ராஸ்கல்!" என் முதுகில் அடிகள் சரமாரியாக விழ நான் தடுமாறிச் சாய்ந்தேன். ஆனாலும் நான் அழவில்லை.

"கைலாசம், பொய் பேசினா ஸ்வாமி கண்ணக் குத்திடும்னு உனக்குச் சொல்லியிருக்கேன், இல்லையா?" என்றாள் அம்மா. "எப்படி பேனாவைத் திருடினதா அப்பா உன்னை அடிக்கறாரோ அப்படித்தானே பேனாவைத் தொலச்சதுக்கு அந்த ரெண்டு பையன்களும் அவா அப்பாட்ட அடி வாங்குவா!"

அடிகள் போதும் என்று நினைத்தாரோ என்னவோ, அப்பா என்னைத் தரதரவென்று இழுத்துக் கொண்டுபோய் சமையல் கட்டில் இருந்த ஸ்வாமி அலமாரியின் முன் தள்ளினார். "போடா, போய் ஸ்வாமி முன்னால நின்னுண்டு நீ தப்புப் பண்ணலைன்னு சொல்லு."

"கைலாசம், என்னால இந்த அவமானத்தைத் தாங்க முடியலைடா. நீயா இப்படி!", என்று அழுத அம்மா, என்று தன் புடவைத் தலைப்பை எரிந்துகொண்டிருந்த ஸ்டவ் அடுப்பின் ஜுவாலை அருகில் வைத்துக்கொண்டு, "இதுக்கு உயிரை விட்டுடலாம்", என்றாள்.

"பார்றா, அம்மா பத்திக்கப் போறா. உண்மையைச் சொல்லுடா!" என்று தந்தை இரைந்தார்.

"ஐயோ கடவுளே! நான் உண்மையைத் தானே சொல்றேன்", என்று நான் கண்ணீருடன் சத்தம் போட்டுக் கதறினேன். "ரெண்டு பேனாவும் எப்படி என் பைக்குள்ள வந்ததுன்னு எனக்குத் தெரியாது. அப்படி நான் திருடிட்டுப் பொய் சொல்றதா நெனைச்சா ஸ்வாமி என் கண்ணைக் குத்தட்டும், ஏத்துக்கறேன்."

முதன்முதலாக அவர்களுக்கு என் மேல், நான் சொல்வதில், நம்பிக்கை வந்தது. கோபத்துடன் முட்டவந்த மாடு மனிதன் கீழே விழுந்ததும் விலகிச் சொல்வதுபோல் அப்பாவின் கோபம் தணிந்து அவர் அப்பால் சென்றார். அம்மா என்னை அணைத்துக் கொண்டாள், அப்பாவின் விரல்கள் பதிந்த என் கன்னத்தை வருடியபடி.

"ரெண்டு பேனாவும் எப்படி என் பைல வந்ததுன்னு புதிரா இருக்கும்மா!" என்று கேவினேன். "எனக்கு ஒண்ணுமே புரியலை. நாளைக்கு பேனாவைக் கிளாஸ்ல காட்டி யாரோடதுன்னு கேட்டு திருப்பிக் கொடுத்துடறேன்."

"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்", என்றார் அப்பா. "அப்படிப் பண்ணினா நீதான் திருடினேன்னு நிரூபணம் ஆய்டும். கொண்டா அந்த ரெண்டு பேனாவையும்" என்று கீழே இருந்தவற்றைப் பறித்து வைத்துக்கொண்டார்.

*** *** ***

"அதுக்கப்புறம் அம்மா அந்த ஊதா நிற ரைட்டர் பேனாவையும் அப்பா கறுப்பு நிற பைலட் பேனாவையும் கதை எழுதப் பயன்படுத்தினாங்க", என்றான் கைலாசம், மோட்டுவளை இல்லாத வீட்டுக் கூரையைப் பார்த்தவாறே. "அந்த ரெண்டு பேனாவும்தான் அவா புகைப்படத்தோட இணைச்சு ஷோகேஸ்ல வெச்சிருக்கேன், பார்த்தே இல்லயா?"

"இன்னிவரைக்கும் ரங்கா, சத்தியமா அந்தப் பேனா ரெண்டும் எப்படி என் ஸ்கூல் பைக்குள்ள வந்ததுதுன்னு எனக்குத் தெரியாது", என்ற கைலாசம், "யாராவது அதைப் பைக்குள்ள போட்டங்களான்னும் தெரியாது", என்றபடி என்பக்கம் திரும்பினான்.

என் கண்களில் இருந்து மாலையாகக் கண்ணீர் பெருகுவது கண்டு திடுக்கிட்டான். "நீ ஏண்டா அழறே?" என்றான்.

பத்திரிகை படித்தவாறே கேட்டுக்கொண்டிருந்த விமலாவும் என்னைப் பார்த்தாள்.

"ஒரு எழுத்தாளன் என்கிற முறையில இந்த சோக நிகழ்ச்சியை கிராஃபிக்கா விவரிச்சேன். நீ ஏன் அழறே?"

"உன்னை உங்கப்பா அடிச்சதெல்லாம் எனக்குத் தெரியும் கைலாசம்! நீ விவரமா அவன்ட்ட சொன்னதை ராஜேந்திரன் என்கிட்ட சொன்னான்."

"அதுக்கு இப்ப என்ன கண்ணீர்! எனக்கே அழுகை வரல!" என்றான் கைலாசம்.

"கைலாசம், உன்கிட்ட ஒரு உண்மையைச் சொல்லத்தான் நான் இன்னைக்கு இங்க வந்தேன்", என்றேன். "இத்தனை வருஷமா என் மனசில புகையேறிக் கிடந்த உண்மை. பேனாவைப் பறிகொடுத்த என் பிள்ளையை அன்னிக்கு அடிச்சு மறுநாள் வருத்தப்பட்டேன் இல்லையா? அன்னிக்குதான் எனக்கு உன்னைக் கண்டுபிடிச்சுப் பேசி என் மனசில இருக்கற உண்மையைச் சொல்லணும்னு தோணிச்சு."

"என்னடா புதிர் போடறே? விஷயத்தைச் சொல்லேன், எருமை மாடு!"

"சொல்றேன் கைலாசம். அதுக்கப்பறமும் நான் உன் நண்பனா இருக்க எனக்கு அருகதை உண்டான்னு நீ தீர்மானிச்சுக்க" என்றேன்.

"சொல்லித் தொலையேன்!" என்றான் கைலாசம் பொறுமை இழந்து.

"அன்னைக்கு அந்த ரெண்டு பேனாவையும் உன் ஸ்கூல் பையில் போட்டது நான்தாண்டா கைலாசம்!"

*** *** ***

Monday, July 20, 2015

015. ஏட்டுச் சுரைக்காய்!

ரமணியின் கதைகள்: ramaNiyin kathaikaL

ஏட்டுச் சுரைக்காய்!

சிறுகதை
ரமணி
(இலக்கிய வேல், ஜூலை 2015)


றைக் கதவைத் தட்டும் ஒலி கேட்டது.

’ஞாயித்துக் கிழமை கூட நிம்மதியா இருக்க விடமாட்டாங்க, சே!’ என்று அலுத்துக்கொண்டேன். "யாரு?"

பதிலாக மீண்டும் கதவைத் தட்டும் ஒலிதான் கேட்டது.

திறந்து பார்த்தால் வாசலில் தாணாக்காரர் ஒருவர்.

"நீங்கதானே எழுத்தாளர் ஏகலைவன்?"

"ஆமாம், ஏன்?"

"இன்ஸ்பெக்டர் ஐயா உங்களைக் கையோட கூட்டியாரச் சொன்னார்."

"என்ன விஷயம்?"

"தெரியாது."

"ஏங்க, ஞாயிற்றுக் கிழமை காலைல பதினொரு மணிக்கு வந்து உடனே வான்னா எப்படி வரமுடியும்? இப்பதான் எழுந்து பல்விளக்கினேன். இன்னும் காப்பி கூட சாப்பிடலை!"

"அதெல்லாம் எனக்குத் தெரியாது சார்! இன்ஸ்பெக்டர் சொன்னா செய்ய வேண்டியது தானே என் கடமை?"

"சரி, உங்க பேரென்ன? உங்க அடையாளம் காட்டுங்க?"

"என்ன சார் உங்க கதைல வர்றாப்பல கேக்கறீங்க? என் பேர் ஏழுமலை. அடையாளம் என் சட்டைல இருக்கு பார்க்கலை?"

என் கதைகளைப் பற்றி இவர் பேசியதில் அவரிடம் கொஞ்சம் தோழமை தென்பட்டது.

"என் கதைலாம் நீங்க படிப்பீங்களா? எப்படி யிருக்கு?"

"அதான் நாலஞ்சு பத்திரிகைல வாராவாரம் மாசாமாசம் சிறுகதைன்னும் தொடர்கதைன்னும் வருதே? இதைத் தவிர மாத நாவல். வீட்ல படிப்பாங்க. நானும் உங்க துப்பறியும் கதைகள்லாம் படிப்பேன். எங்க இன்ஸ்பெக்டர் அநேகமா எல்லாக் கதைகளும் படிச்சிருக்கார். அடிக்கடி உங்களைத் தாறுமாறாத் திட்டுவார்!"

"ஏன்? உங்க இன்ஸ்பெக்டர் பேர் என்ன?"

"அதான் அவரைப் பாக்கப் போறீங்கில்ல? நேர்லயே கேட்டுக்கங்க. உங்க கதை பத்தி அவரே சொல்வார்."

"என்னய்யா புதிர் போடறீங்க? வந்த விஷயம் சொல்லுங்க?"

"அதெல்லாம் தெரியாது சார்! எதுவும் சொல்லாம உங்களக் கூட்டியாறச் சொன்னார் இன்ஸ்பெக்டர். நீங்க வாங்க சட்டுனு..."

முண்டா பனியனை உள்ளே தள்ளிப் பேண்ட் அணிந்துகொண்டு மேலே ஒரு அரைக்கைச் சட்டையை மாட்டிக்கொண்டு என் பேனா, பர்ஸ், செல்ஃபோன், வாட்ச், ஜோல்னாப்பை சகிதம் அறையில் இருந்து மாடிப்படி இறங்கி அவருடன் கிளம்பினேன்.

"பக்கம் தான், நடந்தே போயிடலாம்." சைக்கிளைத் தள்ளிக்கொண்டே தாணாக்காரர் நடக்கக் கூடவே நடந்தேன்.

"உங்க காவல் நிலையத்துக்கா போறோம்?"

"இல்லை, இன்ஸ்பெக்டர் ஐயா ரூமுக்கு. போற வழியில ஹோட்டல் ஆர்யபவன்ல எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு."

"நல்லதாப் போச்சு! நானும் அங்க என் காலைக் காப்பிய சாப்டுக்கறேன். அப்புறம் மதியானம் ஒரு மணிக்கு அங்க மீல்ஸ்க்கு வருவேன்."

ஆர்யபவனில் அவருக்கும் ஒரு காப்பி வாங்கிக் கொடுத்து, என்னைக் கூப்பிட்டு அனுப்பியது அவர்கள் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இல்லை என்றும், நேற்று சென்னையில் இருந்து ஒரு கேஸ் விஷயமாக வந்துள்ள ஒரு காவல்துறை ஆய்வாளர் என்றும் தெரிந்துகொண்டேன். எவ்வளவோ கேட்டுப்பார்த்தும் அந்த டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் பெயரோ மற்ற விவரங்களோ சொல்ல மறுத்துவிட்டார்.

என் கதைகளைப் படிக்கும் சென்னைக் காவல்துறை ஆய்வாளர் யார்? ஏன் அவர் என்னைத் திட்டவேண்டும்? நேரில் காணவும் வரச்சொல்வது ஏன்? ஏதேனும் வில்லங்கத்தில் மாட்டிக் கொண்டேனோ என்னும் அச்சமும் எதுவானாலும் பார்த்துக்கொள்ளலாம் என்னும் சமாதானமும் ஒரே சமயத்தில் என்னுள் எழுந்தது. தாணாக்காரர் ஆர்யபவனில் வாங்கிய பார்சலில் எழுந்த பிரியாணி வாசனை வேறு பசியைக் கிளப்பியது.

*** *** ***

கோமதி லாட்ஜ்-இல் மாடிப் படியேறி இரண்டாம் மாடியில் நுழைந்தோம். தாழ்வாரத்தில் இரண்டு அறைகளைக் கடந்ததும் தாணாக்காரர் மூன்றாம் அறைக் கதவை ஒரு சமிக்ஞை ஒழுங்கில் தட்டக் கதவைத் திறந்துகொண்டு லுங்கி-முண்டா பனியனில் நின்றது உயரமான, உடல்-வலுவுள்ள, என் வயதொத்த ஓர் உருவம்.

"இவர்தான் எழுத்தாளர் ஏகலைவனா?" என்னை மேலும்-கீழும் பார்த்தார் அந்த டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர். "உள்ளே வாரும். உட்காரும்."

தாணாக்காரர் தந்த பார்சலை வாங்கிக்கொண்டு அவருக்குப் பணம் கொடுத்து அனுப்பிவிட்டு என்னை நோக்கித் திரும்பினார் இன்ஸ்பெக்டர். "உங்க கதைகள்ல எங்க போலீஸ் டிபார்மென்ட் பற்றித் தாறுமாறா எழுதறத்துக்கும் ஒரு வரம்பு இருக்கணுமில்ல?"

"அப்படி என்ன எழுதிட்டேன் நான்?"

"என்னவோ உங்க பிரைவேட் டிடெக்டிவ் அருண்தான் ரொம்ப புத்திசாலி மாதிரியும் அவருக்கு உதவி செய்யற எங்க போலீஸ் இன்ஸ்பெக்டர்லாம் மாங்கா மடையன்கள் மாதிரியும் எழுதறீங்களே? உங்க கதைகள்ல நீர் போடற குற்றம் அல்லது கொலை முடிச்சை எங்க ஆளுங்களுக்கு அவிழ்க்கத் தெரியாதுங்கறது உங்க எண்ணமா? எங்க போலீஸ்துறை குற்ற ஆய்வாளர் ஒருவரோட நீர் கூடவே இருந்து நடைமுறை அனுபவமா ஏதாவது துப்பு துலக்கியிருக்கிறீரா? நான் உங்க எல்லாக் குற்றவியல் கதைகளையும் நாவல்களையும் படிச்சிருக்கேன். நீர் போடற முடிச்சும் அதை அந்த அருண் அவிழ்க்கிற விதமும் நல்லாத்தான் இருக்கு, இல்லேங்கல. வணிகம் சார்ந்த பத்திரிகை, பதிப்பகங்களுக்கு எழுதற போது, என்னதான் எங்க போலீஸ் இமேஜ் மக்கள் மத்தியில மங்கியிருந்தாலும் எங்க துறைகள்ல இருக்கற நல்ல விஷயங்களையும் திறமைகளையும் ஹைலைட் பண்றது உங்க மாதிரி புகழ்பெற்ற ஒரு எழுத்தாளருக்குப் பொறுப்பு இல்லயா? எங்க டிபார்ட்மென்ட் இமேஜை கெடுதுன்னா அதுக்கு மூல காரணமான அரசியல்வாதிகளைப் பத்தி எழுத தைரியம் இருக்கா உமக்கு?"

எண்ணையில் விழுந்த வடகமாகப் பொரிந்து தள்ளிய இன்ஸ்பெக்டரின் முகபாவங்களைக் கண்கொட்டாமல் பார்த்தேன். சட்டென்று என்னுள் பொறி தட்டியது.

"டேய், ராஜேந்திரா!" என்றேன். "எத்தனை வருஷம் ஆச்சு உன்னைப் பார்த்து! எப்படீடா இவ்வளவு உயரமானே? எப்ப இன்ஸ்பெக்டர் ஆனே? வத்தலக்குண்டு ஸ்கூல் படிப்பு முடிஞ்சதும் நான் திருச்சில காலேஜ் படிக்கப் போனேன். நீ மிலிட்டரில சேர்ந்துட்டதா இல்ல கேள்விப் பட்டேன்?"

"என்னய்யா வாடா-போடான்னு ஆரம்பிச்சுட்டே? என்ன உளர்றே?"

"ராஜேந்திரா, வாணாம்! எனக்கு முதுகைக் காட்டி நீ உங்க தாணாக்காரட்ட பேசினபோதே உன் பின் கழுத்தில் இருந்த தழும்பை வெச்சுக் கண்டுபிடிச்சுட்டேன். அடுத்து நீ படபடன்னு பேசினபோது உன் குரல் காட்டிக் கொடுத்திருச்சு! சொல்லு, ராஜேந்திரா, எப்ப போலீஸ் வேலைல சேர்ந்தே? என்ன விஷயமா சிவகங்கை வந்திருக்கே?"

"அடப்பாவி, கண்டுபிடிச்சிட்டியே! துப்புத் துலக்கறதில எனக்கு டிபார்ட்மென்ட்ல நல்ல பேர்னா, நீ என்னை விடப் பெரிய ஆளா இருப்பே போலிருக்கே? வா, முதல்ல சாப்டுட்டு அப்புறம் பேசலாம். உனக்கும் எனக்கும் பிடிச்ச சேவையும் விஜிடபிள் பிரியாணியும் கான்ஸ்டபிள் மூலமா வாங்கி வெச்சிருக்கேன். நம்ம ரெண்டுபேரும் ஸ்கூல் ஃபைனல் படிச்ச போது வத்தலக்குண்டு வெங்கடேஷ் கபேல அடிக்கடி சாப்பிடுவோம், ஞாபகம் இருக்கா?"

"அதெல்லாம் ஒரு காலம் ராஜேந்திரா!" என்றேன், பிரியாணிப் பொட்டலத்தைப் பிரித்து ஒரு கவளம் வாயில் இட்டபடி.

"அதுசரி, சீனிவாசன்--நண்பர்கள் மத்தியில சீனு--உன் பேர் இல்லையா? அப்புறம் எப்படி ஏகலைவன்னு புனைப்பெயர் செலெக்ட் பண்ணினே?"

"நாட்டியம், நடிப்பு, ஓவியம் மாதிரி நுண்கலைக்கு ஒரு தனிப்பட்டவரோ நிறுவனமோ குருவாக இருப்பது வழக்கம் இல்லையா? ஒரு எழுத்தாளருக்கு அப்படி ஒரு குரு கிடையாது. யாரும் இப்படித்தான் எழுதனும்ணு சொல்லித்தர முடியாது. ஒரு எழுத்தாளன் தன் துறை மற்ற துறைகளில் உள்ள கலைஞர்களை நோக்கி ஆராய்ந்து ஏகலைவன் மாதிரி தானே உருவாகிறான். அதனால்தான் இந்தப் பெயர்."

அரட்டை அடித்துக்கொண்டே ஒருமணி நேரம் சாப்பிட்டோம். ராஜேந்திரனுக்கு மிலிட்டரியில் வேலை கிடைக்காததால், அவன் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றதும் மனுப்போட்டதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராகத் தேர்வு செய்யப்பட்டு, சீக்கிரமே இன்ஸ்பெக்டர் பிரமோஷன் பெற்று, அவனுக்கு வாய்த்த கேஸ்களில் திறமையாகத் துப்புத் துலக்கியதால் ஒரு டிடெக்டிவ் இன்ஸ்பெக்டராகப் பதவி உயர்வு பெற்று, சென்னை போலீஸ் டிவிஷனுக்கு மாற்றலாகி வந்ததாகச் சொன்னான். பரஸ்பர குடும்பநலன் விசாரிப்புகளுக்குப் பிறகு நான் விடைபெற்றுக் கிளம்ப முயன்றபோது என்னைத் தடுத்து நிறுத்தினான்.

"ஐயா எங்க கிளம்பிட்டீரு? உங்க ஏட்டுச் சுரைக்காயை வெச்சுக் கறிபண்ண முடியுமான்னு பார்க்கவேண்டாம்? சமீபத்தில திருப்பூர் மில் ஓனர் ஒருத்தர் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி வந்தது தெரியுமா?"

"தெரியும்", என்றேன். "அதன் பின்னணியில ஒரு பழம் தின்னு கொட்டை போட்ட அரசியல்வாதி இருப்பதா கிசுகிசு கூடப் பார்த்தேன்."

"அதேதான். அந்தக் கொலையைச் செஞ்சவன் இந்த ஊர்ல தங்கி இருக்கறதா எங்களுக்கு இன்டல். இன்னொரு ஹிட்டுக்காக வந்திருக்கான்னு எங்களுக்கு சந்தேகம். அவனும் அவன் கூட்டாளி ஒருத்தனும் நாட்டுத் துப்பாக்கியோட அலையறதா செய்தி. இன்னிக்கு நைட்டு என்னோட சேர்ந்து துப்பு துலக்குகிறீர். உம்ம மூளை எனக்கு உதவும். முதல்ல அவன் நடமாட்டம் இருக்குன்னு உறுதிப்படுத்திப்போம். அதுக்கப்பறம் ஒரு போலீஸ் படையை வரச்சொல்லி ரெண்டு பேரையும் பிடிப்போம். என்ன உன் முகத்தில ஈயாடலை?" என்றான்.

எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை!

*** *** ***


*** *** ***

Friday, June 12, 2015

012. பூவே சுமையாகும் போது...

ரமணியின் கதைகள்: ramaNiyin kathaikaL

பூவே சுமையாகும் போது...

சிறுகதை
ரமணி
(இலக்கிய வேல், ஏப் 2015)


"பூக்காரி வந்து பூவைப் போட்டுட்டுப் போய்ட்டா போலிருக்கே, நீங்க பார்க்கலையா?"

என் கணவரிடம் இதுதான் பிரச்சினை. வீட்டு வாசல் வரை அமைந்த திறந்தவெளியில் மாலையில் காலார நடந்துகொண்டே புத்தகம் படிப்பவர் சுற்றிலும் நடப்பதை முற்றிலும் மறந்துவிடுவார்!

நுழைவாயில் இரும்புக் கதவின் ஈட்டிக் கம்பியில் மாட்டியுள்ள மஞ்சள் பையினுள் பார்த்தேன். இரண்டு முழம் மல்லிகையும் ஒரு முழம் ஜாதி மல்லிகையும் இருந்தது. பூச்சரங்களை எடுத்துக் கணவரிடம் காட்டினேன்.

"பாருங்கோ, மூணாவது நாளா இன்னைக்கும் மல்லி மலர்ந்தே இருக்கு."

"மலர்ந்தே இருப்பது நல்லதுதானே?"

"புரியலையா? மல்லிகை எந்தப் பொழுதுல மலரும்? ’அந்திக் கருக்கலில் மலரும் மல்லிகைப்பூ’ன்னு பாடத் தெரியுதில்ல? அந்த மல்லி சாயங்காலம் அஞ்சு மணிக்கே மலர்ந்து இருந்தால் என்ன அர்த்தம்?"

"ஓஹோ, அப்ப முதல்நாள் மலர்ந்த மல்லிகைப் பூவை இன்னிக்கு நம்ம தலைல கட்டிட்டாங்கறியா?"

"ஆமா. அதுவும் மூணாவது நாளா! எத்தனையோ தரம் சொல்லியும் வாரத்தில ரெண்டொருநாள் இது மாதிரி செய்யறா. இத்தனைக்கும் காலிங் பெல்லை அடிச்சுப் பூவை என் கையிலோ உங்க கையிலோ தரணும்னு சொல்லியிருக்கேன். ஆனாலும் சத்தம் போடாம பையில போட்டுட்டுப் போயிடறா. இன்னைக்கு நான் அவள்ட்ட பேசணும், அதனால அவள் வர்றதை வாட்ச் பண்ணுங்கோன்னு உங்ககிட்ட சொல்லிவெச்சேன்."

"நாமதான் தினமும் அறுபது ரூபாய்க்குப் பூ வாங்கறோம், எப்படியும் மாசம் ரெண்டாயிரம் ரூபாய் மொத்தமா தர்றோம். நல்ல பூவாத் தரவேண்டியதுதானே?"

"என்கிட்டக் கேக்காதீங்கோ. இதை நாளை சாயங்காலம் அவளைத் தவறாமாப் பார்த்துக் கேளுங்கோ. நாளைக்கு எனக்கு வங்கியில கஸ்டமர் சர்வீஸ் மீட்டிங் இருக்கு. முடிஞ்சு வீட்டுக்கு வர ஆறு மணியாய்டும்."

றுநாள் அந்த மீட்டிங் ஒத்திவைக்கப் பட்டுவிட, நான் மாலை சீக்கிரமே வந்து தெரு முனையிலேயே பூக்காரியைப் பிடித்துவிட்டேன். மூன்றாவது வீட்டு ரமா மாமி கூடவே நடந்து வந்ததால் வீட்டுக்குள் நுழைந்ததும் செருப்பை வாசல் கிணற்றடியிலேயே விசிறிவிட்டு அவளிடம் வெடிக்க நினைத்து புஸ்வாணமாகக் கேட்டேன்.

"ஏம்மா, நீ எத்தனை நாளா எனக்கு பூ விற்கறே?"

"மூணு வருஷம் இருக்கும்மா."

"நாங்க உன்கிட்ட மாசம் பெரும்பாலும் ரெண்டாயிரம் ரூபாய்க்கு பூ வாங்கறோம் இல்ல? அந்தப் பணத்தக்கூட நீ கணக்குவெச்சு மொத்தமாத் தரச் சொன்னதால மாசம் பொறந்தவுடன் மூணு தேதிக்குள்ள தந்திடறோம் இல்ல? அதுல என்னிக்காவது லேட் பண்ணியிருக்கமா?"

"நீங்க இவ்வளவு தொகைக்கு பூ வாங்கறது எனக்கு உதவியா இருக்கறதால தானம்மா நான் இந்த பெரிய பிளாஸ்டிக் கூடை நிறையப் பூவைத் தூக்கிக்கிட்டு உங்க வீட்டுக்கு மொத போணியா கேம்ப் ரோட்லேர்ந்து நடையா நடந்து வர்றேன். சமயத்தில வழியில உங்களைப் பார்த்திட்டேன்னா எனக்கு அந்த நடை கூட இல்லை. இன்னா விசயம் சொல்லுங்க?"

"அப்புறம் ஏன் வாரத்தில ரெண்டு மூணு நாளைக்கு முதல்நாள் மலர்ந்த மல்லியா போடுறே? நீ குடுக்கற ஜவ்வந்திப்பூகூட பலசமயம் ஃப்ரெஷ்ஷா இருக்கறதில்ல?"

"அய்யோ நா ஏம்மா முதல்நாள் பூவைப் போடறேன்? சாமந்தி, மல்லி, ஜாதிப் பூன்னு தாம்பரம் மார்க்கட்ல என்ன கிடைக்கறதோ அதுல நல்ல சரக்காப் பார்த்துதானேம்மா உங்களுக்குத் தர்றேன்? நீங்க ஏற்கனவே ரெண்டு மூணு வாட்டி எங்கிட்ட இதக் கேட்டு நான் இந்த பதிலைச் சொல்லியிருக்கேன். அப்படியும் உங்களுக்குத் திருப்தியில்லேன்னா நா என்ன செய்யறது?"

"அப்படீன்னா ஏன் மொட்டு மல்லியை விட மலர்ந்த மல்லிப்பூ மட்டும் ஈரமா இருக்கு?"

"தாம்பரம் மார்க்கெட்லயே தண்ணி தெளிச்சும் ஈரத்துணியப் போட்டு மூடியும் தாம்மா பூ விக்கறாங்க? அதுக்கு நான் என்ன செய்யமுடியும்?"

நான் அதை முழுதும் நம்பவில்லை என்பதை அவள் கண்டுகொண்டாள்.

"உங்களுக்கே தெரியும் இல்லையாம்மா? உங்க வீடு முடிஞ்சதும் நான் இன்னும் நாலஞ்சு தெரு சுத்துவேன். தினமும் இருபது ரூபாய்க்குப் பூவாங்கற வாடிக்கைக் காரங்களுக்குப் பூப்போடுவேன். கடைசியா நீங்க வர்ற வழியில இருக்கற அம்மன் கோவில் வாசல்ல உக்காந்து வியாபாரம் பண்ணிட்டு, மீந்த பூவைப் பெரும்பாலும் சாமிக்கே கொடுத்திட்டு எழறை-எட்டு மணிக்கு வீட்டுக்குக் கெளம்பிப் போவேன். அப்புறம் நா எப்படி பழைய பூவை உங்களுக்குத் தருவேன்னு நெனக்கறீங்க?"

"நீ பெரும்பாலும் நல்ல பூவாத்தாம்மா தர்ற, இல்லேங்கல. அதுவும் மாசா மாசம் எங்க சங்கடஹர சதுர்த்தி பூஜைக்காக நீயே மாலையாக் கட்டி ஐம்பது ரூபாய்க்குத் தர்ற அருகம்புல் பிள்ளையார்க்கு ரொம்ப அழகா இருக்குன்னு நானே உன்கிட்ட சொல்லியிருக்கேன். ஒரு வாரம் போய்க்கூட அது வாடாம இருக்கும். ஆனால், சேலையூர் கேம்ப் ரோடுலேர்ந்து நான் வீட்டுக்கு சாயங்காலம் வரும்போது பல பூக்காரிங்க நச்சரிப்பாங்க. நீ தர்ற விலையை விடக் கொஞ்சம் கூடவே இருந்தாலும் அந்தப் பூவெல்லாம் நல்ல மணத்தோட ஃப்ரெஷ்ஷா இருக்கு. உன்னோட பூ மட்டும், அதுவும் செவ்வாய் வெள்ளி பூஜைக்காக நீ மொதல் நாள் போடும் போது இந்த மாதிரி பழசாத் தெரிஞ்சா எனக்கு ஏமாற்றமா இருக்கு இல்ல?"

"பத்து பேர் ஒரு இடத்துல சேர்ந்து பூ விக்கறபோது வாசனையா, கவர்ச்சியாத் தாம்மா இருக்கும். வாங்கிப் பாத்தாத் தானே தெரியும்?"

அவளின் இந்த பதில் எனக்குப் பிடிக்கவில்லை. "அப்ப நான் அவங்ககிட்டேயும் பூ வாங்கிப் பார்க்கலாம்னு சொல்ற?"

"உங்க இஷ்டம்மா. நான் என்னத்தச் சொல்ல? என்னைப் பொறுத்தவரைக்கும் அக்கறையோட தாம்மா உங்க வீட்டுக்கு நான் பூ போடறேன்."

"என்னவோம்மா. நீ போடற பூவை நாங்க பெரும்பாலும் சாமிக்குதான் சூட்டறோம். ஏதாவது குறையிருந்தா அந்தப் பாவம் உன்னையும்தான் சேரும்."

"என்னோட பொழப்புல அப்படிப் பாவம் வருதுன்னா அதுக்கு நான் என்ன செய்ய முடியும்மா? சரிம்மா, நாளன்னிக்கி ரெண்டாம் தேதி, பவுர்ணமி. நான் திருணாமலை கிரிவலம் போறேன். அதனால வழக்கம்போல நாளைப் பூவையும் சேத்து இன்னைக்கே போட்டுடறேன். போன மாசக் கணக்குப் பணத்த நான் வந்ததும் அஞ்சாறு தேதிக்கா வாங்கிக்கிறேன்."

ந்த வார்த்தையை நான் சொல்லியிருக்கக் கூடாது என்று இப்போது பட்டது. தேதி பத்தாகியும் பூக்காரி இதுவரை மாலை வரவேயில்லை!

எனக்கு இருப்புக்கொள்ளவில்லை. போன மாசம் வாங்கியிருந்த பூக்கணக்கு ரூபாய் இரண்டாயிரத்து முன்னூறைத் தாண்டியிருந்தது. அந்த பாக்கி ஒரு பெரும் சுமையாக என் தலையில் ஏறியது. ’எங்கேயாவது ஊருக்குப் போயிருப்பா. எப்படியும் வந்திடுவா’ என்று என் கணவர் சொன்ன சமாதானம் எனக்குத் திருப்தியாக இல்லை.

மூன்று வருடமாக வீட்டு வாசலுக்கு வரும் பூக்காரியின் பெயர் கூட எனக்குத் தெரியாது! அவள் குடும்பம், வீடு பற்றிய விவரங்களை நான் என்றுமே அவளிடம் கேட்டறிந்ததில்லை. அவளாகவும் சொன்னதில்லை. இந்தத் தெருவில் நாங்கள் மட்டுமே இவளிடம் பூ வாங்குகிறோம். மற்ற தெருக்களில் வாங்குவோர் பற்றியும் எனக்குத் தெரியாது.

நாங்கள் மாதக் கணக்கில் தரும் பணம் அவள் பேரக் குழந்தையின் பள்ளிப் படிப்புக்கு உதவுவதாக அவள் எப்போதோ சொல்லியிருந்தது நினைவில் நெருட அன்று மாலை வீட்டுக்கு நான் நடந்து வந்தபோது, அந்த அம்மன் கோவில் வாசலில் பார்த்தேன். அங்கும் அவளைக் காணவில்லை. கோவிலில் விசாரித்தும் யாருக்கும் எதுவும் விவரம் தெரியவில்லை.

போன வருடம் ஒரு நாள் மாலை அவள் கேம்ப் ரோடைக் கடந்தபோது ஒரு மோட்டார் பைக் இடித்துவிட, நல்லவேளையாக அடி அவள்மேல் படாமல் அவள் பிளாஸ்டிக் கூடையில் பட்டுப் பூவெல்லாம் கொட்டி வீணானது என்றும் அந்த பைக்கை ஓட்டியவன் நிற்கவேயில்லை யென்றும், உடலில் நடுக்கத்துடனும், குரலில் படபடப்புடனும் அவள் சொன்னது என் காதில் ஒலித்தது: ’அந்த அண்ணாமலையார் தாம்மா என்னை இன்னைக்குக் காப்பாத்தினார்.’ அதுபோல் ஏதாவது ஆகியிருக்குமோ என்று என் மனதில் பயம் துளிர்விட ஆரம்பித்தது.

அம்பாள் ஏன் என்னை இப்படி சோதிக்கிறாள்? நான் தினமும் மாலை அவளுக்கும் அவள் வேழமுகப் பிள்ளைக்கும் விளக்கு-ஊதுவத்தி ஏற்றிவைத்து, எல்லா ஸ்வாமி படங்களுக்கும் வீட்டில் பூத்த செவ்வரளிப் பூவைப் பறித்துவைத்து, நித்தியமல்லிப் பூக்களைக் காலடியில் தூவி சமஸ்கிருத, தமிழ்த் துதிகள் சொல்லி வழிபட்டுவிட்டுப் பின் பூஜை அறையின் எதிரில் உள்ள திண்ணையில் அமர்ந்து அக்கறையாக ’லலிதா சகஸ்ரநாமம்’ பாராயணம் பண்ணுவதில் ஏதாவது குறையா?

அல்லது ஒவ்வொரு வெள்ளி செவ்வாய்க் கிழமை மாலையும் நான் ஏதேனும் பிரசாதம் படைத்து பூஜை செய்து கற்பூர ஆராதனை காட்டுவதிலோ, அன்று அதிகப்படியாக நான் பாராயணம் பண்ணும் லலிதா திரிச்சதி, அபிராமி அந்தாதி போன்ற துதிகளிலோ ஏதாவது குறை வைத்தேனா? எனக்கு ஏன் இந்த சோதனை, கடன்சுமை?

ந்த மாதம் முழுவதும் அவள் வரவில்லை. நிச்சயம் அவளுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று என் உள்ளுணர்வு சொன்னது. கணவரின் ஆலோசனையின் பேரில் வரும் மாதப் பௌர்ணமி தினத்தன்று நாங்கள் இருவரும் திருவண்ணாமலை சென்று கிரிவலம் வந்து அவளைத் தேடிப் பார்க்கத் தீர்மானித்தோம்.

பௌர்ணமி தொடங்கும் நேரத்திலேயே அவள் பெரும்பாலும் கிரிவலம் செல்லுவாள் என்றும் அப்போதுதான் அதிகம் கூட்டம் இருக்காது என்றும் அவள் ஒரு முறை சொன்னது நினைவுக்கு வர, அந்த மாதப் பௌர்ணமி கிரிவலம் காலை ஏழுமணி முதல் என்று கோவில் நிர்வாகம் அறிவித்து இருந்ததை இணையத்தில் தேடி, அதற்கு முன் அண்ணாமலையாரையும் அம்மனையும் தரிசித்துவிட்டு எங்கள் கிரிவலத் தேடலைத் தொடங்கினோம்.

கூட்டம் சிறித்து சிறிதாக அதிகரித்தது. நாங்கள் நாலு மணி நேரம் சுற்றி அலைந்து, வழியில் உள்ள தெய்வங்களைக் கூட சரியாக தரிசனம் செய்யாமல் தேடியும் எந்தப் பலனும் இல்லை. ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு நாங்கள் தங்கிய லாட்ஜில் வந்து விழுந்தபோது ஆயாசமும் துக்கமும் அச்சமுமே எஞ்சி நின்றது.

எங்கள் வீட்டு வேலைக்காரி, குடுவைக் குடிநீர் தருபவர், மளிகைக் காரர், வாடகைக்கார் நிறுவனம்--இப்படி எல்லோரோட முகவரியும் செல்ஃபோன் நம்பரும் தெரிஞ்சு வைத்திருக்கும் நாங்கள் ஏன் இந்தப் பூக்காரி விஷயத்தில் அலட்சியமாக இருந்தோம் என்ற குற்றவுணர்வு தலைதூக்கி எங்களை வாட்டியது. இனி அவளைப் பார்க்கப் போவதில்லை என்ற அச்சம் மட்டும் குறையவே இல்லை.

அன்று மாலை சுவாமி தரிசனம் செய்வதற்கு முன், அவளுக்குச் சேர வேண்டிய கடன்பாக்கியான ரூபாய் 2,300-உடன் அதை உடனே தரமுடியாததற்குப் பிராயச்சித்தமாக மேலும் ரூபாய் எழுநூறு சேர்த்து, மொத்தம் ரூபாய் மூவாயிரத்தைக் கோவில் கடைகளில் அல்லாமல் சுற்றியிருந்த தெருக்களில் பூ வியாபாரம் செய்யும் பத்து பூக்காரிகளைப் பார்த்து ஒரு வேண்டுதல் என்று கூறி ஒவ்வொருவருக்கும் ரூபாய் முன்னூறு திரவிய தானமாகச் செய்தோம். பதிலுக்கு அவர்கள் தந்த ஒவ்வொரு முழம் பூவை சுவாமி-அம்பாள் காலடியில் சேர்த்து, அம்பாளுக்கு அவள் பேரிலேயே அர்ச்சனை செய்துவிட்டு இரவு தாமதமாக வீடு திரும்பினோம்.

மறுநாள் வெள்ளிக்கிழமை முதல் எங்கள் பூஜை-புனஸ்காரங்களைத் தொடர முடிவுசெய்து நாங்கள் காலை ஐந்து மணிக்கே எழுந்து, நான் முதலில் குளித்துவிட்டு, அம்பாளுக்குப் பூவைத்து விளக்கும் ஊதுவத்தியும் ஏற்றிவைத்த போது மனதில் சற்று பாரம் குறைந்திருந்தது. கணவர் வழக்கம்போல் தன் படிப்பறையில் கணினியில் மூழ்கியிருந்தார்.

எட்டு மணியளவில் வாசலில் அழைப்புமணி சத்தம் கேட்க, யார் என்று பார்க்கச் சென்றேன். மூன்றாம் வீட்டு ரமா மாமிதான்.

"நீங்க ரெண்டுபேரும் ஒங்க பூக்காரியைத் தேடிண்டு திருவண்ணாமலை போனேளா, அவள் நேத்து சாயங்காலம் உங்காத்துக்குப் பூப்போட வந்தா. அவள் மாமியாருக்கு திடீர்னு உடம்பு முடியாமப் போய் ஆஸ்பத்திரில சேர்த்ததால ஊருக்குக் கிளம்பிப் போய்ட்டாளாம். பத்துநாள் அட்மிட் பண்ணியும் குணமாகாம அவர் காலமாய்ட்டாராம், காரியம்லாம் முடிச்சிட்டு வர இவ்ளோ நாள் ஆய்ட்டதாம்."

குரல் கேட்டு என் கணவர் எழுந்து வந்தார். "இன்னைக்கு சாயங்காலம் அவள் வந்ததும் முதல் வேலையா அவள் பேர், ஃபோன் நம்பர், விலாசம் வாங்கிக்கணும்."

*** *** ***

Sunday, June 7, 2015

011. லைஃபா இது, சை!

ரமணியின் கதைகள்: ramaNiyin kathaikaL

லைஃபா இது, சை!

சிறுகதை
ரமணி (Jun 2013)


[இந்தக் கதையைப் படித்துக் கருத்துச் சொல்வதுடன் மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டு இதுபோன்ற அக்கிரமச் செயல்கள் பற்றிய விழிப்புணர்வு உண்டாவதற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--ரமணி]

(கலித்துறை)
பணமும் அரசியல் பதவியும் பின்புலமாய்ப் பதுங்கியிருக்கத்
தினவெடுத்த தீமனத்தார் தன்னலம் மட்டும் தாங்குவதால்
தினமும் கண்முன்னே சூழல் கேடுறும் விளைவுகளை
வினவிட முடியாது வெதும்பிடும் மனத்தில் விளைந்தகதை.
--ரமணி

ந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தின் வெளிவாசல் அருகே, தார் சாலையில் தர்ணா ஆரம்பித்தது. ஞாயிற்றுக் கிழமை. காலை பத்து மணி. இரண்டு பேர் அரை டிராயர் அணிந்துகொண்டு வளாகத்தில் நிறுத்தியிருந்த தங்கள் சொகுசுச் சிற்றுந்துகளைக் கழுவித் துடைத்துக் கொண்டிருந்தார்கள்.

குழந்தைகள் முன்னணியில் இருக்க, ஆண்களும் பெண்களுமாக ஏறத்தாழ நாற்பது பேர் அந்த அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆறு வயது முதல் பதினாறு வயது வரை சிறுவர்களும் சிறுமியர்களுமாக இருபது பேர், வகுப்பில் பெருக்கல் வாய்ப்பாடு கோரஸாகச் சொல்லும் குழந்தைகளின் உற்சாகத்துடன், ஒரு மூத்த சிறுமி ஒலித்த கோஷங்களை உரத்த குரலில் திரும்பச் சொன்னார்கள். பெரியவர்களின் குரலும் சேர்ந்து பின்புலத்தில் ஒலித்தது. குழந்தைகளுடன் நின்றுகொண்டு காவியுடையில் கையில் தடியுடனும் தண்ணீர் புட்டியுடனும் ஓர் உயரமான துறவியும் அந்த வாசகங்களுக்குக் குரல் கொடுத்தார். வாசகங்களை அழகாக விளம்பர அட்டைகளில் எழுதியும் உயர்த்திக் காட்டினார்கள்.

கக்கூஸ் நீரை...
கக்கூஸ் நீரை...
(இந்த வாசகத்தை ஒவ்வொரு முறை ஒலிக்கும் போதும் சிறு குழந்தைகள் கெக்கே-பிக்கே என்று ஓட்டைப்பல் தெரியச் சிரித்தது இயற்கையாக இருந்தது!)

கோவில் நிலத்தில்...
கோவில் நிலத்தில்...

தினமும் பாய்ச்சும்...
தினமும் பாய்ச்சும்...

கயவர் கூட்டத்தின்...
கயவர் கூட்டத்தின்...

கொட்டத்தை அடக்கு!
கொட்டத்தை அடக்கு!

பணத்தின் பெயரால்...
பணத்தின் பெயரால்...

பாதகச் செயலுக்கு..
பாதகச் செயலுக்கு..

துணை போகாதே!
துணை போகாதே!

வெளியே கக்கூஸ்...
வெளியே கக்கூஸ்...

உள்ளே கார்கள்...
உள்ளே கார்கள்...

கக்கூஸ்காரர் குடியிருப்பில்!
கக்கூஸ்காரர் குடியிருப்பில்!

மற்றோர் நலனும்...
மற்றோர் நலனும்...

சுற்றுச் சூழலும்...
சுற்றுச் சூழலும்...

வெற்றுப் பேச்சா?
வெற்றுப் பேச்சா?

துறவியும் தன் பங்குக்கு மூன்று வாசகங்களைக் கொடுத்தார்.

பெயரில் பசுமை...
பெயரில் பசுமை...

செயலில் பாதகம்!
செயலில் பாதகம்!

பணமும் செல்வமும்...
பணமும் செல்வமும்...

பாதாளம் பாயலாம்...
பாதாளம் பாயலாம்...

மேலோகம் செல்லாது!
மேலோகம் செல்லாது!

ஆத்தாள் சினந்தால்...
ஆத்தாள் சினந்தால்...

சோத்தில் மண்தான்!
சோத்தில் மண்தான்!

தர்ணா செய்த பெரியவர்கள் செல்ஃபோனில் மற்றத் தெருவாசிகளுக்கும் தகவல் சொன்னதாலும், ஊரின் மேற்கே அமைந்த ஏழை எளியோர் குடியிருப்புத் தெருக்களிலும் இந்த தர்ணா விஷயம் தெரியவர, அவர்கள் வீட்டுவேலை செய்யும் குடும்பங்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுக்க அந்த மகளிரும், இளைஞர்களும் குழந்தைகளும் உற்சாகத்துடன் சேர்ந்துகொள்ள அரை மணி நேரத்தில் கூக்குரல் இடுவோர்களின் எண்ணிக்கை நூறைத் தாண்டியது.

"அய்யா, சாலை மறியல் செஞ்சிரலாங்களா?" என்றார், கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் ஓர் ஏழை இளைஞர்.

"அதெல்லாம் வேண்டாம்", என்றார் துறவி. "இது ஓர் அமைதியான போராட்டம். வளாகத்தில் குடியிருப்போர் அவர்கள் தினமும் செய்வது தெய்வகுற்றம் என்பதை உணர்ந்து இது போன்றதொரு இழிசெயலைக் கைவிடவேண்டும் என்பதே இந்த தர்ணாவின் நோக்கம்."

கூட்டம் பெருகுவதைக் கண்ட வளாகக் குடியிருப்புச் செயலர் அவர்கள் வார்டு கௌன்சிலருக்கு அலைபேச, கௌன்சிலர் இரண்டு காவல்துறை அதிகாரிகளுடன் அடுத்த பதினைந்து நிமிடத்தில் ஸ்தலத்தில் ஆஜரானார்.

கௌன்சிலரும் காவல்துறை அதிகாரிகளும் கூட்டத்தை சமாதானப் படுத்த முயன்று, தர்ணா செய்வோர் குற்றச்சாட்டில் உண்மையிருந்தால் அடுத்த பதினைந்து நாட்களில் தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தது வளாகத் தெருவாசிகளுக்குத் திருப்தியாகவில்லை. கடைசியாக அந்தத் துறவி அதிகாரிகளின் ஒப்புதல் பெற்று உரத்த குரலில் பேசினார்.

"அன்பர்களே! நான் இந்தப் பக்கம் வர நேர்ந்தது, உங்கள் தர்ணாவில் பங்கேற்றது எல்லாம் தற்செயல் என்று நினைத்தேன். அது இறைவன் சித்தமே என்று எனக்கு இப்போது தெரிகின்றது. இப்போது கூட நீங்கள் யார் என்று எனக்கோ நான் யார் என்று உங்களுக்கோ தெரியாது. அதுவும் இறைவன் சித்தமே. இன்று நான் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்யக் கிளம்புகிறேன். நமக்கு முருகன் மீது நம்பிக்கை இருக்கிறது. அவன் ஆத்தாள் மீது நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் பார்த்துக்கொள்வார்கள், கவலை வேண்டாம். அதிகாரிகள் கேட்டுக்கொண்டபடி இப்போது கலைந்து வீடு செல்லுங்கள். ஒன்று மட்டும் நிச்சயம் நடக்கும். இன்று ஞாயிற்றுக் கிழமை. அடுத்த ஞாயிறுக்கடுத்த ஞாயிறோடு பதினைந்து நாள் கெடு முடிகிறது. அதுவரை அதிகாரிகள் தரப்பில் தக்க நடவடிக்கை இல்லாமல் இந்த தெய்வகுற்றம் தொடர்ந்தால், அதன்பின் வரும் செவ்வாய்க் கிழமையன்று ஆத்தாள் தன் ரௌத்திர ரூபத்தைக் காட்டுவாள். இது சத்தியம்."

துறவியின் அருள்வாக்கில் திருப்தியடைந்து கூட்டம் கலைய, அவரும் தன்வழிச் சென்றார். காவல்துறை அதிகாரிகள் நிம்மதியுடன் திரும்ப, குடியிருப்பு வளாகத்தினுள் செயலருடன் ஜாடைகாட்டிச் சிரித்துப் பேசியவாறே கௌன்சிலர் சென்றார்.

*** *** ***

மூன்று அடுக்கில் மூன்று கட்டடமாக அந்தக் குடியிருப்பு வளாகம் அமைந்திருந்தது. நிலத்தளத்தில் வீடுகள் இல்லாது வாகனங்கள் நிறுத்த இடங்கள் குறிக்கப்பட்டு, ஒரு சின்ன அலுவலக அறை மற்றும் பராமரிப்பு அறைகள் இருந்தன. ஆறடி அகலமான கான்கிரீட் பாலங்கள் மொட்டை மாடித் தளத்தில் தனிக் கட்டடங்களை இணைத்தன. நடுவில் இருந்த பெரிய கட்டடத்தின் மொட்டை மாடியில் ஷாமியானா போடப்பட்டு வளாகக் குடியிருப்போர் எல்லோரும் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்ற செயலரின் அழைப்பில் தம் குழந்தைகளுடன் கூடியிருந்தனர்.

கூட்டத்தின் நடுவில் ஒரு மேசை போடப்பட்டு அதன்மேல் ஒரு மடிக் கணினியும், கணிணிப் புரொஜக்டரும் இருந்தன. எல்லார்க்கும் எதிரில் சற்றுப் பெரிய, வெள்ளைத் திரை தொங்க, அனைவர் கண்களும் திரையை நோக்கியிருந்தன. புரொஜக்டர் மேசையில் மூன்று கணிணி விற்பன இளைஞர்கள் செயலரின் விரல் அசைவில் திரையில் ஒரு படத்தை ஓடவிடுவதற்குத் தயாராக இருந்தனர்.

கையில் ஒரு ’ரிமோட் மைக்’குடன் வளாகச் செயலர் பேசினார்: "பதினஞ்சு நிமிஷம் ஓடற இந்த யூடியூப் விடியோ லின்க் எனக்கு நேத்து நைட்டு அமெரிக்கால இருக்கற என் மச்சினன் பையன் அவனோட சாட் பண்ணும் போது தந்தான். இது வந்து நம்மளுடைய அபார்ட்மென்ட் பத்தினது. படம் முடிஞ்சதும், லாஸ்ட் ஒன் இயரா செஞ்சிகிட்டிருக்கற ஒரு காரியத்தைப் பத்தி நாம ஒரு முடிவுக்கு வரவேணும். அதுக்காகத்தான் இந்த மீட்டிங்.."

மாலை ஏழுமணி. பாதரசக் குழல் விளக்குகள் நான்கு பக்கமும் மென்மையாக ஒளிவட்டங்கள் பரப்பிக் கொண்டிருக்க, அந்த மெல்லிய இருட்டில் திரையில் படம் பளிச்சென்று தெரிந்தது...

முதலில் அவர்கள் வளாகக் குடியிருப்பு வெளித்தோற்றம். மேலே ’லைஃபா இது, சை!’ என்று தலைப்பு. கட்டடம் பற்றிய படத்தின் முதல் சட்டங்கள் மெதுவாக ஊர்ந்து கொண்டிருக்க, கீழே தமிழ் எழுத்துகள் ஓட, கட்டைக் குரல் ஒன்று விளக்கம் கூறியது.

"மச்சீ, இந்த டைட்டில எங்கேயோ பாத்திருக்கேன்னு சொன்னேல்ல? ’Life of Pi’-னு சமீபத்தில ஒரு இங்க்லிஷ் படம் வந்ததில்ல, அதுலேர்ந்து சுட்ட டைட்டில்டா இது!" என்றான் ஒரு விற்பனன் தன் நண்பனிடம். "ஷ்...!" என்றார் செயலர்.

கடந்த ஒரு வருடமாக அந்தக் குடியிருப்பு வளாகம் செய்துவந்த ’அராஜக, அட்டூழிய, இழிவு’ச் செயல் பற்றிப் படத்தின் முதல் காட்சிகள் விளக்கின... தொடர்ந்து சில தமிழ்ச் செய்தித் தாள்களில் இது போன்ற அட்டூழியங்களை எதிர்த்து நடந்த தர்ணாக்கள் பற்றிய செய்திகள்... அதன்பின் அந்தப் பாழ்படும் நிலமும் மாசுபடும் சுற்றுச் சூழலும் பற்றிய காட்சிகள்...

பின்னால் வேலிக்காத்தான் முள்மரங்கள் உயர்ந்தோங்கிக் காடாக வளர்ந்து இருந்தன... காட்டுக் கொடிகள் ஓங்கி உயர்ந்து அவற்றைச் சுற்றிக்கொண்டு நின்றன... பயனற்ற தாவரங்களாக இருந்தாலும் எங்கு பார்த்தாலும் கரும் பசுமை அடர்ந்து சூரிய ஒளியை மறைத்திருந்தன... மரங்களடர்ந்த அந்த இரண்டு ஏக்கர் கோவில் நிலத்தில் ஓர் ஏரி போல மனிதக் கழிவுநீர் தேங்கி யிருந்தது... அதில் எருமைகளும், கொக்குகளும், காணாக்கோழிகளும் தவளைகளும் படுத்தும் நடந்தும் ஓடியும் தத்தியும் திளைத்தன... எல்லாக் காட்சிகளும் ஓரளவுக்குத் தெளிவாகப் படமாக்கப் பட்டிருந்தன...

"இது அம்மன் கோவில் நிலம் என்றுதான் பெரும்பாலோர் கருதுகின்றனர்", என்றது குரல். "இல்லை யென்றும் சிலர் சொல்லுகின்றனர். எதுவாயினும் காலி நிலத்தில் மனிதக் கழிவுநீரைப் பாய்ச்சுவது மனித நலனுக்கும் இயற்கைக்கும் சுற்றுச் சூழலுக்கும் எதிரான பெரும் குற்றம்... அதற்குத் துணைபோவது அதனினும் பெரிய குற்றம்... இந்த அராஜகத்துக்கு எதிராக நாம் கடைசியாகச் செய்த தர்ணா இது..."

குரல் நின்றதும் நாம் மேலே பார்த்த தர்ணா திரையில் மெதுவாக ஓடியது. ’பிக்ஸல் எடிட்டிங்’ உத்தியால் முகங்கள் மழுக்கப் பட்டிருந்ததாலும், சமீபத்தில் இந்த வளாகத்தின் முன் நடந்த தர்ணாவில் தெருவாசிகளும் அவர்கள் குழந்தைகளும் சுமார் நாற்பது பேரே பங்கேற்றனர் என்பதாலும், இந்த தர்ணா வேறெங்கோ வேறெதற்கோ நடந்து இங்கு சேர்க்கப்பட்டதா என்ற ஐயம் எழுந்தது...

தர்ணா முடிந்ததும் குரல் தொடர்ந்தது: "அந்தத் துறவி தன் தீர்க்க தரிசனத்தில் கூறியது போல, பதினைந்து நாட்கள் கெடுவில் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லாததால் அதன்பின் வந்த செவ்வாழ்க்கிழமை யன்று ஆத்தாள் ஆடிய ரௌத்திர தாண்டவத்தை இனிப் பார்ப்போம்..."

’செவ்வாய்க் கிழமை, மாலை மணி நான்கு, ராகு காலம்’ என்ற தலைப்பில் அந்தத் துயரத் தாண்டவம் நிகழ்ந்தது...

வாச்மேன் வெளிக்கதவைத் திறக்க, எல்.கே.ஜி. படிக்கும் பெண் குழந்தையைப் பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு வளாகச் செயலரின் வெள்ளிச்சாம்பல் நிற டொயோட்டாக் கார் உள்ளே நுழைந்தது. வெளிவாசல் அருகில் நின்றிருந்த அவர் மனைவி, கான்வென்ட் பள்ளிப் பேருந்தில் அப்போதுதான் வீடு திரும்பியிருந்த தன் மூத்த, எட்டு வயதுப் பெண் குழந்தையுடன் அவர்களை வரவேற்றாள். எல்லா முகங்களும் மழுப்பப் பட்டிருந்தன. வானம் லேசாக இருண்டிருந்தது...

வாச்மேன் இரும்பு வெளிக்கதவை மூடிவிட்டுத் திரும்பும் போது, செயலர் கார் அப்பிரதட்சிணமாக ஒரு நீண்ட வட்டமடித்துக்கொண்டு அவருக்காக ஒதுக்கப் பட்டிருந்த நிறுத்தப் பகுதியில் நின்றது. அதே வினாடி இரண்டு அசம்பாவிதங்கள் நிகழ்ந்தன...

நடந்துபோய்க் கொண்டிருந்த வாச்மேன் காலடியில் கக்கூஸ் கழிவு நிலவறையை மூடியிருந்த கான்கிரீட் பூச்சில் திடீரென்று விரிசல்கள் தோன்றி உடைந்தன. தடுமாறிச் சமாளித்துக்கொண்ட வாச்மேன், அருகில் இருந்த இன்ஸ்பெக்ஶன் சேம்பர் திறந்துகொள்ளக் கால் இடறி அதனுள் விழுந்து சுகாசனத்தில் அமர நேரிட்டு அதனின்று எழுந்திருக்க முடியவில்லை...

காரை நிறுத்திய செயலர் உட்கார்ந்தபடியே தன் குழந்தை அமர்ந்திருந்த இடப்புறக் கதவைத் திறந்துவிட, குழந்தை அவர் வந்து தன்னைத் தூக்கிக் கொள்வதற்காகக் காத்திருந்தது. கார் சாவியை எடுத்துக்கொண்டு அவர் சுற்றி வருவதற்குள் அந்த இரண்டாவது அசம்பாவிதம் நிகழ்ந்த போது அவர் மனைவியும் மூத்த மகளும் லிஃப்ட் நோக்கிச் சென்றுகொண்டு இருந்தனர்...

திடீரென்று எங்கிருந்தோ கருமேகங்கள் விரைந்துவந்து சூழ்ந்துகொண்டன. பிரளயம் போன்று ஒரு பேய்க்காற்று அடித்து அந்த கழிவுநீர் ஏரியைக் கலக்கியது. அந்த ஊழிக் காற்றின் உக்கிரத்தில் நீரலைகள் மோத, கோவில் நிலம் பக்கம் இருந்த வளாகச் சுற்றுச்சுவரில் அந்தக் கழிவுநீர் வெளியேற்றும் குழாய் இருந்த இடத்தில் விரிசல் கண்டு எட்டடி அகலத்துக்கு உடைந்தது...

கோவில் நிலத்தில் இருந்த மனிதக் கழிவுநீர் ஏரியின் கரை உடைந்ததால் வெள்ளமாகப் பெருக்கெடுத்து உள்ளே நுழைய, இவர்கள் வளாகம் அதை ஒரு புனல் போல் உறிஞ்சிக் கொள்ள, கண நேரத்தில் அத்தனை கழிவுநீரும் இவர்கள் வளாக நிலத் தரையில் ஹோவென்ற இரைச்சலுடன் சுழித்து நிறைந்து நீர்மட்டம் உயரத் தொடங்கிக் காருக்குள் கால் வைக்கும் இடமெல்லாம் கழிவுநீர் நுழைந்தது...

"டாடி, ஸ்நேக்!" என்று குழந்தை அலறத் தொடங்க, பாம்புகளும் மீன்களும் நண்டுகளும் தவளைகளும் அடித்துவரப்பட்ட காணாக்கோழிகளுமாக ஒரே களேபரம்! செயலர் அவசரமாகக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஆடுசதையளவு கழிவுநீரில் ஓடினார். அவர் பின்னால் வெள்ளத்தில் அடித்துவரப் பட்ட எருமைக் கன்று ஒன்று அவர் காரின் முன்புறம் ’மடேர்’ என்று மோதிக் கண்விழித்தது. காரின் முன்புறம் மிகவும் நசுங்கித் தலைவிளக்குகள் உடைந்தன...

கால் இடறி விழுந்து எழுந்திருக்க முடியாமல் அமர்ந்திருந்த வாச்மேனைக் கழிவுநீர் வெள்ளம் கழுத்தளவு பற்றியது. அவர் தலைமட்டும் பயத்தில் உறைந்து பார்த்திருக்கக் காதில் குரல் கேட்டது: "எய்தவன் வேறு யாரோ நீ வெறும் அம்பு என்பதால் தண்டனை இம்மட்டில்!..." ’அம்புக்கு இவ்வளவு தண்டனையா?’ என்ற கேள்வி அவர் மனதில் எழுந்தபோது "எய்தது யாராயினும் தைத்தது அம்புதானே?" என்ற குரலில் பதில் வந்தது. ’அம்புக்கு வேறென்ன கதி?’ என்றவர் நினைத்தபோது, ’குறி தவறாத அம்புக்கும் கடைசியில் தூக்கி எறியப்படுவதுதான் விதி’ என்ற பதில் கிடைத்தது...

செயலர் முதல் மாடியில் கோவில் நிலம் பக்கம் இருந்த தன் வீட்டுக்குள் நுழைந்தபோது அவர் மனைவியும் மூத்த மகளும் பயத்தில் கூக்குரலிட்டு அழுது கொண்டிருந்தார்கள். என்னவென்று இவர் படுக்கை அறைக்குச் சென்று பார்த்தபோது, அறை ஜன்னல்களில் கண்ணாடிகள் உடைந்து சிதறியிருந்தன... அறையில் கட்டில் மேல் இருந்த பத்திரிகைகள் பெருங்காற்றில் படபடத்துப் பறந்தன. மேசைமேல் இருந்த அவரது விலையுயர்ந்த மடிக்கணிணி தரையில் விழுந்து நொறுங்கியிருந்தது...

கோவில் நிலம் பக்கம் விழிகள் நிலைத்திருக்க, தூய கான்வென்ட் ஆங்கிலம் பேசும் அவர் மூத்த மகள் திடீரென்று சுத்தத் தமிழில் கத்திய வண்ணம் கதறினாள்.

"அப்பா, அப்பா! அதோ எதிர்ல ஆத்தாள் நின்னுகிட்டு நம்மைக் கோவத்தோட பாக்கறாப்பா! அவள் கண்ணெல்லாம் ரத்தம்! ஆத்தா, தாயே! எங்கப்பா தெரியாம செய்திட்டார்! ப்ளீஸ், டோன்ட் ஹர்ட் அஸ், ப்ளீஸ்!..."

செயலரும் மனைவியும் ஜன்னல் வழியே ஜாக்கிரதையாக எட்டிப் பார்த்தும் அவருக்கோ அவர் மனைவிக்கோ ஆத்தாள் தரிசனம் கிட்டவில்லை. அவர்கள் தலையை உள்ளே இழுத்துக்கொண்ட போது, நீரில் காட்டுக் கொடிகளுடன் மூழ்கியிருந்த ஒரு பெரிய, உயர்ந்த வேலிக்காத்தான் மரம் நாணறுந்த வில் போல் விடுபட்டுக் கால்பந்து அளவில் மனிதக்கழிவொன்று காற்றில் பறந்து வந்து செயலர் படுக்கையறை ஜன்னல் வழியாக உள்நுழைந்து எதிர்ச் சுவரில் அறைந்தது. சுவரில் தெறித்துப் பரவிய கழிவுப் படலத்தில் தமிழில் வார்த்தைகள் தோன்றின.

மும்மலத்தில் ஏற்கனவே முழிபிதுங்கும் பக்தர்களை உம்மலத்தால் உளையச் செய்ததற்கு தண்டனை!

*** *** ***

"’ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்’-லாம் ஓரளவுக்கு நல்லாவே இருக்கில்ல மச்சி?" என்றான் கணிணியை இயக்கிய முதல் இளைஞன்.

"படம் எடுத்தவன் யார்னு கண்டுபிடி. அவன் ஏதாவது வெப்ஸைட், பிளாக் வெச்சிருக்கானா பாரு! அதை ஹாக் பண்ணி அவனை நாறடிக்கறேன்!" என்றான் அவன் நண்பன்.

"நம்ம செகரட்ரி கன்னடக்காரர் மச்சி. அவருக்குத் தமிழ் சரியா பேச வராது. நிச்சயமாப் படிக்கத் தெரியாது. சுவத்ல செந்தமிழ்ல எழுதின ஆத்தாளுக்கு அது தெரியலையே?" என்றான் மூன்றாம் இளைஞன்.

"உருவங்கள் கிட்டத்தட்ட ஒண்ணுபோல இருந்தாலும் படத்தில காட்டின ஃபிளாட் எங்களோடது மாதிரி இல்லை", என்றார் செயலர்.

எண்பது வயதுப் பெரியவர் ஒருவர் எழுந்தார். "இதை நாம ஒரு சாதாரண விடியோப் படமாக எடுத்துக்கக் கூடாது. போன வாரம் நம்ம குடியிருப்புக் குழந்தைகள் ரெண்டு பேர்க்கு அம்மை போட்டி ஊருக்கு அனுப்பி வெச்சோம், ஞாபகம் இருக்கில்ல? அதுக்கு என்ன அர்த்தம்னு யோசிக்கணும்..."

"எண்ண பண்ணலாங்கிறீங்க?" என்றார் செயலர். "இதெல்லாம் கப்ஸாதானே? நிஜமா இதுபோல எதுமே நடக்கலையே!"

"இன்னும் வேற என்னய்யா நடக்கணும்? போன வருஷம் இந்தக் காரியத்த ஆரம்பிச்ச போதே நான் எச்சரிச்சேன். அரசியல்வாதிங்களை நம்பிச் செய்யாதீங்கய்யா, அவங்க மலைப்பாம்பு மாதிரி. அந்தப் பாம்புக்காவது ஒரு பக்கம்தான் வாய் இருக்கும். இவனுகளுக்கு உடம்பெல்லாம் வாய்னு! இந்த ஒரு வருஷத்தில அவனுகளுக்கு அழுத பணத்தை வெச்சு வேற நல்ல விதமா இந்தப் பிரச்சினையை முடிச்சிருக்கலாம் இல்ல?"

"அதான் என்ன பண்ணலாம்னு கேட்டேன்", என்றார் செயலர் பொறுமை இழந்து.

"ட்ரீட்மென்ட் ப்ளான்டும் வேண்டாம், ஒரு விளக்கெண்ணையும் வேண்டாம்!" என்றார் பெரியவர், தன் குரலை உயர்த்தி. "நமக்குத்தான் கிரவுண்ட் ஃப்ளோர்ல நெறைய இடம் இருக்கில்ல? பெருசா, ஆழமா, ஒவ்வொரு பிளாக்குக்கும் தனித்தனியா, மூணு செப்டிக் டாங்க் கட்டுவோம். எல்லாரும் செய்யறமாதிரி ரெகுலரா கழிவுநீர் ஊர்தி வெச்சு அதை மூணு மாசமோ ஆறு மாசத்துக் கொருக்காவோ காலி பண்ணி மெய்ன்டேன் பண்ணுவோம்..."

"பெரிசு பெரிசா செப்டிக் டாங்க் கட்டிட்டு அது ரொம்பி வழிஞ்சு இதுமாதிரி ஆச்சுன்னா, தி ஷிட் வில் ஹிட் திஸ் ஃப்ளோர், பெருசு!" என்று அந்த மூன்று இளைஞர்களில் ஒருவன் சொல்ல, கூடியிருந்த மற்ற இளைஞர்கள் ’ஹூ...!’ என்று கேலிக்குரல் எழுப்பி இரைந்து சிரித்தனர்.

"வாய மூடுடா பரதேசி நாயே! வாடகைக்கு குடியிருக்கற உங்களுக்கு இவ்வளவு திமிராடா!" பெரியவருக்கு மூச்சிரைத்தது.

"வெரி ராஞ்சி, திஸ் விடியோ க்ளிப்!" என்றான் வேறொரு இளைஞன். அவன் தந்தை அவனை அடக்கினார். "வாட், கௌபாய்? இது ராஞ்சினா ஒரு வருஷமா நாம செஞ்சிகிட்டுக்கறது எதில சேத்தி?"

பெரியவர் சொன்னதற்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் கேட்டன. ஆண்களும் பெண்களும் தனித்தனியே உரத்த குரலில் தாங்கள் பார்த்ததை விவாதிக்கத் தொடங்க எழுந்த சந்தைக் கடை இரைச்சல் நடுவே இரண்டு குழந்தைகளின் அழுகுரல் கேட்டது.

குரல்களைக் கைதட்டி அடக்கிய பெரியவர் அமைதியாகத் தொடர்ந்தார்: "என்னோட ஒரே பையன் கல்யாணம் ஆகி அமெரிக்காவில செட்டில் ஆயிட்டான்னு உங்க எல்லார்க்கும் தெரியும். எனக்கு அந்தக் குளிரும் சூழ்நிலையும் ஒத்துக்காம நான் இங்க தனியா ஜீவனம் பண்றேன், எதோ நீங்கள்லாம் கூட இருக்கீங்கன்னு ஒரு தைரியத்தில... என்னோட கடைசிப் பயணச் செலவுக்குன்னு நான் ஒரு லட்ச ரூபாய் சேர்த்து வெச்சிருக்கேன். முதல் கான்ட்ரிபூஷனா அதைத் தர்றேன். வீட்டுக்கு ஒரு லட்சம் போட்டாப் போதும், ஒன் டைம் இன்வென்ஸ்ட்மென்டா. மூனு செப்டிக் டாங்கையும் பெரிசா ஆழமாக் கட்டி அதை ஒரு வருஷம் மெயின்டெய்ன் பண்ணவும் அந்தப் பணம் போதும்."

"இதெல்லாம் இப்பவே தீர்மானம் செய்ய முடியுமாங்க? யோசிச்சுச் செய்யணும்", என்று செயலர் இழுத்தார்.

"யோசிக்கறதுக்கு என்ன இருக்கு?", என்றார் பெரியவர். "அடுத்த வாரம் மறுபடியும் கூடுவோம். அப்ப பிரச்சனையை ஓட்டுக்கு விடுங்க. பெரியவங்க, குழந்தைங்க எல்லாரும் ஒருத்தர் விடாம ஓட்டுப் போடணும். போன வருஷம் அஞ்சு ஓட்டு வித்தியாசத்திலதானே நீங்க ஜெயிச்சு முடிவெடுத்தீங்க? இந்த தடவை நான் எல்லார்ட்டயும் கான்வாஸ் பண்ணி என் பக்கத்தை ஜெயிச்சிக் காட்டறேன்..."

*** *** ***

டுத்த இரண்டு நாட்களில் பெரியவர் இயற்கை மரணம் எய்தியதால் அந்தக் கூட்டமோ ஓட்டெடுப்போ நிகழாமல் போனது.

அதன்பின் செயலர் அனுப்பிய ஒரு சுற்றறிக்கையில், கூடிய விரைவில் அவர்கள் பகுதியில் ஏற்கனவே மூன்று வருடங்கள் முன்பு கொள்கையளவில் ஒப்புதல் பெற்ற பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், அது வந்துவிட்டால் இந்தப் பிரச்சனை எல்லோர்க்கும் நன்மையாகத் தீர்ந்துவிடும் என்றும், அதுவரை ஏற்கனவே அதிகாரிகள் வாயளவில் தந்த ஒப்புதலுடன் செய்துவரும் காரியத்தைத் தொடரலாம் என்றும், இதற்கு ஒப்புதல் அளித்து வீட்டின் சொந்தக்காரர்கள் கையொப்பம் இடுமாறும் கேட்டிருந்தது. மூவர் மட்டுமே இதற்கு ஆட்சேபம் தெரிவித்துக் கையொப்பமிட, இன்றுவரை கோவில் நிலம் என்று நம்பப்படும் இரண்டு ஏக்கர் நிலத்தில் அந்தக் குடியிருப்பு வளாகத்தின் கழிவுநீர் வெளியேற்றப்பட்டு ஏரியாகத் தேங்கியுள்ளதும் அதனால் அக்கம் பக்கம் தனி வீடுகளில் பல ஆண்டுகளாக இவர்களுக்கு முன்பிருந்தே குடியிருக்கும் மற்றத் தெருவாசிகள் அவதிப் படுவதும் தொடர்கிறது...

அந்தக் ’கூடிய விரைவில் பாதாள சாக்கடைத் திட்டம் அமல்’ என்பது வெறும் கண்துடைப்பே, மூன்று வருடமாகக் கிடப்பில் போடப்பட்ட திட்டம் இப்போதைக்குச் செயல்படுத்தப் படாது என்பது ஊர் அறிந்த ரகசியம்.

மாசுபட்ட கோவில்களில் இருந்து தெய்வம் வெளியேறி விடுவதாகவும், கோவில் சிலைகள் வெறும் கற்சிலைகளாகி வழிபாட்டுக்குப் பயன்தராது என்றும் நிலவும் ஐதீகம் போன்று, அவளது நிலச் சொந்தக்கார்கள் யாரும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் ஆத்தாள் அந்த நிலத்திலிருந்தும் அந்தக் கோவிலிலிருந்தும் வெளியேறிவிட்டாள் என்று ஓட்டு எண்ணிக்கையில் குறைந்துள்ள மற்றத் தெருவாசிகள் தங்கள் இயலாமையைப் பேசிக்கொள்வதைத் தவிர அவர்களால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

*** *** ***

Wednesday, June 3, 2015

010. ’ஷோகேஸ்’

ரமணியின் கதைகள்: ramaNiyin kathaikaL

’ஷோகேஸ்’

சிறுகதை
ரமணி (Jun 2013)

[collage, அதாவது படத்திரட்டு என்னும் உத்தியைப் பயன்படுத்தி எழுதிய சிறுகதை.]

து வந்து... எங்க வீட்டு ஷோகேஸ் படம்... படத்த நல்லா, விவரமாப் பாருங்க!... இதவெச்சு ஒரு கதை சொல்லப் போறேன். என்னோட கதை...

’மதுமிதா’ அப்படீன்னா அர்த்தம் தெரியுமா உங்களுக்கு? அதான் என்னோட பேர். அதுக்கு அர்த்தம்... ம்? எனக்கு எங்க தாத்தா சொல்லிக் குடுத்தாங்க...

ஐய... மதுன்னா நீங்க நெனைக்கற மாதிரி ஒயின் கிடையாது. மதுன்னா தேன்! சுரா-ங்கற வார்த்தைக்குதான் ஒயின்னு அர்த்தம். மிதான்னா filled with, நெறஞ்சு இருக்கறது. ஸோ, மதுமிதான்னா தேன் அல்லது இனிமை நெறஞ்சவள்னு அர்த்தம்...

"தேன் கலர்ல நீ இருந்ததாலயும், உங்க அம்மா-அப்பா விரும்பினபடி பொறந்த முதல் ஸ்வீட் கர்ள்-ங்கறதாலயும், அவங்க உனக்கு மதுமிதான்னு பேர் வெச்சாங்க!" அப்படீன்னு தாத்தா எனக்கு எக்ஸ்ப்ளெய்ன் பண்ணாங்க. எனக்கு ஏதாவது சந்தேகம் வந்தா... நான் எங்க தாத்தாவைத்தான் கேப்பேன். தாத்தாட்ட எதைப் பத்திக் கேள்வி கேட்டாலும் அவங்க பொறுமையா எனக்குப் புரியற மாதிரி விளக்கிச் சொல்லுவாங்க.

எனக்கு ஏழு வயசு. ஒரே பொண்ணு. மூணாங் கிளாஸ். ஃபர்ஸ்ட் ரேங்க். ரேணு ஸெகண்ட், என்னைவிடப் பத்து மார்க் கம்மி! ஆனால் அவள் என்னைவிட உயரம்! நாங்க ரெண்டு பேருமே நிறமா அழகா ஸ்மார்ட்டா இருக்கறதா எங்க அப்பாம்மாக்கு நினைப்பு. ’காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு தானே! கழுதை கூட குட்டியா இருக்கும்போது அழகாத் தானே இருக்கும்!’ அப்படீன்னு நானும் ரேணுவும் எங்களுக்குள்ள பேசிப்போம். ஏன்னா, எங்க கிளாஸ்லயே விமலாதான் ரொம்ப அழகு, நிறம், உயரம் எல்லாம். சுண்டினா ரத்தம் வரும்னு சொல்லுவாங்களே, அந்த நிறம். ஆனா அவள் படிப்புல சுமார்தான். கொஞ்சம் கர்வம்கூட. எங்ககூடல்லாம் அவ்வளவாப் பேசமாட்டா. எங்க கிளாஸை விட, மேல் கிளாஸ் கர்ள்ஸ்-தான் அவளுக்கு ஃப்ரெண்ட்ஸ்.

கல்லா-மண்ணா, கண்ணா மூச்சி, கிளித்தட்டு, பாண்டி, ரிங் டென்னிஸ், கேரம், செஸ், அஞ்சு கல்லாட்டம், சோழியாட்டம், பரமபத சோபான பட விளையாட்டுல ஏணியில ஏறி பாம்புல இறங்கறது, இது மாதிரி விளையாட்டெல்லாம் எனக்கும் ரேணுவுக்கும் ரொம்பப் பிடிக்கும். எங்க தெருவுல இருக்கற மத்த பொண்களோட சேர்ந்து இதெல்லாம் தினம் சாயங்காலம் விளையாடுவோம். ஓடி விளையாட எங்க தெரு அகலமான, பெரிய தெரு. ஒக்காந்து விளையாட எங்க வீட்டுத் திண்ணை பெரிய திண்ணை. அப்புறம் என்ன, ஜாலிதான்!

சாயங்காலம் விளையாடி முடிச்சதும் கோவிலுக்குப் போய்ட்டு வந்து வீட்ல ஸ்வாமி கும்பிட்டு ஸ்லோகம்லாம் சொல்லறது பிடிக்கும். இந்த ஊர் சிவன் கோவில்ல... ம்? விஸ்வநாதர், விசாலாட்சி, கணபதி, முருகன், கருப்பணசாமி, நவக்கிரகம் எல்லாம் ரொம்ப அழஹா இருக்கும். நானும் ரேணுவும் சேர்ந்து பிரகாரம், நவக்கிரகம் சுத்துவோம். பிரகாரம் ஒரு சுத்து, நவக்கிரகம் ஒம்பது.

வீட்ல சாமி வழிபாட்டுக்கு அப்புறம், படிப்பு சாப்பாடெல்லாம் எட்டரை மணிக்குள்ள முடிஞ்சிடும். ஒம்பது மணிக்குத் தாத்தாவோ பாட்டியோ என் பாய்ல உக்காந்து நான் தூங்கற வரைக்கும் கதை சொல்லுவாங்க. காலைல ஆறு மணிக்கெல்லாம் எழுந்திருவேன்.

ராத்திரி சாப்ட்டு முடிஞ்சதும் தாத்தா வர்ற வரைக்கும் டெய்லி சேர் மேல ஏறி நின்னுண்டு... இந்த ஷோகேஸ்ல இருக்கற பொம்மைகள், பொருட்கள் இதெல்லாம் ஒண்ணுவிடாம ஆழ்ந்து பார்ப்பேன். ஒவ்வொண்ணும் எனக்கு ஒரு கதை சொல்லும்! அதை நான் இப்ப உங்களுக்குச் சொல்லப் போறேன். இப்பவும் நான் ஷோகேஸைத்தான் உத்துப் பாத்திண்டிருக்கேன், ஆனால் சேர் மேல நின்னுண்டு இல்லை...

மேலே இடது பக்கத்திலேர்ந்து ஒவ்வொரு ஷெல்ஃபா வருவோம்.

அந்தப் பேய்வீடு கடிகாரம் இருக்கில்ல? அது ஸ்கூல் ஆண்டுவிழாவின் போது ’English poem reciting competition for junior classes’ போட்டில நான் ஃபர்ஸ்ட் வந்ததுக்குத் தந்தாங்க. என்ன போயம் தெரியுமா? வால்டர் டி ல மேரோட 'Silver'... 'Slowly, silently, now the moon'-னு ஆரம்பிக்குமே அந்தப் பாட்டு. அதுல ஒரு முழுநிலா பொழியற இரவுல... மரத்தில இருக்கற பழங்கள்... கென்னல்ல தூங்கற நாய்... புறா... எலி... மீன் ... எல்லாம் எப்படி ஸில்வர் கோட்டிங் பூசிண்ட மாதிரி தெரியறதுன்னு நான் விதவிதமா மாஸ்க் அணிந்து நல்லா நடிச்சுக்காட்டி அந்த போயம் ஒப்பிச்சதால ஃபர்ஸ்ட் ப்ரைஸ்-ஸாம்.

பேய்கள்லாம் இருக்கா தாத்தான்னு கேட்டதுக்கு, பேய், பிசாசு எல்லாம் உண்மைதான்னு தாத்தா சொன்னாங்க. மனசில பெரிய நிறைவேறாத ஆசைகளோ, வெறியோ இருந்து அந்த நினைப்புலயே உயிர் போச்சுன்னா...ம்? அந்த உயிர் பேயா அலையுமாம்! தூக்குத் தண்டனைல சாகறவங்க, தற்கொலை பண்ணிக்கறவங்க, விபத்துல செத்துப் போறவங்க, இவங்கள்லாம் ஆவியா அலைய வாய்ப்பு அதிகமாம். அதனாலதான் ஓவரா, வெறித்தனமா எதுக்கும் ஆசைப்படக் கூடாதுன்னு தாத்தா சொல்லிக் கொடுத்தாங்க.

போன சம்மர் லீவுல, நான் தாத்தாட்ட நெறைய ஆன்மிக விஷயம் கேட்டுத் தெரிஞ்சிண்டேன். என்னாச்சு தெரியுமா... ம்? பக்கத்து ஊர்ல எங்க பெரியம்மா, அதாவது அம்மாவோட அக்கா இருக்கா. அவங்களுக்கு கோமதின்னு ஒரு பொண்ணு இருந்தா. என்னைவிட ரெண்டு வயசு பெரியவ. எனக்கு ரொம்ப ஃப்ரெண்ட் அவள். ஒவ்வொரு சனிக்கிழமை காலையும் தவறாம அவள் அப்பா அவளை எங்களோட விட்டுட்டுப் போயிட்டு, ஞாயிறு சாயங்காலம் பிக்-அப் பண்ணிப்பார். ஆறு மாசத்துக்கு முன்னாடி... ஒரு நாள் அவள் திடீர்னு செத்துப் போயிட்டா!...

அப்ப நான் ரெண்டு நாளைக்கு விடாம அழுதேன். போன வருஷம் ரேணுவோட தாத்தா தவறிப் போனப்ப நான் போய்ப் பார்த்தேன். அந்தத் தாத்தாவை மட்டும் மூங்கில் ஸ்ட்ரெச்சர்ல க்ரிமேட் பண்ண தூக்கிட்டு போனாங்க, ஆனால் கோமதியை ஒரு மூங்கில் கம்புல தூளி மாதிரி கட்டி அதுல வெச்சுதான் கொண்டு போனாங்க... இது ஏன் தாத்தான்னு கேட்டேன். தாத்தா சொன்னாங்க, குழந்தைகள் போயிடுத்துனா அப்படித்தான் தூக்கிண்டு போவான்னு. குழந்தைகள் பிறக்கற போதும் தூளி, போகற போதும் தூளியா-ன்னு ஜோக் அடிச்சேன்!

செத்ததுக்கப்புறம் என்னாகும் கூடத் தாத்தாட்ட கேட்டிருக்கேன் நான். தாத்தா சொன்னாங்க, நமக்கு முன்னாடி போன நம்ம பெற்றோர்கள், மற்ற உறவினர்கள், நண்பர்கள் இவர்கள்ள ஒருத்தரோ சில பேரோ வந்து வழிகாட்டி போன உயிரை பித்ருலோகத்துக்கு அழைச்சிட்டுப் போவாங்களாம். அங்க கொஞ்ச நாள் இருந்திட்டு, நாம பண்ணின புண்ணிய பலன்களை சொர்க்கத்திலயும், பாவ பலன்களை நாமே உருவாக்கிக்கற நரகத்திலயும் அனுபவிக்கணுமாம். அப்புறம் அந்த பலன்களைப் பொறுத்து நம்ம அடுத்த பிறவி அமையுமாம்.

ரி, இப்ப ஷோகேஸைப் பார்ப்போம். அந்தப் பேய்வீடு கடிகாரம் பக்கத்தில என்ன இருக்குன்னு சரியாத் தெரியலை இல்ல? இதோ ஃஜூம் பண்ணிக் காட்டறேன்.

பஞ்சினால பண்ணி, சம்கிலாம் வெச்சு, ஜரிகை மீசை வெச்சு உருவாக்கி... ஒரு மரச் சட்டத்தில உக்காந்திருக்கற ரெண்டு பூனைக் குட்டிகள் தெரியுதா? ரேணு போனமாசம் என் பர்த்டேயின் போது தந்த பரிசு அது. அதுல என்ன எழுதியிருக்கு தெரியுமா? Friend, a simple word, but what a priceless treasure!? ரேணுன்னா ரேணுதான்!

பூனை பக்கத்தில ஒரு ஃபோட்டோ ஸ்டாண்ட். ஆனா அதுல இருக்கற குடும்பம் நாங்க இல்ல. அடுத்து, கீழ்த்தட்டுல இடது ஓரத்தில சாக்லேட் கலர்ல நெறைய செட்டியார் பொம்மைகள் இருக்கில்ல?... அதெல்லாம் நாங்க கொடைக்கானல் போனப்ப வாங்கினது. செட்டியார் பொம்மை வெச்சிண்டா அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க. பக்கத்தில சிப்பி, கிளிஞ்சல்னால செஞ்ச குட்டிப்பெண்கள், மயில், எட்ஸட்ரா. இதெல்லாமும் கொடைக்கானல்ல வாங்கினோம்.

லைட் எரிய மாதிரி ஒரு குளோப் தெரியுதா? அது ஆக்சுவலி கண்ணாடில செஞ்ச, சுத்திவிட்டா சுத்தற பூமி. அப்புறம் அந்தக் கண்ணாடி மீன்-கடிகாரம், லேடி-கடிகாரம், கீழே கையாட்டும் தங்கப் பூனை, அந்த ஸ்டஃப் பண்ண கங்காரு இதெல்லாம் எங்க வீட்டு கிரகப் பிரவேச கிஃப்ட்ஸ். யார் தந்தாங்கன்னு ஞாபகம் இல்லை.

ந்த சுத்தற பூமிக்குக் கீழே கண்ணாடிப் பெட்டிக்குள்ள மேகங்களுக்கு நடுவுல ஒரு பெரிய பிங்க் கலர் கோலிக்குண்டு தொங்கறது தெரியுதா? அது எப்படி



எந்த சப்போர்ட்டும் இல்லாம அந்தரத்தில் தொங்கிண்டிருக்கு கவனிங்க! அது ஆக்சுவலி ஒரு காசு போடற உண்டியல். எங்க சித்தப்பா என் போன வருஷ பிறந்த நாளைக்கு வாங்கித் தந்தது. அந்த பிங்க் கோலி அந்தரத்தில் தொங்கற இல்யூஷன் எப்படீன்னு நான் கொஞ்சம் கஷ்டப்பட்டுக் கண்டுபிடிச்சேன். ரெண்டு மூணு கண்ணாடித் துண்டுகளை ஆங்கிள்ல வெச்சு உருவாக்கினது அது. சித்தப்பா என்னைப் பாராட்டி ஐஸ்கிரீம் வாங்கித் தந்தாங்க...

சொல்ல விட்டுட்டேனே... அந்த லேடி-கடிகாரம் பக்கத்தில ஆணில தொங்கற டெக்ஸ்ட்-ஐக் கவனிங்க. இந்த ஷோகேஸை பாப்புலேட் பண்ணின போது அப்பா வாங்கினாங்களாம். அதுல என்ன எழுதியிருக்கு தெரியுமா?

Although you'll find our house a mess,
come in, sit down, converse.
It doesn't always look like this...
Some days it's even worse.

எங்க வீட்ல நவராத்திரியின் போது கொலு வெக்கற வழக்கம் இல்லை. ஆனால் ஒம்பது நாளும் சாயங்காலம் சுண்டல் பண்ணுவாங்க. எனக்கு எல்லா சுண்டலும் பிடிக்கும். ரேணு வீட்ல கொலு வெச்சு, டெய்லி சுண்டல் நைவேத்தியம் பண்ணி, அக்கம் பக்கத்தையெல்லாம் கூப்பிட்டு, வர்ற பொண்களைப் பாடச்சொல்லிக் கொண்டாடுவாங்க. நான் கூட பாடியிருக்கேன். ’காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா!’ பாட்டு. எதுக்கு சொல்ல வரேன்னா, அந்த பெரிய சரஸ்வதி பொம்மையை எங்க வீட்டு கொலுவில வெக்கலாம்னு பாட்டியோட ஃப்ரெண்ட் மாமி ப்ரசன்ட் பண்ணினாங்களாம். இப்போ அது எங்க ஷோகேஸ்ல.

சரஸ்வதி மடியில, வீணைக்குக் கீழே ஒரு பொருள் இருக்கில்ல? அது வந்து...ம்? எங்க தாத்தா பரம்பரை பரம்பரையா வெச்சிண்டு இருக்கற தமிழ் ஓலைச் சுவடி... அப்படீன்னு நான் சொன்னா நீங்க நம்பிடுவீங்க இல்ல? ஆனால் நான் எதுக்கு பொய் சொல்லணும்? அது ஒரு ஓலை விசிறி! ஏதோ ஒரு கல்யாணத்தில முகூர்த்தம் போது எல்லார்க்கும் தந்தாங்க. அதை ஓலைச்சுவடி மாதிரி செட்டப் பண்ணினது நான்தான். நல்லா இருக்கில்ல?

அந்தக் கையாட்டற பூனை பக்கத்தில ஒரு சின்ன டூ-இன்-ஒன் கேசட் ரெகார்டர் இருக்கில்ல, அது நாங்க திண்டுக்கல்ல வாங்கினது. வாலு போச்சு கத்தி வந்ததுங்கற கதை மாதிரி... கேசட் போயி, சீடி வந்தது... சீடி போயி, டீவீடி வந்தது... இப்ப அதுவும் போயி, பென்-ட்ரைவ்-ங்கற மெமரி ஸ்ட்க் வந்ததால... எங்க அப்பாம்மா ஆ..சையா வாங்கிச் சேர்த்த கேசட்லாம் இப்ப யா..ரும் கேக்கறதில்ல. என்னைத் தவிர! நான் மட்டும் சனி-ஞாயிறுல காலைலயும் சாயங்காலமும் ஒரு மணி நேரம் கேப்பேன். எனக்கு சாய்-பஜன்ஸ் பிடிக்கும், பாரதியார் பாட்டு பிடிக்கும், எம்.எஸ்., பாம்பே சிஸ்டர்ஸ், நித்யஶ்ரீ, சுதா ரகுநாதன், இவங்கள்லாம் பாடின பக்திப் பாட்டெல்லாம் அல்மோஸ்ட் நெட்டுரு. வர்ற சம்மர் லீவில என்னைப் பாட்டு கிளாஸ்ல சேர்த்துவிடறேன்னு பாட்டி சொல்லியிருக்காங்க.

கேசட் ஷெல்ஃப்ல விதவிதமா கேசட் ப்ளேயர்ஸ் பாக்கறீங்கல்ல? அதெல்லாம் இப்ப எது-வும் வொர்க் பண்ணாது. ஆனால் அதுல இருக்கற ரேடியோ வொர்க் பண்ணும்! போன வருஷம் தமிழ் நாட்டை நீலம் புயல் தாக்கினபோது, ராத்திரி எட்டு மணிநேரம் கரண்ட் இல்லை. பயங்கரக் காத்து! அப்ப புயல் பத்தி லேட்டஸ்ட் நியூஸ் கேக்க அந்த ரேடியோலாம்தான் உபயயோகமா இருந்தது.

ரி, இப்ப டாப்-ரைட் ஷெல்ஃபுக்கு வருவோம். பெரிசா, கருப்பா, தலைக்கு மேல ஆர்ச்செல்லாம் வெச்சு ஒரு சிலை தெரியுதா? அது சக்தி தேவியோட சிலை. கற்சிலை மாதிரியே இருக்கில்ல! பேப்பர் மாஷ்னால செஞ்சது, லைட் வெயிட். எங்க ஷோகேஸ்லயே எனக்கு ரொம்பவும் பிடிச்சது இந்த சக்தி தேவி சிலைதான். அதோட ஹிஸ்டரி என்ன தெரியுமா? எங்க தாத்தாஆ-பாட்டி கல்யாணம் போது...ம்? தாத்தாவோட அம்மாவோட ஃப்ரெண்டு, ஒரு புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் பெண்மணி... மௌன்ட் ரோடு பூம்புகார் ஷோரூம்-லேர்ந்து வாங்கி, கல்யாணப் பரிசாக் கொடுத்ததுன்னு தாத்தா சொன்னாங்க. தாத்தா அவங்களை ஆன்டின்னுதான் கூப்பிடுவாங்களாம்! அந்த எழுத்தாளர் இப்ப உயிரோடு இல்லை.

இந்த சக்தி தேவி சிலையை நல்லா பாருங்க. உச்சீலேர்ந்து ஆரம்பிச்சு சிலை முழுக்க எத்தனை அலங்கார வேலப்பாடு! அவள் முகத்துல எவ்ளோ தேஜஸ், சாந்தி! அவளோட ஷார்ப் நோஸ் எவ்ளோ அழகு! எல்லாத்தையும் விட அவள் புன்னகையாச் சிரிக்கறா பாருங்க, அது அப்படியே மனசை இழுத்துப் பிடிக்கிது இல்ல? ராத்திரி ஒம்பதரை மணிக்கு நான் படுக்க போறதுக்கு முன்னாடி...ம்? தாத்தா கூடத்தில எல்லா லைட்டும் அணைச்சிட்டு... தேவிக்கு முன்னால இருக்கற எல்-யி.டி. டார்ச் விளக்கை என்னைவிட்டுப் போடச் சொல்லுவாங்க. ஜாக்கிரதையா ஷோகேஸ் கண்ணாடியை விலக்கி லைட்டைப் போடுவேன். அந்த ஒளியோட ஃபோகஸ்ல தேவீ அவ்வளவு அற்புதமா, கொள்ளை அழகோட இருப்பா, நீங்க மேல படத்தில பார்க்கற மாதிரி!

நான் ராத்திரி கூடத்தில பாட்டி பக்கத்தில இந்த ஷோகேஸ் கீழதான் தூங்குவேன். தூங்கறதுக்கு முன்னாடி பாட்டி சொல்லிக்கொடுத்த ’ஸர்வ மங்கள மாங்கல்யே’ ஸ்லோகம் மூணுதரம் சொல்லிட்டுதான் தூங்குவேன். சமயத்தில நடு ராத்திரி முழிப்பு வந்ததுன்னா... எதிர் சுவத்தில இருக்கற ஹால் நைட்-லாம்ப் வெளிச்சத்தில சக்திதேவி இன்னும் அழகாத் தெரிவா. காலைல ஆறு மணிக்கு எழுந்ததும் முதல்ல சக்தி தேவியைத்தான் பார்ப்பேன். அப்புறம் பல் தேய்ச்சு ஹார்லிக்ஸ் குடிச்சிட்டு வந்து அவள் முன்னாடி நின்னு பாட்டி சொல்லிக்கொடுத்த அபிராமி அந்தாதி செய்யுள் சொல்வேன்: ’தனம்தரும் கல்விதரும்’னு வருமே, அந்த செய்யுள்.

டுத்து மேல வலதுபக்க ஷெல்ஃப்ல இருக்கற கடவுள் உருவங்கள் பத்திச் சொல்றேன். ஆணில தொங்கற அந்த சூரியன் ஒயிட் மெட்டல்ல பண்ணினது. சிப்பி, கிளிஞ்சல் வேலைப்பாட்டோட ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி கவனிச்சீங்களா? எவ்ளோ அழகு!

சிவப்பு, பச்சை முக்கோணக் கண்ணாடிச் சில்லுகள் பதிச்ச சட்டத்துக்குள்ள ஒரு வெங்கடாசலபதி இருக்கா? அப்புறம் அந்த பிளாஸ்டிக் பேழைக்குள்ள இன்னொரு வெங்கடாசலபதி இருக்கா? அப்புறம் அந்த குங்குமச் சிமிழ்த் தட்டு... இதெல்லாமும் கிரகப் பிரவேசப் பரிசுகளா வந்தது. அப்புறம் பெரிசும் சிறிசுமா, கலர் கலரா, தங்க நிற வேலைப்பாடுகள் செஞ்ச ஸ்டாண்ட்ல நிக்கற மாதிரி ஐயப்பன், லக்ஷ்மி, பிள்ளையார், முருகன், பெருமாள் படங்கள் இருக்கில்ல? இதெல்லாம் கிரகப் பிரவேசம் போது அப்பாம்மா மத்தவங்களுக்குக் கொடுத்த பரிசுகள்.

ன்னும் ஒண்ணே ஒண்ணு மீதி இருக்கு. கீழ இடதுபக்கம் இருக்கற பிள்ளையார் உருவங்கள்... சட்டத்துக்குள்ள இருக்கற பிள்ளையார்லாம் கிரகப் பிரவேசம் போது பரிசா வந்தது. ஆணியில தொங்கற பிள்ளையார் ஒயிட் மெட்டல்ல செஞ்சது. அந்த குடைக்கீழ் உக்காந்திருக்கறவர், தலையாட்டும்

மரப் பிள்ளையார், வெள்ளை மார்பிள் பிள்ளையார், அப்புறம் அந்தக் குட்டிக்குட்டிப் பிளாஸ்டிக் பிள்ளையார் பிரதிமைகள்--சிவப்பு, பச்சை, வெள்ளை, நாவல்பழ நிறங்கள்ல இருக்கில்ல, ம்?--இதெல்லாம் போன வருஷம் நாங்க திருச்சி மலைக்கோட்டைப் பிள்ளையார் கோவில் வாசல்ல இருக்கற கடைகள்ல தரிசனம் முடிச்சிட்டு வாங்கினோம். சாயங்காலம் நாலறை மணிக்குக் கீழே இருக்கற மாணிக்க விநாயகரை தரிசனம் பண்ணிட்டு, மலை மேல ஏறினோம். நானூத்துச் சொச்சம் படிகளையும் நான் அப்பாம்மா சொன்னதைக் கேக்காம, ஓடியாடி, மூச்சு வாங்க ஏறினது இன்னும் ஞாபகம் இருக்கு. மேலே போய் அந்த அழகான பிள்ளையாரை தரிசனம் பண்ணி, கற்பூரம் ஒத்தி, விபூதி இட்டுண்டு சுத்தி வர்ற போது, அப்பா என்னைத் தூக்கி வெச்சிண்டு, அந்த ஜன்னல்கள் வழியாத் திருச்சி நகர வீடுகள் குட்டிகுட்டியா தெரியறதைக் காட்டினாங்க. அப்பா, என்ன சுகமான காத்து! அப்புறம் வெளில வந்து கீழ்ப்படிகள் கிட்ட பாறைல உக்காந்து கூல்டிரிங்க் குடிச்சபடியே, இருட்டற வரைக்கும் ரொம்ப நேரம் கதை பேசினோம்...

பிள்ளையார் உருவங்கள் சேர்த்தா ஐஷ்வர்யமாம், அதனால அப்பாவும் அம்மாவும் வீடு வாங்கின புதுசில நெறைய பிள்ளையார் பிரதிமைகள் வாங்கிச் சேர்த்தாங்களாம். இப்ப எல்லாம் ஷோகேஸ்ல தூங்கறது!

தூங்கறதுன்னில்ல, நான் தினம் ஸ்கூலுக்குப் போறதுக்கு முன்ன, ஸ்வாமி அறையில கும்பிட்டப்பறம் ஷோகேஸ்ல இருக்கற எல்லா கடவுள் உருவங்களையும் ஒருதரம் பார்த்துக் கும்பிடுவேன். பிள்ளையார் குட்டிகளுக்கு ஸ்பெஷலா பத்து தோப்புக் கரணம் போடுவேன். அப்புறம் மூச்சு வாங்க ஸ்கூலுக்குக் கிளம்புவேன்! சாயங்காலமும் பத்துத் தோப்புக் கரணம் போடுவேன். நம்ம தோப்புக் கரணம்தான் இப்ப அமெரிக்கால ஸூப்பர் ப்ரெய்ன் யோகாங்கற பேர்ல ப்ராக்டீஸ் பண்றாங்களாம், தாத்தா சொன்னாங்க.

வ்வளவு கதையும் எதுக்கு உங்களுக்குச் சொன்னேன்னு தோணுதா? முதல்லயே ஒரு க்ளூ கொடுத்தேன், கவனிச்சீங்களா தெரியலை: இப்பவும் நான் ஷோகேஸைத்தான் உத்துப் பாத்திண்டிருக்கேன், ஆனால் சேர் மேல நின்னுண்டு இல்லை...

புரியுதா? இப்ப நான் உயிரோட இல்லை. ஹாரி பாட்டர் முதல் சினிமால பசங்கள்லாம் டின்னர் சாப்பிடும்போது ஹவுஸ் கோஸ்ட்-கள் எல்லாம் காத்தில மிதந்துண்டு பறக்குமே, அது மாதிரி நான் இப்ப காத்தில மிதக்கறேன்! காலைல நாலு மணிக்குத் தூக்கத்திலேயே உயிர் போய்ட்டது. ஆறு மணிக்கு நான், தானே வழக்கம்போல எழுந்திருக்காம இருக்கறதை அம்மா அல்லது பாட்டி நோட்டீஸ் பண்ணும்போதுதான் நியூஸ் தெரியும்!

நான் எப்படி என் உடல்லேர்ந்து வெளில வந்தேன், என்னாச்சுங்கறதெல்லாம் எனக்குத் தெரியல. ஏதோ வைரல் ஃபீவர்னு ஒரு வாரம் வீட்ல படுக்கைல இருந்தேன். டாக்டர் தினம் வந்து பரிசோதித்து மாத்திரை கொடுத்து, இதுவரை ரெண்டு ஊசி போட்டார். ஃபீவர் அடுத்த வாரமும் தொடர்ந்தா ஆஸ்பத்திரியில சேர்த்திடலாம்னு அவர் சொன்னபோது பயம்மா இருந்து. எனக்கு ஆஸ்பத்திரியே பிடிக்காது. ஆனால் நேத்து சாயங்காலத்திலேர்ந்து திடீர்னு ஜுரம் குறைஞ்சு நார்மல் மாதிரி இருந்தது. கஞ்சிக்கு பதிலா ரசம் சாதம் சாப்பிட்டேன். அப்புறம் படுக்கைல ஒக்காந்தபடியே ஷோகேஸை நான் ஒருதரம் பார்த்திட்டுச் சீக்கிரமே தூங்கிட்டேன். நடு ராத்திரிக்கு மேல தூக்கத்தில என்ன ஆச்சு தெரியல! ஆனால் இப்ப எனக்கு பயமோ துக்கமோ தெரியல. ஒரு வேளை எல்லாரும் காலைல எழுந்து ஒப்பாரி வெக்கும்போது தெரியுமோ என்னவோ?

தாத்தா சொன்னது ஞாபகம் வரது. போன உயிரை அழைச்சிட்டுப் போக, முன்னாடி போன உற்றார் உறவினர் நண்பர் யாராவது வருவாங்கன்னு தாத்தா சொன்னாங்க. ஆனால் எனக்கு அப்படி யாருமே இல்லையே?... என் அம்மா வழித் தாத்தா-பாட்டி, அப்பா வழித் தாத்தா-பாட்டி, இவங்க நாலு பேரும் எழுபது எண்பது வயசில இன்னமும் விச்சா இருக்கா. அப்பா-அம்மா, மத்த சொந்தக் காரங்க, அப்புறம் ரேணு... இவங்களுக்கெல்லாம் இன்னும் நெறைய டைம் இருக்கு. போன வருஷம் போன ரேணுவோட தாத்தாவுக்கு என்னை அவ்வளவா தெரியாது.

என்னடாது டைலமான்னு ஒரு நிமிஷம் கலங்கிப் போய்ட்டேன். எப்படியும் நான் வணங்கற சக்திதேவீ வழிகாட்டுவான்னு நம்பிக்கை எழுந்தது. கூடவே கோமதி ஞாபகம் வந்ததோ இல்லையோ இதோ அவளே வந்துட்டா என்னைக் கூட்டிட்டு போக! ’கோமதி உன்னை மாதிரி நாளைக்கு என்னையும் தூளில தூக்கிண்டு போவா இல்ல?’ன்னு கேட்டு சிரிக்கறேன். அவள் புரியாம என்னைப் பார்க்க, சுருக்கமா அவள்ட்ட நான் விவரம் சொல்ல, அவளும் என்னோட சேர்ந்து சிரிக்கறா...

அவளோட போறதுக்கு முன்னாடி ஒரு அட்டெம்ப்ட், என் உடலுக்குள்ள நுழையப் பார்க்கறேன். முடியல, ஆனால் எனக்கு ஒண்ணும் வருத்தம் இல்லை. என்னோட கடவுள் ஷோகேஸைப் பிரிஞ்சு போகணுமேன்னு நினைப்பு வந்த உடனேயே புரிஞ்சுண்டு கோமதி சொல்றா: ’மது, கவலைப் படாதே. இந்த ஷோகேஸ்ல இருக்கற ஒவ்வொரு பொருளும் உருவமும் உனக்கு அத்துப்படி இல்லையா? எங்க இருந்தாலும் அதையெல்லாம் நீ எளிதா மனசில பார்க்கலாமே! என்டயர் ஷோகேஸை நீ எளிதா மனசில கிரியேட் பண்ணிக்கலாம்...’ தலையாட்டிவிட்டு, மீண்டும் என் உடலை ஒருமுறை பார்க்கறேன்.

’யெஸ், உடல்தான் பெரும்பாலானான உயிர்களுக்குப் பிரிய முடியாத ஷோகேஸ்,’ என்கிறாள் கோமதி. நான்ங்கற உணர்வைத் தருவது அந்த உடல்தானே? ஒவ்வொரு உயிரும் நான்ங்கற உணர்வை அதோட உடலோடதானே இனம் கண்டுகொள்கிறது? ஆனால் ஜீவன் இல்லாவிட்டால் அந்த ஷோகேஸ்-க்கு மதிப்பு இல்லைதானே?’ தொடர்ந்து, ’நான் என் உடலைப் பிரிந்த போது இப்படித்தான் அவதிப்பட்டேன். உனக்கும் அப்படி இருக்கறது இயற்கைதானே?’ என்கிறாள்.

’இல்லை கோமதி’, என்கிறேன். ’உள்ள இருந்த போதும் சரி, இப்ப வெளில இருக்கும் போதும் சரி, எனக்கென்னவோ இந்த கடவுள் ஷோகேஸை விட உடல் ஷோகேஸ் ஒண்ணும் பெரிசாத் தெரியலை’, என்று சொல்லிவிட்டு அவளுடன் மிதந்து செல்கிறேன்.

*** *** ***

Monday, June 1, 2015

009. நாடியது கேட்கின்...

ரமணியின் கதைகள்: ramaNiyin kathaikaL

நாடியது கேட்கின்...

சிறுகதை
ரமணி (May 2013)

(ஒரு கதைக்கு இரு முடிவுகள்)

நான் முத்துவேல். என் நண்பன் மனோகரன். இருவரும் நெருங்கிய நண்பர்கள், அதுதான் ஆச்சரியம்!

ஏனெனில் நான் (மனோகரன் மூடநம்பிக்கைகள் என்று மறுக்கும்) அனைத்து ஆன்மிக விஷயங்களையும் நம்புபவன்: எனக்குக் கோவில் ஸ்தல புராணங்கள், சாயி பாபா போன்ற மகான்கள் நிகழ்த்தும் அதிசயங்கள், பேய்-பிசாசுகள் பிடிப்பது அவற்றை ஓட்டுவது, மந்திரித்து வைத்தியம் செய்வது, மறுபிறவி--இன்னும் எது வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளுங்கள்--போன்ற அனைத்து விஷயங்களும் உண்மை.

மனோகரனுக்கோ ஒரு நியூட்டன், ஒரு ஐன்ஸ்டின், ஒரு ஸ்டீஃபன் ஹாகிங்--இன்னும் யாரை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளுங்கள்--போன்று யாரவது உறுதிப்படுத்தி யிருந்தால்தான் அது உண்மை, அறிவியல், நிச்சயம் நம்பலாம். எல்லாத் துறைகளிலும் பற்பல விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் முரண்பட்டுக் கருத்துக்களைச் சொல்கிறார்களே மனோ, இவற்றில் எதுதான் உண்மை என்று கேட்டால் ஜகா வாங்கிவிடுவான்! காலம் காலமாக நிறுவப்பட்டதாகக் கருதப் பட்ட விஞ்ஞான உண்மைகள் ஒரு நாள் தூக்கியெறியப் படுவதே விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்பது அவன் கட்சி.

சரி, விஷயத்துக்கு வருகிறேன். நாங்கள் இருவரும் சேர்ந்து வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி ஜோதிடம் பார்க்க முடிவுசெய்தோம்! பொதுக்காண்டமும் முற்பிறவி பற்றிப் பேசும் சாந்திக்காண்டமும் பார்ப்பதாக முடிவுசெய்துகொண்டோம். எனக்குண்டான பலன்களை அறிந்துகொள்வதில் எனக்கு ஆர்வம் இருந்தது. அவனுக்குச் சொல்லப்படும் பலன்கள் எப்படியாவது பொய், புனைகதை என்று நிரூபிக்கவேண்டும் என்பதில் அவனுக்கு ஆர்வம் இருந்தது. இதற்காக அவன் திரும்பவும் வை.கோவிலுக்கு வரவும் தயாராக இருந்தான்.

ஜோதிடர் எங்கள் கைரேகைகளைப் பதிந்துகொண்டு ஓலைதேடச் சென்றபோது நாங்கள் அதே தெருவில் உள்ள ஒரு சின்ன விடுதியில் இட்டிலி-வடை, தோசை, காப்பி சாப்பிட்டோம். தோசைக்காகக் காத்திருந்தபோது, "முத்து, எப்படிடா கைரேகையை வைத்து ஓலையைத் தேடமுடியும்? அதுவே ஃப்ராட்" என்றான். அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களில் பலர் ஏடு பார்க்க வந்தவர்கள் என்பது வெளிப்படையாகத் தெரிந்ததால் நான் அவனை அடக்கிவிட்டுக் கிசுகிசுத்தேன்: "மனிதர்களின் கைரேகைகளை உன் அறிவியல் முறைப்படி பெர்ம்யுடேஷன்-காம்பினேஷன் போட்டால் வரும் எண் 28531 கோடி, தெரியுமா உனக்கு? இந்த நம்பரை வெச்சு நெட்ல நாடி ஜோதிடம் பக்கங்கள்ல தேடிப்பார்." அவன் ஒன்றும் பதில் சொல்லாவிட்டாலும் அவன் ஆர்வத்தைக் கிளறிவிட்டது தெரிந்தது.

இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்ற உறவில் எங்களுக்குச் சொல்லப்படும் பலன்களை இருவருமே சேர்ந்து கேட்டோம். பழந்தமிழ்ச் செய்யுட்கள் மூலம் எங்கள் பெர்சனல் விவரங்கள் தெரிந்தது "டூ மச், அந்தாள் கில்லாடிதான்" என்றான், அவர் தன் யஜமானர் அழைத்ததாக ஐந்து நிமிடங்கள் அறையை விட்டு வெளியில் சென்றிருந்தபோது. ஒரு ஓலையை எடுத்துப் பார்த்துவிட்டு அதில் இன்றைய தமிழ் எழுத்துகளில் இருக்கும் கிறுக்கல்கள் புரியாமல், "இந்த ஓலை கௌசிகர் எழுதி தமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணினதுன்னு எப்படி நம்ப முடியும்? ரொம்பப் போனா இது முன்னூறு-நானூறு வருஷம் பழமையா இருக்க சான்ஸ் இருக்கு. கார்பன் டேட்டிங்க்கு கொடுத்தாங்கன்னா இவங்க வண்டவாளம் எல்லாம் வெளில வந்திடும்."

பொதுக்காண்டம் முடிந்தது. எங்களைப் பற்றிய பொது விவரங்கள் பெரும்பாலும் சரியாக இருந்தன. ஆனால் எதிர்காலம் பற்றிய நம்பிக்கைகள் அதிகம் இல்லை. பலன்கள் சொல்லும் போது மனோவிடம் ஜோதிடர் திடீரென்று, "நீங்கள் ஒரு நாத்திகரா?" என்று கேட்டு அவனை அசரவைத்தார். "டேய், மைண்ட் ரீடிங்கூட பண்ற கில்லாடிடா ஜோசியர்!" என்றான் பின்னர். "நாங்கூட இதெல்லாம் கத்துக்கிட்டா நல்லா காசு பாக்கலாம் போலிருக்கே!"

சாந்திக் காண்டத்தில் என் முற்பிறவி பற்றி ஜோதிடர் அலசியபோது நல்ல வேளையாக மனோவுக்கு வயிற்றுக்குடைச்சல் ஏற்பட்டுக் கொஞ்ச நேரம் வெளியே சென்றான். முற்பிறவியில் என் பெயர் முத்தண்ணனாம். நான் தஞ்சை சரபோஜி மன்னர் அரண்மனையில் அவருக்கு நெருங்கிய பணியாளனாக வேலை பார்த்தேனாம். பேராசையில் ஒரு நாள் அரண்மனைக் கருவூலத்திலிருந்து ஒரு விலையுயர்ந்த முத்துமாலையைத் திருடி அகப்பட்டுக்கொண்டு சிரச்சேதத்துக்குத் தப்பி நாடு கடத்தப்பட்டுப் பிச்சையெடுத்து வாழ்ந்து நாய்பாடு பட்டேனாம். இன்னும் சில பிறவிகளுக்கு எனக்கு முத்து என்று ஆரம்பிக்கும் பெயர்தான் இருக்குமாம், அந்த முத்துவேல் முருகன் என்னை ஆட்கொள்ளும் வரை. முத்துவேல் என்று பெயர்கொண்ட இந்தப் பிறவியிலும் நான் என் நெருங்கிய நண்பனிடம் இருந்து ஒரு பெரிய கடன்தொகையை வாங்கியிருப்பேனாம். அதனை என்னால் திருப்பித் தரவே முடியாதாம்.

வியர்த்து வெலவெலத்துவிட்டேன். மனோவிடம் நான் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தேன். அத்துடன் என் சொந்தப் பணத்தையும் போட்டு இரண்டு ஐம்பது கிராம் 24 காரட் தங்கச் சிறுகட்டிகள் வாங்கியிருந்தேன், இப்போது ப்ளஸ்-டூ பண்ணும் என் மகளுக்கு அவள் திருமண சமயம் வரும் போது நகைகள் செய்ய. முதல் வேலையாக மனைவியிடம் சொல்லி ஒரு ஐம்பது கிராம் கட்டியில் நகைகள் செய்து, இன்னொரு கட்டியை விற்று (எங்கள் குடும்ப நகைக் கடையில் பாதி பணமாகவும் பாதி நகையாகவும் தருவதற்கு ஒப்புவார்கள்) மனோவின் கடனை அடைத்துவிட வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டேன். ஜோதிடர் இந்த விஷயத்தில் சொன்னது பொய் என்று நிரூபிக்க வேண்டும்.

மனோவின் முற்பிறவி பற்றிச் சொல்லும் போது ஜோதிடர் அப்போது சுதாகர் என்ற பெயரில் காஞ்சி தேசத்தில் வாழ்ந்த அவன் மிகப் பணக்காரனாக இருந்தான் என்றும், சுற்றமும் நட்பும் அடுத்துக் கெடுத்த சதிகளால் பணமெல்லாம் இழந்து கடைசி காலம் வரை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வாழ்ந்ததாகவும், இது அவனை இந்தப் பிறவியில் நாத்திகனாக்கியிருக்கலாம் என்றும் பலன் சொன்னார்.

மனோவின் முற்பிறவிக் காண்டம் பாதியில் நின்றது. ஜோதிடர் தம் செல்ஃபோனில் விவரம் தெரிவிக்க அவரது யஜமானரே அறைக்கு வந்துவிட்டார். "ரொம்ப சாரிங்க. இந்த ஓலைச் சுவடிகள் எங்கள் பரம்பரைச் சொத்தாக இருந்துவந்து தலைமுறை தலைமுறையாகக் குடும்பத்தில் மூத்த பிள்ளை இந்தப் புனிதத் தொழிலை மேற்கொண்டு வந்தோம். இந்தத் தலைமுறையில் என் தம்பிக்கும் இந்தத் தொழிலில் ஆர்வம் தோன்றிவிடவே, நாங்கள் கைவசம் இருந்த சுவடிகளை ஆளுக்குப் பாதியாகப் பங்கிட்டுக் கொண்டோம். அவர் இப்போது சாளுக்கிய தேசத்தில், அதாவது இன்றைய பங்களூரு அருகில், ஏடு பார்த்துப் பலன் சொல்லி வருகிறார். நீங்கள் அங்கே போக முடியுமானால் இதுவரை பார்த்த உங்கள் சுவடிகள் பற்றிய விவரங்களைத் தருகிறேன். மீதமுள்ள முற்பிறவி பற்றிய சாந்திக் காண்டத்தையும் இன்னும் ஏதேனும் காண்டங்கள் பார்க்க விரும்பினால் அவற்றையும் நீங்கள் என் தம்பியிடம் பார்த்துக்கொள்ளலாம். மீதமுள்ள சாந்திக்காண்டத்துக்கு நீங்கள் ஏதும் தனியாக பணம் கட்ட வேண்டியதில்லை."

யஜமானர் தந்த விவரங்களை எடுத்துக்கொண்டு ஊர்போய்ச் சேர்ந்தோம். மனோவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. தனக்குச் சொல்லப்பட்ட பலன்களை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் அவன் மீதமுள்ள சாந்திக்காண்டத்தை சாளுக்கிய தேசத்தில் பார்த்துவிடத் தீர்மானித்து, அடுத்த மாதமே இருவரும் இன்டர்-ஸ்டேட் சொகுசுப் பேருந்தில் கிளம்பினோம்.

என்ன சொல்வது? பாதி வழியில் ஒரு லாரி மோதி விபத்தில் எங்கள் பேருந்து சிக்கிக்கொள்ள, என் அருமை நண்பன் மனோ உட்பட இருபது பேர் மாண்டனர். வண்டியிலேயே என் அருகில் உயிர்விட்ட மனோ உரக்கக் கத்திய கடைசி வார்த்தை, "மூத்துவேலா!" என்பதுதான். அவன் அருகில் அமர்ந்திருந்த நான் காயங்களுடன் தப்பினேன்.

மனோவின் கடைசி ஆசையைப் பூர்த்தி செய்யும் எண்ணத்தில் நான் விவரங்களை எடுத்துக்கொண்டு அந்த தம்பி ஜோதிடரிடம் சென்றேன். வெகுநேரம் தேடிவிட்டு அவர் ஒரே ஒரு ஓலையைக் கட்டினார். அதில் இப்படி எழுதியிருந்தது:

சாளுக்கிய தேசச் செலவின் போது
மாளுதல் நிகழும் மனமும் மாறும்.

*** *** ***

நாடியது கேட்கின்...

இன்னொரு முடிவு
ரமணி

நாடி ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்காக இந்தக் கதையின் முடிவைச் சற்று மாற்றுவோம்:

மனோவின் முற்பிறவிக் காண்டம் பாதியில் நின்றது. ஜோதிடர் தம் செல்ஃபோனில் விவரம் தெரிவிக்க அவரது யஜமானரே அறைக்கு வந்துவிட்டார். "ரொம்ப சாரிங்க. இந்த ஓலைச் சுவடிகள் எங்கள் பரம்பரைச் சொத்தாக இருந்துவந்து தலைமுறை தலைமுறையாகக் குடும்பத்தில் மூத்த பிள்ளை இந்தப் புனிதத் தொழிலை மேற்கொண்டு வந்தோம். இந்தத் தலைமுறையில் என் தம்பிக்கும் இந்தத் தொழிலில் ஆர்வம் தோன்றிவிடவே, நாங்கள் கைவசம் இருந்த சுவடிகளை ஆளுக்குப் பாதியாகப் பங்கிட்டுக் கொண்டோம். அவர் இப்போது சாளுக்கிய தேசத்தில், அதாவது இன்றைய பங்களூரு அருகில், ஏடு பார்த்துப் பலன் சொல்லி வருகிறார். நீங்கள் அங்கே போக முடியுமானால் இதுவரை பார்த்த உங்கள் சுவடிகள் பற்றிய விவரங்களைத் தருகிறேன். மீதமுள்ள முற்பிறவி பற்றிய சாந்திக் காண்டத்தையும் இன்னும் ஏதேனும் காண்டங்கள் பார்க்க விரும்பினால் அவற்றையும் நீங்கள் என் தம்பியிடம் பார்த்துக்கொள்ளலாம். மீதமுள்ள சாந்திக்காண்டத்துக்கு நீங்கள் ஏதும் தனியாக பணம் கட்ட வேண்டியதில்லை."

"எனக்கு அந்த மீதிக்காண்டம் நிச்சயமா பாக்கணும். நாங்க அடுத்த வாரமே கிளம்பலாம்னு நினைக்கறோம். அதான் நெறைய இன்டர்-ஸ்டேட் செகுசுப் பேருந்துகள் இருக்கே?"

"அப்ப ஒண்ணு செய்யுங்க. நான் தம்பிட்ட இன்னைக்கே பேசிடறேன். நீங்க ஊருக்குப் போய், டிக்கட் புக் பண்ணிட்டு, எனக்கு உங்க பயணம் பற்றிய தகவல் சொல்லுங்க. தம்பியே ஒரு ஆளை பஸ் ஸ்டாண்டுக்கு அனுப்பி உங்களை ரிசீவ் பண்ணுவார், நீங்க தேடி அலைய வேண்டியதில்லை. இது என் கார்ட். என் செல் நம்பரும், இந்த விலாசமும் இருக்கு."

"ரொம்ப நன்றிங்க. அப்ப நாங்க கிளம்பறோம்" என்று நண்பர்கள் விடைபெற்றுச் சென்றனர்.

அதன்பின், யஜமானர் தன் தம்பியிடம் பலமுறை பேசினார். தம்பியிடம் மனோகரனின் முற்பிறவிக் காண்டம் பற்றிய மீதி ஏடுகள் எதுவும் இல்லையென்று தெரிந்தது. "ரெண்டு நாளா எல்லாத்தையும் தலைகீழாப் புரட்டிப் பாத்துட்டேன் அண்ணே, எதுவும் கிடைக்கலை."

"சான்ஸே இல்லைய்யா! என்கிட்ட எல்லா ஏடுகளும் இருந்தபோது ஒண்ணு கூட இப்படி அரைகுறையா இருக்கலைன்னு எனக்கு நிச்சயமாத் தெரியும். வேற கட்டு எதுலயாவது மாறி இருக்குமா? அல்லது நீ அங்கே ரெண்டு தரம் வீடு மாத்தினியே அப்ப மிஸ் ஆகியிருக்கலாம் இல்ல? அவங்க ரெண்டு பேரும் வர்ற புதன் கிழமை சென்னையிலிருந்து கிளம்பி வராங்கய்யா. இன்னைக்கு சனிக்கிழமை. என்ன செய்யப் போறே?"

"கவலைப் படாதீங்கண்ணே. நான் பாத்துக்கறேன்."

"எது செஞ்சாலும் என்கிட்ட சொல்லிட்டு செய். எதும் வில்லங்கம் வந்து நம்ம குடும்பப் பேருக்குக் களங்கம் வந்துறக் கூடாது."

அந்த புதன் கிழமை பாதி வழியில் ஒரு லாரி மோதி விபத்தில் அவர்கள் பேருந்து சிக்கிக்கொள்ள, மனோகரன் உட்பட இருபது பேர் மாண்டனர். வண்டியிலேயே நண்பன் அருகில் உயிர்விட்ட மனோ உரக்கக் கத்திய கடைசி வார்த்தை, "மூத்துவேலா!" என்பதுதான். அவன் அருகில் அமர்ந்திருந்த முத்துவேல் காயங்களுடன் தப்பினான்.

நண்பர்கள் வந்து சேரவில்லை என்றதும் தம்பி ஜோதிடர் பேருந்து கம்பெனிக்கு அலைபேசி, விபத்து பற்றியும் அதில் மனோகரன் இறந்தது பற்றியும் அவன் நண்பன் முத்துவேல் அருகில் ஓர் அரசு மருத்துவ மனையில் சிசிச்சை பெறுவது பற்றியும் தெரிந்துகொண்டார். முத்துவேலிடம் அலைபேசி துக்கம் விசாரித்து, அவன் அடுத்த பத்து நாட்களில் நண்பனின் கடைசி விருப்பத்தை நிறைவேற்ற அவரைச் சந்திக்க வரப்போவது பற்றித் தெரிந்துகொண்டார்.

"வாங்க தம்பி, என்கிட்ட அந்த மீதி ஏடு இருக்கு, காட்டறேன்."

"அதில என்னங்க எழுதியிருக்கு?"

"அதைப் பத்தி ஃபோன்ல பேசக் கூடாதுங்க. நீங்க நேர்ல வாங்க."

அண்ணனிடம் ஆலோசித்த போது ஒரு ஜாதகரின் மரணம் பற்றி அறிவிக்கும் ஒற்றைச் சுவடிகள் இரண்டு பல வருஷங்கள் முன்பு தாம் பலன் சொல்லிய கட்டில் இருந்ததாகத் தெரிந்தது. "இந்தக் கேஸ்லயும் நிச்சயமா இருக்கணும்யா. நீதான் அதை எங்கயோ மிஸ் பண்ணிட்டே. இப்ப வேற வழியில்லை, பாத்து செய். நம்ம குலதெய்வம் முனீஸ்வரர் நம்மைக் காப்பாத்துவார்."

தம்பி ஜோதிடர் ஒரு பழைய, எதுவும் எழுதப் படாத ஓலை நறுக்கை எடுத்தார். அதில் பின்வருமாறு எழுதினார்:

சாளுக்கிய தேசச் செலவின் போது
மாளுதல் நிகழும் மனமும் மாறும்.

*** *** ***