லைஃபா இது, சை!
சிறுகதைரமணி (Jun 2013)
[இந்தக் கதையைப் படித்துக் கருத்துச் சொல்வதுடன் மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டு இதுபோன்ற அக்கிரமச் செயல்கள் பற்றிய விழிப்புணர்வு உண்டாவதற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--ரமணி]
(கலித்துறை)
பணமும் அரசியல் பதவியும் பின்புலமாய்ப் பதுங்கியிருக்கத்
தினவெடுத்த தீமனத்தார் தன்னலம் மட்டும் தாங்குவதால்
தினமும் கண்முன்னே சூழல் கேடுறும் விளைவுகளை
வினவிட முடியாது வெதும்பிடும் மனத்தில் விளைந்தகதை.
--ரமணி
அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தின் வெளிவாசல் அருகே, தார் சாலையில் தர்ணா ஆரம்பித்தது. ஞாயிற்றுக் கிழமை. காலை பத்து மணி. இரண்டு பேர் அரை டிராயர் அணிந்துகொண்டு வளாகத்தில் நிறுத்தியிருந்த தங்கள் சொகுசுச் சிற்றுந்துகளைக் கழுவித் துடைத்துக் கொண்டிருந்தார்கள்.
குழந்தைகள் முன்னணியில் இருக்க, ஆண்களும் பெண்களுமாக ஏறத்தாழ நாற்பது பேர் அந்த அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆறு வயது முதல் பதினாறு வயது வரை சிறுவர்களும் சிறுமியர்களுமாக இருபது பேர், வகுப்பில் பெருக்கல் வாய்ப்பாடு கோரஸாகச் சொல்லும் குழந்தைகளின் உற்சாகத்துடன், ஒரு மூத்த சிறுமி ஒலித்த கோஷங்களை உரத்த குரலில் திரும்பச் சொன்னார்கள். பெரியவர்களின் குரலும் சேர்ந்து பின்புலத்தில் ஒலித்தது. குழந்தைகளுடன் நின்றுகொண்டு காவியுடையில் கையில் தடியுடனும் தண்ணீர் புட்டியுடனும் ஓர் உயரமான துறவியும் அந்த வாசகங்களுக்குக் குரல் கொடுத்தார். வாசகங்களை அழகாக விளம்பர அட்டைகளில் எழுதியும் உயர்த்திக் காட்டினார்கள்.
கக்கூஸ் நீரை...
கக்கூஸ் நீரை...
(இந்த வாசகத்தை ஒவ்வொரு முறை ஒலிக்கும் போதும் சிறு குழந்தைகள் கெக்கே-பிக்கே என்று ஓட்டைப்பல் தெரியச் சிரித்தது இயற்கையாக இருந்தது!)
கோவில் நிலத்தில்...
கோவில் நிலத்தில்...
தினமும் பாய்ச்சும்...
தினமும் பாய்ச்சும்...
கயவர் கூட்டத்தின்...
கயவர் கூட்டத்தின்...
கொட்டத்தை அடக்கு!
கொட்டத்தை அடக்கு!
பணத்தின் பெயரால்...
பணத்தின் பெயரால்...
பாதகச் செயலுக்கு..
பாதகச் செயலுக்கு..
துணை போகாதே!
துணை போகாதே!
வெளியே கக்கூஸ்...
வெளியே கக்கூஸ்...
உள்ளே கார்கள்...
உள்ளே கார்கள்...
கக்கூஸ்காரர் குடியிருப்பில்!
கக்கூஸ்காரர் குடியிருப்பில்!
மற்றோர் நலனும்...
மற்றோர் நலனும்...
சுற்றுச் சூழலும்...
சுற்றுச் சூழலும்...
வெற்றுப் பேச்சா?
வெற்றுப் பேச்சா?
துறவியும் தன் பங்குக்கு மூன்று வாசகங்களைக் கொடுத்தார்.
பெயரில் பசுமை...
பெயரில் பசுமை...
செயலில் பாதகம்!
செயலில் பாதகம்!
பணமும் செல்வமும்...
பணமும் செல்வமும்...
பாதாளம் பாயலாம்...
பாதாளம் பாயலாம்...
மேலோகம் செல்லாது!
மேலோகம் செல்லாது!
ஆத்தாள் சினந்தால்...
ஆத்தாள் சினந்தால்...
சோத்தில் மண்தான்!
சோத்தில் மண்தான்!
தர்ணா செய்த பெரியவர்கள் செல்ஃபோனில் மற்றத் தெருவாசிகளுக்கும் தகவல் சொன்னதாலும், ஊரின் மேற்கே அமைந்த ஏழை எளியோர் குடியிருப்புத் தெருக்களிலும் இந்த தர்ணா விஷயம் தெரியவர, அவர்கள் வீட்டுவேலை செய்யும் குடும்பங்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுக்க அந்த மகளிரும், இளைஞர்களும் குழந்தைகளும் உற்சாகத்துடன் சேர்ந்துகொள்ள அரை மணி நேரத்தில் கூக்குரல் இடுவோர்களின் எண்ணிக்கை நூறைத் தாண்டியது.
"அய்யா, சாலை மறியல் செஞ்சிரலாங்களா?" என்றார், கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் ஓர் ஏழை இளைஞர்.
"அதெல்லாம் வேண்டாம்", என்றார் துறவி. "இது ஓர் அமைதியான போராட்டம். வளாகத்தில் குடியிருப்போர் அவர்கள் தினமும் செய்வது தெய்வகுற்றம் என்பதை உணர்ந்து இது போன்றதொரு இழிசெயலைக் கைவிடவேண்டும் என்பதே இந்த தர்ணாவின் நோக்கம்."
கூட்டம் பெருகுவதைக் கண்ட வளாகக் குடியிருப்புச் செயலர் அவர்கள் வார்டு கௌன்சிலருக்கு அலைபேச, கௌன்சிலர் இரண்டு காவல்துறை அதிகாரிகளுடன் அடுத்த பதினைந்து நிமிடத்தில் ஸ்தலத்தில் ஆஜரானார்.
கௌன்சிலரும் காவல்துறை அதிகாரிகளும் கூட்டத்தை சமாதானப் படுத்த முயன்று, தர்ணா செய்வோர் குற்றச்சாட்டில் உண்மையிருந்தால் அடுத்த பதினைந்து நாட்களில் தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தது வளாகத் தெருவாசிகளுக்குத் திருப்தியாகவில்லை. கடைசியாக அந்தத் துறவி அதிகாரிகளின் ஒப்புதல் பெற்று உரத்த குரலில் பேசினார்.
"அன்பர்களே! நான் இந்தப் பக்கம் வர நேர்ந்தது, உங்கள் தர்ணாவில் பங்கேற்றது எல்லாம் தற்செயல் என்று நினைத்தேன். அது இறைவன் சித்தமே என்று எனக்கு இப்போது தெரிகின்றது. இப்போது கூட நீங்கள் யார் என்று எனக்கோ நான் யார் என்று உங்களுக்கோ தெரியாது. அதுவும் இறைவன் சித்தமே. இன்று நான் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்யக் கிளம்புகிறேன். நமக்கு முருகன் மீது நம்பிக்கை இருக்கிறது. அவன் ஆத்தாள் மீது நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் பார்த்துக்கொள்வார்கள், கவலை வேண்டாம். அதிகாரிகள் கேட்டுக்கொண்டபடி இப்போது கலைந்து வீடு செல்லுங்கள். ஒன்று மட்டும் நிச்சயம் நடக்கும். இன்று ஞாயிற்றுக் கிழமை. அடுத்த ஞாயிறுக்கடுத்த ஞாயிறோடு பதினைந்து நாள் கெடு முடிகிறது. அதுவரை அதிகாரிகள் தரப்பில் தக்க நடவடிக்கை இல்லாமல் இந்த தெய்வகுற்றம் தொடர்ந்தால், அதன்பின் வரும் செவ்வாய்க் கிழமையன்று ஆத்தாள் தன் ரௌத்திர ரூபத்தைக் காட்டுவாள். இது சத்தியம்."
துறவியின் அருள்வாக்கில் திருப்தியடைந்து கூட்டம் கலைய, அவரும் தன்வழிச் சென்றார். காவல்துறை அதிகாரிகள் நிம்மதியுடன் திரும்ப, குடியிருப்பு வளாகத்தினுள் செயலருடன் ஜாடைகாட்டிச் சிரித்துப் பேசியவாறே கௌன்சிலர் சென்றார்.
*** *** ***
மூன்று அடுக்கில் மூன்று கட்டடமாக அந்தக் குடியிருப்பு வளாகம் அமைந்திருந்தது. நிலத்தளத்தில் வீடுகள் இல்லாது வாகனங்கள் நிறுத்த இடங்கள் குறிக்கப்பட்டு, ஒரு சின்ன அலுவலக அறை மற்றும் பராமரிப்பு அறைகள் இருந்தன. ஆறடி அகலமான கான்கிரீட் பாலங்கள் மொட்டை மாடித் தளத்தில் தனிக் கட்டடங்களை இணைத்தன. நடுவில் இருந்த பெரிய கட்டடத்தின் மொட்டை மாடியில் ஷாமியானா போடப்பட்டு வளாகக் குடியிருப்போர் எல்லோரும் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்ற செயலரின் அழைப்பில் தம் குழந்தைகளுடன் கூடியிருந்தனர்.
கூட்டத்தின் நடுவில் ஒரு மேசை போடப்பட்டு அதன்மேல் ஒரு மடிக் கணினியும், கணிணிப் புரொஜக்டரும் இருந்தன. எல்லார்க்கும் எதிரில் சற்றுப் பெரிய, வெள்ளைத் திரை தொங்க, அனைவர் கண்களும் திரையை நோக்கியிருந்தன. புரொஜக்டர் மேசையில் மூன்று கணிணி விற்பன இளைஞர்கள் செயலரின் விரல் அசைவில் திரையில் ஒரு படத்தை ஓடவிடுவதற்குத் தயாராக இருந்தனர்.
கையில் ஒரு ’ரிமோட் மைக்’குடன் வளாகச் செயலர் பேசினார்: "பதினஞ்சு நிமிஷம் ஓடற இந்த யூடியூப் விடியோ லின்க் எனக்கு நேத்து நைட்டு அமெரிக்கால இருக்கற என் மச்சினன் பையன் அவனோட சாட் பண்ணும் போது தந்தான். இது வந்து நம்மளுடைய அபார்ட்மென்ட் பத்தினது. படம் முடிஞ்சதும், லாஸ்ட் ஒன் இயரா செஞ்சிகிட்டிருக்கற ஒரு காரியத்தைப் பத்தி நாம ஒரு முடிவுக்கு வரவேணும். அதுக்காகத்தான் இந்த மீட்டிங்.."
மாலை ஏழுமணி. பாதரசக் குழல் விளக்குகள் நான்கு பக்கமும் மென்மையாக ஒளிவட்டங்கள் பரப்பிக் கொண்டிருக்க, அந்த மெல்லிய இருட்டில் திரையில் படம் பளிச்சென்று தெரிந்தது...
முதலில் அவர்கள் வளாகக் குடியிருப்பு வெளித்தோற்றம். மேலே ’லைஃபா இது, சை!’ என்று தலைப்பு. கட்டடம் பற்றிய படத்தின் முதல் சட்டங்கள் மெதுவாக ஊர்ந்து கொண்டிருக்க, கீழே தமிழ் எழுத்துகள் ஓட, கட்டைக் குரல் ஒன்று விளக்கம் கூறியது.
"மச்சீ, இந்த டைட்டில எங்கேயோ பாத்திருக்கேன்னு சொன்னேல்ல? ’Life of Pi’-னு சமீபத்தில ஒரு இங்க்லிஷ் படம் வந்ததில்ல, அதுலேர்ந்து சுட்ட டைட்டில்டா இது!" என்றான் ஒரு விற்பனன் தன் நண்பனிடம். "ஷ்...!" என்றார் செயலர்.
கடந்த ஒரு வருடமாக அந்தக் குடியிருப்பு வளாகம் செய்துவந்த ’அராஜக, அட்டூழிய, இழிவு’ச் செயல் பற்றிப் படத்தின் முதல் காட்சிகள் விளக்கின... தொடர்ந்து சில தமிழ்ச் செய்தித் தாள்களில் இது போன்ற அட்டூழியங்களை எதிர்த்து நடந்த தர்ணாக்கள் பற்றிய செய்திகள்... அதன்பின் அந்தப் பாழ்படும் நிலமும் மாசுபடும் சுற்றுச் சூழலும் பற்றிய காட்சிகள்...
பின்னால் வேலிக்காத்தான் முள்மரங்கள் உயர்ந்தோங்கிக் காடாக வளர்ந்து இருந்தன... காட்டுக் கொடிகள் ஓங்கி உயர்ந்து அவற்றைச் சுற்றிக்கொண்டு நின்றன... பயனற்ற தாவரங்களாக இருந்தாலும் எங்கு பார்த்தாலும் கரும் பசுமை அடர்ந்து சூரிய ஒளியை மறைத்திருந்தன... மரங்களடர்ந்த அந்த இரண்டு ஏக்கர் கோவில் நிலத்தில் ஓர் ஏரி போல மனிதக் கழிவுநீர் தேங்கி யிருந்தது... அதில் எருமைகளும், கொக்குகளும், காணாக்கோழிகளும் தவளைகளும் படுத்தும் நடந்தும் ஓடியும் தத்தியும் திளைத்தன... எல்லாக் காட்சிகளும் ஓரளவுக்குத் தெளிவாகப் படமாக்கப் பட்டிருந்தன...
"இது அம்மன் கோவில் நிலம் என்றுதான் பெரும்பாலோர் கருதுகின்றனர்", என்றது குரல். "இல்லை யென்றும் சிலர் சொல்லுகின்றனர். எதுவாயினும் காலி நிலத்தில் மனிதக் கழிவுநீரைப் பாய்ச்சுவது மனித நலனுக்கும் இயற்கைக்கும் சுற்றுச் சூழலுக்கும் எதிரான பெரும் குற்றம்... அதற்குத் துணைபோவது அதனினும் பெரிய குற்றம்... இந்த அராஜகத்துக்கு எதிராக நாம் கடைசியாகச் செய்த தர்ணா இது..."
குரல் நின்றதும் நாம் மேலே பார்த்த தர்ணா திரையில் மெதுவாக ஓடியது. ’பிக்ஸல் எடிட்டிங்’ உத்தியால் முகங்கள் மழுக்கப் பட்டிருந்ததாலும், சமீபத்தில் இந்த வளாகத்தின் முன் நடந்த தர்ணாவில் தெருவாசிகளும் அவர்கள் குழந்தைகளும் சுமார் நாற்பது பேரே பங்கேற்றனர் என்பதாலும், இந்த தர்ணா வேறெங்கோ வேறெதற்கோ நடந்து இங்கு சேர்க்கப்பட்டதா என்ற ஐயம் எழுந்தது...
தர்ணா முடிந்ததும் குரல் தொடர்ந்தது: "அந்தத் துறவி தன் தீர்க்க தரிசனத்தில் கூறியது போல, பதினைந்து நாட்கள் கெடுவில் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லாததால் அதன்பின் வந்த செவ்வாழ்க்கிழமை யன்று ஆத்தாள் ஆடிய ரௌத்திர தாண்டவத்தை இனிப் பார்ப்போம்..."
’செவ்வாய்க் கிழமை, மாலை மணி நான்கு, ராகு காலம்’ என்ற தலைப்பில் அந்தத் துயரத் தாண்டவம் நிகழ்ந்தது...
வாச்மேன் வெளிக்கதவைத் திறக்க, எல்.கே.ஜி. படிக்கும் பெண் குழந்தையைப் பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு வளாகச் செயலரின் வெள்ளிச்சாம்பல் நிற டொயோட்டாக் கார் உள்ளே நுழைந்தது. வெளிவாசல் அருகில் நின்றிருந்த அவர் மனைவி, கான்வென்ட் பள்ளிப் பேருந்தில் அப்போதுதான் வீடு திரும்பியிருந்த தன் மூத்த, எட்டு வயதுப் பெண் குழந்தையுடன் அவர்களை வரவேற்றாள். எல்லா முகங்களும் மழுப்பப் பட்டிருந்தன. வானம் லேசாக இருண்டிருந்தது...
வாச்மேன் இரும்பு வெளிக்கதவை மூடிவிட்டுத் திரும்பும் போது, செயலர் கார் அப்பிரதட்சிணமாக ஒரு நீண்ட வட்டமடித்துக்கொண்டு அவருக்காக ஒதுக்கப் பட்டிருந்த நிறுத்தப் பகுதியில் நின்றது. அதே வினாடி இரண்டு அசம்பாவிதங்கள் நிகழ்ந்தன...
நடந்துபோய்க் கொண்டிருந்த வாச்மேன் காலடியில் கக்கூஸ் கழிவு நிலவறையை மூடியிருந்த கான்கிரீட் பூச்சில் திடீரென்று விரிசல்கள் தோன்றி உடைந்தன. தடுமாறிச் சமாளித்துக்கொண்ட வாச்மேன், அருகில் இருந்த இன்ஸ்பெக்ஶன் சேம்பர் திறந்துகொள்ளக் கால் இடறி அதனுள் விழுந்து சுகாசனத்தில் அமர நேரிட்டு அதனின்று எழுந்திருக்க முடியவில்லை...
காரை நிறுத்திய செயலர் உட்கார்ந்தபடியே தன் குழந்தை அமர்ந்திருந்த இடப்புறக் கதவைத் திறந்துவிட, குழந்தை அவர் வந்து தன்னைத் தூக்கிக் கொள்வதற்காகக் காத்திருந்தது. கார் சாவியை எடுத்துக்கொண்டு அவர் சுற்றி வருவதற்குள் அந்த இரண்டாவது அசம்பாவிதம் நிகழ்ந்த போது அவர் மனைவியும் மூத்த மகளும் லிஃப்ட் நோக்கிச் சென்றுகொண்டு இருந்தனர்...
திடீரென்று எங்கிருந்தோ கருமேகங்கள் விரைந்துவந்து சூழ்ந்துகொண்டன. பிரளயம் போன்று ஒரு பேய்க்காற்று அடித்து அந்த கழிவுநீர் ஏரியைக் கலக்கியது. அந்த ஊழிக் காற்றின் உக்கிரத்தில் நீரலைகள் மோத, கோவில் நிலம் பக்கம் இருந்த வளாகச் சுற்றுச்சுவரில் அந்தக் கழிவுநீர் வெளியேற்றும் குழாய் இருந்த இடத்தில் விரிசல் கண்டு எட்டடி அகலத்துக்கு உடைந்தது...
கோவில் நிலத்தில் இருந்த மனிதக் கழிவுநீர் ஏரியின் கரை உடைந்ததால் வெள்ளமாகப் பெருக்கெடுத்து உள்ளே நுழைய, இவர்கள் வளாகம் அதை ஒரு புனல் போல் உறிஞ்சிக் கொள்ள, கண நேரத்தில் அத்தனை கழிவுநீரும் இவர்கள் வளாக நிலத் தரையில் ஹோவென்ற இரைச்சலுடன் சுழித்து நிறைந்து நீர்மட்டம் உயரத் தொடங்கிக் காருக்குள் கால் வைக்கும் இடமெல்லாம் கழிவுநீர் நுழைந்தது...
"டாடி, ஸ்நேக்!" என்று குழந்தை அலறத் தொடங்க, பாம்புகளும் மீன்களும் நண்டுகளும் தவளைகளும் அடித்துவரப்பட்ட காணாக்கோழிகளுமாக ஒரே களேபரம்! செயலர் அவசரமாகக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஆடுசதையளவு கழிவுநீரில் ஓடினார். அவர் பின்னால் வெள்ளத்தில் அடித்துவரப் பட்ட எருமைக் கன்று ஒன்று அவர் காரின் முன்புறம் ’மடேர்’ என்று மோதிக் கண்விழித்தது. காரின் முன்புறம் மிகவும் நசுங்கித் தலைவிளக்குகள் உடைந்தன...
கால் இடறி விழுந்து எழுந்திருக்க முடியாமல் அமர்ந்திருந்த வாச்மேனைக் கழிவுநீர் வெள்ளம் கழுத்தளவு பற்றியது. அவர் தலைமட்டும் பயத்தில் உறைந்து பார்த்திருக்கக் காதில் குரல் கேட்டது: "எய்தவன் வேறு யாரோ நீ வெறும் அம்பு என்பதால் தண்டனை இம்மட்டில்!..." ’அம்புக்கு இவ்வளவு தண்டனையா?’ என்ற கேள்வி அவர் மனதில் எழுந்தபோது "எய்தது யாராயினும் தைத்தது அம்புதானே?" என்ற குரலில் பதில் வந்தது. ’அம்புக்கு வேறென்ன கதி?’ என்றவர் நினைத்தபோது, ’குறி தவறாத அம்புக்கும் கடைசியில் தூக்கி எறியப்படுவதுதான் விதி’ என்ற பதில் கிடைத்தது...
செயலர் முதல் மாடியில் கோவில் நிலம் பக்கம் இருந்த தன் வீட்டுக்குள் நுழைந்தபோது அவர் மனைவியும் மூத்த மகளும் பயத்தில் கூக்குரலிட்டு அழுது கொண்டிருந்தார்கள். என்னவென்று இவர் படுக்கை அறைக்குச் சென்று பார்த்தபோது, அறை ஜன்னல்களில் கண்ணாடிகள் உடைந்து சிதறியிருந்தன... அறையில் கட்டில் மேல் இருந்த பத்திரிகைகள் பெருங்காற்றில் படபடத்துப் பறந்தன. மேசைமேல் இருந்த அவரது விலையுயர்ந்த மடிக்கணிணி தரையில் விழுந்து நொறுங்கியிருந்தது...
கோவில் நிலம் பக்கம் விழிகள் நிலைத்திருக்க, தூய கான்வென்ட் ஆங்கிலம் பேசும் அவர் மூத்த மகள் திடீரென்று சுத்தத் தமிழில் கத்திய வண்ணம் கதறினாள்.
"அப்பா, அப்பா! அதோ எதிர்ல ஆத்தாள் நின்னுகிட்டு நம்மைக் கோவத்தோட பாக்கறாப்பா! அவள் கண்ணெல்லாம் ரத்தம்! ஆத்தா, தாயே! எங்கப்பா தெரியாம செய்திட்டார்! ப்ளீஸ், டோன்ட் ஹர்ட் அஸ், ப்ளீஸ்!..."
செயலரும் மனைவியும் ஜன்னல் வழியே ஜாக்கிரதையாக எட்டிப் பார்த்தும் அவருக்கோ அவர் மனைவிக்கோ ஆத்தாள் தரிசனம் கிட்டவில்லை. அவர்கள் தலையை உள்ளே இழுத்துக்கொண்ட போது, நீரில் காட்டுக் கொடிகளுடன் மூழ்கியிருந்த ஒரு பெரிய, உயர்ந்த வேலிக்காத்தான் மரம் நாணறுந்த வில் போல் விடுபட்டுக் கால்பந்து அளவில் மனிதக்கழிவொன்று காற்றில் பறந்து வந்து செயலர் படுக்கையறை ஜன்னல் வழியாக உள்நுழைந்து எதிர்ச் சுவரில் அறைந்தது. சுவரில் தெறித்துப் பரவிய கழிவுப் படலத்தில் தமிழில் வார்த்தைகள் தோன்றின.
மும்மலத்தில் ஏற்கனவே முழிபிதுங்கும் பக்தர்களை உம்மலத்தால் உளையச் செய்ததற்கு தண்டனை!
*** *** ***
"’ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்’-லாம் ஓரளவுக்கு நல்லாவே இருக்கில்ல மச்சி?" என்றான் கணிணியை இயக்கிய முதல் இளைஞன்.
"படம் எடுத்தவன் யார்னு கண்டுபிடி. அவன் ஏதாவது வெப்ஸைட், பிளாக் வெச்சிருக்கானா பாரு! அதை ஹாக் பண்ணி அவனை நாறடிக்கறேன்!" என்றான் அவன் நண்பன்.
"நம்ம செகரட்ரி கன்னடக்காரர் மச்சி. அவருக்குத் தமிழ் சரியா பேச வராது. நிச்சயமாப் படிக்கத் தெரியாது. சுவத்ல செந்தமிழ்ல எழுதின ஆத்தாளுக்கு அது தெரியலையே?" என்றான் மூன்றாம் இளைஞன்.
"உருவங்கள் கிட்டத்தட்ட ஒண்ணுபோல இருந்தாலும் படத்தில காட்டின ஃபிளாட் எங்களோடது மாதிரி இல்லை", என்றார் செயலர்.
எண்பது வயதுப் பெரியவர் ஒருவர் எழுந்தார். "இதை நாம ஒரு சாதாரண விடியோப் படமாக எடுத்துக்கக் கூடாது. போன வாரம் நம்ம குடியிருப்புக் குழந்தைகள் ரெண்டு பேர்க்கு அம்மை போட்டி ஊருக்கு அனுப்பி வெச்சோம், ஞாபகம் இருக்கில்ல? அதுக்கு என்ன அர்த்தம்னு யோசிக்கணும்..."
"எண்ண பண்ணலாங்கிறீங்க?" என்றார் செயலர். "இதெல்லாம் கப்ஸாதானே? நிஜமா இதுபோல எதுமே நடக்கலையே!"
"இன்னும் வேற என்னய்யா நடக்கணும்? போன வருஷம் இந்தக் காரியத்த ஆரம்பிச்ச போதே நான் எச்சரிச்சேன். அரசியல்வாதிங்களை நம்பிச் செய்யாதீங்கய்யா, அவங்க மலைப்பாம்பு மாதிரி. அந்தப் பாம்புக்காவது ஒரு பக்கம்தான் வாய் இருக்கும். இவனுகளுக்கு உடம்பெல்லாம் வாய்னு! இந்த ஒரு வருஷத்தில அவனுகளுக்கு அழுத பணத்தை வெச்சு வேற நல்ல விதமா இந்தப் பிரச்சினையை முடிச்சிருக்கலாம் இல்ல?"
"அதான் என்ன பண்ணலாம்னு கேட்டேன்", என்றார் செயலர் பொறுமை இழந்து.
"ட்ரீட்மென்ட் ப்ளான்டும் வேண்டாம், ஒரு விளக்கெண்ணையும் வேண்டாம்!" என்றார் பெரியவர், தன் குரலை உயர்த்தி. "நமக்குத்தான் கிரவுண்ட் ஃப்ளோர்ல நெறைய இடம் இருக்கில்ல? பெருசா, ஆழமா, ஒவ்வொரு பிளாக்குக்கும் தனித்தனியா, மூணு செப்டிக் டாங்க் கட்டுவோம். எல்லாரும் செய்யறமாதிரி ரெகுலரா கழிவுநீர் ஊர்தி வெச்சு அதை மூணு மாசமோ ஆறு மாசத்துக் கொருக்காவோ காலி பண்ணி மெய்ன்டேன் பண்ணுவோம்..."
"பெரிசு பெரிசா செப்டிக் டாங்க் கட்டிட்டு அது ரொம்பி வழிஞ்சு இதுமாதிரி ஆச்சுன்னா, தி ஷிட் வில் ஹிட் திஸ் ஃப்ளோர், பெருசு!" என்று அந்த மூன்று இளைஞர்களில் ஒருவன் சொல்ல, கூடியிருந்த மற்ற இளைஞர்கள் ’ஹூ...!’ என்று கேலிக்குரல் எழுப்பி இரைந்து சிரித்தனர்.
"வாய மூடுடா பரதேசி நாயே! வாடகைக்கு குடியிருக்கற உங்களுக்கு இவ்வளவு திமிராடா!" பெரியவருக்கு மூச்சிரைத்தது.
"வெரி ராஞ்சி, திஸ் விடியோ க்ளிப்!" என்றான் வேறொரு இளைஞன். அவன் தந்தை அவனை அடக்கினார். "வாட், கௌபாய்? இது ராஞ்சினா ஒரு வருஷமா நாம செஞ்சிகிட்டுக்கறது எதில சேத்தி?"
பெரியவர் சொன்னதற்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் கேட்டன. ஆண்களும் பெண்களும் தனித்தனியே உரத்த குரலில் தாங்கள் பார்த்ததை விவாதிக்கத் தொடங்க எழுந்த சந்தைக் கடை இரைச்சல் நடுவே இரண்டு குழந்தைகளின் அழுகுரல் கேட்டது.
குரல்களைக் கைதட்டி அடக்கிய பெரியவர் அமைதியாகத் தொடர்ந்தார்: "என்னோட ஒரே பையன் கல்யாணம் ஆகி அமெரிக்காவில செட்டில் ஆயிட்டான்னு உங்க எல்லார்க்கும் தெரியும். எனக்கு அந்தக் குளிரும் சூழ்நிலையும் ஒத்துக்காம நான் இங்க தனியா ஜீவனம் பண்றேன், எதோ நீங்கள்லாம் கூட இருக்கீங்கன்னு ஒரு தைரியத்தில... என்னோட கடைசிப் பயணச் செலவுக்குன்னு நான் ஒரு லட்ச ரூபாய் சேர்த்து வெச்சிருக்கேன். முதல் கான்ட்ரிபூஷனா அதைத் தர்றேன். வீட்டுக்கு ஒரு லட்சம் போட்டாப் போதும், ஒன் டைம் இன்வென்ஸ்ட்மென்டா. மூனு செப்டிக் டாங்கையும் பெரிசா ஆழமாக் கட்டி அதை ஒரு வருஷம் மெயின்டெய்ன் பண்ணவும் அந்தப் பணம் போதும்."
"இதெல்லாம் இப்பவே தீர்மானம் செய்ய முடியுமாங்க? யோசிச்சுச் செய்யணும்", என்று செயலர் இழுத்தார்.
"யோசிக்கறதுக்கு என்ன இருக்கு?", என்றார் பெரியவர். "அடுத்த வாரம் மறுபடியும் கூடுவோம். அப்ப பிரச்சனையை ஓட்டுக்கு விடுங்க. பெரியவங்க, குழந்தைங்க எல்லாரும் ஒருத்தர் விடாம ஓட்டுப் போடணும். போன வருஷம் அஞ்சு ஓட்டு வித்தியாசத்திலதானே நீங்க ஜெயிச்சு முடிவெடுத்தீங்க? இந்த தடவை நான் எல்லார்ட்டயும் கான்வாஸ் பண்ணி என் பக்கத்தை ஜெயிச்சிக் காட்டறேன்..."
*** *** ***
அடுத்த இரண்டு நாட்களில் பெரியவர் இயற்கை மரணம் எய்தியதால் அந்தக் கூட்டமோ ஓட்டெடுப்போ நிகழாமல் போனது.
அதன்பின் செயலர் அனுப்பிய ஒரு சுற்றறிக்கையில், கூடிய விரைவில் அவர்கள் பகுதியில் ஏற்கனவே மூன்று வருடங்கள் முன்பு கொள்கையளவில் ஒப்புதல் பெற்ற பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், அது வந்துவிட்டால் இந்தப் பிரச்சனை எல்லோர்க்கும் நன்மையாகத் தீர்ந்துவிடும் என்றும், அதுவரை ஏற்கனவே அதிகாரிகள் வாயளவில் தந்த ஒப்புதலுடன் செய்துவரும் காரியத்தைத் தொடரலாம் என்றும், இதற்கு ஒப்புதல் அளித்து வீட்டின் சொந்தக்காரர்கள் கையொப்பம் இடுமாறும் கேட்டிருந்தது. மூவர் மட்டுமே இதற்கு ஆட்சேபம் தெரிவித்துக் கையொப்பமிட, இன்றுவரை கோவில் நிலம் என்று நம்பப்படும் இரண்டு ஏக்கர் நிலத்தில் அந்தக் குடியிருப்பு வளாகத்தின் கழிவுநீர் வெளியேற்றப்பட்டு ஏரியாகத் தேங்கியுள்ளதும் அதனால் அக்கம் பக்கம் தனி வீடுகளில் பல ஆண்டுகளாக இவர்களுக்கு முன்பிருந்தே குடியிருக்கும் மற்றத் தெருவாசிகள் அவதிப் படுவதும் தொடர்கிறது...
அந்தக் ’கூடிய விரைவில் பாதாள சாக்கடைத் திட்டம் அமல்’ என்பது வெறும் கண்துடைப்பே, மூன்று வருடமாகக் கிடப்பில் போடப்பட்ட திட்டம் இப்போதைக்குச் செயல்படுத்தப் படாது என்பது ஊர் அறிந்த ரகசியம்.
மாசுபட்ட கோவில்களில் இருந்து தெய்வம் வெளியேறி விடுவதாகவும், கோவில் சிலைகள் வெறும் கற்சிலைகளாகி வழிபாட்டுக்குப் பயன்தராது என்றும் நிலவும் ஐதீகம் போன்று, அவளது நிலச் சொந்தக்கார்கள் யாரும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் ஆத்தாள் அந்த நிலத்திலிருந்தும் அந்தக் கோவிலிலிருந்தும் வெளியேறிவிட்டாள் என்று ஓட்டு எண்ணிக்கையில் குறைந்துள்ள மற்றத் தெருவாசிகள் தங்கள் இயலாமையைப் பேசிக்கொள்வதைத் தவிர அவர்களால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.
No comments:
Post a Comment