Saturday, May 30, 2015

008. சார்பு எழுத்துகள்

ரமணியின் கதைகள்: ramaNiyin kathaikaL

சார்பு எழுத்துகள்

சிறுகதை
ரமணி (May 2013)


மணிவண்ணன் சொல்வது:

ம்பத்தைந்து வயதைக் கடந்த ஒரு பேரிளம் பெண்ணும் மேலும் இரண்டு வயது தாண்டிய ஒரு மூத்தோனும் ஒருவரிடம் ஒருவர் மனம் பற்றுவதற்கு என்ன காரணம் என்று பலமுறை நாங்கள் இருவரும் யோசித்துப் பார்த்திருக்கிறோம். திருமணம் செய்துகொண்டு சேர்ந்து வாழ நினைக்கும் இந்த மனப்பற்று காதலாலோ காமத்தாலோ அல்ல என்பது மட்டும் எங்கள் இருவருக்கும் நன்கு புரிந்தது. பின் எதனால் இந்தப் பற்று? சொல்கிறேன்.

திருச்சி பெரிய கடைத்தெருவில் அரசுடமையாக்கப்பட்ட ஒரு வங்கியின் கிளை இருந்தது. ஒருநாள் அங்கு நான் என் பெயரில் புதியதொரு சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்காகச் சென்றேன். அப்போது ஹேமாவைக் கவுன்டரில் பார்த்தபோது அவள் நெற்றியில் இருந்த ’ஸ்டிக்கர்’ பொட்டின் நிறம் கருப்பு என்பதைக் கவனிக்கவில்லை. பத்தே நிமிடங்களில் என் தனிநபர் விவரங்களை விசாரித்துப் படிவங்களைக் கணினியில் பூர்த்திசெய்து கையெழுத்துகள் பெற்றுக் கொண்டு நான் கொடுத்த ஐந்தாயிரம் ரூபாயை முதலாகக் கொண்டு கணக்கைத் துவக்கி செக் புத்தகத்துடன் பாஸ் புத்தகத்தை என் கையில் கொடுத்தாள்.

அவள் தன் பணியில் ஈடுபட்டிருந்த போது கவனிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பேரிளம்பருவ வயது அவள் முகத்தில் கண்களில் காதோரத் தலைநரைப்பில் தெரிந்தாலும் அந்த விகற்பங்களை மீறி ஒரு கம்பீரமான, புகை படிந்த அழகு அவளிடம் இருந்தது. பணியின் புன்னகை முகத்துக்கு அணிசெய்த போதிலும் கண்களில் ஓர் இனம் புரியாத சோகம். அதற்கு அவள்தன் கணவனை இழந்த வருத்தமோ அல்லது கைம்பெண் வாழ்க்கையின் தனிமையோ சுமையோ காரணமாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

ஒவ்வொரு முறையும் நான் வங்கிக்குச் சென்ற போது அவள் எனக்கு முன்னுரிமை தந்து உதவியது என்னை யோசிக்க வைத்தது. நானும் வாழ்க்கையில் துணையை இழந்தவன் என்பதால் ஏற்பட்ட பரிவு இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன். நான் குடியிருந்த அதே கீழாண்டார் வீதியில் அவளது சொந்த வீடு இருந்ததுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

ஒரு நாள் அவளைக் கேட்டேவிட்டேன்: "ஐந்தாறு பேர் காத்திருக்கும் போது எனக்கு முன்னுரிமை தருவது சரியா?"

நான் தாழ்ந்த குரலில் பேசியும் கேட்டுவிடக் காத்திருந்தவர்களில் இருவர் ஒரே குரலில் முன்மொழிந்தார்கள்: "நீங்க ஒங்க வேலையை முடிச்சுக்கங்க ஐயா. கல்லூரிக்கு நேரமாய்டுமில்ல?"

"நீங்கள் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியர்களின் தலைவர் என்பதால் உங்களைப் பல பேருக்குத் தெரியும். யாராயிருந்தாலும் ஓர் ஆசிரியருக்கு முன்னுரிமை தந்து சேவை செய்வதை ஆட்சேபிக்க மாட்டார்கள் என்று கண்டீர்கள் அல்லவா?"

புன்னகையுடன் நான் அவள் பதிலை ஏற்ற போதிலும் அதுமட்டும் காரணமல்ல என்று என் உள்மனம் கூறியது. அல்லது இது என் கற்பனைதானோ என்றும் ஓர் எண்ணம் உதித்தது.

ஒருநாள் மாலை தன்னிகழ்வாக நாங்கள் இருவரும் வீடு செல்லும் வழியில் கீழாண்டார் வீதியில் சேர்ந்து நடந்தோம். அப்போது ஹேமாவைப் பற்றி மேல்விவரங்கள் தெரிந்துகொண்டேன். அதே வங்கியின் மண்டல அலுவலகத்தின் கணிணிப் பிரிவில் அதிகாரியாகப் பணியாற்றிய அவள் கணவன் நான்கு வருடங்கள் முன்பு எந்த உடல்நலக் குறைவுமில்லாமல் இயற்கையாக ஒரு நாள் உயிர்நீத்தபோது அவள் ஒரே மகன் கார்த்திக் ’கம்ப்யூட்டர் எஞ்சினீர்ங் கோர்ஸ்’ கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்தானாம். இப்போது அவன் சென்னையில் கடந்த மூன்று வருடங்களாக ஒரு பிரபல ’ஐ.டி. கம்பெனி’யில் ’ஸாஃப்ட்வேர் எஞ்சினியர்’-ஆக இருக்கிறானாம். இன்னும் ஒரு வருடத்தில் அவன் ஒரு மூன்று வருட ஒப்பந்தத்தின் பேரில் அமெரிக்காவில் வேலைசெய்ய வேண்டியிருக்குமாம்.

"படிப்பு முடிஞ்சு காம்பஸ் ப்ளேஸ்மென்ட்லயே அவனுக்கு வேலை கிடச்சது. சென்னைல போஸ்டிங். ரெண்டு மாசம்கூட வீட்ல இருக்க முடியல. வேலைல சேர்ந்து ஒரே வருஷத்ல ஒரு வாட்டி நாலு மாசம் சிங்கப்பூர் போய்ட்டு வந்தான்..."

ஹேமாவின் பெற்றோர்களும் அவள் கணவனின் பெற்றோர்களும் காலப்போக்கில் இயற்கை எய்தியதால் கணவன் இறந்து ஒரே மகனும் சென்னைக்குச் சென்றுவிடத் தனிமையும் துக்கமும் அவளை வாட்டியது. அவள்கூடப் பிறந்த அக்கா அமெரிக்காவில் குடியேறிவிட்டாள். கணவனோ ஒரே மகனாக இருந்ததால் அவளுக்கு நெருங்கிய உறவினர்களே இல்லாமல் போனது.

"என் வேலைதான் எனக்கோர் ஆறுதலா இருந்தது. பாங்க்ல பலபேர் ஒரு குடும்பம் போலப் பழகியது இன்னொரு ஆறுதல். எனக்கோ சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் கிடைக்காது. கிளார்க்காவே முப்பது வருஷம் சர்வீஸ் போட்டாச்சு. இன்னும் மூணு வருஷம் தள்ளினா அடுத்த சம்பள உயர்வு செட்டில்மென்ட்ல பென்ஷன் கணிசமா ஏறும். அதுக்கப்பறம் தேவைப்பட்டா அம்பத்தெட்டு வயசில VRS (விருப்ப ஓய்வு) வாங்கிக்கலாம். இதெல்லாம் கார்த்திக் மனசுக்கு சமாதானமாகலை. மாடியும் கீழுமா இருக்கற இந்தப் பெரிய வீட்ல யார் துணையும் இல்லாம அம்மா தனியே வாழறது அவனுக்கு ரொம்பக் கவலையா இருந்தது."

சிங்கப்பூர் போய்வந்ததும் கார்த்திக் தன் அம்மாவின் மனதைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற முயன்று அவளை மறுமணம் செய்துகொள்ளத் தூண்டினானாம். அநேகமாக அவன் அடுத்த வருட நடுவில் அமெரிக்கா சென்று குறைந்தது மூன்று வருடம் வேலை பார்க்க வேண்டியிருக்குமாம். அதற்குப் பின்தான் அவன் திருமணம் செய்துகொள்ள முடியுமாம். வேலை காரணமாக அம்மா அவனுடன் வந்து இருக்க முடியவில்லையென்றால் மறுமணம் தான் தீர்வு என்று அவன் வாதாடினான். மனைவியை இழந்த ஒரு நல்ல மனிதராகப் பார்த்துத் துணையாக ஏற்றுக்கொண்டால் எந்தப் பிரச்சனையும் வர வாய்ப்பில்லை என்று அவன் கருதினான்.

"மனைவியோ கணவனோ யாராவது ஒருவர் மறைவில் முந்துவது எல்லோர்க்கும் நிகழ்வதுதானே? மீந்திருப்பவர் எல்லோரும் மறுமணம் செய்துகொள்ளவா விழைகிறார்கள்?" என்று லேசாகக் கிண்டினேன், அவள் மனதில் உள்ளது அறியும் வண்ணம்.

"இதேபோல்தான் நானும் அவன்ட்ட வாதாடினேன். இந்தக் காலத்துக் குழந்தைகள் நம்மைவிட புத்திசாலிகள் மட்டுமல்ல, வாழ்க்கையப் பிராக்டிகலா அணுகுபவர்கள். அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா?"

என் மனதில் நம்பிக்கை எழ முகத்தில் வியப்பைத் தேக்கிக் கேட்டேன்: "என்ன சொன்னான்?"

"குழந்தைகள் நலனில் அக்கறையுள்ள பெற்றோர்கள் இம்மாதிரி சமயங்களில் விதிவிலக்காக இருப்பது ஒன்றும் தப்பில்லையே? என்றான்."

"அதற்கு நீங்கள் என்ன சொன்னீர்கள்?"

"நான் தனியா வாழ்வதால் உன் நலனுக்கு என்ன கொறச்சல் கண்ணா?" என்றேன்.

"அதுக்கு என்ன சொன்னான்?"

"’நான் பேச்சிலரா அமெரிக்காவுல குறஞ்சது மூணு வருஷம்--அது எக்ஸ்டென்ட் ஆக வாய்ப்பிருக்கு--என் பர்சனல் லைஃப்ல காலம் தள்ள எவ்வளவு கஷ்டப்படுவேன்னு உனக்கு நல்லாத் தெரியும். எனக்கு பேசிக் குக்கிங் கூட இன்னும் சரியாப் பிடிபடல. நான் அமெரிக்கால இருந்துகிட்டு ஒவ்வொரு நாளும் என் கழுத்தளவு வேலைகளுக் கிடையில நீ ஒண்ணும் ஹெல்த் ப்ராப்ளம் இல்லாம இருக்கயா, ஸேஃபா இருக்கயா, உன் தேவைகளை எதும் விடாது கவனிச்சுக்கறயா, வேளா வேளைக்கு ஒழுங்கா சாப்பிடறயான்னுலாம் கவலைப்படறது என் நலனுக்குக் கொறச்சல் இல்லையாம்மா?’ அப்படீன்னு கேட்டான்.

"’உண்மைதான் கண்ணா. அப்போ ஒண்ணு செய். என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லறதவிட நீ ஒரு கல்யாணம் பண்ணிகிட்டு வெளிநாடு போ. அப்போ உனக்கும் எனக்கும் எந்த ப்ராப்ளமும் இருக்காது’ன்னு நான் சொன்னேன்.

"’இருவத்தஞ்சு வயசுல எனக்கென்னம்மா கல்யாணத்துக்கு அவசரம்? அப்படியே கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அவள் அங்கே தனியா நாள் முழுதும் வீட்ல அடஞ்சு கிடக்கணும். அப்புறம் நான் உங்க ரெண்டு பேரைப் பத்தியும் கவலைப்படணும், இன்னும் நாங்க ரெண்டு பேரும் உன்னைப்பத்திக் கவலைப் படணும். இதெல்லாம் இப்போ தேவையாம்மா?’"

அவளால் அவன் கேள்விகளுக்கு அவனை சமாதானப் படுத்தும் வகையில் பதில் சொல்லி மாளவில்லை. கடைசியாக அவள், "சரி கண்ணா! நீ நினைக்கற மாதிரி, இந்த ஊர்ல, எனக்கோ ஒனக்கோ தெரியவந்து, நமக்குத் தகுந்தவரா, ஒரு துணையிழந்த மனிதர், எனக்குத் துணையா இருக்க முடியும்னு, உனக்கும் எனக்கும் உறுதியாத் தெரிஞ்சா, நீ சொல்ற யோசனையைப் பரிசீலிப்போம்" என்று கூறி விடுப்பில் வந்திருந்த அவனைச் சென்னைக்கு அனுப்பிவைத்தாள்.

"கழுவற மீன்ல நழுவற மீனாச்சே நீ! ரெண்டு வருஷம் ரீஜினல் ஆஃபீஸ் லா டிபார்ட்மென்ட்ல வேலை பார்த்ததனால நல்லா நெளிவுசுளிவோட பேசக் கத்துக்கிட்டே. அப்புறம் உன் இஷ்டம். உனக்கு அதுமாதிரி யாராவது அகப்பட்டா எனக்கும் சம்மதம், அவர் எனக்குத் தெரிஞ்சவரா இருக்கணுங்கற அவசியம் இல்லைன்னு நான் இப்பவே உன்கிட்ட சொல்லிடறேன்" என்று அவன் ஆயாசத்துடன் கூறிவிட்டுச் சென்றானாம்.

மறுமணத்தில் ஹேமாவுக்கு விருப்பம் இல்லாமல் இல்லை என்று கோடிகாட்டிவிட்டாள். இப்போது அவளுக்குத் தகுந்த ’துணையிழந்த துணை’யாக என்னைத் தயார்படுத்திக் கொள்வது என் பொறுப்பாகியது. நாங்கள் இருவரும் ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருந்ததும், இருவருமே இந்த வயதில் சகஜமாக வரும் சர்க்கரை வியாதியோ ரத்த அழுத்த நோயோ வேறு எந்த உபாதையோ இல்லாமல் நல்ல உடல்நிலையில் இருந்ததும் பெரிய ’ப்ளஸ் பாயின்ட்’களாக இருந்தது.

*****

ஹேமா சொல்வது:

புயலடித்து ஓய்ந்து அமைதியாக ஓடிக்கொண்டிருந்த என் வாழ்க்கை ஓடம் இப்போது மறுபடியும் அலைகளில் தத்தளிக்கிறதோ என்று தோன்றியது. அல்லது இந்தப் புது அலைதான் அதைக் கரைசேர்க்குமோ என்றும் ஒரு நம்பிக்கை எழுந்தது.

தமிழ்ப் பேராசிரியர் மணிவண்ணன் போன்று மனதில் எந்த விகல்பமும் இல்லாது பழகும் நல்ல மனிதரைப் பார்ப்பது அரிது. அதுவும் அவரது அறிமுகமும் சமீபகாலப் பழக்கமும் எனக்கு ஒரு கொடுப்பினை என்றே தோன்றுகிறது. துணையிழந்த இவர் துணையிழந்த எனக்கு என் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் கார்த்திக் சொன்ன தகுந்த பாதுகாப்பாக இருக்கமுடியும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் வலுப்பட்டு வருகிறது

இவர் எங்கள் குடும்பத்தில் இணைந்தால் ஏற்படக்கூடிய மாறுதல்கள் பற்றிச் சிந்தித்தேன். என் மகன் கார்த்திக்கும், இப்போது சென்னையில் கடைசி வருடக் கம்ப்யூட்டர் இஞ்சினீரிங் கோர்ஸ் பண்ணும் அவர் மகள் வள்ளிநாயகியும் அண்ணன்-தங்கைகளாவார்கள். எனக்கோர் அம்மா ஸ்தானமும் அவருக்கு அப்பா ஸ்தானமும் கிடைக்கும். அவரோ நானோ எந்த வேற்றுமையும் பாராட்டாது இரண்டு குழந்தைகளையும் நன்கு பார்த்துக்கொள்வோம் என்பது நிச்சயம். நாங்கள் இருவருமே நல்ல உடல்நிலையில் இருந்ததால் அடுத்த ஐந்தாறு வருடத்தில் குழந்தைகள் இருவருக்கும் நல்ல வரனாகப் பார்த்து மணமுடித்து வைக்க முடியும் என்றும் உறுதியான நம்பிக்கை இருந்தது.

இதெல்லாம் இருக்கட்டும். முதலில் எங்கள் இருவரது ஈடுபாடுகளும் வாழ்க்கை பற்றிய கண்ணொட்டமும் எனக்கு அதன்பின் பொதிந்துள்ள ஆன்மீகத் தேடலும் எவ்வளவு தூரம் ஒத்துப் போகும் என்று சிந்திக்கவேண்டும். காதலும் காமமும் இல்லாது மனதால் நெருங்கி சமூகம் அங்கீகரித்த தம்பதியராக, தின வாழ்வில் அன்பில் பிணைந்த நண்பர்களாக இருவரும் வாழப் போகும் வாழ்க்கையில் இவைதானே முக்கியம்?

அவருடன் பழகிய இந்த நாலைந்து மாதப் பழக்கத்தில் இது ஒன்றும் பிரச்சினையாக இருக்காது என்று தோன்றியது. மலைக்கோட்டைப் பிள்ளையார் கோவில் உச்சியில் பரந்திருக்கும் பாறையில் காற்றாட நாங்கள் உட்கார்ந்து பேசியபோதும், மாலை வேளைகளில் காவேரிப் பாலத்தில் நின்றுகொண்டு காற்று வாங்கிக் கதிரவன் மறையும் கோலங்களை வியந்து ரசித்து அந்த இயற்கையின் அழகில் திளைத்தபோதும் அவரைப் பற்றி நிறையத் தெரிந்துகொண்டேன்.

என் கணவர் போலவும் கார்த்திக் போலவும் நெற்றியில் திருநீறு ஒரு கீற்றாகவேனும் அணியாவிட்டாலும் அவருக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு, முருகன் பேரில் உள்ள பற்றால்தான் மகளுக்கு வள்ளிநாயகி என்று பெயரிட்டதாகவும் சொல்லியிருக்கிறார். நாங்கள் கார்த்திக்கை வளர்த்தது போல் அவரும் தன் மகளை சமயம் சார்ந்த இல்லற, நல்லற வழியில் வளர்த்ததால் இன்றைய அவசர, நவீன, கட்டுபாடற்ற வாழ்வின் அலைகள் அவர்களை அதிகம் மாற்ற வாய்ப்பில்லை.

தோளில் தொங்கும் ஜோல்னாப் பையில் புத்தகங்கள், பேனா பென்சில் மற்றும் ஒரு நோட்டுப் புத்தகம். வெள்ளை வேட்டி. வெள்ளை அல்லது சந்தனக் கலர் முழுக்கை--சமயத்தில் அரைக்கை--ஜிப்பா. கோபமே காணாத முகம். திருப்தியும் மகிழ்ச்சியும் குமிழியிடும் கண்ணாடி அணியாத விழிகள். நெற்றியின் அகலமும் இலேசான காலைப் பனிமூட்டம் போல் ஆங்காங்கே நரைத்த தலைமுடியும். நெற்றியில் இல்லாத திருநீறு அவர் மேலுதட்டில் ஒட்டிக்கொண்டது போல இருபுறமும் சரியும் வெள்ளைநரை மீசை. இதை நான் அவரிடம் சொன்னபோது ஒலியுடன் சிரித்து, "உங்கள் கற்பனையின் விற்பனத்தைக் காணும்போது கவிதையும் எழுதவரும் போலிருக்கே?" என்றார்.

"எனக்கு மரபுக் கவிதைகள் படிப்பது பிடிக்கும். பாரதியார் மிகவும் பிடித்த கவிஞர். ரொம்பக் கொஞ்சமா தேவாரமும் திருவாசகமும் கம்பனும் படிச்சிருக்கேன். நீங்கள் கற்றுக்கொடுத்தால் நான் யாப்பிலக்கணம் கற்க ரெடி."

"வேறென்ன உலகியல் சுவைகள் உங்களுக்கு?"

"தொலைக்காட்சியில் பழைய தமிழ் சினிமாக்கள், பாட்டுகளின் ஒளிபரப்பு, விவாதங்கள், ஆன்மீகத் தொகுப்புகள் பார்ப்பேன். தினமும் இரவு பத்துமணி வரை இன்டர்நெட்டில் பெண்களுக்கான மன்றங்களில் இடும் அஞ்சல்களை மேய்வேன். சமயத்தில் நானும் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வேன். இணையத்தில் உள்ள தமிழ்ச் சிறுகதைகளும் நாவல்களும் நிறையப் படிப்பேன். கார்த்திக் நெறைய ஆங்கில, தமிழ்க் கதைகள், சமயத்தில் தமிழ்க் கவிதைகள் படிப்பான். தினமும் என் மாலை வழிபாட்டில் என் தோழி கல்பனா சொல்லித்தந்த சின்னச் சின்ன சமஸ்கிருத ஸ்லோகங்களும், தமிழ் வழிபாட்டுச் செய்யுள்களும் முணுமுணுப்பேன். காலையில் அன்றைய கிழமையும் நாளும் சொல்லும் வண்ணம் தமிழ், சமஸ்கிருத ஸ்தோத்திரப் பாடல்கள் கேட்பேன். அபிராமி அந்தாதியும் கந்த சஷ்டிக் கவசமும் எனக்கு மிகவும் பிடித்த ஸ்தோத்திரப் பாடல்கள்... என்ன, ரொம்ப பயமுறுத்தி விட்டேனா?"

"இதுமாதிரிச் சுவைகள் எனக்கும் உண்டு தாயே! ஆனால் எந்தச் சுவையும் சுமையாகும் அளவுக்கு நான் வைத்துக்கொள்வதில்லை. தமிழ்க் கவிதைகளைப் படிக்கவும், எழுதவும், என் தமிழ் அறிவை விருத்திசெய்வதற்கும், தமிழ் பற்றி ஆராய்வதற்குமே எனக்கு நேரம் போதவில்லை! என் மகளும் நிறைய ஆங்கிலத் தமிழ்க் கதைகள் படிப்பாள். மரபிலும் புதுக்கவிதை பாணியிலும் கொஞ்சம் கவிதையும் எழுதவரும் அவளுக்கு."

"கம்பன் வீட்டுக் கட்டுத்தறியே கவி பாடும்போது மகள் என்றால் கேக்கணுமா?"

"கம்பனுக்கும் எனக்கும் வெகுதூரம் அம்மா. எனக்குப் புதுக்கவிதை பிடிக்காது. ஏதோ மூன்று மரபுக்கவிதைத் தொகுப்புகளையும், சங்ககால நிகழ்ச்சிகளை வைத்து ஒரு சின்னக் கதைப் பாட்டும் பதிப்பித்திருக்கிறேன், அவ்வளவுதான். கவிஞர் என்பதை விடப் புலவர் என்றழைக்கப் படுவதே எனக்கு விருப்பம்."

"புலவர் என்றால் புரவலர் யாரோ?"

"வேறு யார், எங்கள் கல்லூரித் தாய்தான். தனிவாழ்வில் ஒரு புரவலரைத் தேடிக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லலாம்."

மணிவண்ணன் சாரின் மனைவி தன் ஐம்பதாம் வயதில் இரண்டு வருடங்களுக்கு முன்பு காலமான போது அவர் மகளும் சென்னையில் கல்லூரிப் படிப்பை மேற்கொண்டதால் தொடர்ந்து மூன்று வேளையும் ஓட்டலில் சாப்பிடும் நிலைமை ஏற்பட்டு சில மாதங்களிலேயே அவர் மஞ்சள் காமாலை கண்டும் பின் வயிற்றுப் போக்காலும் மிகவும் அவதிப் பட்டாராம். அந்த சமயத்தில்தான் மகள் மிகவும் கவலைக்குள்ளாகி அவரை மறுமணம் செய்துகொள்ளுமாறு கட்டாயப் படுத்தினாளாம். எங்களைப் போலவே அவர் குடும்பமும் ’புலால் மறுத்தல்’ மேற்கொண்ட குடும்பம் என்று தெரிந்துகொண்டேன். பின்னர் அவர் கொஞ்சம் கொஞ்சமாக ஓரளவுக்கு சமையல் செய்யக் கற்றுக்கொண்டாலும், மகள் ’இந்தக் கஷ்டமெல்லாம் உனக்கெதுக்குப்பா, உனக்குத் தமிழ் ஆராய்ச்சிக்கே நேரம் போதவில்லை, அதனால நான் சொல்றபடி பேசாமல் மறுமணம் செய்துகொள்’ என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறாளாம்.

"ஏனம்மா, ஒரு தாயற்ற குழந்தை பெரும்பாலும் தனக்கு ஒரு சித்தி வருவது குறித்து அமைதியற்றே இருக்கும். நாளை சித்திக்கொரு குழந்தை பிறந்தால் தன் கதி என்னாகுமோ என்ற கவலை வரும் அல்லவா? நீ எப்படி விதிவிலக்காக இருக்கிறாய்?"

"ஆசையைப் பாரு! எனக்கு வர்ற சித்தி அம்பது வயசத் தாண்டின ஒரு பேரிளம் பெண்ணாக இருக்கணும்னுல நான் நெனைக்கறேன்! அப்பதானே இந்த மாதிரிப் பிரச்சினைகள் இருக்காது?" என்று அவர் மகள் அவரைக் கேலிசெய்தாளாம்.

"நான் மறுமணம் செய்துகொண்டால் நிச்சயமாக அந்த மாதிரியொரு பேரிளம் பெண், அதுவும் கணவணை இழந்து வாழ்பவளைத்தான் ஆலோசிப்பேன் மகளே."

"பின்னே என்ன தயக்கம்?"

"பார்க்கலாம். முருகன் சித்தம் அதுவானால் நடக்கட்டும். நானாக எதுவும் முனையப் போவதில்லை. ஏதேனும் குதிர்ந்தால் அப்போது பார்த்துக்கொள்ளலாம்."

முருகன் சித்தம் அதுவாகி அவன் அன்னை அபிராமியின் சித்தமும் அதுவானால் நடக்கட்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

*****

மணிவண்ணன் ஹேமா சொல்வது:

னங்கள் ஒன்றியபின் இன்னும் ஏன் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு? எனவே, இருவரும் ஒரே மாதிரியான வாசகங்கள் அமைந்த கடிதம் தயாரித்து எங்கள் கைப்பட எழுதி கார்த்திக் வள்ளிநாயகி குழந்தைகளுக்குத் தபாலில் அனுப்புவது என்று தீர்மானித்துக்கொண்டு இப்படியொரு கடிதம் எழுதினோம்:

அன்புள்ள கார்த்திக்/வள்ளி,

இந்தக் கடிதத்தை ஆற அமரப் படித்து மனதில் ஆராய்ந்து பார்த்து முடிவுசெய்து பின் உன் கருத்தைத் தெரிவிக்கவும்.

அபிராமி/முருகன் அருளால் நீ வற்புறுத்தி வருவது போல் நான் மறுமணம் செய்துகொள்ளத் தகுந்த துணையிழந்த ஒருவராக எனக்குத் தோன்றி அவரைப் பற்றிக் கடந்த ஐந்தாறு மாதங்களாக மேல்விவரங்கள் அறிந்துகொண்டதில் உங்கள் எண்ணம் ஈடேறலாம் என்று தெரிகிறது.

அவர் பெயர் மணிவண்ணன். இந்த ஊர்க் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியர்களின் தலைவர். கொஞ்சம் கூட விகல்பமே இல்லாமல் பழகும் நல்ல, அரிய மனிதர். இரண்டு வருடங்களுக்கு முன் மனைவியை இழந்தவர். ஒரே மகள் வள்ளிநாயகி சென்னையில் கம்ப்யூட்டர் எஞ்சினீரிங் கடைசி வருடம் படிக்கிறாள். அவரது அண்ணா, ஆறு வயது மூத்தவர், கனடாவில் தன் மகனுடன் வசிக்கிறார். நம்மை மாதிரியே அவருக்கும் வேறு சொந்தங்கள் இல்லையென்று தெரிகிறது. நீ விழையும் பாதுகாப்புத் துணையாக எனக்கு இவர் அமையலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. நீ இப்போது கல்யாணம் செய்துகொளவதற்கில்லை என்று சொன்னதால்தான் நான் இந்த ஏற்பாட்டுக்கு உடன்படுகிறேன். உன் கருத்தை அறிந்து மேலே போகலாம்.

(அல்லது)

அவர் பெயர் ஹேமா. பெரிய கடைத்தெருவில் அரசு நிறுவன வங்கியொன்றில் மூத்த எழுத்தராக வேலை பார்க்கிறார். அவருடன் அதே வங்கியின் மண்டல அலுவலகத்தில் கணினி அதிகாரியாக வேலை பார்த்துவந்த அவர் கணவன் நான்கு வருடங்கள் முன்பு இயற்கை மரணம் அடைந்தாராம். ஒரே மகன் கார்த்திக் சென்னையில் மூன்று வருடங்களாக மென்பொருள் இயந்திரப் புலவராக வேலை செய்கிறான். அவர் கூடப் பிறந்த அக்கா அமெரிக்காவில் குடியேறிவிட்டாராம். ஹேமா ஓர் அமைதியான, கடவுள் பக்தியுள்ள பேரிளம் பெண். அவர் உனக்குத் தகுந்த சித்தியாக அமையலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. இருபத்தொரு வயது முடிந்தும் உன் திருமணத்திற்கு இப்போது அவசரம் இல்லை என்று நீ சொன்னதால்தான் நான் இந்த ஏற்பாட்டுக்கு உடன்படுகிறேன். உன் கருத்தை அறிந்து மேலே போகலாம்.

இப்படிக்கு
உன்னிடம் மிகவும் பிரியமுள்ள அம்மா/அப்பா

கடித்தை எழுதிவிட்டோமே தவிர அதை உடனே தபாலில் அனுப்புவது வேண்டாம் என்று இருவருக்கும் தோன்றியது. இரண்டு வாரங்கள் போனபின் மீண்டும் ஒருமுறை அதைப் படித்து இறுதி முடிவென உறுதியுடன் தீர்மானித்துப் பின் அனுப்பலாம் என்று தோன்றியது.

*****

வள்ளிநாயகி சொல்வது:

’கண்டதும் காதல்’ என்பதெல்லாம் பிதற்றல் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். கார்த்திக்கை சந்திக்கும் வரை!

என் இறுதி செமஸ்டர் தேர்வுக்கான ப்ராஜக்ட் அவர் வேலை பார்க்கும் கம்பெனியில் அதே கிளையில் அவர் வழிகாட்டுதலின் கீழ் எனக்கும் என் அறைத் தோழி வளர்மதிக்கும் கிடைத்தபோது கார்த்திக்கை முதன்முதலில் சந்தித்தேன். எந்தப் ’பந்தாவும்’ இல்லாமல் எளிதாகத் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். தான் அந்தக் கம்பெனியில் மூன்று வருட அனுபவம் உள்ளவர் என்றும் இன்னும் ஒரு வருடத்தில் அமெரிக்கா போக வாய்ப்புண்டு என்றும் சொன்னார். நாங்கள் கடினமாக உழைத்தால் தனக்குத் தெரிந்த ஸாஃட்வேர் எக்ஸ்பர்டீஸ் எல்லாமும் எங்களுக்கு K.T. (knowledge transfer) செய்யத் தயார் என்று கூறினார். இந்தப் ப்ராஜக்ட் நன்றாகச் செய்தால் அவர் கம்பெனியிலே வேலை வாய்ப்பு இருக்கலாம் என்று நம்பிக்கையளித்தார்.

கார்த்திக்கைப் பார்ப்பவர்களுக்கு அவர் உயரம்தான் முதலில் கண்ணில் படும். நானே சராசரிப் பெண்களை விட உயரம் என்றால் அவர் என்னைவிட மூன்றங்குலம் உயரமாக அஞ்சு எட்டு இருப்பார் என்று பட்டது. வழவழவென்று சந்தன நிறத்தோல் (மறைந்த அவர் தந்தை உபயமாம்). அறிவும் ஆர்வமும் இதுபோலச் சுடர்விடும் முகத்தை இப்போதுதான் காண்கிறேன். சுருள்முடியில் ஒரு சுருள் வலதுபக்கம் சரிந்திருப்பது பார்க்க வசீகரம். பட்டுக் கத்தரிப்பது போலப் பேச்சு. அதே சமயம் பாசாங்கு இல்லாத நேரடியான பேச்சு. வேலையில் குறைகளை அன்புடனும் அக்கறையுடனும் எடுத்துச் சொல்லும் பாங்கு.

வளர்மதிக்குச் சென்னையில் ஒரு தோழியர் பட்டாளமே இருந்ததாலும் அவர்களில் சிலர் எங்கள் கம்பெனி இருந்த வளாகத்தில் வேறு கம்பெனிகளில் வேலை பார்த்ததாலும் அவள் பெரும்பாலும் லஞ்ச் அவர்களுடன்தான் எடுத்துக்கொள்வாள். சமயத்தில் என்னுடன் இந்தக் கம்பெனி கேன்டீனில் சாப்பிடுவாள். இப்படி வளர்மதி இல்லாத ஒரு லஞ்ச் அவரில் அவருடன் சேர்ந்து சாப்பிட்டபோது தன்னைப் பற்றிய பர்சனல் விவரங்களைச் சொல்லி என்னைப் பற்றி விசாரித்தார். இருவரும் ஒரு பெற்றோரை இழந்த ஒற்றுமையும், இருவரும் மீதமிருக்கும் தன் பெற்றோரிடம் உயிருக்குயிராய் அன்பு செலுத்துவதும், அந்தப் பெற்றோர்கள் இருக்கும் நிலையில் அவர்களை மறுமணம் செய்துகொள்ளத் தூண்டி வருவதும் எங்கள் வாழ்வில் பொதுவாக இருப்பதைத் தெரிந்துகொண்டோம்.

கம்ப்யூட்டர் ஸாஃப்ட்வேர் அறிவை வளர்த்துக்கொள்வதிலும், வேலையில் கிடுகிடென்று முன்னுக்கு வரவேண்டும் என்ற உத்வேகத்திலும், மற்ற பொழுதுபோக்கு அம்சங்களான ஆங்கிலத் தமிழ் ஃபிக்ஶன், மூவீஸ், மியூசிக், கிரிக்கெட், நல்ல ஹோட்டல்களில் திருப்தியாக டின்னர் சாப்பிடுவது, ஊர் சுற்றுவது, ஷாப்பிங் என்று எல்லா விஷயங்களிலும் எங்கள் சுவைகள் ஒத்திருந்தன.

பேசுவது பழகுவதில் தொடர்ந்தபோது, வீக்-என்ட் நாட்களில் ஹோட்டல்களில் மதியம் சாப்பிடுவதிலும், சினிமாக்கள் செல்வதிலும் இருவரும் சேர்ந்தோம். நாங்கள் இருவரும் சேர்ந்து முதலில் பார்த்த மூவி மயிலை ஐனாக்ஸ் தியேட்டரில் ஜேம்ஸ் பான்டின் ’ஸ்கை ஃபால்’. கையில் பாப்கார்ன், கோலா சகிதம் சில்லிடும் தியேட்டர் ஹாலின் அமைதியில் உட்கார்ந்து பார்த்தபோது, பரபரப்பான அந்த மூவியின் பிரம்மாண்டம் எங்களை அசத்தியது. தியேட்டர்களிலோ கடற்கரையிலோ அல்லது பூங்காக்களிலோ சில்மிஷம் செய்வது என்னைப் போலவே அவருக்கும் பிடிக்காத விஷயம். ’டிஃப்ரெண்டா இருக்கீங்களே!’ என்று அவரைச் சீண்டியபோது ’காதல் என்பது உன்னதமான சமூகம் அமைக்க இயற்கை அளித்துள்ள வரப்பிரசாதம். கிணற்றுத் தண்ணீரை வெள்ளமா கொண்டு போய்விடும்?’ என்றெல்லாம் வசனம் பேசினார். கேரியரில் செட்டில் ஆகும்வரை பர்சனல் லைஃபில் திட்டமிட்டு ’அடக்கி வாசிக்கவேண்டும்’ என்ற அவரது கருத்து எனக்கும் உடன்பாடாக இருந்தது.

பிறகென்ன? இருவரும் கல்யாணம் செய்துகொள்ள நினைப்பதைப் பெற்றோர்க்குத் தெரியப்படுத்த முடிவுசெய்தோம். இஞ்சினியர்ங் கோர்ஸிலும் இந்த ப்ராஜக்டிலும் என் பெர்ஃபாமன்ஸ் பொறுத்து அவர் பரிந்துரைத்து எனக்கு அவர் கம்பனியிலேயே தகுந்த வேலை வாங்கித் தந்து என்னையும் தன்னுடன் அமெரிக்கா அழைத்துச் செல்லமுடியும் என்ற நம்பிக்கையும் திட்டமும் அவர்வசம் இருந்தது.

கார்த்திக் சொல்வது:

ள்ளியை முதலில் சந்தித்தபோதே ஐ ஃபெல் இன் லவ் வித் ஹர்! எனக்கேற்ற உயரமும், மாநிறமும், குழந்தை முகமும் அகன்ற விழிகளும் கூர்மையான அறிவும் கொண்டு வளையவந்தாள். வள்ளிநாயகி என்ற பெயர் கொஞ்சம் கர்னாடகமாகத் தோன்றினாலும், கார்த்திக்-வள்ளி என்ற பெயர்ப் பொருத்தத்தை வியந்தேன். ஒத்துப்போன எங்கள் உலகியல் ஈடுபாடுகள் எங்களை மேலும் இணைத்திட, அலுவலக நண்பர்களாக ஆரம்பித்த எங்கள் நட்பில் காதல் மலர்ந்து, கடந்த மூன்று மாதத்தில் நாங்கள் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு வாழ்க்கையில் இணைய முற்பட்டு பெற்றோர் சம்மதம் பெற விழைந்தோம்.

"வள்ளி, ஒண்ணு கவனிச்சயா? நீயும் நானும் தனித்தனியா நம்ப பெற்றோரை மறுமணம் செஞ்சிக்க வறுபுறுத்தினோம். இப்போ நீயும் நானும் வாழ்க்கைல இணைஞ்சா, உங்கப்பா எங்கள் வீட்டு மாடில குடிவந்து நம்ம பெற்றோர் இருவரும் சம்பந்தி முறையில ஒருத்தருக்கொருத்தர் இன்னமும் உதவியாகவும் பாதுகாப்பாவும் இருக்கலாம் இல்லையா?"

"ஸோ, நமக்கு பெற்றோர் சம்மதம் தர்றது பிரச்சனையா இருக்காதுன்னு சொல்றீங்க."

"நிச்சயம் இருக்காது. இதைவிட பெட்டர் ஸொல்யூஷன் அவங்களுக்கு வேறென்ன இருக்கமுடியும்? அந்த வகையில பாக்கறப்ப, உனக்கு ஒருவேளை எங்க கம்பெனில வேலை கிடைக்காட்டாலும் நாம கல்யாணம் செஞ்சிகிட்டு நான் உன்னை அமெரிக்காவுக்கு கூட்டிப் போகலாம். அல்லது உனக்கு சென்னைல நல்ல வேலை கிடைச்சு நீ கொஞ்ச நாள் வேலை பாக்க நெனச்சா, நீ இதே மாதிரி ரூம்ல தங்கிகிட்டு மாசம் ஒரு தடவை பெற்றோரைப் போய்ப் பார்த்து வரலாம் இல்லையா?"

"யு ஆர் ரைட். எல்லாம் நல்லா திட்டம் போட்டுச் செய்யறீங்க. உங்ககிட்ட எனக்குப் பிடிச்ச விஶயங்கள்ல இதுவொண்ணு."

"இதைக் கொஞ்சம் டிராமாடிக்கா செய்வோம். என்ன தெரியுமா? நாம ரெண்டு பேரும் சேர்ந்து நம் பெற்றோருக்குக் கைப்பட ஒரு லெட்டர் எழுதுவோம். என்ன சொல்றே?"

"நல்ல ஐடியா! நம்ப எண்ணத்தை இதைவிட ரத்தினச் சுருக்கமாச் சொல்ல முடியாது! நம்ப ரெண்டு பேர் வீடும் ஒரே தெருவில இருக்கறதால, கூரியர் ஆஃபீஸ்ல சொல்லி ஒரே நாள்ல உங்கம்மா எங்கப்பா ரெண்டு பேர்க்கும் லெட்டர் டெலிவரி செய்யச் சொல்வோம்."

*****

மணிவண்ணன் ஹேமா சொல்வது:

ருவழியாக உறுதியான், இறுதியான முடிவுடன் நாங்கள் எங்கள் கடிதத்தை ஒரு திங்கட்கிழமை யன்று கூரியர் மூலம் அனுப்பத் தீர்மானித்த போது, முந்தைய சனிக்கிழமை ரத்தினச் சுருக்கமான அந்தக் கடிதம் எங்களுக்குக் கிடைத்தது.

அன்புள்ள அம்மா/அத்தை,
மற்றும்
அன்புள்ள அப்பா/மாமா,

இந்தக் கடிதம் உங்களுக்கு மிகவும் அதிகப் பிரசங்கித்தனமாகத் தோன்றுவது இயற்கை. பெற்றோரைக் கேட்காமலேயே உங்கள் குழந்தைகள் வாழ்க்கையில் இணைய முற்படுவதுபோல் தோன்றி ’என்ன அர்ரகன்ஸ், போக்கிரித்தனம்’ என்றெல்லாம் மனதைக் குழப்பிக்கொண்டு கோபமோ கவலையோ படாதீர்கள். இந்தக் கடிதத்தை நாங்கள் சேர்ந்து எழுத முடிவு செய்தது உங்களுக்காகவே! உங்கள் நலன் பற்றிய எங்கள் கவலைக்கொரு தீர்வு கிடைத்த மகிழ்ச்சியை இருவரும் சேர்ந்து உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்காகவே!

நான் என் கடைசி செமஸ்டர் ப்ராஜக்ட் செய்வது கார்த்திக் மென்பொருள் இஞ்சினியராக வேலை பார்க்கும் கம்பெனியில், அதுவும் அவர் வழிகாட்டுதலில் என்ற தற்செயலான நிகழ்வு மூன்று மாதத்துக்கு முன்பு எங்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தியது. அந்த அறிமுகம் நட்பாக வளர்ந்து காதலாக மலர்ந்து நாங்கள் வாழ்க்கையில் இணைய நினைத்து உங்கள் சம்மதத்தைப் பெறவே இந்தக் கடிதத்தை எழுகிறோம். இப்போது பார்க்கும்போது வாழ்க்கையில் எதுவுமே ’ஜஸ்ட் கோயின்சிடன்ஸ்’ இல்லை, நிகழ்வது எல்லாமே ஒரு காரணத்தை முன்னிட்டே என்று படுகிறது.

அம்மா, அப்பா!

இந்த அட்வான்ஸ்ட் வயதில் மறுமணம் செய்துகொள்வது என்பது சுற்றியுள்ளோர்க்கு எவ்வளவு அபத்தமாகப் படும் என்ற மெயின் காரணத்தாலும், ஏற்கனவே இத்தனை வருடங்கள் மணவாழ்வில் ஈடுபட்டுக் குடும்பம் நடத்தி மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு, இயற்கையாக நேர்ந்த ஒரு பிரிவினால் தம் குழந்தையை முன்னிட்டு மீண்டும் மறுமணம் செய்துகொள்வதற்கு உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்வது எத்தனை சிரமமான, சாத்தியம் இல்லாத அல்லது சாத்தியம் மிகக் குறைந்த விஷயம் என்பதை உணராமலும் நான் உங்களை அதற்குக் கட்டாயப் படுத்தியதை இப்போது நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்த விஷயத்தில் எங்கள் பக்கம் உள்ள தவறைப் பொறுத்தருளி எங்களை மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஆறு மாதங்களுக்கு முன்பு எங்களுக்கு ஒருவரையொருவர் தெரிய நேர்ந்திருந்தால் உங்களுக்கு எந்தவித மன சஞ்சலமும் இல்லாமல் போயிருக்கும். இப்போதாவது நேர்ந்த இந்தக் கொடுப்பினை மூலம் உங்களை எங்களுக்கு உதவச் சொல்வதற்கு பதிலாக நாங்கள் உங்களுக்கு உதவ ஒரு வாய்ப்பினை அபிராமி முருகன் அருளியது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.

அம்மா, மாமா!

வள்ளியின் தந்தை நாமிருக்கும் கீழாண்டார் தெருவிலேயே குடியிருப்பதாகச் சொன்னாள். நாங்கள் வாழ்வில் இணைவதற்கு நீங்கள் சம்மதித்தால், வள்ளியின் தந்தை நம் வீட்டிலேயே மாடியில் குடிவந்து சம்பந்தி முறையில் நீங்கள் இருவரும் ஒருவருக் கொருவர் உதவியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கலாம், அது மிகவும் இயல்பாகவும் இருக்கும் அல்லவா? நாங்கள் எதிர்காலத்தில் உங்களுடன் இருக்கமுடியும் காலம் வரை இந்த ஏற்பாடு நீடிப்பது இருவருக்கும் சம்மதம்தானே?

அப்பா, அத்தை!

இருவத்தொரு வயது முடிந்து சில மாதங்களே ஆகியிருக்க, தான் உங்களுக்காகத் தான் சீக்கிரம் மணம் செய்துகொள்ள சம்மதிக்கிறேன் என்று நினைக்கவேண்டாம். கார்த்திக்கை உங்களுத் தெரிந்திருந்தால் நான் அவரிடம் என் மனதைப் பறிகொடுத்தது நியாயமே என்று உங்களுக்குப் படும். அதேபோல, கார்த்திக் அம்மாவின் உயிருக்குயிரான மகன் என்பதும் எனக்கு நன்கு தெரியும். ஆகவே நான் உங்கள் பெயரைக் காப்பாற்றி அத்தைக்கு உகந்த மருமகளாக நடந்துகொள்வேன்.

கடைசியாக, எங்கள் காதல் சங்ககாலத் தலவன்-தலைவி போன்ற களவொழுக்கத்தில் பிறந்ததோ, அல்லது இந்நாளைய மேம்போக்கான டேட்டிங் ஈடுபாடுகளில் வளர்ந்ததோ அல்ல. மூன்று மாதப் பழக்கத்தில் நாங்கள் எவ்விதத்திலும் வரம்பு மீறாமல் ஒருவரை யொருவர் புரிந்துகொண்டோம். உங்கள் முழு சம்மதத்துடன்தான் நாங்கள் மணம்செய்து கொள்வோம். நம் குடும்ப மரபில் இதுவும் ஒரு பெற்றோர் ஏற்பாட்டுக் கல்யாணமாகவே நீங்கள் கருதலாம். என்ன, மாப்பிள்ளை பெண்ணைப் பெற்றோர் அறிமுகப்படுத்தும் படலம் மட்டும் இல்லை, அவ்வளவுதான்!

அம்மா, மாமா!

உங்கள் இருவருக்கும் ஒருவரை யொருவர் தெரியாதிருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது ஒரே தெருவில் வசிப்பதால் பார்வையளவில் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. தவிர, அவர்கள் முன்பு பாலக்கரையில் குடியிருந்தபோது நம் வங்கியில்தான் பற்று-வரவு செய்துவந்ததால், இப்போது ஒரு கஸ்டமர் என்ற முறையில் இருவருக்கும் அறிமுகம் இருக்கலாம். எப்படியிருந்தாலும், அம்மாவும் அப்பாவும் இந்தக் கடிதம் மூலம் ஒருவரை யொருவர் சந்தித்து, எல்லாவற்றையும் நன்றாக டிஸ்கஸ் செய்து, எங்கள் விஷயத்திலும் தம் விஷயத்திலும் சேர்ந்து ஒரு நல்ல முடிவெடுத்து எங்களுக்கு பதில் போடுமாறு வணங்கிக் கேட்டுக்கொள்கிறோம். அந்த முடிவு சம்மதமாகவே இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

இப்படிக்கு,
உங்கள் பிரியமுள்ள,
கார்த்திக், வள்ளி

*****

மணிவண்ணன் ஹேமா சொல்வது:

குழந்தைகள் கேட்டுக்கொண்டபடி நான் கடிதத்தை எடுத்துக்கொண்டு ஹேமாவின் வீட்டுக்குச் சென்றேன். கடந்த இரண்டு வாரங்களாக நான் அவருக்கு யாப்பிலக்கணம் பயிற்றுவிப்பதால் சனிக்கிழமையான இன்று வகுப்பு நாள் என்பது வசதியாக அமைந்தது. தானும் கடிதத்தைக் கையில் வைத்துக்கொண்டு கதவைத் திறந்துவிட்ட ஹேமா நான் உள்ளே நுழைந்து அமர்ந்ததும் என் எதிரில் அமர்ந்துகொண்டு விக்கி விக்கி அழுதார்!

"என்ன தவறு செய்தோம் மணிவண்ணன் சார்! எப்படி நாம் இதுபோல் ஒரு சாத்தியம் இருப்பதை நினைத்துக்கூடப் பார்க்கவில்லை?" என்றார் கண்ணீர் பெருக்கி.

"நாம் நம் கடிதத்தை அனுப்பியிருந்தால் அது அவர்களுக்கு எவ்வளவு பெரிய இடியாக இருந்திருக்கும் என்று எண்ணிப் பார்க்கவே அச்சமாகவும் கலக்கமாகவும் இருக்கிறது. நான் எழுதிய கடிதம் இதோ. நீங்கள் எழுதியதையும் எடுத்து வாருங்கள். முதல் வேலையாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்துவோம். அந்தக் கனலில் நம் மனச் சஞ்சலங்களும், நமக்கே தெரியாமால் ஏதேனும் சபலம் உள்ளுக்குள் இருந்திருந்தால் அதுவும் எரிந்து சாம்பலாகட்டும்! இன்னொரு விஷயம். நாம் இருவரும் மறுமணம் என்ற பெயரில் இணைய நினத்தோம் என்பது எக்காரணம் கொண்டும் நம் குழந்தைகளுக்குத் தெரிந்துவிடக் கூடாது. நமக்குள் எழுந்த அந்த நினைவும் சாம்பலாக வேண்டும்."

"நிச்சயமாக சார். இதோ அந்தக் கடிதம், என் கைப்பையிலேயே வைத்திருக்கிறேன். நீங்கள் எங்கள் குடும்பத்தில் இணைந்தால் ஏற்படக்கூடிய மாறுதல்கள் பற்றிச் சிந்தித்தேன் சார். கார்த்தி வள்ளிநாயகி அண்ணன் தங்கையாவார்கள் என்ற எண்ணம்தான் எனக்கு முதலில் தோன்றியது. அப்போது கூட எனக்கு அவர்களை வாழ்வில் இணைத்தால் என்ன என்று தோன்றவில்லை, பாவி நான்!"

"எனக்கும் அந்த எண்ணம் மனதில் படவே இல்லையே அம்மா! இத்தனை வயதில் எனக்குள் அப்படியென்ன சபலம் என்று இப்போது குழம்புகிறேன். போகட்டும். நடந்ததும் நடக்க இருந்ததும் பக்க விளைவுகள் இல்லாமல் முடிந்தது முருகன், அபிராமி அருளால்தான் என்று மனதைத் தேற்றிக்கொள்வோம். நாம் சம்பந்திகளாக இணைவது உலகம் ஒப்புவதாகவும், மிகவும் இயல்பாகவும் இருக்கும். அதை எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டான் கார்த்திக்!"

"சிறியவர்கள் விருப்பப்பட்ட பெரியவர்களின் ஏற்பாட்டுக் கல்யாணம்! வள்ளியும் மிக அழகாகச் சொல்லிவிட்டாள்!"

"அப்படியானால் பெண்ணின் தந்தை என்ற முறையில் முதலில் நான் உங்களிடம் கேட்கிறேன்: என் மகள் திருவளர்ச் செல்வி வள்ளிநாயகியை உங்கள் மகன் திருவளர்ச் செல்வன் கார்த்திக் அவர்கள் மணம் செய்துகொள்ள உங்களுக்கு சம்மதம்தானே?"

"அதைவிட வேறென்ன பேறு எங்களுக்கு வேண்டும் மணிவண்ணன் சார்! வள்ளி எனக்கு ஏற்ற மருமகளாக அமைவாள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. கார்த்திக் பரிந்துரைப்பது போல நீங்கள் இருவரும் எங்கள் வீட்டு மாடியிலேயே குடிவந்து விடுங்கள்."

"மாப்பிள்ளை சொல்லை மனைவியில்லாத மாமனார் தட்ட முடியுமா? முருகன் திருவுளப்படி நடக்கட்டும்."

"சரியாக ஆராயாமல் நாம் ஏன் மறுமணம் என்ற இனிஷியேடிவ் எடுக்கத் துணிந்தோம் சார்? அதற்குக் குழந்தைகள் நலன் மட்டும்தான் காரணமா அல்லது அதைவிட நம் சுயநலம் காரணமா என்ற குற்ற உணர்வு மட்டும் என்னை அரித்துக்கொண்டே யிருக்கும் சார். அது அவ்வளவு சீக்கிரம் மறையாது."

"நம் சுயநலம் ஒரு காரணமாக இருக்கலாம் அம்மா! அது போன்ற சஞ்சலங்களையும் சபலங்களையும்தான் நாம் இப்போது எரியிட்டு விட்டோமே! வாழ்வில் நம் உண்மையான நிலையை இப்போதாவது நாம் தெளிவாகப் புரிந்துகொள்வேம்."

"அந்த உண்மையான நிலைமை என்பது என்ன சார்?"

"எப்போது குழந்தைகள் பிறந்தார்களோ அப்போதிருந்தே நாம் குறுகி ஒலிக்கும் சார்பு எழுத்துகள்தான் அம்மா. அவர்கள்தான் உயிரும் மெய்யுமாகிய முதல் எழுத்துகள். குழந்தைகளுக்கு மணப்பருவம் வந்து கல்யாணமானவுடன் அவர்கள் கணவனும் மனைவியுமாகி ஒருவரை யொருவர் சார்ந்து ஒலிக்கும் உயிர்மெய் எழுத்துகளாகிறார்கள். அப்போது அதுவரை கணவன்-மனைவி மற்றும் அப்பா-அம்மா என்ற அதிகாரத்துடன் உயிர்மெய் எழுத்துகளாக முழு மாத்திரையுடன் ஒலித்த பெற்றோர்கள் மாத்திரை குறைந்து குற்றியலுகரமாக, இசையும் பொருளும் நிறைக்கும் அளபெடைகளாக, ஐகார, ஔகாரக் குறுக்கங்களாக ஆகிவிடுவதைப் புரிந்துகொண்டால் கூட்டு வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்காது. அப்படியே இருந்தாலும அவை குறைவாக, எளிதில் மறைவதாக இருக்கும்."

"உண்மைதான் சார். இப்போது எனக்கு வாழ்வெனும் யாப்பின் இலக்கணம் புரியத் தொடங்கியிருக்கிறது. வாருங்கள் நம் சம்மதத்தை மறுதபாலில் குழந்தைகளுக்குத் தெரியப்படுத்துவோம். நான் வள்ளி மருமகளுக்கும் நீங்கள் கார்த்திக் மருமகனுக்கும் ஒரே மாதிரியான கடிதம் தயாரித்து எழுவோம். அதுதான் நாம் மேற்கொள்ள நினைத்த அசட்டுத்தனமான முயற்சிக்குப் பிராயச்சித்தம்", என்றார் ஹேமா, வழியும் கண்ணீரைத் துடத்தவண்ணம்.

*** *** ***

Friday, May 29, 2015

007. கூட்டுக் குடும்பம்

ரமணியின் கதைகள்: ramaNiyin kathaikaL

கூட்டுக் குடும்பம்

சிறுகதை
ரமணி (Apr 2013)


ளம் இந்திய ஆடவரும் பெண்டிரும் திரைகடலோடித் திரவியம் தேடி வாழ்வில் எல்லாவித சுதந்திரங்களையும் அனுபவித்துப் பார்க்க முற்படும் தற்காலத்தின் சமூகப் பரிணாம வளர்ச்சியில் இனிவரும் நாட்களில் பெண்ணியமும் ஆணியமும் ஒன்றுடன் ஒன்று மோதிப் போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்ததில் விளைந்த குட்டிக்கதை இது.

ஆறு வயதுச் சிறுவன் அகிலேஷ்: அக்கா, நீ மட்டும் அப்பாவை ஏன் டாடின்னு கூப்பிடறே? நாமட்டும் ஏன் அப்பான்னு கூப்பிடனும்? அப்பா வேற டாடி வேறயாக்கா? ரெண்டும் ஒரே மீனிங்தான்னு என் ஃப்ரெண்ட் அரவிந்த் சொல்றானே?

எட்டு வயதுச் சிறுமி மதுமிதா: ஆமாம் அகில் கண்ணா! ஒவ்வொரு ஸன்டேயும் என்னை வந்து கூட்டிட்டுப் போவாரே, ப்ரகாஷ் அங்கிள், அவர்தான் எனக்கு அப்பா. உங்கப்பா சூர்யா வந்து உனக்கு அப்பா, எனக்கு டாடி, ஸிம்பிள்!

அகிலேஷ்: அப்போ உங்கப்பாவை நான் டாடின்னு கூப்பிடலாமா? நம்ம ரெண்டு பேர்க்கும் ஒரே அம்மா, ஆனா அப்பா டாடி வேற வேறயாக்கா?

மதுமிதா: எனக்கும் உனக்கும் ஒரே அம்மாதான். ஆனா எனக்கு இன்னொரு மம்மி இருக்கா. அவளுக்கு ஒரு குட்டிப் பாப்பாவும் இருக்கு, தீபக்ங்கற பேர்ல, தெரியுமா? ஸோ, எனக்கு ரெண்டு தம்பிங்க இருக்காங்க.

அகிலேஷ்: ஏன்க்கா எனக்கு மட்டும் மம்மி இல்லை? அம்மா வந்ததும் கேக்கப் போறேன், எனக்கும் ஒரு மம்மி வேணும்.

மதுமிதா: ஷ்..ஷ்! சத்தம் போட்டுப் பேசாதே, பாட்டி எழுந்திடப் போறா! உனக்கு ஒரு ரகசியம் சொல்றேன், ஆனா நீ அதைப் பத்தி யார்ட்டயும், மெய்ன்னா அம்மா டாடிட்ட வாய்தவறிக் கூடக் கேட்டுறக் கூடாது, ப்ராமிஸ்?

அகிலேஷ்: ப்ராமிஸ்க்கா! என்ன ரகசியம் சொல்லேன்.

மதுமிதா: கூடிய சீக்கிரம் உனக்கும் ஒரு மம்மி வரப் போறா!

அகிலேஷ்: ஹை, எப்படிக்கா?

மதுமிதா: அம்மாவும் உங்கப்பாவும் இப்பல்லாம் அடிக்கடி சண்டை போட்டுக்கறா பத்தியா? அதனாலா, டாடி வேற கல்யாணம் பண்ணிக்கப் போறார். ஸோ, உனக்கு ஒரு மம்மி கிடைப்பா. ஆனால், நீ இதுபத்தி மூச்சு விடக்கூடாது.

அகிலேஷ் (கொஞ்சம் யோசித்து): ஏன்க்கா நம்ப அம்மா அப்பா டாடிலாம் அடிக்கடி சண்டை போட்டுக்கறா? நம்ப அம்மாவும் உங்ப அப்பாவும் பிரிஞ்சதனாலதானே நீ இங்கேயும் அங்கேயுமா இருக்க வேண்டியிருக்கு. எனக்கும் ஸன்டேஸ்ல போர் அடிக்கிது. அட்லீஸ்ட் நாம சில்ட்ரன்லாம் ஒண்ணா ஒரு இடத்தில இருந்தா எவ்ளோ லவ்லியா இருக்கும்!

மதுமிதா: கவலைப் படாதே அகில் கண்ணா. நான் அதுக்கு ஒரு ப்ளான் வெச்சிருக்கேன். அது சரியா வரலேன்னா ப்லன்-ப்-யும் யோசிச்சு வெச்சிருக்கேன். கூடிய சீக்கிரம் பாரேன், நான் பெரியவங்க எல்லோரையும் ஃபோர்ஸ் பண்ணி நாம எல்லாரும் சேர்ந்து ஒரு வீக்-என்ட் பிக்னிக் போகப்போறோம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா முதல்ல நாம சில்ட்ரென் லெவல்ல ஒண்ணுசேரப் போறோம்.

தொலைபேசி மணி அடிக்க, பாட்டி விழித்துக்கொள்கிறாள். குழந்தைகள் வாயை மூடிக்கொண்டு தங்கள் ஹோம்-வர்க்கைத் தொடர்கின்றனர்.

*** *** ***
மேலுள்ள குட்டிக்கதையானது மேற்கத்திய கலாசாரத்தில் எப்படி பூதாகாரமாகப் பரிமாணம் எடுக்கக்கூடும் என்று கோடிட்டுக் காட்டி ஆங்கிலத்தில் வந்த ஒரு நகைச்சுவைத் துணுக்கின் தமிழாக்கம்:

ஏற்பட்ட திருமணமும் காதல் திருமணமும்:
ஒரு கலாசார அதிர்ச்சி

ரண்டு மனிதர்கள், ஒருவர் இந்தியர், மற்றொருவர் அமெரிக்கர் ஒரு பாரில் பக்கத்தில் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தார்கள்.

இந்தியர் அமெரிக்கரிடம் சொன்னார்: "என் பெற்றோர்கள் என்னைக் கல்யாணம் செய்துகொள்ளும்படி கட்டாயப் படுத்துகிறார்கள். குடும்பப் பாங்கான ஒரு கிராமப் பெண்ணாம். நான் அவளை ஒரு முறை கூடப் பார்த்ததில்லை!

"நாங்கள் இதை ’அரேஞ்ட் மேரேஜ்’ என்று சொல்வோம். நான் காதலிக்காத ஒரு பெண்ணை மணந்துகொள்ள எனக்கு விருப்பம் இல்லை. இதை நான் அவர்களிடம் வெளிப்படியாகச் சொல்லிவிட்டதால் குடும்பத்தில் ஏகப்பட்ட குழப்பம்..."

அமெரிக்கர் சொன்னார்: "’லவ் மேரேஜ்’ பற்றியா நீங்கள் பேசுகிறீர்கள்? என் கதையைக் கேளுங்கள்...

"மூன்று வருடங்கள் டேட்டிங் பண்ணி நான் ஒரு விதவையைக் கல்யாணம் செய்துகொண்டேன். அவளுக்குக் கல்யாண வயதில் ஒரு மகள் இருந்தாள்... இரண்டு வருடம் கழித்து என் அப்பா என் வளர்ப்பு மகளான அவளைக் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டார். இதனால் என் தந்தை எனக்கு மருமகன் ஆகிவிட, நான் என் தந்தையின் மாமனார் ஆனேன்! என் மகள் இப்போது என் அன்னையாகி, என் மனைவியே எனக்குப் பாட்டியானாள்!

"எனக்கு ஒரு மகன் பிறந்தபோது உறவின் குழப்பங்கள் விசுவரூபம் எடுத்தன. என் மகன் என் தந்தையின் சகோதரன், எனவே எனக்கு அவன் அங்க்கிள் ஆனான்! என் தந்தைக்கும் ஒரு மகன் பிறந்தபோது இன்னும் மோசமானது. இப்போது என் தந்தையின் மகன், அதாவது என் சகோதரன் எனக்குப் பேரன்! இப்படியெல்லாம் எங்கள் குடும்பத்தில் இருக்கும்போது நீ உன் குடும்தத்தில் குழப்பம் என்று சொல்வது வேடிக்கை!"

*** *** ***

Wednesday, May 27, 2015

006. பாட்டியும் பேரனும்

ரமணியின் கதைகள்: ramaNiyin kathaikaL யத்கிஞ்ச ப்ராஹ்மணோத்தமம்

பாட்டியும் பேரனும்

சிறுகதை
’ப்ராஹ்மண-பந்து’ (மார்ச் 2013)


’யத்கிஞ்ச ப்ராஹ்மணோத்தமம்’ என்பது அந்தணர்கள் தம் குலதர்மமாகப்பட்ட, வள்ளுவர் குறிக்கும் அறுதொழில்களையும், இந்த நாளிலும் தம்மால் இயன்ற அளவு செய்து வருவது அவர்களுக்கு உத்தமாக அமையும் என்பதாகும்.]

"பாட்டி பாட்டீ, நோக்கு நான் ஹெல்ப் பண்ணறேன்", என்றான் ஆறு வயதுப் பேரன். "நீதான் நேக்கு சொல்லிக்கொடுத்திருக்கையே!"

பாட்டியின் கையை பேரன் பிடித்துக்கொள்ள, இருவரும் சேர்ந்து ஹாலில் உயரே மூங்கில் கொடியில் உலர்த்தியிருந்த பாட்டியின் மடிப்புடவையை லாவகமாக ஒரு நீண்ட மூங்கில் கழியால் மேலே படாமல் எடுத்துவிட, பாட்டி, "இனி நான் பாத்துக்கிரேண்டா கண்ணா!", என்றாள். அம்மா முகவாய்க்கட்டையை ஒருதரம் தன் தோளில் இடித்தவாறே கிச்சனுக்குள் சென்றாள். அப்பா வழக்கம்போல் சோஃபாவில் உட்கார்ந்தபடி பேப்பரில் மூழ்கியிருந்தார்.

பாட்டி மடியாக ஸ்நானம் பண்ணியவுடன், பேரனும் ஸ்நானம்பண்ணிவிட்டு ரெடியாக, இருவரும் அந்த சின்ன பூஜை அறைக்குள் சென்றனர்.

"பாட்டி, இன்னிக்கு ஞாயித்துக்கிழமை. அதனால, நான் ஸந்த்யா வந்தனம் பண்ணறதை நீ கூட இருந்து பார்க்கணும்". "ஆட்டும்டா கண்ணா", என்றாள் பாட்டி. பேரனின் ஸந்தியில் பாட்டி சிற்சில உச்சரிப்பு திருத்தங்கள் செய்தபோது, "எப்படி பாட்டி உனக்கு இதெல்லாம் தெரியும்? தாத்தா வாத்யாரா இருந்தார்னு சொல்வியே, அவர் உனக்கு சொல்லிக்கொடுத்தாரா?" என்றான் பேரன். "நானும் நாளைக்குத் தாத்தா மாதிரி ஆவேன், அதுதான் நேக்குப்பிடிக்கும்".

பின்னர், பாட்டி ஷ்லோகங்கள் சொல்ல, பேரன் அவற்றை அழகாகத் திருப்பிச் சொல்ல பூஜையறை களைகட்டியது. இதற்குள் அப்பாவும் குளித்துவிட--அம்மா காலையிலேயே வழக்கம்போல் பாட்டியைத் திட்டியபடி குளித்துவிட்டிருந்தாள்--பாட்டியும் பேரனும் தரையில் உட்காந்துகொண்டு சாப்பிட்டனர். அதன்பின், அம்மாவும் அப்பாவும் டைனிங் டேபிளில் அமர்ந்து அரட்டையடித்தாவாறே சாப்பிட்டு முடிக்க, பேரன் அதுவரை பாட்டியிடம் கதைகள் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, அம்மாவின் "போதும் கதை கேட்டது, போய் ஹோம்வர்க் பண்ணு" குரல் ஒலிக்க, படிக்கச் சென்றான்.

மாலை அம்மாவும் அப்பாவும் ஷாப்பிங் சென்றுவிட, பாட்டியும் பேரனும் கோவிலுக்குப் போனார்கள். பாட்டி பேரனை வழக்கம்போல் ஒவ்வொரு ஸந்நிதியாக அழைத்துப்போய், அந்தந்த ஸ்வாமிகளுக்குரிய ஷ்லோகங்களையும் கதைகளையும் சொன்னாள். தீபாராதனை பார்த்துவிட்டு ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு, பேரன் கையில் விபூதி-குங்குமம் ஈரமாகக் கொண்டுவந்தபோது அப்பா-அம்மா இன்னும் வீடு திரும்பவில்லை என்று தெரிந்தது. பாட்டி தன் ஜபமாலையை உருட்டத்தொடங்க, பேரன் கொஞ்சநேரம் பாட்டியிடம் கதைகேட்டுவிட்டு, ஸ்கூல் பாடங்களை உரக்கப் படிக்க ஆரம்பித்தான்.

அம்மா பாட்டியைக் கரித்துக்கொட்டுவது வழக்கம்தான் என்றாலும் ஒரு நாள் இரவு மென்குரலில் அப்பாவிடம் தீர்மானமாகச் சொன்னாள்:

"இதப்பாருங்கோ, இதுக்கு ஏதாவது வழி பண்ணியே ஆகணும். என்னால இப்படி கஷ்டப்பட முடியாது. இந்தப்பிள்ளையும் உங்கம்மாவையே சுத்திச்சுத்தி வரது, நானும் தாத்தா மாதிரி வேத வாத்யாராவேன்னு இப்பவே பெருமையா சொல்லிக்கறது. தான் கண்ணைமூடறதுக்குள்ள பேரனுக்குப் பூணல் போடனும்னு சொன்னா உங்கம்மா. நீங்களும் சரின்னு ஆறு வயசுலேயே போட்டுவெச்சேள். இப்ப இந்தப்பிள்ளை நம்பளையே அலக்ஷியம் பண்ணறது. ஏம்மா உனக்கு பாட்டி மாதிரி ஸ்தோத்ரம்லாம் தெரியலே, நீ ஏன் பூஜை பண்றதில்ல, அப்பா ஏன் ஸந்திகூடப் பண்ணமாட்டேன்றா-ன்னு கேள்விவேற. அப்படியே தாத்தாவை உரிச்சு வெச்சிருக்கு. எல்லாம் அந்தக்கிழம் பண்றவேல. நாம் ரெண்டுபேரும் ஒடியாடி ஏதோ கொஞ்சம் சம்பாதிக்கறதால கிழம் சொகுசா அனுபவிக்கிறது. இல்லேன்னா என்னிக்கோ ஓல்டேஜ் ஹோம்ல சேர்த்திருங்கோன்னு சொல்லியிருப்பேன்."

"இவ்வளவுநாள் தள்ளினே. அம்மாக்கு வயசு எண்பதைத்தாண்டியாச்சு. வியாதி-வெக்கை இல்லேனால்லும் எவ்ளோ வீக்கா இருக்கா பாரு. எதோ ஒரு ஸங்கல்பத்ல மற்றவாளுக்கு சுமையா இருக்கக்கூடாதுன்னு தன் கார்யத்த தானே பார்த்துக்கறா. அந்த அளவுக்கு உனக்கும் எனக்கும் வசதிதானே? நம்ப சம்பாத்யத்ல குழந்தையை எஞ்ஜினீரிங், சீ.ஏ.ன்னு படிக்கவெக்க முடியாதுதான். நடக்க நடக்க பார்த்துப்பமே."

அவர்கள் அதிர்ஷ்டமோ என்னவோ பாட்டி அடுத்த வாரமே ஒருநாள் ராத்ரித் தூக்கத்திலேயே தன் உடலை நீத்தாள். இவர்களுக்கு ஒரு சொல்லமுடியாத ரிலீஃப். பேரனால்தான் தாங்கமுடியவில்லை.

பாட்டியின் படுக்கையில் தலையணை அடியில் அப்பா-அம்மா ஒரு கவரைப் பார்த்தார்கள். பிரித்தபோது அதில் இரண்டு லக்ஷம் ரூபாய்க்கு அப்பா பேரில் ஒரு செக் இருந்தது. கூடவே ஒரு சின்னக்கடுதாசி, ஒரு மாதம் முந்தய தேதியிட்டு. "ப்ரிய புத்ர, ஸ்னுஷா! உங்களுக்கு அதிக ஷ்ரமமாக, பாரமாக இல்லாமல் ஷீக்ரமே கண்ணைமூடிவிடவேணுமின்னுதான் அனுதினமும் பகவானைப் ப்ரார்த்தனை பண்ணினேன். உங்கப்பா ஆசீர்வாதத்தால் அது விரைவில் நிறைவேறும்னு நினைக்கிறேன். உங்கப்பா சேமிப்புடன் நான் சிறுகச்சிறுக சேர்த்து வைத்திருந்த இந்தப் பணத்தையும், லாக்கரில் உள்ள என் பத்துப்பவுன் நகைகளையும் நீங்கள் இஷ்டம்போல் உபயோகித்துக்கொள்ளலாம். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன். என் பேரனை,--அவன் விரும்பினால் மட்டுமே--அவனது ஏழாவது வயதில் ஒரு வேதபாடஷாலையில் சேர்த்து அவன் (தன் தாத்தா போல) தொடர்ந்து வேத அத்யயனம் பண்ண நீங்கள் அனுமதிக்கவேண்டும். செய்வீர்கள் என்று நம்புகிறேன்."

பேரனுக்குப் பாட்டியின் பணமோ கடிதமோபற்றி ஒன்றும் தெரியாது. பாட்டியின் அந்திம காரியங்கள் முடிந்ததும் அப்பாவின் முன்னிலையில் அம்மா ஒரு நாள் மாலை பேரனிடம் சொன்னாள்: "கண்ணா, கவலைப்படாதே. உனக்கு நாங்கள் இருக்கிறோம்."

"போம்மா, எனக்கு பாட்டிதான் வேணும். உனக்கு அவா மாதிரி கதை சொல்லத்தெரியுமா? நாலு ஷ்லோகம் சொல்லித்தரத் தெரியுமா? கோவிலுக்கு கூடவந்து எனக்கு சொல்லிக்கொடுக்க முடியுமா? யாருக்கு வேணும் நீயும் இந்த ஸ்கூல்லயும் சொல்லித்தற நர்சரி ரைம், அலைஸ் இன் வொண்டர்லாண்ட், மடில்டா கதைலாம்?"

"அதுதாண்டா இனிமே நமக்கு லைஃப் கண்ணா! நீ நல்லாப்படிச்சு, எஞ்ஜினீரிங் காலேஜ் சேர்ந்து கம்ப்யூட்டர் எஞ்ஜினீயர் ஆகணும். அப்போதான் எங்களமாதிரி இல்லாம, கைநிறைய சம்பாதிக்கலாம். உன்கூடப்படிக்கற ஜனனியோட அண்ணா மாதிரி ஃபாரின் போகலாம், புரிஞ்சுதா?" என்றனர் அம்மாவும் அப்பாவும் கோரஸாக.

"அதெல்லாம் முடியாது. நான் தாத்தா மாதிரி வேத பாடசாலைல படிச்சு வேதம்தான் சொல்வேன். அதுல உங்களுக்கென்ன கஷ்டம்?" என்றான் பேரன்.

"கிழம் தப்பாம ஒரு வாரிசை உருவாக்கிட்டுத்தான் போயிருக்கு", என்றாள் அம்மா.

*** *** ***

Monday, May 25, 2015

005. மானுடம் போற்றுதும்

ரமணியின் கதைகள்: ramaNiyin kathaikaL

மானுடம் போற்றுதும்

சிறுகதை
ரமணி (செப் 1990)
(இலக்கிய வேல், செப் 2014)


பாட்டிலைக் கவனமாகத் திறந்து, சாய்த்து, பியர் கிளாஸையும் சாய்த்து, அதன் உட்சுவர் வழியே பொன்னிற பியரை வழியவிட்டு முக்கால் பங்கு நிரப்பிய வாசுதேவன், "கோபி, உன் சவாலை நான் ஏற்கிறேன்" என்றான்.

"சும்மா இரய்யா, அவன் ஏதோ விளையாட்டுக்குச் சொல்றான்" என்றான் ஸ்டீபன், தன் பாட்டிலைத் திறந்தபடி.

"இல்லை ஸ்டீபன். ஒவ்வொரு மனிதனும் அடிப்படையாக நல்லவன்னு நான் ஆணித்தரமாக நம்பறேன். இதை என்னால் நிரூபிக்க முடியும்."

"அதுக்காக உன் குழந்தையைப் பணயம் வைக்க முடியுமா?"

"என் குழந்தையைப்பற்றி எனக்கு கொஞ்சம்கூடக் கவலையில்லை. மணி நாலுதான் ஆறது, ப்ராட் டேலைட். வடபழனி இங்கிருந்து எட்டு கிலோமீட்டர். சாதாரணமாக இருபது நிமிஷத்தில் போயிடலாம். ஆட்டோக்காரன் தெரியாதவனா இருந்தால் என்ன? எங்க மாமனார் வீட்ல டெலிபோன் இருக்கு, இங்கேயும் டெலிபோன் இருக்கு. ’வாட் கேன் ஹாப்பன்’?"

"ஆட்டோ நம்பரை நீ நோட் பண்ணக்கூடாது" என்றான் கோபி, தன் கிளாஸை நிரப்பியபடி.

"கோபி திஸ் இஸ் டூ மச்" என்றான் ஸ்டீபன் கூர்மையாக. "விளையாட்டு வினையாய்டக்கூடாது."

"நீ ஒண்ணும் கவலைப்படாதே ஸ்டீபன். கோபி இஸ் ரைட். ஆட்டோ நம்பரை நோட்பண்ணுவது என் நம்பிக்கைக்கு முரணானது. திருடன்கூட அடைப்படையில் நல்லவன்னு நான் நம்பறபோது ஒரு ஆட்டோ டிரைவரை நம்ப முடியாதா?"

"உன் மனைவி ஊர்ல இல்லாத இந்த நேரத்தில நீ ஒரு பெரிய, தேவையில்லாத ரிஸ்க் எடுக்கற, அவ்வளவுதான் நான் சொல்வேன்."

"வாசு, ஃபர்கெட் இட். நான் சும்மா கலாட்டா பண்ணினேன்."

"அப்ப ஒத்துக்க என்னுடைய கருத்தை."

"நோ! ஒவ்வொரு மனிதனும் அடிப்படையாக நல்லவன் என்கிற கருத்தை நான் மறுக்கிறேன். மனிதர்களில் பெரும்பாலோர் ஆதாரமாக நல்லவர்னு சொல்லு, ஒத்துக்கறேன். ஆனால் ஒவ்வொரு மனிதனும் என்பது சரியல்ல."

"ஐ ரிபீட், ஒவ்வொரு மனிதனும் அடிப்படையாக நல்லவன், அது கொலைகாரனாக இருந்தாலும்கூட. உன்னைக் கன்வின்ஸ் பண்ண நான் என் நாலுவயதுப் பையனைத் தனியா, முன்பின் தெரியாத ஆட்டோல எங்க மாமனார் வீட்டுக்கு அனுப்பணும், ஆட்டோ நம்பரை நான் நோட்பண்ணக்கூடாது, அவ்வளவுதானே? வெரி சிம்பிள்!"

நண்பர்கள் மூவரும் தன் கிளாஸைக் கையில் எடுத்துக்கொள்ள, ஸ்டீபன், "இப்படித்தான் ’மேயர் ஆஃப் காஸ்ட்டர்பிரிட்ஜ்’ நாவல்ல குடிவெறியில் தன் மனைவியைத் தொலைச்சான்" என்றான்.

"நல்லவேளை, ஞாபகப்படுத்தினே! நாம இன்னும் ஆரம்பிக்கலை. தவிர, இது ஒரு பார்ட்டி இல்லை. சும்மா ஜாலியா ஆளுக்கு ரெண்டு பாட்டில் பியர் சாப்பிடப்போறோம். நாம ஆரம்பிக்கறதுக்கு மின்ன நான் என் குழந்தையை அனுப்பிடறேன். அப்புறம் நான் குடிவெறியில செஞ்சிட்டேன்னு சொல்லிடக்கூடாது பாரு? குட்டிப்பையன்?"

"என்னப்பா?" என்று கேட்டபடி பெட்ரூமிலிருந்து ஓடிவந்தது குழந்தை. "பாட்டி வீட்டுக்குப் போலாமாப்பா?"

நீல ஷார்ட்ஸ், அரைக்கை வெள்ளை மல் ஜிப்பாவில் குழந்தையின் சந்தனநிறம் அடங்கித் தெரிந்தது, ட்ரேஸிங் காகிதத்தில் தெரியும் தங்க நகையாக. அமெரிக்கக் கொடி வண்ண வரிகளில் ஸாக்ஸ், மஞ்சள் ஷூ அணிந்து, ஜிப்பாவுக்குள் மைனர்செயின் மார்பில் புரளத் தலையைத் திருப்பியபடி அது பார்த்தபோது ஸ்டீபனுக்கு ஒரு கணம் வயிற்றை என்னவோ செய்தது.

"குட்டிப்பையன், இந்த மாமா ரெண்டு பேர்க்கும் விஷ் பண்ணு?"

"குடீவனிங்" என்று கைநீட்டியது. "எனக்கும் கொஞ்சம் கூல் டிரிங்க்பா?"

"வாட்’ஸ் யுவர் நேம்?" என்றான் ஸ்டீபன், குழந்தையின் கையைப்பற்றிக் குலுக்கியபடி.

"மை நேமிஸ் ஶ்ரீகுமார். எனக்கும் கூல் டிரிங்க் வேணும்ப்பா?"

"இப்பத்தானே கண்ணா நீ ஃப்ரூட்டி சாப்பிட்டே? பார், உன் தொப்பைகூட இன்னும் ஜில்லுனு இருக்கு!"

சிரித்தது. "போலாமாப்பா பாட்டி வீட்டுக்கு?"

"போலாமே! ஆனா, முதல்ல நீ மட்டும் போறயாம் ஆட்டோல ஜாலியா. கொஞ்ச நேரம் கழிச்சு நான் ஸ்கூட்டர்ல வருவேன். அப்பாவுக்குக் கொஞ்சம் வேலை இருக்கில்ல?"

"ஏன்ப்பா என்னைமட்டும் தனியா அனுப்பறே?"

"தனியா அனுப்பலை கண்ணா! நீ ரிக்‍ஷாவில ஸ்கூல் போறல்ல, அதுமாதிரிதானே? லுக், நாம ரெண்டுபேர்க்கும் ரேஸ். நீதான் ஆமை. நான் முயல். இந்த கோபி மாமா நரி. நீ ஃபர்ஸ்ட்டு கிளம்பிட்டே. முயல் இப்ப தூங்கிட்டிருக்கு. அது கொஞ்ச நேரம் கழிச்சு, திடீர்னு முழிச்சுப் பார்த்துட்டுக் கிளம்பும். பார்த்தா, அதுக்குள்ள ஆமை பாட்டி வீட்டு கேட்டைத் தொட்டு வின் பண்ணிடும்!"

குழந்தை கொஞ்சம் யோசித்தது. பின் அவன் கன்னத்தைத் தொட்டுத் திருப்பி, "இங்க பார், ஆட்டோவைவிட ஸ்கூட்டர்தானேப்பா ஃபாஸ்ட்டா போகும்? அப்ப முயல்தானே வின் பண்ணும்?"

"அதனாலதான் நான் கொஞ்சம் கழிச்சுக் கிளம்பப்போறேன்."

*** *** ***

நிசமாகவே அந்த முயல் தூங்கிப்போனது. பந்தயத்தை நடத்திய நரியும், பார்த்த முயலின் தோழனும்கூடத் தூங்கிப்போயின. பியரில் ஆரம்பித்த பார்ட்டி காக்டெயிலாக மாறிவிட அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர்கள் எல்லாவற்றையும் மறந்து மதுவெள்ளத்தில் மூழ்கித்திளைத்து தற்காலிகமாக அடங்கிப்போனார்கள்.

நிர்ணயித்த இலக்கை ஆமை அடையவில்லை என்ற தகவல் மூன்று முறை தொலைபேசியில் முயற்சிக்கப்பட்டு, அந்தத் தொலைபேசி எடுப்பார் இல்லாத கைப்பிள்ளையாகச் சிணுங்கி, அழுது, முயலின் குறட்டையில் ஓய்ந்துபோனது.

நான்காம் முறையாகத் தொலைபேசப்பட்டபோது விழித்துக்கொண்டான். சுற்றிலும் இருள் சூழத்தொடங்கியிருக்க, அவன் அதிர்ந்து எழுந்தபோது சுவர்க்கடியாரத்தில் கதவு திறந்துகொண்டு அந்தக் குருவி ஒருமுறை கூவியதைப் பார்த்தான்.

நீ எப்பப்பா வருவே?
ரெண்டு முள்ளும் ஸிக்ஸ்க்கு வரும்பார் அப்ப வந்திடுவேன்.

ஓ காட்!

குழந்தை இன்னமும் வந்துசேரவில்லை என்ற செய்தி தொலைபேசியில் இடற, இதயம் தாறுமாறாகத் துடிக்கத் தொடங்கியது.

நான் உடனே வரேன் என்று சொல்ல நினைத்து, "ழான் உழனே வழேன்" என்றான்.

தலை கனத்து உணர்வுகள் இன்னமும் மரத்திருக்க குளியல் அறையை நோக்கிச் சென்றபோது நினைவுகளில் பின்னகர்ந்தான்.

கோபி, உன் சவாலை நான் ஏற்கிறேன்.
ஆட்டோ ஃப்ளையோவர் வழியா போகுமா டாடி?

மாலை நாலு மணியளவில் கோபி, ஸ்டீபன் பார்த்திருக்க, கண்ணில் எதிர்ப்பட்ட ஒரு ஆட்டோவை நிறுத்தி நம்பர்கூடக் குறித்துக்கொள்ளமல் குழந்தையை ஏற்றி அனுப்பியாயிற்று.

ஆட்டோ டிரைவர் பருமனாக, மேலுதடு முழுவதும் மீசை வைத்துக்கொண்டு பக்கங்களில் நீளத் தூண்களாக இறங்கும் கிருதாக்களுடன், வலது கையில் வாட்ச்சும் சிகரெட்டுமாக இருந்தார். குழந்தையை மட்டும் அனுப்பியபோது அவனை ஒருமாதிரியாகப் பார்த்தது போலிருந்தது.

உலகத்தில் எவ்ளோ கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஏமாற்றல், அரசியல், பயங்கரவாதம் தினமும் நடக்கிறது! நீ என்னடான்னா எல்லா மனிதர்களும் அடிப்படையில் நல்லவர்கள்னு பேத்தரையே?

நீ சொல்ற செயல்கள்ல ஈடுபட்டு இருக்கிறவங்க உலகத்தோட ஜனத்தொகையில் எத்தனை பெர்சென்ட் இருக்கும்? அரை பெர்சென்ட், ஈவன் ஒரு பெர்சென்ட்? என்னய்யா இது, நூத்துல ஒருத்தன் தற்காலிகமா ஒரு கெட்ட செயல்ல ஈடுபடும்போது அவனைத் திருத்துவையா, அவனுக்குத் துணைபோவையா?

ஒருதுளி விஷம் சேர்ந்தாலும் குடத்திலுள்ள பால் முழுதும் விஷமாய்டறதே? பார்க்கப்போனா நீ சொல்ற ஒரு பெர்சென்ட்டால இந்த உலகமே ஒருநாள் அழியப்போறது.

இந்த உலகம் அவ்வளவு எளிதில் அழியாது ஸ்டீபன். புறநானூற்றுல சொல்லியிருக்காப்பல கிடைக்கமுடியாத இந்திரர் அமிழ்தமே கிடைத்தாலும் அதைப் பகிர்ந்து உண்பவர்களும், வீண் கோபம் கொள்ளாதவர்களும், விழிப்புடையவர்களும், புகழ் எனில் உயிரும் கொடுப்பவர்களும், சமத்துவ விரும்பிகளும், சமதர்ம நோக்குடையவர்களும், தமெக்கென வாழாப் பிறர்க்கென வாழுபவர்களும் உள்ளவரை இந்த உலகம் அழியாது.

இவன் ஒருத்தன், புறநானூறு-அகநானூறுன்னு கதையடிப்பான், இந்த கம்ப்யூட்டர் யுகத்தில. ஓகே, நீ சொல்றபடி பார்த்தாக்கூட நூத்துல ஒருத்தன் கெட்டவனாறது, இல்லையா ஸ்டீபன்?

அதுமாதிரி இல்லை கோபி! ஒரு மனிதனுடைய ஜீன்களில் நல்லவன் கெட்டவன்கிற செய்தி இல்லை. லுக் அட் இட் திஸ் வே! ஒவ்வொரு மனிதனும் ஒரு நடமாடும் கம்ப்யூட்டர். எ வாக்கிங், பயலாஜிகல் கம்ப்யூட்டர். உயிர்தான் அந்தக் கம்ப்யூட்டரை இயக்கும் மின்சக்தி. மனம் அதன் பேசிக் ஆப்பரேட்டிங் சிஸ்டம். ஐம்புலன்கள் அதன் உள்வாங்கும் அமைப்புக்கள். அதே ஐம்புலன்கள்--ஒரு வேளை காதுகள் தவிர்த்து--வெளியிடும் அமைப்புக்கள். மூளை அதன் ஞாபக அடுக்குகள்.

தினசரி அலுவல்களில் கம்ப்யூட்டருடன் உறவாடும் நண்பர்களுக்கு இந்த உதாரணம் பிடித்துப்போய் அவர்கள் கவனத்தை ஈர்த்ததைக் காணமுடிந்தது.

ஐ ஹாவ் மேட் எ பாயின்ட் என்ற சந்தோஷத்துடன் தொடர்ந்தான்.

ரைட், இந்த கம்ப்யூட்டருடைய அடிப்படை வேலைகல் என்ன? உயிர் வாழ்வது, இனம் பெருக்குவது. இந்தக் கம்ப்யூட்டருக்குத் தேவையான தகவல்கள் எங்கிருந்து கிடைத்தன? ஒரு காலகட்டம் வரையில் இயற்கையில் இருந்து. இப்பவும் இயற்கை ஒரு மாபெரும் தகவல்தளம்--டேட்டாபேஸ். அப்புறம் மனிதனே மனிதனுக்காக உருவாக்கிய தகவல் தளங்கள்: வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், மதக்கோட்பாடுகள், இலக்கியம், விஞ்ஞானம், கலைகள் போன்றன.

இந்தக் கோணத்தில் பார்ப்பது சுவாரஸ்யமாகத்தான் இருக்கு.

யோசித்துப்பார் கோபி! மனிதன் தனக்கு வேண்டிய தகவல்களை இயற்கை என்னும் தகவல்தளத்திலிருந்து இழுத்துக்கொண்டவரை அவனுக்குள் பேதங்கள், பிரிவுகள் இல்லாமல் இருந்தது. தகவல்களுக்காக மனிதனை மனிதன் சார்ந்தபோதுதான் நல்லது கெட்டது என்கிற அடிப்படைப் பிரிவினையும் அதையொட்டி உயர்ந்தது தாழ்ந்தது இன்னும் பல பிரிவுகள் தோன்றின. மனிதர்களில் சிலர் அமைத்த தகவல்தளங்களை மனிதர்களில் சிலர் சிதைத்ததன் விளைவுதான் உலகில் நாம் காணும் தீச்செயல்கள்...

*** *** ***

ஜெமினி மேம்பாலத்தில் ஸ்கூட்டர் தம் பிடித்து ஏறி, இடப்புறம் வளைந்து சரிந்தபோது பின்னால் அமர்ந்திருந்த கோபி, "ஐ’ம் வெரி சாரி வாசு! ஐ ஃபீல் கில்ட்டி" என்றான்.

"ப்ளீஸ் டோன்ட். நான் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை."

"எனக்கென்னவோ பயமா இருக்கு வாசு! என்ன செய்யறதுன்னே புரியலை. பேசாம போலீஸ்ல கம்ப்ளெய்ன்ட் கொடுத்திரலாமா?"

"டோன்ட் பானிக்யா. இப்பத் தேவையானது லாஜிகல் திங்க்கிங். எனக்கு இன்னும் அந்த ஆட்டோ டிரைவர்மேல் நம்பிக்கை இருக்கு."

"குழந்தையை அனுப்பி மூணு மணி நேரமாகப்போகுது வாசு!"

"இந்த அளவு தாமதத்திற்கு நிச்சயம் ஒரு எளிய, முறையான காரணம் இருக்கும் கோபி. நீ மிருணாள் சென்னோட ’ஏக் தின் ப்ரதி தின்’ மூவிபற்றிக் கேள்விப்பட்டிருக்க, இல்ல?"

"மனித உறவுகளுக்கு மட்டும் இல்லை வாசு... மனிதனோட அலட்சியங்களுக்கும் சுயநலம்தான் காரணம். என்னோட குழந்தை இல்லயேங்கற சுயநல உணர்வாலதானே நான்கூட அந்த ஆட்டோ நம்பரைக் குறிச்சிக்கலை? தட்ஸ் வொய் ஐ ஃபீல் கில்ட்டி."

"இட்ஸ் நோபடீஸ் மிஸ்டேக் கோபி. நிச்சயம் இதுக்கு ஒரு சாதாரணமான காரணம் இருக்கும். ஏதாவது பெரிய ஊர்வலம், அல்லது ஆட்டோ பிரேக்டவுன்..." அல்லது ஏதாவது ஆக்ஸிடென்ட் என்று மனதில் ஓடிய எண்ணத்தைத் தவிர்க்கமுடியாமல் கண்கள் கனத்தன.

கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் ஒரு வாகனப் பட்டறையின்முன் அந்த ஆட்டோ காலியாக நின்றிருந்தது.

இவர்கள் அதை இனம்கண்டுகொள்ள முடியாமல் கடந்தபோது பட்டறையில் இருந்த பையன் ஒருவன் கைதட்டிக் கூப்பிட்டபடி பின்னால் ஓடிவர, வாசுவின் மனதில் நம்பிக்கை வேர்கள் துளிர்விட்டன.

"சார், ஒங்க பேர் வாசுதானே?--ஆட்டோ டயர் பஞ்சராய்டுத்து--தாஸ் உங்க கொய்ந்தய வேற வண்டில கூட்டிட்டுப்போறேன்னு சொல்லச் சொன்னாரு."

"தாஸ் யாரப்பா?"

"அவர்தாங்க இந்த ஆட்டோ டைவரு. இவராண்டதானே ஒங்க கொய்ந்தய அனுப்ச்சீங்க?"

"என் பேர் எப்படித் தெரியும்?"

"ஒங்க ஊட்லர்ந்து கெளம்பறப்ப ஒங்க ஸ்கூட்டர் நம்பர தாஸண்ணன் நோட்பண்ணிக்கிட்டாராம். கொய்ந்தய வண்டில வுட்றச்ச ஒங்க தோஸ்த் ’வாசு நீ செய்யறது நல்லால்ல’னு சொன்னதைவெச்சு ஒங்க பேர் தெரிஞ்சுக்கிட்டாராம். நீங்க எப்படியும் இந்தப்பக்கம் வருவீங்கன்னு தாஸண்ணன் பார்த்திட்டிருக்கச் சொன்னாரு."

"குழந்தையை எப்ப, எந்த வண்டியில கூட்டிட்டுப் போனாரு? அவர் வண்டி எப்ப பங்க்சராச்சு?"

"கொய்ந்தயக் கூட்டிட்டுப்போய் ஒரு அவர் இருக்குங்க. தாஸண்ணனுக்குத் தெரிஞ்ச மணிங்கறவரோட ஆட்டோ தற்செயலா வந்தது. அதில ரெண்டுபேரும் ஏறி டைவர் சீட்ல குந்திகினு, பின்னால கொய்ந்தய வெச்சுக்கினு போனாங்க. மின்னால அஞ்சரை மணிக்கு தாஸண்ணனோட ஆட்டோ பஞ்சர்னு தள்ளிக்கிட்டு வந்தாரு. வள்ளுவர் கோட்டமாண்ட எதோ பெரிய தொய்ச்சங்க ஊர்வலம் போச்சாம். ஒரே கல்ட்டாவாயி சோடாபாட்டில்லாம் வுட்டுக்கிட்டாங்களாம். ரோடேல்லாம் கிளாஸு பீஸு, பஞ்சராய்ட்டாதுன்னு சொன்னாரு."

"குழந்தைக்கு ஒண்ணும் ஆகலயேப்பா? நீ பார்த்தியா குழந்தையை?"

"கொய்ந்தைக்கு ஒண்ணியும் ஆவலிங்க. அதுமாட்டு சிரிச்சிக்கினு அவங்களோட போச்சு"

*** *** ***

டபழனி அருகில் மாமனார் வீட்டை அடைந்தபோது குழந்தை இன்னும் வந்துசேரவில்லை என்னும் செய்தி அவனைத் தாக்கியது. மாமியாரின் கண்களில் கண்ணீர் தெரிந்தது. மாமனாரின் வார்த்தைகளில் கனல் தெறித்தது.

கனத்த இதயத்துடன் திரும்பியபோது மனத்தின் நம்பிக்கை விளக்குகள் அணைந்துபோய் குழந்தையைப் பற்றிய கேள்விகள் கவலையாக விஸ்வரூபம் எடுத்து இருளாக விரிந்தன.

கைகள் இயந்திரமாக ஸ்கூட்டரின் கொம்புகளைப் பற்றிச் செலுத்த, பின்னால் கோபி ஒரு ரோபோபோல் அமர்ந்திருக்க, ஆர்காடு சாலையின் சோடியம் விளக்குகளின் ஒன்றை ஒன்று குறுக்கிடும் ஒளிப்படலங்களில் சாலை நடுவே இருக்கும் வேலிகளின் நிழல்களில் தற்காலிக டைமன் கட்டங்கள் அமைந்து விலக, பார்க்கும் இடம் எல்லாம் குழந்தை தெரிந்தது. சிரித்தது. அழுதது. துவண்டது. துடித்தது. ஓய்ந்தது. மீண்டும் சிரித்தது.

*** *** ***

வீட்டை அடைந்தபோது அந்த ஆட்டோ டிரைவர் தாஸ் அவனுக்காகக் காத்திருக்க, அருகில் ஸ்டீபன் முகம்மலர நின்றிருந்தான்.

"ஸாரி ஸார், ரொம்ப பேஜாராய்ட்டது! பாம்குரோ ஓட்டலத் தாண்டினதும் ஒரு ஊர்வலத்தில மாட்டிக்கிட்டேன். சோடா பாட்டில்லாம் வுட்டு சாலைய நாறடிச்சிட்டாங்க. ஒரு அவரு ஓரங்கட்டிட்டு அப்பால வண்டிய எடுத்தா, பத்தடி போறதுக்குள்ள டயரு பஞ்சரு. அப்டியே மெதுவாத் தள்ளிக்கினுபோய் நம்ம சங்கரலிங்கம் கடைல வுட்டுட்டு, டயர்டா இருந்திச்சா, கொஞ்சம் நாஸ்த்தா பண்ணிட்டு--பையன் ஒண்ணும் வாண்டான்னுட்டான்--இதுக்குள்ளாற நம்ம மணி வரவே அவன் வண்டில பையனைக் கூட்டிட்டுப் போனேனா, கமலா தியேட்டராண்ட போலீஸ்காரன் நிறுத்திட்டான். ’எங்கய்யா கொழந்தயக் கடத்திட்டுப் போறீங்க’ன்னு மடக்கி, எவ்ளோ சொல்லியும் கேக்காம டேசன்ல ஒக்காரவெச்சிட்டான். எஸ்.ஐ. வந்தாத்தான் வுடுவேன்னுட்டான். அங்கயே ஒரு அவரு ஆயிட்டது. ஒரு வழியா கெஞ்சிக் கூத்தாடி மணிய டேசன்ல வுட்டுட்டு, நான் மட்டும் பையனைக் கொண்டுபோய் விட்டீங்க. ஒங்க மாமியார் வூட்ல லெப்ட்ரைட் வாங்கிட்டாங்க. போலீஸ்ல ரிபோர்ட் பண்ணுவேன்னாங்க. போலீஸ்கிட்டர்ந்துதாமே வரேன் வெளக்கி ஸொல்லி, திரியும் டேசனுக்குப்போய் மணியக் கூட்டுக்கினு, அப்பால கடையிலபோய் வண்டிய எடுத்துகினு வரேங்க. ரொம்ப பேஜாராட்ச்சுய்யா, ஸாரிங்க."

"உன்மேல ஒண்ணும் தப்பில்லை தாஸ்", என்றான் கோபி. "உன்னோட நல்ல மனசுக்கு நாங்க ரொம்பக் கடமைப்பட்டிருக்கோம். நியாயப்படி உன்னோட ரிட்டர்ன் டிரிப்க்கும் நாங்க உனக்குப் பணம் தரனும். கமான், மறுக்காத, வெச்சுக்க!"

"ஒரு துளி விஷம்னு சொன்னேன். இப்பத்தான் புரியுது", என்றான் ஸ்டீபன், டிரைவர் சென்றதும். "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்னு."

"யு ஆர் ஆஃப்டரால் ரைட் வாசு", என்றான் கோபி. "ஸுச் அன்யூஷ்வல் கட்ஸ்!"

"என் கருத்து வெறும் நம்பிக்கை மட்டுமல்ல கோபி. அது ஓர் உணர்வு. ஒரு ஆக்ஸிடன்ட் ஆறபோது நாலுபேர் உதவ ஓடிவரும்போதும், ஒரு கண்ணில்லாதவன் சாலையைக் கடக்க முயலும்போது யாரோ ஒருவன் உதவ முன்வரும்போதும், ஏன், ஒரு தெரியாத இடத்துக்கு வழி கேக்கறபோது, கர்மசிரத்தையா ஒருவன் முன்வந்து வழிகாட்டும்போதும் எனக்கு மானுடத்தின் பேரில் நம்பிக்கை அதிகரிக்கிறது. நான் சொன்னதுபோல நாம் நம் தகவல்தளங்களை சீரமைக்கவேண்டும், குறைந்தது நம் சந்ததிக்காக."

*** *** ***

ண்பர்களிடம் விடைபெற்று மீண்டும் மாமனார் வீடு சென்றபோது குழந்தை ஓடிவந்து அவன் கால்களைக் கட்டிக்கொண்டது. அவன் கேள்விகளுக்குத் தான் அழவோ பயப்படவோ இல்லை என்றது. அந்த டிரைவர் மாமா, இன்னொரு டிரைவர் மாமா, போலீஸ் மாமா எல்லோரும் நல்லவர்கள் என்றது. சாக்லெட் கொடுத்தார்கள் என்று சட்டைப் பையிலிருந்து சாக்லெட் உறையை எடுத்துக்காட்டியது. வழியில் பெரிய யானையைப் பார்த்ததாகக் கூறியது.

குழந்தையைத் தழுவித் தடவி ஒன்றும் காயங்கள் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு கண்ணீர் உகுத்தான்.

அவனது செய்கைகளைக் கவனித்த அவன் மாமியார், "தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு. நானே இப்பத்தான் கவனிச்சேன்", என்றார். "இனிமேல் இதுமாதிரி விஷப்பரிட்சை எல்லாம் வேண்டாம்."

"என்ன சொல்றேள் நீங்க?"

"குழந்தையின் கழுத்தைப் பாருங்கோ."

*** *** ***

Friday, May 22, 2015

004. பெண்மையின் அவலங்கள்

ரமணியின் கதைகள்: ramaNiyin kathaikaL

பெண்மையின் அவலங்கள்

சிறுகதை
ரமணி
(அமுதசுரபி, மே 1990)
(சிறுகதைப் போட்டியில் முதல் பரிசைப் பகிர்ந்துகொண்ட இரண்டு கதைகளில் ஒன்று)


"மன்னி, உங்களுக்கு அமெரிக்கன் ஸாஃப்ட்வேர் கம்பெனிலர்ந்து லெட்டர் வந்திருக்கு!"

ராதாவின் வார்த்தைகளில் தெறித்த உற்சாகம் என்னையும் தொற்றிக்கொள்ள, செருப்பைக்கூடக் கழற்றத் தோன்றாமல் அவசரமாக அந்த ஏர்-மெய்ல் உறையைப் பிரித்தேன். ராதாவும் என்னுடன் சேர்ந்து கடிதத்தின் வரிகளில் கண்களை ஓட்டினாள்.

"...உங்களுடைய ’மைக்ரோ மோஷன் பிக்சர்ஸ்’ பொழுதுபோக்கு சாஃப்ட்வேர் வகைகளில் ஓர் அறுதியான சாதனையாகும். ஒரு சிறிய, பன்னிரண்டு அங்குல கம்ப்யூட்டர் திரையில் நீங்கள் இயக்கியுள்ள முபபரிமாண கார்ட்டூன் பாத்திரங்களும், அவற்றின் வடிவமைப்பும், பின்னணி சூழல்களும் இசையும் வியக்கவைக்கின்றன. எனினும், கதை நிகழ்ச்சிகளையும் உரையாடல்களையும் எழுத்து மூலம் வெளியிடுவது கொஞ்சம் செயற்கையாகவும் மௌனப் படங்கள் போன்றும் இருக்கிறது. பதிலாக, ஒரு வாய்ஸ் சிந்தசைஸர் எவ்வளவு உதவியாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்... "

"மன்னி, உங்களை அமெரிக்காவுக்கு வரச் சொல்லியிருக்கா! ஆறு மாசம் ட்ரெய்னிங், அப்புறம் வேலை வாய்ப்பு! வாவ், கங்கிராட்ஸ் மன்னி", என்றாள் ராதா, எனக்கு முன்பாகவே கடிதத்தை முடித்தபடி.

என்னுடைய ஸாஃப்ட்வேர் படைப்பில் வாய்ஸ் சிந்தசைஸர் உதவியுடன் உரையாடல்களையும் மற்ற எழுத்து வர்ணனைகளையும் இணைக்கத் தேவையான அதிநவீன டெக்னிக்களில் ஆறுமாதகாலப் பயிற்சியும், முன்பணமும், அதன்பின் விரும்பினால் நான் அவர்களுடைய என்டர்டெய்ன்மென்ட் ஸாஃப்ட்வேர் டிவிஷனில் ரிசர்ச் அதிகாரியாகப் பணியாற்ற இரண்டு வருட வேலை வாய்ப்பும் அளிக்க அந்த அமெரிக்கக் கம்பெனி முன்வந்திருந்தது.

அத்துடன் என் படைப்புக்கான சன்மானமும் ராயல்டியும் விரைவில் நிர்ணயிக்கப்டும் என்றும், என் பதில் கண்டு அடுத்த மூன்று மாதத்திற்குள் பயண ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அந்தக் கம்பெனி அறிவித்திருந்தது.

"அம்மா, மன்னி அமெரிக்கா போகப்போறா, இன்னும் மூணே மாசத்திலே!"

ராதாவின் குரல்கேட்டு என் மாமியார் வெளிப்பட்டார்.

நான் சுருக்கமாக விஷயத்தை விளக்கிவிட்டு, அவர் ஆசியுடன் அந்தப் பயணத்தை மேற்கொள்ளப் போவதாகக் கூறியபோது, "என்னடி உளர்றே?" என்றார்.

தொடர்ந்து, "அமெரிக்காவுக் கெல்லாம் ஒரு பொம்மனாட்டி தனியாப் போய்ட்டு வர முடியுமா? உனனை யார் அந்தக் கம்பெனிக்கெல்லாம் உன் படைப்பை அனுப்பச் சொன்னா? சரிசரி, அப்புறம் பேசிக்கலாம். நீ போய்க் கால் அலம்பிண்டு அப்பாவுக்கு காப்பி டிஃபன் பண்ணிக்கொடு. ஏற்கனவே லேட்!" என்றார்.

*** *** ***

"நோ சான்ஸ்", என்றார் என் கணவர், இரவு சாப்பாட்டு மேசையில் என் அமெரிக்கப் பயண வாய்ப்பு அலசப்படும்போது.

"முதல்ல நீ என்ன கன்சல்ட் பண்ணாம இந்தக் காரியத்ல இறங்கினதே---"

நான் இடைமறிக்க நேர்ந்தது. "கன்சல்ட் பண்ணலன்னு சொல்ல்தீங்கோ. என்னிக்கு நீங்க என்னுடைய கம்ப்யூட்டர் படைப்புகள்ல அக்கறை காட்டியிருக்கீங்க? கேட்டா, எனக்குத் தெரிஞ்ச ஸாஃப்ட்வேர் பனியன், ஜட்டிதான்னு இளக்காரம் வேற... இந்தப் பாக்கேஜை டெவெலப் பண்ண ஆறு மாசமா எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? கல்ல எறிஞ்சு வெப்போம்னு அந்தக் கம்பெனிக்கு அனுப்ச்சேன். இவ்ளோதூரம் உற்சாகமா பதில் வரும்னு நானே எதிர்பார்க்கலை. திஸ் இஸ் எ லைஃப்டைம் சான்ஸ்; ப்ளீஸ், லெட்’ஸ் நாட் ஸ்கிப் இட்!"

"டோன்ட் பி ஸில்லி, ஹேமா! உனக்கு நம்ம குடும்பம் பத்தி நல்லாத் தெரியும். நம்பர் ஒன், வயசான அப்பா அம்மாவுக்குப் பணிவிடை செய்யறதைத் தவிர உனக்கு வேற எதுவும் முக்கியும் இல்லை. நம்பர் ட்டூ, ராதாவுக்குக் கூடிய சீக்கிரமே கல்யாணம் பண்ணியாகணும். நம்ப ரெண்டுபேர் சம்பளத்ல குடும்பத்தையும் நிர்வகிச்சிட்டு இவ கல்யாணத்துக்கும் சேக்கறதுக்கே தாவு தீந்துரது. இந்த நிலைமைல நான் ஒரு பெரிய ரிஸ்க் எடுக்க முடியாது."

"எனக்கென்ன விஸ்வம் இப்ப கல்யாணத்துக்கு அவசரம்?", என்றாள் ராதா. "நான் இப்பதான் போஸ்ட் கிராஜுவேஷன் பண்றேன். நானும் மன்னி மாதிரி ஒரு நல்ல கம்ப்யூட்டர் கம்பெனில ரிசர்ச் அசிஸ்டன்ட்டா ரெண்டு மூணு வருஷம் வேலை பார்த்துட்டுத்தான் கல்யாணம். எங்க காலத்லயாவது கம்ப்யூட்டர் சயன்ஸ் ஒரு காலேஜ் சப்ஜக்ட்டா இருக்கு. மன்னி’ஸ் ரியலி க்ரேட். எம்.எஸ்ஸி ஃபிஸிக்ஸ்ல அவள் யுனிவர்சிட்டி கோல்ட் மெடலிஸ்ட். சின்ன வயசிலர்ந்தே லைஃப்ல ஏதாவது ஒரு சாதனை செய்யணுங்கற உத்வேகம் இருக்கறதா மன்னி அடிக்கடி சொல்லியிருக்கா. அவளோட வாழ்க்கை லட்சியம் இப்ப பூர்த்தியாகற வாய்ப்பு. அதைக் கெடுத்திடாதீங்கோ?"

"காலேஜ் வேற, லைஃப் வேற. என்னக்கேட்டா ஒரு பொண்ணோட லட்சியம் லைஃல ஒரு நல்ல கணவன், குடும்பம் அமையணும், அமைதியா வாழ்க்கை ஓடணும், இவ்வளவோட நிக்கறது நல்லதும்பேன். ஏதோ ஒண்ணு ரெண்டு பேர் காலேஜ்ல எக்ஸ்ட்ரா ப்ரில்லியன்ட்டா இருக்கலாம். அதெல்லாம் வாழ்க்கைல அடிபட்டுப் போய்டும்."

"அந்த் ஒண்ணு ரெண்டு பேர்க்கும் வாழ்க்கை எப்படி அமையறது பார்த்தியா?"

"இவளுக்கென்னடி இப்ப கொறச்சல்?" என்றார் என் மாமியார். "வசதியான வீடு, கைநிறைய சம்பாதிக்கற புருஷன். அனுசரணையான குடும்பம். வேறென்ன வேணும் ஒரு பொண்ணுக்கு, ம்?"

"அமெரிக்கா போற இந்த சான்ஸ் விஸ்வத்துக்கு வந்திருந்தா நாம பேசாம இருப்போமாம்மா? இல்ல எனக்கு வந்தா விடுவேளா? இந்திரா காந்தி பிரதமரா இருந்த நாட்ல ஒரு பொண்ணோட தனிமனித சுதந்திரம் கல்யாணத்தோட நின்னு போவது என்ன நியாயம்?"

"அதிகப் பிரசங்கித்தனமா பேசாதடி! இங்க என்னடி உங்க மன்னிக்கு சுதந்திரத்துக்குக் கொறச்சல்? வேளா வேளைக்கு சாப்பாடு போடலையா, துணிமணி எடுத்துக் கொடுக்கலையா, மாசம் 200 ரூபாய் பாக்கட் மணி தரதில்லையா, வேறென்ன செய்யலை? என்ன பேசற நீ?"

"நீ இப்ப சொன்னதெல்லாம் சுதந்திரம் இல்லைமா; அதெல்லாம் ஒரு பொண்ணோட அத்தியாவசியத் தேவைகள், அவள் புகுந்த வீட்டோட கடமைகள். நான் சொல்ற சுதந்திரம் வந்து, ஒரு கல்யாணமான பொண்ணோட நியாயமான உணர்வுகளுக்கும், ஆசைகளுக்கும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்து, கூடுமானவரை அவற்றை நிறைவேற்றுவது. மன்னிக்குதான் இந்த வீட்ல ஒரு பத்திரிகை படிக்கவோ, அல்லது டி.வி.ல க்விஸ் பாக்கவோ நேரமோ அல்லது உரிமையோ இருக்கற மாதிரிகூடத் தெரியலையே? ஒவ்வொரு தடவையும் அவள் ஏதாவது படிக்கவோ எழுதவோ கையில் எடுக்கறபோதுதான் நீ அவளுக்கு ஏதாவது வேலை கொடுப்பே!"

மாமியார் முகம் சிவந்தார். "இதப்பாருடி! படிப்பு முக்கியமா, வாழ்க்கை முக்கியமாங்கறதை ஒவ்வொரு பொண்ணும் கல்யாணத்துக்கு முன்னாடியே தீர்மானிச்சுடணும். உனக்கும் சேர்த்துத்தான் சொல்றேன். கல்யாணம் ஆயிடுச்சுன்னா குடும்பத்தைப் பத்திய நினைவைத்தவிர எல்லாத்தையும் மூட்டைகட்டி வெச்சுடணும். உங்க மன்னியத் தனியா அமெரிக்கா அனுப்பறதுக்கில்ல. அதுக்காக வேலையையோ சம்பளத்தையோ விட்டுட்டு விஸ்வம் பின்னாடியே போகமுடியாது."

"மன்னிக்கு அமெரிக்கால தங்க இடம் இருக்கேம்மா! அவ சித்தி பையன் இருக்கானே அதே ஃப்ளாரிடால! தவிர அவள் அங்க போறதால இன்னும் கூடத்தானே சம்பாதிக்கப்போறா? ரெண்டு வருஷம்தானே? அப்புறம் இண்டியாலயே போஸ்ட் பண்றதாச் சொல்லியிருக்காளே?"

அதுவரை பேசாமல் இருந்த என் மாமனார், "நான் வேணும்னா ரெண்டு வருஷம் கூடப்போய் இருந்துட்டு வரேன்", என்றார்.

"ஆமாம், நீங்க போறேளாக்கும்! உங்களுக்கு வாசப் படியைத் தாண்டியே ரெண்டு வருஷமாச்சு...". தொடர்ந்து தனக்குள், ’கொஞ்சங்கூட விவஸ்தைகெட்ட மனுஷர்’" என்றார்.

சமையல் அறைப்பக்கம் என் தலை மறைந்ததும் தாழ்ந்த குரலில், "அப்பாவும் பொண்ணும் சேர்ந்து உசிர வாங்காதீங்கோ! எல்லாம் நான் ஒரு காரணத்துக்காகத்தான் சொல்றேன். இதபார் விஸ்வம். கல்யாணமாய் ஒரு வருஷங்கூட ஆகலை. புதுப் பொண்டாட்டியைத் தனியா தூரதேசம் அனுப்சிட்டு ஏதாவது ஏடாகூடமா ஆச்சுன்னா நாலு பேர்க்கு பதில் சொல்லமுடியாது. இதுக்குத்தான் அன்னைக்கே சொன்னேன், ’ரொம்பப் படிச்ச பொண்ணுடா, ஒரு தரத்துக்கு ரெண்டு தரம் யோசிச்சிக்கோன்னு.’ எவ்வளவுக் கெவ்வளவு படிப்பும் அழகும் இருக்கோ அவ்வளவுக் கவ்வளவு திமிரும் கூடவே இருக்கே, என்ன செய்யறது? பணம் நிறைய வர்றதுன்னு ஃபாரின் போகமுடியுமா? சினிமால நடிச்சாக் கூடத்தான் பணம் வரும்! எல்லாம் இந்த சம்பாத்யத்ல குப்பை கொட்டினாப் போறும்" என்றார்.

*** *** ***

ன் கணவரின் பிடிவாதம் தொடர்ந்தது. என் பிடிவாதமும்தான்! இவர்களுக்கெல்லாம் நான் வெறும் சமையல்காரிதான் என்ற எண்ணம் மேலோங்க, மனதில் வெறுப்பும் கோபமும் சோகமும் வளர்ந்தது. கல்லூரி நாட்களில் என் அசாதாரண ஐக்யூவை வியந்து பலவிதத்திலும் என்னை ஊக்குவித்துத் துணைநின்ற என் தந்தையும் இந்த விஷயத்தில் என்னைக் கைவிட்டு, "எல்லாம் மாப்பிள்ளை சொல்றபடி செய்யம்மா" என்று நழுவியது எனக்குப் பேரிடியாக இருந்தது.

என் பாட்டி மட்டும் இருந்திருந்தால்! நான் சிறுமியாக இருந்தபோதே அவர் அடிக்கடி என் தந்தையிடம், "ரொம்ப கெட்டிக்காரப் பொண்ணுடா! நீ வேணும்னாப் பார், ஒரு நாள் இவ ஃபாரின் போகப்போறா" என்று மெச்சிக்கொண்டது ஞாபகம் வரக் கண்ணீர் துளிர்த்தது.

கடைசியில் மேலும் மூன்று மாசம் அவகாசம் கேட்டு அந்தக் கம்பெனிக்குக் கடிதம் எழுதினேன், என் கணவருக்குத் தெரியாமல். அந்தச் செய்கை என் வாழ்க்கையை எவ்வளவு தூரம் திசை திருப்பப் போகிறது என்பதை அப்போது நான் அறிந்திருக்க நியாயமில்லை. இடைப்பட்ட காலத்தில் என் நலம் விழைவோர் உதவியுடன் என் பயணத்துக்குத் தேவையான பாஸ்போர்ட் முதலியன வாங்க முயற்சிகள் மேற்கொண்டேன்.

அடுத்த சில தினங்கள் நான் யாருடனும் சரியாகப் பேசவில்லை. கேட்கப்பட்ட கேள்விகளுக்குமட்டும் கூடியவரை ஒன்றிரண்டு வார்த்தைகளில் பதில்கூறிவிட்டு நான் உண்டு என் வேலை உண்டு என்றிருந்தேன்.

வேலைகளுக்கு ஒன்றும் குறைவில்லை. ராதா கோடை விடுமுறையைக் கழிக்கத் தன் உறவினர் வீடு சென்றுவிட, அவ்வப்போது பயமுறுத்திக் கொண்டிருந்த வேலைக்காரியும் நின்றுவிட, காலை 5 மணிக்கு எழுந்ததுமுதல் இரவு 11 மணிவரை நிமிடங்கள் ஓய்வின்றி வீட்டிலும் அலுவலகத்திலும் என் பணிகள் என்னை வருத்தின. சரியான உணவும் உறக்கமும் இல்லாமல் என் முகம் களையிழந்தது. யாரும் என்னைப்பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. என் கணவருக்கு மட்டும் இரண்டு இரவுகளுக்கு ஒரு முறை நான் தேவைப்பட்டேன்.

*** *** ***

திடீரென்று ஒரு நாள் அமெரிக்காவிலிருந்து ஒரு கேபிள் வரும்வரை எனக்கு அந்த சாத்தியம் உறைக்கவில்லை. கேபிளில், நான் அந்த மாதம் 15-ஆம் தேதி அமெரிக்கா வருவதற்கான பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டதற்கு என்னிடம் இருந்து ஒப்புதல் வரவில்லை என்றும், நான் உள்ளூர் ஏர் இந்தியா அலுவலகத்திலிருந்து என் பயணச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, தேவையான கான்ட்ராக்ட் படிவங்களைக் கையொப்பமிட்டு அனுப்பக்கோரி அவர்கள் முன்பு அனுப்பியிருந்த கடிதத்திற்கு பதில் இல்லை என்றும், உடனடியாக என் ஒப்புதலைக் கேபிளில் வேண்டியும் அந்தக் கம்பெனி கேட்டிருந்தது.

"வாட் த ஹெல் யு திங்க் யு ஆர் டூயிங்?" என்றேன் என் மதிப்பிற்குரிய கணவரிடம், அன்று மாலை, அவர்முன் மேசையில் அந்தக் கம்பெனியின் முந்தைய கடித உறையை எறிந்தவாறே. "என் பெயருக்கு வந்த தபாலை என்கிட்டக்கூடக் காட்டாம டேபிள்ள வெச்சுப் பூட்ட உங்களுக்கு உரிமை இருக்கறதா நான் நினைக்கல."

"ஐ’ம் யுவர் ஹஸ்பன்ட், மைண்ட் யூ. உன்கிட்ட எனக்கு எல்லா உரிமையும் உண்டு. இப்ப நான் நினைச்சா இந்தக் கவரைக் கிழித்துப்போட முடியும்."

என் கணவரின் கைகள் அந்த உறையை நாட, நான் அதிர்ந்து, சட்டென்று செயல்பட்டு, அவரது முரட்டுத்தனத்தை சமாளித்து அந்தக் கவரை அவர் கைகளிடமிருந்து விடுவித்து பத்திரப்படுத்திக் கொண்டேன். அந்த சில நிமிடப் போராட்டத்தில் அவரது கண்ணாடி கீழே விழுந்தது.

"யு ஆர் அஸால்டிங் மீ, ப்ளடி பிட்ச்!"

அவரது கரங்கள் தாறுமாறக என் உடலில் வசைபாட நான் உதட்டைக் கடித்து அழுகையை அடக்கிக்கொண்டு, "லுக் ஹியர்! இதோட நாலஞ்சுதரம் அடிச்சாச்சு. இப்ப சொல்றேன், நான் அமெரிக்கா போகத்தான் போறேன், என்ன வந்தாலும் சரி! நாளைக்கே ஏர் இண்டியா ஆஃபீஸ் போய் டிக்கெட் கலெக்ட் பண்ணிண்டு, வர்ற பதினஞ்சாம் தேதி ஐ’ம் க்ளியரிங் அவுட் ஆஃப் யுவர் லைஃப்! யாரும் என்னத் தடுக்க முடியாது--என்னக் கொன்னுபோட்டால் ஒழிய. அதையும் செய்யத் தயங்க மாட்டேள் நீங்கள்லாம்!

*** *** ***

விமானம் புறப்பட ஒருமணி நேரம் இருந்தது. செக்யூரிடி செக் முடிந்து லௌஞ்சில் காத்திருந்தபோது மனதில் அமைதி நிறைந்திருந்தது. புயலுக்குப்பின் அமைதி. சந்நியாச பாவமானதொரு அமைதி. அல்லது துறவு.

கடந்த சில மணி நேரத்தில் நான் எல்லாவற்றையும் துறந்து, என் வாழ்வில் ஒரு பயணத்தை முடித்து மற்றொரு பயணத்தைத் தொடங்கிய நிகழ்ச்சிகளை மனதில் அசைபோட்டபோது நான் இப்போதுதான் ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையைத் தொடங்குவதாகப் பட்டது.

என் உடலின் பரிமாணங்களை மட்டும் நேசித்து என் மனதின் பரிமாணங்களைப் புறக்கணித்த உலகிலிருந்து விடுதலை.

இத்தனை நாள் வெறும் ரோபோவாக இருந்த நான் இந்த நிமிடம் முதல் ஒரு முழு மனிதனாக, சாதனையாளனாக, வளரும் கம்ப்யூட்டர் வித்தகனாகப் பரிணமித்து என்னைச் சுற்றியிருந்த கூண்டை உடைத்துக்கொண்டு வெளிப்பட்டபோது வெளியுலகம் அழகாகவும், நம்பிக்கை மிகுந்ததாகவும் தோற்றமளித்தது.

தூரத்தே மறைந்துவிட்ட சூரியனுடன் என் வாழ்வின் ஒரு அத்தியாயம் முடிந்து நாளை ஒரு புதிய பூமியில் நான் புதுப்பிறவி எடுக்கப்போவதை நினைத்துக்கொண்டபோது பயணிகள் விமானத்தில் நுழவதற்கான அறிவிப்பு வந்தது.

இன்னமும் நான் யாருக்காக அல்லது எதற்காகக் காத்திருக்கிறேன்? நிகழ்வதற்கு இன்னமும் என்ன பாக்கி இருக்கிறது?

புரிந்தது. என் மன உணர்வுகளில் லயித்திருந்தபோது நான் சற்று சாவதானமாக அமர்ந்திருக்க, காற்றில் மெலிதாக ஊசலாடிக் கொண்டிருந்த என் மாங்கல்யம் எதிரில் அமர்ந்திருந்த ஓர் இளம் அமெரிக்க ஜோடியின் கவனத்தை ஈர்க்க, அவர்கள் அதைப்பற்றி மெல்லிய குரலில் ஏதோ உரையாடிக்கொண்டிருக்கத் திரும்பிப் பார்த்தபோது என் கணவர் பூனைபோல வந்து அருகில் நின்றிருந்தார், தனது இடது உள்ளங்கையை விரித்தபடி.

"வாசப் படியத் தாண்டறதுக்கு மின்ன, கட்டின தாலியைக் கழட்டி வெச்சுட்டுப் போடி நாயேன்னு சொன்னனில்ல? எவ்வளவு திமிர் இருந்தால் லெட்டர் எழுதி வெச்சிட்டு, நான் ஆஃபீஸில் இருந்து வீடு திரும்பறதுக்குள்ள கிளம்பிவருவ? என்னையே வேண்டான்னதுக்கப்புறம் நான் கட்டிய தாலி மட்டும் எதுக்கடி உனக்கு? கமான், ரிமூவ் இட்!"

"ஓவராக் கத்தாதீங்கோ. இந்தப் பயணம் ஒரு நிரந்தரப் பிரிவு இல்லை. யு நோ ஐ ஹாவ் டு மேக் திஸ் ட்ரிப். கொஞ்ச நாள்ல நீங்க உங்க தப்பை உணர்ந்து, மனசு மாறி, என்னோட இந்த செயலை அங்கீகரிப்பீங்கன்னு இப்பவும் நான் நம்பறேன். இந்தத் தாலி அந்த வகையில நமக்கிடையில் ஒரு தொலைத் தொடர்பு வளையமாகவும், எனக்கு ஒரு பாதுகாப்---"

பளார் என்று என் கன்னத்தில் அறை விழுந்தது.

"ப்ளடி பிச்! எனக்கு அறிவுரை கூற உனக்கு என்னடி தகுதியிருக்கு? கெட் லாஸ்ட், அந்தத் தாலியைக் கழட்டிக் கொடுத்திட்டு! ஆர் எல்ஸ், ஐ’ல் க்ரியேட் அ சீன் அன்ட் டிலே யுவர் ஃப்ளைட்!"

அங்குமிங்கும் புருவங்கள் உயர, அந்தக் கௌன்டர் பெண் "மேடம், யு ஆர் அல்ரெடி லேட், ப்ளீஸ்!" என்று விண்ணப்பிக்க, "ஃபைனல் கால் ஃபர் பாஸஞ்சர்ஸ் போர்டிங் த ஃப்ளைட்..." என்ற அறிவிப்பு கணீரென்று ஒலிக்க, நான் சட்டென்று தீர்மானித்து, என் மனதில் எழமுயன்ற சம்பிரதாய உணர்வுகளைக் கம்ப்யூட்டரின் ’க்ளியர் ஸ்க்ரீன்’ ஆணைபோல் சுத்தமாகத் துடைத்துக்கொண்டு, என்னுடைய கடைசி நினைவுச் சின்னத்தையும் துறந்துவிட்டு, விடுவிடுவென்று கேட்டைத் திறந்துகொண்டு, ஓட்டமும் நடையுமாக அந்த விமானத்தில் ஏறிக்கொள்ள, சில நிமிடங்களில் எஸ்கலேட்டர் விடுபட்டு அந்த விமானம் ரன்வேயில் டாக்சியித்துக்கொண்டு கிளம்பியது.

"யு ஆர் ஆல்ரைட்?" என்ற குரல் கேட்டுத் திரும்பினேன். பக்கத்தில் அந்த அமெரிக்கப் பெண்.

"ஐ’ம் ஃபைன். அன்ட் ரிலீவ்ட், தாங்க் யு."

உரிமையுடன் அவள் அணிந்திருந்த பைனாகுலரை எடுத்துக் கண்களில் பொருத்திக்கொண்டபோது, தூரத்தே என் கணவர் முகம் அஷ்டகோணலாக, கண்களில் அவநம்பிக்கையுடன் என் விமானம் சென்ற திசையில் வெறித்துக்கொண்டிருப்பது தெரிந்தது.

*** *** ***

ரு நெடிய பெருமூச்சுடன் பேனாவைக் கீழே வைத்தபோது எனக்கே வியப்பாக இருந்தது! என் கணவர்மீது எனக்கு அத்தனை வெறுப்பா, அதுவும் தாலியைத் துறக்கும் அளவுக்கு!

இந்தக் கதையின் பாத்திரங்கள் மிகைப்படுத்தப் படவில்லை. அந்த ’நான்’ வேண்டுமானால் ஒரு விதிவிலக்காக இருக்கலாம். கதையின் சம்பவங்களும் உரையாடல்களும் பெரும்பாலும் என்னைச் சுற்று வெவ்வேறு சமயங்களில் நிகழ்ந்தவையே. அவற்றை வசதிக்கேற்ப மாற்றி அமைத்துத் தொகுத்தது மட்டுமே என் பணி. என் வலிய உணர்வுகளின் ’கார்டியோக்ராஃப்’-ஆக என் பேனா கிறுக்கிவிட்ட இந்தச் சித்திரத்தில் இவ்வளவு தூரம் என்னை ஒரு தீவிரவாதியாகக் காட்டிக்கொள்ள வேண்டுமா என்ற எண்ணத்தை உடனே புறக்கணித்தேன். என்னைப் பற்றி எழுதத் துணிந்த பின் என்னைப்பற்றி எழுதத்தானே வேண்டும்?

என் முன் மேசையில் அந்த கான்ட்ராக்ட் படிவங்கள் காற்றில் அசைந்தன. எனது அரிய ஸாஃப்ட்வேர் பாக்கேஜின் முழு உரிமைகளையும் அந்தக் கம்பெனி பெயரில் மாற்றி அவர்கள் நிர்ணயித்திருந்த ’ராக் பாட்டம்’ ராயல்டிக்கு சம்மதித்திருந்தேன். அவர்கள் அளித்திருந்த பயண, வேலைவாய்ப்புகளை நிராகரித்து விட்டதில், இதுவாவது வரட்டுமே? ஏற்கனவே பதிவாகிவிட்ட விமானப் பயணச் சீட்டை ரத்து செய்துவிட என் கணவர் சென்றிருக்க, அவர் சமீப காலமாக விரித்திருந்த அன்பு வலையில் நான் வசமாக சிக்கிகொண்டுவிட, அடுப்படியில் எனக்கு வேலைகள் காத்திருக்க, நான் ஆயாசத்துடன் எழுந்துகொண்டபோது அடிவயிறு கனத்தது.

*** *** ***

Wednesday, May 20, 2015

003. முகம் தெரியாப் பகைவர்கள்

ரமணியின் கதைகள்: ramaNiyin kathaikaL

முகம் தெரியாப் பகைவர்கள்

சிறுகதை
ரமணி
(இதயம் பேசுகிறது, 13 மார்ச் 1988)


முரளிதரன் ஒரு நெடிய பெருமூச்சுடன் எழுந்துகொண்டான். கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தான். பேண்ட்டின் பின்புறம் படிந்திருந்த உலர்ந்த புல் துணுக்குகளைத் தட்டிவிட்டான்.

வலது கையில் கட்டியிருந்த டிஜிடல் கடிகாரத்தில் அவன் எப்போதோ அமைத்திருந்த அலாரம் ’கீங்க்கி...கீங்க்கி...’ என்று சிணுங்கியது.

"எழுந்திரு மோகனா! மணி ஆறே-காலாச்சு, போலாம். அப்பா வேற ஊர்லேர்ந்து வந்திருக்கார்."

கைகளைத் தலைக்கடியில் முட்டுக்கொடுத்து புல்தரையில் மல்லாக்கப் படுத்தபடி செக்கர் வானத்து விந்தைகளை ரசித்துக்கொண்டிருந்த மோகனா அவனை நோக்கிக் கைகளை நீட்டினாள்.

அவன் அவள் கைகளை வளையல்களுடன் பற்றி இழுத்தபோது மோகனா விலுக்கென்று எழுந்து உட்கார்ந்து தரையில் மல்லிகைப் பூக்கள் உதிர, புறங்கையால் நெற்றியில் விழுந்த குழல்களை சரிசெய்துகொண்டு, "எங்க இந்திரா?" என்றாள்.

*** *** ***

"காடி தஸ்-பந்த்ரா மினிட் மே ரவானா ஹோகி" (வண்டி பத்து-பதினஞ்சு நிமிஷத்தில் கிளம்பும்) என்றான் எதிரில் இருந்தவன்.

அவதார் சிங் தலையாட்டி நன்றி கூறிவிட்டு அந்த பஸ்ஸில் ஏறினான். பஸ் ஏறக்குறைய காலியாக இருக்க, கவுன்ட்டரில் சீக்கிய கண்டக்டர் ஒருவர் டிக்கெட் வழங்கிக் கொண்டிருந்தார்.

நுழைந்ததும் வலப்புறம் காலியாக இருந்த சீட்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து சன்னலோரம் அமர்ந்தான்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் அவன் ஓர் ஆங்கிலப் பத்திரிகையை தன் சீட்டில் வைத்துவிட்டு பேண்ட் பைகளில் கைவிட்டபடி தோளில் ஜோல்னாப்பை ஊசலாட கீழிறங்கியபோது அவன் அமர்ந்திருந்த சீட்டின் அடியில் புத்தம் புதியதொரு டிரான்சிஸ்டர் ’மறதியாக’ விடப்பட்டிருந்தது.

*** *** ***

போதுதான் குழந்தையின் ஞாபகம் வர அவர்கள் துணுக்குற்று நாலா திசைகளிலும் பார்த்தபோது கொஞ்ச தூரத்தில் ஒரு மரத்தின் பின்னால் இருந்து குரல் கேட்டது.

"டாடி, லுக் ஹியர்!"

"இந்து, கமான் நேரமாச்சு. இருட்டறதுக்குள்ள வீட்டுக்குப் போகலாம்."

அவள் குரல் வந்த திசையை நோக்கி நடந்தான்.

"இதப் பாருங்க டாடி, வொன்டர்ஃபுல்!" என்றபடி குழந்தை ஒரு மரத்தின் பின்னிருந்து வெளிப்பட்டாள்.

"ஏய், என்னது கைல டிரான்சிஸ்டர்?"

"இந்த இடத்ல புல்தரைல கிடந்தது டாடி! புதுசு! யார்தோ தெரியல, பாவம்!"

*** *** ***

னக்குக் கொடுக்கப்பட்ட ஐந்து டிரான்சிஸ்டர் பெட்டிகளையும் ஒரு வழியாக நகரின் முக்கியமான, ஜனசந்தடி மிகுந்த இடங்களில் புறக்கணித்துவிட்ட நிம்மதியுடன் அவதார் சிங் சாலையில் தன் யெஸ்டி பைக் சீராக படபடக்க வந்துகொண்டிருந்தான்.

பின்னால் ஒரு மாருதி காரின் கொம்பொலி கேட்க பைக்கின் வலப்புறக் கண்ணாடியில் பார்த்தபடி சாலை ஒரம் ஒதுங்கியவன் இந்த ஐந்து மாத காலத்தில் தன் வாழ்க்கை எவ்வளவு தூரம் மாறிவிட்டது என்று நினைத்துக்கொண்டான்.

கடந்த நவம்பர் மாதம் டில்லியை ஆட்டிவைத்த சீக்கிய எதிர்ப்புக் கலவரங்களில் அநியாயமாகத் தாக்குண்டு உடலும் மனமும் சிதைந்து ஏறத்தாழ உயிரிழந்தவன் இறுதியில் நெருங்கிய நண்பனால் காப்பாற்றப்பட்டு இன்று உடல் தேறி மனம் பாறையாக இறுகி ஒரு ஃபீனிக்ஸ் பறவையாக மறுபிறவி எடுத்து எதற்கும் துணிந்தவனாக, பயங்கரவாதிகளின் தற்கொலைப்படையில் ஓர் உறுப்பினனாகத் திகழ்வது குறித்துப் பெருமை கொண்டான்.

சீக்கிய மதத்தையும் இனத்தையும் காக்க அவன் தன் உயிரையும் கொடுக்கத் தயாராக இருந்தான். யாரோ இரண்டு கொடியவர்கள் செய்துவிட்ட துரோகச் செயலுக்கு ஒரு சமூகத்தையே பொறுப்பாக்கி ஒரு பாவமும் அறியாத ஏராளமான சீக்கிய மக்களை அநியாயமாகக் கொன்று குவித்ததற்கு அவனுடைய முகம் தெரியாப் பகைவர்கள் பதில்கூறியே ஆகவேண்டும் என்று நினைத்துக்கொண்டபோது அவன் இதழ்களில் ஒரு குரூரப் புன்னகை அரும்பியது.

கூடவே மதம் என்பது எவ்வளவு ஆபத்தான, இருபுறமும் கூரான ஆயுதம் என்ற எண்ணம் எழுந்தது. அதனால்தான் என்னவோ சயன்ஸ் ஃபிக்‍ஷன் கதைகள் வருணிக்கும் எதிர்கால உலகங்களில் மதம் முற்றிலும் ஒழிக்கப்பட்ட ஒன்றாக விளங்குகிறது என்று தனக்குள் அனுமானித்துக்கொண்டான்.

அந்தக் கருப்பு நவம்பர் கலவரங்களில் அவன் தன் தொழிலையும் குடும்பத்தையும் உறவினர்களையும் ஒருசேர இழந்து அவனது எதிர்காலக் கனவுகள் குரூரமாகக் கலைக்கப்பட்டுவிட, அமைதியாக ஓடிக்கொண்டிருந்த அவனது தனிமனித, சமூக வாழ்வில் உணர்ச்சிகள் கொந்தளித்துப் பெருகி இன்று அவனை ஒரு காட்டாறாக மாற்றிவிட, இந்த சமூகத்தில் வாழும் சீக்கியர் அல்லாத ஒவ்வொரு மனிதனையும் அவனது நேரடிப் பகைவனாகக் கருதுவதற்கும் அவன் தயாராக இருந்தான்.

ஒரே ஒரு மனிதனைத் தவிர.

அன்று விதியின் கரங்களில் இருந்து அவனை விடுவித்த அந்த ஒரே நண்பனைத் தவிர.

"குட் ஹெவன்ஸ், ஐ ஹாவ் நாட் வார்ன்ட் ஹிம்!" என்று முனகியவன், டெலிஃபோன் பூத் ஒன்று கண்ணில்பட, வண்டியை நிறுத்திவிட்டு முரளிதரன் வீட்டு எண்களை சுழற்றத் தொடங்கினான்.

*** *** ***

முரளிதரன் அந்த டிரான்சிஸ்டர் ரேடியோவை வாங்கிக்கொண்டான். பளிச்சென்று புதிதாக இருந்தது. இடப்புறம் ஒலிபெருக்கி வரிகள் மென்மையாகத் தெரிய வலப்புறம் வால்யூம் குமிழ் அருகில் ’ஸோபர்’ என்ற பெயர் தாங்கியிருந்தது.

பார்க்க ஜப்பான் செட் போலிருக்கு என்று நினைத்துக்கொண்டான். கூடவே சென்னையிலிருந்து அன்று காலை வந்திறங்கிய அப்பாவின் ஞாபகம் வந்தது.

மோகனாவின் கேள்விகள் கவனத்தைத் திசைதிருப்ப, அவளுக்கு சுருக்கமாக விஷயத்தை விளக்கியபடி அவன் தன் ஸ்கூட்டரைக் கிளப்பினான்.

"அந்த டிரான்சிஸ்டரை நான் வெச்சுக்கறேன் டாடி! குடுங்க பாக்கலாம். வீட்லபோய்த்தான் திருகுவேன், ப்ராமிஸ்!" என்றாள் இந்திரா.

மௌனமாகத் தலையாட்டிவிட்டு டிரான்சிஸ்டர் இருந்த அந்த வலைப்பையைக் குழந்தையிடம் கொடுத்தபோது அந்த சைஸிற்கு டிரான்சிஸ்டர் கொஞ்சம் கனமாகப் படுவதாக நினைத்துக்கொண்டான். மேலும் யோசிக்க நேரமின்றி, அவர்கள் பின்னால் உட்கார்ந்ததும் அவன் கியரை நியூட்டரிலிருந்து விடுவித்து வண்டியைக் கிளப்பி சாலையில் விரைந்த மற்ற வாகனங்களுடன் ஐக்கியமானான்.

*** *** ***

"முர்லி பாஹர் கயா ஹ க்யா? ஐ’ம் அவதார் அங்கிள்... கைசே ஹை ஆப்? யூ ஆர் எக்ஸ்பெக்டிங் ஹிம் ரைட் நௌ? அச்சா, ஐ’ல் கம் அரௌன்ட் எய்ட்." (முர்லி வெளியே போயிருக்கிறானா? நான் அவதார் அங்கிள்... நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? அவனை இன்னேரம் நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? நல்லது, நான் எட்டு மணிக்கு வருகிறேன்.)

அவதார் சிங் மீண்டும் பைக்கைக் கிளப்ப முயன்றபோது சைரன் ஒலிக்க ஒரு போலீஸ் ஜீப் அவனைக் கடந்து சென்றது. தொடர்ந்து நகர பஸ் ஒன்றும் சில கார்களும் ஒரு மாருதி வேனும் விரைந்தன.

பைக்கின் வலப்புறம் கண்ணாடியில் தன் முகத்தை ஒருதரம் பார்த்துக்கொண்டான். அளவாக வெட்டிவிடப்பட்டிருந்த கேசத்தை ஹெல்மெட் மறைத்திருக்க முகம் முழுவதும் மழமழவென்று ஷேவ் செய்துகொண்டு சீக்கியப் புனித வஸ்துக்களான கேசம், கங்கா, கச்சா, கரா, கிர்பன் அனைத்தையும் துறந்து, முரளியின் வார்த்தைகளில் ஒரு ’டிப்பிகல் மத்ராஸி ப்ராமின் லட்கா’வாகக் காட்சியளித்தான்.

ஆம்புலன்ஸ் ஒன்று அலறியபடி விரைய பின்னால் மணியடித்தபடி ஒரு தீயணைப்பு வாகனமும் தொடர்ந்து மற்றொரு போலீஸ் ஜீப்பும் சென்றன.

வழிவிட்டு ஒதுங்கிய நீளமான ட்ரக் ஒன்று ’தம்’ பிடித்து சாலையின் நடுவுக்கு நெளிந்து சோம்பேறித்தனமாக ஊர்ந்துகொண்டிருக்க, அவர்களது திட்ட முதல்படி வெற்றியில் மகிழ்ந்து அவன் உற்சாகமாக பைக்கை ஓசையுடன் கிளப்பி வேகம் பிடிக்க அந்த எதிர்பாராத நிகழ்ச்சி நடந்தது.

ஸ்கூட்டர் ஒன்று அவனைக் கடந்து விரைந்து விடாப்பிடியாக ஹார்ன் விர்ரித்து அந்த நீளமான ட்ரக்கின் வலப்புறம் கடக்க முயன்றது.

அவதார் சிங் அவநம்பிக்கையுடன் பார்த்தான். ஸ்கூட்டரின் பின்சீட்டில் தாயின் மடியில் அமர்ந்திருந்த ஐந்து வயதுக் குழந்தை ஒன்று தன் மடியில் ஒரு வலைப்பையை வைத்துக்கொண்டு அதனுள்ளிருந்த டிரான்சிஸ்டர் குமிழ்களை ரகசியமாக ஆராய்ந்து கொண்டிருந்தது இவ்வளவு தூரத்திலிருந்தும் தெளிவாகத் தெரிந்தது.

அவன் தன் பைக்கின் வேகத்தை அதிகரித்து அவர்களுக்கு இடையே இருந்த தூரத்தைக் குறைக்க முற்பட்டபோது, அது முரளிதரன்தான் என்று திகிலுடன் உதயமாக, மேலும் பைக்கின் வேகத்தை அதிகரிக்க முயன்றபோது இடப்புறம் ஒரு சந்தில் இருந்து திடீரென்று வெளிப்பட்ட போலீஸ் ஜீப் ஒன்று சைரன் ஒலிக்க இடையில் நுழைந்துகொள்ள, ஸ்கூட்டர் அவன் பார்வையில் இருந்து மறைந்துபோனது.

அடுத்த சில வினாடிகள் அவதார் சிங் தன் தலைக்குள் வெற்றிடம் பாய்ந்து மரத்துப் போவதை உணர்ந்து முழுமூச்சுடன் பைக்கின் வேகத்தை மேன்மேலும் அதிகரித்து இடைவிடாது ஹார்ன் அடித்து ஒவ்வொரு வாகனமாகக் கடந்தபோது அந்த போலீஸ் ஜீப்பும் பிடிவாதமாகக் குறுக்கிட்டு முன்னால் செல்ல, பின்னால் ஒரு ஆம்புலன்ஸின் சங்கொலி கேட்க, அவன் கவலையுடன் பார்த்தபடி விரைய, முன்னால் கொஞ்ச தூரத்தில் சாலை சிணுங்கித் திரும்பியபோது திருப்பத்தில் அந்த ஸ்கூட்டர் தென்பட்டது.

*** *** ***

யாரோ தன்னை பெயர்சொல்லி உரக்கக் கூப்பிடுவதைக் கேட்ட முரளிதரன் வண்டியின் வேகத்தைக் குறைத்து திரும்பிப் பார்த்தபோது அவதார் சிங் கண்ணில்பட, சட்டென்று ப்ரேக்கை அழுத்தினான்.

மறுகணம் பின்சீட் பக்கம் எழுந்த பயங்கர ஒலியில் தன்னைத் தாக்கியது எது என்று உணர்வதற்குள் அவன் தூக்கி எறியப்பட்டு முதுகெல்லாம் ரத்த விளாறாகி எலும்புகள் நொறுங்க விழுந்தபோது, அவன் நண்பன் அவதார் கைகளால் முகத்தைப் பற்றிக்கொள்வதும் அவனது பைக் தடுமாறுவதும் கண்களில் பளிச்சிட, ’காட், ஹி இஸ் கோயிங் டு டை!’ என்று பொருத்தமில்லாமல் நினைத்தவன் அந்த நினைப்பு முடிவதற்குள் முடிந்துபோனான்.

முரளிதரனின் ப்ரேக் தோற்றுவித்த குலுக்கலில் குழந்தை இந்திராவின் விரல்கள் அந்த டிரான்சிஸ்டர் குமிழை வலம்புரித்துவிட, உள்ளிருந்த வெடிகுண்டின் டெடனேட்டர் பின்புறம் அமைந்த ஒன்பது வோல்ட் பாட்டரியுடன் இணைப்புப் பெற்று மின்பொறிகளை உதிர்க்க, சுற்றியிருந்த இருநூறு கிராம் வெடிமருந்து பற்றிக்கொண்டு ராட்சத ஆற்றலுடன் விரிவடைந்து அழுத்தத்தைப் பலமடங்கு அதிகரிக்க, குண்டின் வெளிஓடு சுக்குநூறாகி சுற்றிலும் பறந்து கணைகளாகத் தாக்க, வெடியோசையைத் தொடர்ந்த புகைமண்டலம் தெளிவானபோது பின்சீட்டில் இருந்த இருவரும் உருத்தெரியாமல் சிதைந்து கருகியிருந்தனர்.

அவதார் சிங் தலைக்குள் இன்னொரு குண்டு வெடித்து அவன் கைகள் தாமாக முகத்தைப் பொத்திக்கொள்ள, அந்த யெஸ்டி பைக் தத்தித் தடுமாறி சில அடிகள் முன்னேறி பின்னால் அந்த ட்ரக் மோத, அவன் தூக்கி எறியப்பட்டு பலத்த காயங்களுடன் சாலையில் விழுந்து மல்லாந்தான்.

ஹெல்மெட் காரணமாக இன்னமும் உயிரோடு இருந்தவன் போலீஸ் அதிகாரி ஒருவரால் பொறுக்கப்பட்டு அவரது முதல் கேள்விக்கு பதிலாகத் தன் பெயரைக் கூறியவன், "எதோ டிரான்சிஸ்டர்னு கத்தினையே, என்னய்யா அது?" என்ற அடுத்த கேள்விக்கு பதில்கூற முயன்று நினைவிழந்தான்.

*** *** ***

ம்புலன்ஸில் எடுத்துச் செல்லப்பட்டபோது அவனுக்கு நினைவு திரும்பியது. உடல் எங்கும் ரத்தக் காயங்களும் கைகால்களில் எலும்பு முறிவுகளும் திடீரென்று ஏராளமாக வலிக்கத் தொடங்க, விழியோரம் அந்த போலீஸ் அதிகாரி சன்னல் பக்கமாக அமர்ந்திருப்பதும், அருகில் இரண்டு பெரிய ஒரு சிறிய உடல்கள் வெள்ளைத் துணியால் முழுதும் மூடப்பட்டு அவனுடன் பயணம் செய்வதும் தெரிந்தது.

நடந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வர மனம் வெதும்பி, "ஐ ஹாவ் கில்ட் முர்லி! ஐ ஹாவ் கில்ட் தெம் ஆல்!" என்று மௌனமாகப் புலம்பினான்.

அந்த அதீதமான சோக வெள்ளம் அவன் நினைவுகளில் பிரவகித்து உணர்வுகளில் தளும்பிக் கண்களில் தாரையாகப் பெருக்கெடுக்க, அந்த வெள்ளத்தில் அவனுடைய விபரீத ஆசைகள், இன உணர்வுகள், காலிஸ்தான் கனவுகள் கரைந்துவிட, மின்சாரம் துண்டிக்கப்பட்ட கூறை விசிறியாக அவன் உடல் உணர்வுகள் செயல் இழக்கத் தொடங்க, அவனுக்கென்று நிர்ணயிக்கப்பட்ட வாழ்வின் கடைசிக் கணங்கள் மணிக்குமிழில் வடியத் தொடங்க, பிறந்தும் பிறவாத இறந்தும் இறவாத அந்த சோக சுக நிலையில் எண்ணங்கள் பிம்பங்களாக உருப்பெற்று அவன் முன் காற்றில் மிதந்தன.

’யூ லுக் லைக்க டிப்பிகல் மத்ராஸி ப்ராமின் லட்கா யார்!’

’எ வெரி ஸ்வீட் கர்ல் முர்லி, யுவர் இந்திரா. ஒரு இருவது வருஷம் முன்னாடி அவள் பிறந்திருந்தா ஐ வுட் ஹாவ் மேரீட் ஹர்!... இந்திரா கௌர்!... அச்சா லக்தா ஹ ந ஏ நாம்?’ (இந்தப் பெயர் நன்றாக இருக்கிறதல்லவா?)

பின்னால் ஆரவாரம் கேட்கத் திரும்பியபோது ஒரு கூட்டம் ஆயுதங்களுடன் அவன்மேல் பாய்ந்தது. அடிகளின் மழையில் அவன் மரவட்டையாகச் சுருண்டு டர்பன் கிழிய முகம் எங்கும் ரத்தம் கசிய மரக்கட்டையாகச் சாய்ந்தபோது ஸ்கூட்டர் ஒன்று ஓசையின்றி அருகில் வந்து நின்றது.

அவன் மௌனமாக முரளியின் கைகளில் கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தான். முரளி அவன் முதுகை வருடியபடி, ’ஐயாம் ஸோ ஸாரி அபௌட் யுவர் பேரண்ட்ஸ் அவதார்! அன்ட் அபௌட் யுவர் ந்யூபைல் ஸிஸ்டர்! ஒரு மதத்தோட பெயரால மனிதர்களை வேட்டையாடுவதை விடக் காட்டுமிராண்டித் தனமான செயல் இல்லை. இந்த நாட்லயா காந்தி பிறந்தார்? வி ஆர் எ ஃபர்ஸேக்கன் லாட், அவதார்! விமோசனமே கிடையாது’ என்றான்.

அவன் அந்த ஐந்து டிரான்சிஸ்டர்களையும் திறமையுடன் ஒரு பார்க், ஒரு ஹோட்டல், ஒரு வயல்வெளி, ஒரு பாங்க் மற்றும் ஒரு பஸ்ஸில் புறக்கணித்துவிட்டு வெற்றியுடன் பைக்கில் ஊர்ந்துகொண்டிருந்தபோது நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது இப்போது வெட்கமாகவும் வேதனையாகவும் அவமானமாகவும் இருந்தது.

"ஸேம் டிரான்சிஸ்டர் தட் கில்ட் ஹிம்" என்று அவன் ஈன ஸ்வரத்தில் முனகியபோது முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டு, "வாட் டிரான்சிஸ்டர் யங் பாய்? கௌன் பனாயா ஓ சப் கோலியான், போலோ" (யார் அந்த குண்டுகளைத் தயாரித்தது, சொல்லு) என்ற கட்டைக்குரல் ஒன்று காதருகில் கேட்டது.

"ப்ளீஸ், என்னத் தனியா விடுங்களேன்! நான் நிம்மதியா, அமைதியா சாகணும்" என்று கண்களை மூடிக்கொண்டான்.

"காந்திய வழிகள்ல எதும் பயன் கிடையாது" என்றது அந்த கட்டைக்குரல் ஹிந்தியில்.

ஒரு வலிய கரம் அவனது ஜனன விதைகளைப் பற்றியது. முதலில் மெதுவாகவும் போகப்போக அழுத்தமாகவும் பிசையத் தொடங்கியது.

"இப்ப சொல்லு! யார் கொடுத்தது அந்த டிரான்சிஸ்டர்?"

அவதார் பற்களைக் கடித்துக்கொண்டான். அவனும் முரளியும் அந்தக் கல்லூரியின் பின்புறம் யூரினல்ஸில் இருந்தனர். ’கவர் யுவர் சீஸ் அவதார்! எல்லாத்தயும் நேஷனலைஸ் பண்ற காலம் இது. ஏதாவது பெரிசா பாத்தா நேஷனலைஸ் பண்ணிடுவாங்க!’ என்று முரளி சிரித்தான்.

கலைடாஸ்கோப்பில் காட்சி மாரியது. முரளியும் அவனும் ஹாஸ்டல் அறையில் தலைகீழாக, ஏறக்குறைய நிர்வாணமாக நின்றுகொண்டு உடற்பயிற்சி செய்தவாறே செய்தித்தாள் படித்துக்கொன்டிருந்தனர். திடீரென்று முரளி செய்தித்தாளை விசிறி எறிந்துவிட்டு, "என்னய்யா பெரிய மதம்! தாடி வெச்சா முஸ்லிம், தலப்பா கட்டினா சீக்கியன். தாடிய எடுத்துட்டுப் பட்டையடிச்சா சைவன், நாமம் போட்டா வைஷ்ணவன். சிலுவை போட்டுண்டா கிறிஸ்துவன். அவத்துப்போட்டா எல்லாம் மனுஷன்தானய்யா?" என்றான்.

திடீரென்று எங்கிருந்தோ இரண்டு கவிதை வரிகள் தலைகாட்டின.

"குருநானக் ஷா ஃபக்கீர்
ஹிந்து கா குரு, முஸல்மான்கா பீர்."

சட்டென்று முளைத்தது அந்தக் கேள்வி. ’இறைவன் ஒருவனே என்று கரடியாகக் கத்தும் மதங்கள் யாவும் மனிதன் ஒருவனே என்று ஏன் போதிக்கத் தவறிவிட்டன?

கால்களிடையே அழுத்தமும் வலியும் அதிகமாக அவன் ஒருகணம் முழுவதும் விழித்துக்கொண்டு தன்னை எதிர்நோக்கியிருந்த போலீஸ் முகத்திடம் ஸ்பஷ்டமான ஹிந்தியில், "அவுத்துப்போட்டா எல்லோரும் மனுஷன்தான்!" என்றான்.

அவர் அவனை நம்பமுடியாமல் பார்த்தார். அவன் கண்கள் மெல்ல மூடிக்கொள்ளத் தலை சாய்ந்து எங்கும் இருள் சூழ்ந்தது.

*** *** ***

Tuesday, May 19, 2015

002. புதிய கோணங்கி

ரமணியின் கதைகள்: ramaNiyin kathaikaL
(image courtesy: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzFIBlczfrcNRWQrptTg7hDqHLXuqthoSHl8282IMGQCDZ62xsBKgrVkgztKTY8XvFQfO4jIJ6Xg3CQ5hSylfNDyCuKYgS1IPcA_vAJwZrziUKNIVCaWYgVDCak4X6CZK0-r9qEa3lJG4/s1600/download+(11).jpg)

புதிய கோணங்கி

சிறுகதை
ரமணி


ராமானுஜம் அலுவலகம் கிளம்ப சைக்கிளை சாய்த்து வலதுகாலால் பெடலைத் திருப்பி வசதியாக ஏறி அமர்ந்தபோது அவர் மனம் ’ஆட்டுக்குட்டி முட்டையிட்டு...’ என்றது.

இது மட்டுந்தானா இன்னும்
இருக்குது சாமி~...

கமலா, டேப் ரிகார்டரை சின்னதா வெச்சுக்கச் சொல்லு ரமாவை! தெரு முழுக்க அலர்றது."

"சரின்னா. நீங்க சகுனம் பார்த்து ஜாக்ரதையா கிளம்புங்கோ. அமாவாசை. மத்யானம் சாப்பாட்டுக்கு வழக்கம்போல வந்துருவேள்ல? இல்ல ஏதாவது லோன் இன்ஸ்பெக்‍ஷன் அதுஇதுன்னு--"

"இன்னிக்கு அதெல்லாம் ஒரு எழவும் கிடையாது. ரெண்டு மணிக்கு பாங்க் முடிஞ்சதும் நேரே வரவேண்டியதுதான். வரட்டுமா?"

தெருமுனையில் திரும்பி நாலைந்து டீக்கடைகளையும் ஒன்றிரண்டு பரோட்டா விடுதிகளையும் கடந்து ’தம்’ பிடித்து தார் ரோட்டுக்கு ஏறி வசதியாக நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டு இருபுறமும் பின்னுக்கு விரையும் மரங்களையும் பின்னால் மெல்ல நெளியும் வயல்வெளிகளையும் காலடியில் நழுவும் தார் ரோட்டின் செழுமையையும் ரசித்தபடி வழுக்கிக்கொண்டு முன்னேறியபோது மனம் மீண்டும் அந்தப் பாடலை முணுமுணுத்தது.

சென்ற வாரம் ஈச்சங்குடி கீற்றுக் கொட்டகையில் சாய்வு நாற்காலியில் வசதியாக அமர்ந்து பார்த்த அந்தப் படத்தின் குறிப்பிட்ட பாடல் காட்சி மனத்திரையில் விரவியது.

சப்பாணியின் அபிநயங்களும் ஶ்ரீதேவியின் சிரிப்பலைகளும் அவர் உற்சாகத்தைத் தூண்ட, ’கிட்டத்தட்ட பாரப்பா பழனியப்பா மெட்ட மாத்திப்போட்ட மாதிரி இருக்கு’ என்று நினைத்துக்கொண்டார்.

நீண்டநாள் கழித்து ஒரு மாறுதலுக்காகப் பார்த்த அந்தப் படத்தின் பாதிப்பில் மனதில் புதிய கோணங்கள் விரிய,

"பாரப்பா பழனியப்பா,
பட்டணமாம் பட்டணமாம்!
ஊரப்பா பெரியதப்பா
உள்ளந்தான் சிறியதப்பா
கதையில்ல சாமி இப்போ
காணுது பூமி!"

என்று இலங்கை வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்கும் வெள்ளவத்தை சுப்பிரமனியன்போல் குரல்கொடுத்துக்கொண்டு, குறிப்பிட்ட இடம் வந்ததும் சைக்கிள் தானாக இடப்புறம் ஈச்சங்குடி செல்லும் ஒற்றையடிப் பாதையில் திரும்ப, மணல் பாதையின் சரிவில் அனிச்சையாக இறங்கியவர் எதிரில் சட்டென்று விஸ்வரூபம் எடுத்த இரண்டு கழுதைகள்மேல் மோதவிருந்து சமாளித்து ஹாண்டில்பாரை ஒடித்து பிரேக் பிடிக்காமல் தடுமாறி விழுந்தார்.

கழுதைகள் மிரண்டு நாலுகால் பாய்ச்சலிட, ஒட்டிவந்த சிறுவன் திகைத்துநின்று, "என்ன சாமி, பாத்து வரக்கூடாது?" என்றான்.

புழுதியைத் தட்டியபடி எழுந்து தன் பஞ்சகச்ச வேஷ்டியையும் சைக்கிளையும் ஒரே சமயத்தில் சரிசெய்ய முயன்றவர் குழப்பத்தில், "ஏண்டா, நீயும் பாத்து வந்திருக்கலாமில்ல?" என்றவாறே தலையை உயர்த்தியபோது பையன் கழுதைகள் பின்னால் இரண்டுகால் பாய்ச்சலிட்டுக்கொண்டிருந்தான்.

*** *** ***

ச்சங்குடியின் சிக்கனமான கடைத்தெருவின் முனையிலிருந்த வங்கியின்முன் அவர் நின்றபோது கதவு பூட்டியிருந்தது.

’எங்க போய்ட்டான் இந்த வடிவேலு? கார்த்தால ஏழுமணிக்கே வந்து சாவியை வாங்கிண்டுபோனானே?’ என்ற நினைவுடன் அவர் வங்கியைத் திறந்தபோது கைக்கடிகாரம் எட்டு-நாற்பது காட்ட, அந்தப் பாடலின் கடைசி அடிகள் காற்றில் மிதந்து வந்தன.

மெயினைப்போட்டுவிட்டு அவர் ஹால் கதவைத் திறந்தபோது மின்விசிறிகள் இரண்டு வேகம்பிடித்துச் சுழல, தரையில் சிதறியிருந்த கசங்கிய காகிதங்கள் வட்டமடித்து சலசலக்க, கவுண்டர்மேலிருந்த படிவங்களும் ஸ்பைக்கில் செருகியிருந்த அடிக்கட்டைகளும் காற்றில் படபடத்தன.

மனம் அலுத்துக்கொண்டாலும் கைகள் பொறுமையாக ஒவ்வொரு ஸ்விட்ச்சாக அணைக்க, காஷியர் மேசைமேல் திறந்தபடி இருந்த ஜெனரல் லெட்ஜர் வகையறாக்களை சுமந்தபடி தன் அறைக்கு வந்தார்.

மேசையில் படிந்திருந்த ஒருநாள் புழுதிப்படலத்தை சட்டை செய்யாமல் அமர்ந்து அவர் லெட்ஜர்களைப் பிரித்தபோது மலேசியா வாசுதேவன், ’தன ததரின ததரின’ என்றார். கூடவே கழுதை ஒன்று கத்தியது.

மீண்டும் வாசுதேவன், ’தன ததரின ததரின’ என்க, மீண்டும் கழுதை கத்தியது. கடைசியில் ’ப்ரூ...’ என்று முடித்தது. தொடர்ந்து விவிதபாரதியின் மணி ஒலிக்க ஓர் அரசு வங்கி தன் விளம்பரத்தைத் தொடங்கியது.

ராமானுஜம் அனிச்சையாக இவற்றைக்கேட்டு ரசித்தபடி ’டோட்டலை’ சரிபார்த்தபோது மறுபடியும் கழுதை கத்தியது. ’சரிதான், பாடலை யாரோ டேப் செய்துவிட்டு மறுபடியும் போட்டுப் பார்க்கிறார்கள்’ என்று நினைத்துக்கொண்டார்.

இம்முறை கழுதையின் குரல் கொஞ்சம் பலமாக, அதுவும் மிக அருகில் ஒலித்தபோது திடீரென்று நினைவுக்குவந்து திடுக்கிட்டார்!

ஓசையுடன் பூட்டுக்களைத் திறந்துகொண்டு ஓட்டமும் நடையுமாக பின்கட்டுக்குச் சென்று பார்த்தபோது அந்தத்தூண் வெறுமையாக் காட்சியளித்தது.

’இதென்ன சோதனை!’ என்று திரும்பியபோது ’ஸ்ட்ராங் ரூம்’ எதிரில் ’ரெகார்ட் ரூமி’லிருந்து அந்த ஒலி வருவதைக் கவனித்தார்.

பரபரப்புடன் விளக்கைப்போட்டுப் பார்த்தபோது பூட்டிய அறையின் உள்ளிருந்து ஜன்னல் கம்பிகளின் வழியே மூக்கை நீட்டியபடி ஒரு கழுதை இவரைப்பார்த்து ’ப்ரூ...’ என்றது! தோழமையுடன் கால்களைப் பரப்பிக் காதுகளை உயர்த்தியது.

கண்களில் பயத்துடன் கனக்கும் இதயத்துடன் அவர் கழுதையைத் தாண்டிப் பார்வையை ஓடவிட்டார்.

வழக்கமாத் தரையில் படிவங்களும், சலான்களும், அவிழ்க்கப்பட்ட வவுச்சர் கட்டுகளும், இன்னபிற காகிதங்களும் இறைந்து காணப்படும் ’ரெகார்ட் ரூம்’ துடைத்து மெழுகியதுபோல் காட்சியளித்தது! ஓரத்தில் கள்ளிப் பெட்டிகளின்மேல் அடுக்கியுருந்த பழைய லெட்ஜர்களில் ஒன்றிரண்டு பிரிந்துகொண்டு இவ்வளவு தூரத்திலிருந்து பார்க்கும்போதும் பக்கங்கள் குறைந்து கிழிந்து காணப்பட்டன.

சட்டென்று மூண்ட கோபாக்னியில் அந்தக் கழுதையை எரித்துவிடுபர்போல் பார்த்தவர், சாவியைத்தேடிக் கிடைக்காமல், சாவியை அவர் வீட்டு அலமாரியில் மறதியாக இடம்மாறி வைத்தது நினைவுக்கு வர, ராமானுஜம் ஓர் உத்வேகத்துடன் பாய்ந்து ஜன்னல் கம்பிகளில் கைவிட்டுக் கழுதையின் தலையைப்பற்ற முயன்று காதுகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்.

பின்னர் அவர் ஒரு தேர்ந்த மல்யுத்த வீரர்போல் சட்டென்று கையை விலக்கிக் கழுதையின் பிடரியில் பற்றி அங்குக் குறுக்கிட்ட கயிற்றைப் பிடித்திழுத்து ஜன்னல் கம்பிகளில் தறிநெய்து இறுக்கமாகக் கட்டினார்.

*** *** ***

ழுதையால் ஏற்பட்ட கோபம் ’அந்த மடக்கழுதை’ வடிவேலு பக்கம் திரும்ப அவர் மூச்சுவாங்க ஹாலுக்கு வந்தபோது சுவரில் மாட்டியிருந்த புகைப்படங்களில் அதே கழுதை ’போஸ்’ கொடுத்துக்கொண்டிருக்க, சலவைத்தொழிலாளி ராஜு ஓர் அசட்டுப் புன்னகையுடன் மத்திய மக்கள் நலத்துறை அமைச்சரிடம் கடன் உதவிக்கான காசோலையை வாங்கிக்கொண்டிருந்தான். அருகில் வாயத்திறந்துகொண்டு ராமானுஜம்.

அப்போதய அவசர நிலையிலும் அந்தக் காட்சி மனதில் சில வினாடிகள் ஓட அவர் தனக்குள் புன்னகைத்துக்கொண்டார்.

"...அதிலும் குறிப்பாக இந்த வங்கிக்கிளையின் மேலாளர் திரு. ராமானுஜம் அவர்கள் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று கருதி, சலவைத்தொழிலாளர்கள் மிகுந்துள்ள இந்தக் கிராமத்தில், கறவை மாடுகளுக்கும் காளை மாடுகளுக்குமே கடன் வழங்கி அனுபவப்பட்ட வங்கியில் இப்போது கழுதைகள் வாங்கவும் கடனுதவி அளிக்க முன்வந்து மேற்கோண்ட முயற்சிகள் பல்லாண்டுகாலம் நினைவுகூரத்தக்கன..." என்று தொகுதி எம்.எல்.ஏ. முகவுரை கூறி ஆரம்பித்துவைக்க,

அடுத்துப் பேசிய ராமானுஜம் அந்தக் கிராமத்தை பாரதியாரின் ’புதிய கோணங்கி’ பாடலில் உள்ள வேதபுரத்துக்கு ஒப்பிட்டு, அரசாங்க ஆதரவில் அவருடைய வங்கி மேற்கொண்ட முயற்சிகளால் "தரித்திரம் போகுது;செல்வம் வருகுது; ... வியாபாரம் பெருகுது; தொழில் பெருகுது; தொழிலாளி வாழ்வான்; சாத்திரம் வளருது; சாதி குறையுது; நேத்திரம் திறக்குது; நியாயம் தெரியுது" என்றெல்லாம் மளையாள பகவதியை விளித்துக் குறிகூறிக் கரவொலிகள் பெற,

அந்தக் கடன் வழங்கு விழா கோலாகலமாக நடைபெற்று, மத்திய அமைச்சர் கழுதைகளையும் காசோலைகளையும் கடன்தாரர்களுக்குத் தாரைவார்க்க, தொழிலாளி ராஜு மேடைக்குத் தன் மனைவி மற்றும் கழுதையுடன் வந்து காசோலையைப் பெற்றுக்கோண்டபோது ராமானுஜம் அடித்த ’ஜோக்’கில் பந்தல் அதிர்ந்தது.

"ராஜு, செக்கை ஜாக்கிரதையா வாங்கி பக்கத்தில உன் சம்சாரத்துக்கிட்ட கொடு. நீ பாட்டுக்கு ஞாபகமறதியா கழுதைகிட்ட கொடுத்திடாதே!"

மத்திய அமைச்சர் அந்த ’ஜோக்’கை மொழிபெயர்ப்பில் அறிந்து ("...மிலான்கோ அப்னி பத்னிகேபாஸ் தேனா...கத்தேகேபாஸ் நஹி!) ’வாவ், வாவ்!’ என்று உரக்கச் சிரித்தது ராமானுஜத்துக்குப் பெருமையாக இருந்தது."

இப்போது வெறுப்பாக இருந்தது. இன்று அதே ராஜுவும் அவன் சகாக்கள் பலரும் தாம் வாங்கிய கடன்தொகையில் பெரும்பகுதியைத் தவணைக்காலம் முடிந்தும் திரும்பச் செலுத்தாமல் நாள் கடத்த, வங்கி நடவடிக்கைகளின் முதல்படியாக அவர் அவனுக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் விட்டும் பயனில்லாது போகவே, ராஜுவின் கழுதையைப் பறிமுதல் செய்து வங்கியில் கட்ட ஏற்பாடு செய்தார்.

நேற்று மாலை அவர் மேற்பார்வையில் மெஸஞ்ஜர் வடிவேலு தாழ்வாரத்தூணில் கட்டிய கழுதை எப்படி ரெகார்ட் அறைக்குள் நுழைந்தது என்று புரியவில்லை.

ஏற்கனவே அவரிடம் பலமுறை தகராறு செய்துவிட்டு யூனியன் தயவால் அந்தக் கிளையில் ஒட்டிக்கொண்டிருந்த வடிவேலுவுக்கு இம்முறை சரியான பாடம் கற்பிக்கத் தீர்மானித்து அவர் ஒரு ’மெமோ டைப்’ செய்யத்தொடங்கினார்...

*** *** ***

"ஏண்டா அறிவுகெட்ட கழுதை!" என்றான் யூனியன் செகரட்டரி மாணிக்கம்.

"என்னையாண்ணே?" என்றான் வடிவேலு.

"இல்ல, ஒம்பக்கத்துல நிக்கிற அந்த நாலுகால் ஜந்துவை! மடையா, அப்பிடி என்னாடா ஞாபகமறதி? ரெகார்ட் ரூம்குள்ளாற கழுதை இருக்கறதுகூடத் தெரியாம எப்பிடிப் பூட்டிக்கிட்டுப்போவே? இல்ல வேணும்ட்டே செஞ்சியா?"

"நான் ஏன்ணே வேணும்ட்டு செய்யறேன்? இந்தத் தெவ்டியாக் கழுதயத் தாவாரத்லதாண்ணே கட்டிப்போட்டேன்! எப்படியோ கயித்த அறுத்துக்கிட்டுவந்து இந்த ரூம்ல நுழைஞ்சிருச்சு, நானும் கவனிக்கலே! இப்பப் பாருங்க அவ்வளவு வவுச்சரும் காலி! எஸ்.பி., கரண்ட் அகவுண்ட் லெட்ஜர்லாம்கூட வாய்வெச்சிருச்சு அண்ணே! அய்யரு என்னத் தொலச்சிட்டாரு! ஏற்கனவே அவருக்கு எம்மேல ஒரு கண்ணு..."

மாணிக்கம் கழுதையின்மேல் விழிகளை நிறுத்தி சில வினாடிகள் யோசித்தான். பின் சந்தேகத்துடன் கூடத்துக்கு நகர வடிவேலு பின்தொடர்ந்தான்.

"இங்க பாருங்கண்ணே, அய்யரு மேசைமேல ஜீயெல்! ஏற்கனவே வந்துட்டாரு போல! கழுதையை அவர்தான் கண்டுபிடிச்சு ஜன்னலோட கட்டியிருக்கணும். ஏன்னா ஸ்வீப்பரம்மா இன்னிக்கு என்கிட்ட சாவி வாங்கிக்க வரலை. ரெகார்ட் ரூம் சாவியைக் கொண்டார மறந்துட்டுத்தான் வூட்டுக்குத் திரும்பப்போயிருக்காரோ என்னமோ? நல்லவேளை, நாம அவர் இருக்கும்போது வந்து மாட்டிக்கல! இப்ப அவர் மறுபடி வர்றதுக்குள்ளாற ஏதாச்சும் செய்யுங்கண்ணே!" என்று கூறிவிட்டுத் திரும்பிய வடிவேலு, மாணிக்கம் கையில் ஒரு புதிய ’டைப்ரைட்டர் கார்பனை’ வைத்துக்கொண்டு குழல் விளக்கொளியில் படித்துக்கொண்டிருப்பதுகண்டு திடுக்கிட்டான்.

"அய்யரு ரொம்பக் காட்டமாத்தான் எழுதியிருக்காரு", என்றான் மாணிக்கம்.

"என்னண்ணே மெமோவா?"

"இல்ல வாழ்த்துமடல்! உன்மேல ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாதுன்னு கேட்டிருக்கார்."

"இப்ப என்ன செய்யறது மாணிக்கண்ணே?"

மாணிக்கம் சிகரெட் பற்றவைத்துக்கொண்டு உற்சாகமாகப் புகையை அவன்மேல் ஊதிவிட்டுக் கூறினான்.

"ஒண்ணும் செய்யவாணாம். இந்தக் கழுதையை உடனே அவுத்து பின் வழியா ஆத்துப்பக்கம் ஓட்டிவுட்ரு, யாருக்கும் தெரியாம! நான் பழையபடி கதவெல்லாம் பூட்டிட்டு வாரேன். பத்துமணி வாக்கில ஆபீசுக்கு வழக்கம்போல வருவோம். பாக்கிய நான் பாத்துக்கறேன்."

*** *** ***

’தன ததரின ததரின’ என்றார் மலேசியா வாசுதேவன்.

"டேப்பை சின்னதா வைடி ரமா-னுஜம்! அப்பா மூட்ல இல்லை, ஒதை வாங்கப்போறே!" என்றான் ஶ்ரீதர்.

"இன்னொரு தடவை ரமா-னுஜம்னு சொன்னே, பல்லை உடைப்பேன் படவா! அப்பாவைக் கேலியா பண்றே?"

ஶ்ரீதர் சட்டென்று கோபமாகி அவள் கையைப் பிறாண்ட அவள் அவனைத் தாடையில் அறைய, அவன் சட்டென்று தாவி டேப்ரிகார்டர் ஒலியைச் சின்னதாக்க முனந்தபோது அது மேலும் பெரிதாகிவிட, அவன் பயந்து புழக்கடைப்பக்கம் ஓடிவிட, வாசுதேவனின் உரத்த சங்கதிகளில் ஶ்ரீதேவி கலகலக்க, கழுதையொன்று குரல் விரக்க, ராமானுஜம் வெளிப்பட்டு ஆத்திரத்துடன் மகளைத் தலையில் குட்டி இழுத்துத் தள்ளிவிட்டு, டேப்ரிகார்டர் ஒலியைக் குறைக்க முற்பட்டபோது வாசலில் கோரஸாகக் கழுதைகள் கத்துவது கேட்டுத் திடுக்கிட்டார்!

கலவரத்துடன் அவர் வாசலுக்கு வந்தபோது அந்தத் தெருவை அடைத்துக்கொண்டு கழுதைப் பட்டாளம் ஒன்று நின்றிருந்தது! அவரைக் கண்டதும் கச்சேரி களைகட்டிவிட, கழுதைகள் தம் யஜமானர்களின் கையசைவில் விடலைப் பையன்கள் கையில் கிடத்த மௌத் ஆர்கன்கள்போல் வினோத ஒலிகள் எழுப்பின! சட்டென்று அடங்கி மென்மையாக விர்ரித்தன. உள்ளே ரமாவின் அழுகுரல் கேட்டது.

கடன் பட்டுவாடா செய்யப்பட்டபோது இருந்த ஆர்வமும் பணிவும் நட்பும் அறவே விடைபெற்றுக்கொள்ள, நூற்றுக்கும் மேற்பட்ட அந்த சலவைத் தொழிலாளர்கள் ராமானுஜத்துக்கெதிராக கோஷங்கள் எழுப்பினர்.

கோஷங்கள் அடங்கியதும் முன்னணியில் இருந்த ஒருவன் ராமானுஜத்தைப் பார்த்துக் கூறினான்.

"நீங்க செய்யறது கொஞ்சம்கூட நல்லா இல்லை சார்! நாங்க ஏதோ ஏழைத் தொழிலாளிங்க, கிடைக்கற பணத்துல அப்பப்ப கொஞ்சம் கட்டறோம். அதுகூட ஒருசில பேரால முடியறதில்லை. காரணம் தக்க வருமானம் இல்லை. நீங்க ஏதோ ஒங்க சொந்தப் பணத்துல கடன் கொடுத்தாப்பல சட்டநடவடிக்கைகள் அதுஇதுன்னு இறங்கினீங்கன்னா நாங்க ஒட்டுமொத்தமா தவணைத் தொகைகளை நிறுத்திக்கறதத் தவிர வேற வழியில்லை. தயவுசெய்து ராஜுவோட கழுதையை வெளில விட்டிடுங்க. அவர் முடிஞ்சப்ப கடனைக் கட்டிடுவார்."

"ஆறுமுகம், பேசறதைக் கொஞ்சம் யோசித்துப் பேசணும். என் சொந்தப் பணத்தைக்கூட நான் வசூலிக்காம விட்டுடலாம். ஆனா, எங்க வங்கிலேருந்து கடனாக் கொடுத்திருப்பது மக்களோட பணம். நீங்க எவ்வளவு தூரம் கஷ்டப்படறீங்களோ அவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு உழைச்சு சேர்த்துவெச்சு எங்க வங்கியை நம்பிப் பணம் போட்டிருக்கற டெபாஸிட் கஸ்டமர்களுக்கு உங்களைப்போன்ற கடன்தாரர்கள் வாங்கின பணத்தைத் திரும்பத் தரலேன்னா நாங்க என்ன பதில் சொல்லறது? சலவைத் தொழிலாளி ராஜு போன்ற சிலர் வேண்டுமென்றே காலம்கடத்தறனாலதான் நாங்க சட்ட--"

கூட்டம் அவரை முடிக்க விடவில்லை. கோஷங்கள் ஓய்ந்ததும் ஆறுமுகம் முடிவாக, "நாங்க சொல்லவேண்டியதச் சொல்லிட்டங்க. இன்னிக்கு மதியம் மூணு மணிக்குள்ளாற ராஜுவோட கழுதையை நீங்க விடுதலை செய்யாங்காட்டி நாங்களும் எங்க கழுதைகளும் உங்க வங்கி முன்னால உண்ணாவிரதம் ஆரம்பிக்கப் போறோங்க. அப்பால உங்க விருப்பம்" என்று கூறிவிட, புழுதியைக் கிளப்பிக்கொண்டு கழுதைப் பட்டாளம் கலைந்தது.

*** *** ***

"சார், இந்த மெமோவை வடிவேலு கையெழுத்து போட்டு வாங்கறதுக்கு முன்ன, அவர் செஞ்ச தப்பு என்னன்னு கொஞ்சம் விளக்கி சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்" என்றான் யூ.செ. மாணிக்கம்.

"மிஸ்டர் மாணிக்கம், நீங்க இப்படி எதுக்கெடுத்தாலும் ’டிஃபென்ட்’ பண்ணித்தான் இன்னிக்கு இந்த நிலைமையில இருக்கு. யாரா இருந்தாலும் ஒரு காரியத்தை ஒப்படைச்சா பொறுப்பா செய்ய வேணாம்? வடிவேலு அஜாக்ரதையா அந்தக் கழுதையை ’ரெகார்ட் ரூம்’ல விட்டு பூட்டிட்டுபோனதால இன்னிக்கு--"

"எக்ச்சுஸ் மி சார், ஒரு நிமிஷம்! வடிவேலுதான் அந்தக் கழுதையை ’ரெகார்ட் ரூம்’ல விட்டார்னு எப்படிச் சொறீங்க?"

"என்னய்யா இது பேத்தல்? ’ரெகார்ட் ரூமை’ப் பூட்டறச்ச உள்ளே கழுதை இருக்கறதுகூடவா தெரியாது ஒரு மனுஷனுக்கு? தாழ்வாரத்தில கட்டியிருந்த அந்தக் கழுதை எப்படி ’ரெகார்ட் ரூம்’குள்ள நுழைஞ்சது? அப்படியே நுழைஞ்சிருஞ்சாலும் ஏன் அதை அவர் பாக்கலை? செய்யறதையும் செஞ்சிட்டு இப்ப நான் வரதுக்குள்ள கழுதையை அவுத்து வெளியில விட்டுட்டாரு! கார்த்தால எங்க வீட்டு முன்னால ஒரே ஆர்ப்பாட்டம்! இப்ப நான் இந்த ஜனங்களுக்கு என்ன பதில் சொல்றது? நம்ம ’ஹெட் ஆஃபீஸ்’க்கு என்ன பதில் சொல்றது? ’ஐ யாம் ஸாரி மிஸ்டர் மாணிக்கம். ஐ கேன்னாட் டாலரேட் சச் இன்டிஸிப்ளின் இன் மை ஆஃபீஸ் எனி லாங்கர்!"

"ஸோ, வடிவேலுதான் கழுதையை ’ரெகார்ட் ரூம்’ல விட்டுப் பூட்டிட்டுப் போய்ட்டார், வடிவேலுதான் கழுதையை அவுத்து வெளியில விட்டுட்டார்னு சொல்றீங்க?"

"சொல்றது என்ன, அதானே உண்மை!"

"உண்மைன்னு நீங்க சொல்றீங்க சார். நாங்க சொல்றதுலயும் கொஞ்சம் உண்மை இருக்கலாமில்ல?"

"’வாட் நான்சென்ஸ்!’ நீங்க என்ன சொல்லப் போறீங்க புதுசா?"

"இன்னும் ஒருமணி நேரத்தில எங்க உதவிப் பொதுச்செயலாளர் வந்ததும் சொல்றோம் சார். இப்போதைக்கு நான் ஒரே ஒரு விஷயம்தான் சொல்ல விரும்பறேன். காலையில ஏழு மணிக்கு வடிவேலு உங்ககிட்ட சாவி வாங்கிட்டுப்போனதுக்கு அப்பறம் இப்பதான் பாங்க் உள்ளாற நுழையறார். ஊருக்குப்போன ஸ்வீப்பரம்மா இன்னும் வரலைபோல. ஏன்னா அவங்க வடிவேலுகிட்ட சாவி வாங்கிக்க வரலை. தவிர, ’ரெகார்ட் ரூம்’ சாவி உஙகிட்டேயும் ஒண்ணு இருக்குங்கற உண்மையை ஞாபகம் வெச்சுக்குவோம் சார்."

"வாட்டுயு மீன்?"

இந்த சமயத்தில் "குட் மார்னிங் மிஸ்டர் ராமானுஜம்!" என்று ஒருவர் அறைக்குள் நுழைய, அவரை ஒருகணம் முறத்துப் பார்த்து அடையாளம் தெரிந்துகொண்ட ராமானுஜத்துக்குத் தலை சுற்றியது. ஹெட் ஆஃபீஸ் இன்ஸ்பெக்‍ஷன்!

*** *** ***

டுத்த சில நாட்கள் அங்கு ஏற்பட்ட பிரளயத்தை இந்தச் சிறுகதையில் வர்ணிக்கமுடியாது. தொழிற் சங்கம், நிர்வாகம் மற்றும் பொதுஜனம் இவற்றின் மும்முனைத் தாக்குதலில் ராமானுஜம் துணை யாருமின்றித் தனியே போரிட முயன்று தோற்றார்.

அவர் மலைபோல் நம்பியிருந்த சட்டம், ஒழுங்கு, நியாயம், உண்மை முதலிய துணைவர்கள் ஒவ்வொருவராகப் புறமுதுகிட்டு ஓடி ஒளிந்துகொள்ள, பாரதப் போரின் கர்ணன்போல் அவர் ஒவ்வொரு கணையாக மார்பில் ஏற்று, வாய்மை எப்படியும் இறுதியில் வென்றுவிடும் என்ற நம்பிக்கையுடன் போராடி, முடிவில் தன்னைக் கல்கி அவதாரமாக நினத்துக்கொண்டு விஸ்வரூபம் எடுக்க முனைந்து தோற்று, ஓர் அரக்கனாகக் கணிக்கப்பட்டு வீழ்த்தப்பட்டார்.

ஓர் ஏழைத் தொழிலாளியின் கழுதையைப் பறிமுதல் செய்யப் பரிந்துரைத்து செயல்பட்டது மக்கள் நலனுக்கெதிரான மகத்தான குற்றமாகக் கருதப்பட்டது.

அந்தப் பறிமுதல் செய்யப்பட்ட கழுதையையும் சரிவரப் பாதுகாக்கமுடியாமல் இழந்தது அவருடைய அஜாக்ரதையைக் காட்டியது. கடைசியில் கழுதை கிடைத்தும் தொழிலாளி ராஜுவிடம் சல்லிக்காசு பெயராதது அவருடைய திறமையின்மையைக் காட்டியது.

’ரெகார்ட் ரூமில்’ கழுதை புகுந்து நாசம் விளைவித்ததற்கான பொறுப்பு சரிவர நிரூபிக்கப்படாமல் அவர் தலையில் விழுந்தது. வங்கியின் முக்கிய தஸ்தாவேஜ்களை சரிவரப் பாதுகாக்கமுடியாமல் இழக்க நேரிட்டது நிர்வாகத்தால் வன்மையாகக் கண்டிக்கப்பட்டது.

தொழிற்சங்கத் தலைவர்கள் குழப்பிய குட்டையில் அவர்மீது கணக்குகள் சரிவர நேர்செய்யப் படவில்லை, நேர்செய்வதற்கான வவுச்சர்களை இழந்தது போன்ற ஆதாரங்களின்பேரில் கிரிமினல் குற்றங்கள் சுமத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, அதிகாரிகள் சங்கம் தலையிட்டு அத்தகைய நடவடிக்கைகளைத் தவிர்த்து, அவர் நாலைந்து நாட்கள் மற்ற அதிகாரிகளின் மேற்பார்வையில் இரவும் பகலும் பாடுபட்டுக் கணக்குகளை நேர்செய்து கொடுத்து ஒருவழியாகத் தப்பினார்.

கடன்களைப் பட்டுவாடா செய்வதில் காட்டப்படவேண்டிய வேகத்தை அவற்றைப் பராமரிப்பதில் காட்டாதிருப்பது விவேகம் என்ற கசப்பான உண்மையை விழுங்கமுடியாமல், ராமானுஜம் அந்த ஊரிலிருந்து மற்றொரு குக்கிராமத்துக்கு மாற்றப்பட்டபோது, தன் ஆறுமாத சர்வீஸை விடுமுறையாக மாற்றிக்கொண்டு முன்னதாகவே ஓய்வுபெற்றார்.

*** *** ***