ரமணியின் கதைகள்
இலக்கியத்தைப் பொறுத்தவரை "முயன்றால் முடியாததும் உண்டோ?" என்பது கல்லூரி நாட்களில் என் குறிக்கோளாக இருந்ததாலும், ஆங்கில இலக்கியத்தில் மிக்க ஈடுபாடு இருந்ததாலும், என் சொந்த இலக்கியப் படைப்பு முயற்சிகள் ஆங்கிலக் கவிதைகளில் ஆரம்பித்துத் தமிழ்க் கதைகளில் தலைகாட்டியது.
உயர்நிலைப் பள்ளியில் படித்தபோதே தமிழ்வாணன் நாவல்களின் தாக்கத்தில் ஒரு திரில்லர் கதை எழுதி அதன் நடையை என் நண்பன் ஹாலாஸ்ய சுந்தரம் திருத்திக் கொடுத்ததில் கதையின் ஓட்டத்தையும் சஸ்பென்சையும் தமிழாசிரியர் கோதண்டராமன் அவர்கள் ரசித்துப் பாராட்டியது நினைவில் இருக்கிறது. இதற்கு முன்னரே இளநிலைப் பள்ளி வயதில் தினமும் இரவு படுக்கப் போகுமுன் கதைகளை ’இட்டுக்கட்டி’ என் இளவயது உறவினராக இருந்த சிறுவர்-சிறுமியரிடம் சொல்லுவது வழக்கமாக இருந்ததும், என் அன்னை-தந்தை இருவரும், பின்னர் தம்பியும் தமிழ்ச் சிறுகதை உலகில் நன்கு அறியப்பட்ட கதாசிரியர்களாக இருந்ததும் ஒருவேளை என்னிடமும் கதைக்கனல் நீறுபூத்த நெருப்பாக இருந்து பின்னர் எழுந்ததற்குக் காரணமாக இருக்கலாம்.
நான் கிருஹஸ்தனான புதிதில் ஐந்து சிறுகதைகள், ஒரு குறுநாவல், ஒரு முழு நாவல் எழுதினேன். இவற்றில் மூன்று சிறுகதைகள் பிரசுரமாயின: ஒன்று நான் எழுதிய முதல் சிறுகதை. இது மணியன் அவர்கள் தாமரைமணாளன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு சிறுகதைகளுக்கென்றே தொடங்கிய ’சிறுகதைக் களஞ்சியம்’ 1 Feb 1986 இதழில் ’அவன் அவள்...’ என்ற தலைப்பில் பிரசுரமாகியது. பிள்ளை பிறந்த அதே மாத இதழில் கதை வந்தது எங்களுக்கு மிக்க மகிழ்வைத் தந்தது.
மூன்றாவது சிறுகதை ’முகம் தெரியாப் பகைவர்கள்’, ’இதயம் பேசுகிறது’ 13 Mar 1988 இதழில் பிரசுரமானது. நான்காவதாக ’அமுதசுரபி’ சிறுகதைப் போட்டிக்கென்று எழுதிய சிறுகதை ’பெண்மையின் அவலங்கள்’ போட்டியில் முதல் பரிசுக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரு கதைகளில் ஒன்றாக May 1990 இதழில் பிரசுரமானது. இதை அசோகமித்திரன் அவர்கள் பாராட்டி இரண்டு வரிகள் ஓர் அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பியிருந்தார். பின்னர் இரா.முருகன் அவர்கள் என்னை அவர் இல்லத்திற்கு அழைத்துச் சென்று ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
சுஜாதா, ஜானகிராமன், இந்துமதி போன்ற ஆசிரியர்களை நிறையப் படித்ததாலும், ஆங்கில நாவல்களைப் படித்ததாலும் கதை உத்திகளை அறிந்துகொண்டேன். எனினும் பின்னர் ஏற்பட்ட கணிணித்துறை ஈடுபாடுகளில் கதைகள் எழுதுவது பிரசவ வேதனையாக இருந்ததால் கதைகள் எழுத முனைவதையும், படிப்பதையும் அறவே விட்டுவிட்டேன்! வயதில் அரை செஞ்சுரி அடித்ததும், மனம் ஆன்மீகத் துறையில் அலைபாயவே, லௌகிகப் படிப்பு வகைகளைக் குறைத்துக் கொண்டேன்.
இப்போது வயது அறுபதைத் தாண்டிவிட்ட நிலையில், மூன்று வருடங்களுக்கு முன் நான் கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள் வெற்றிகரமாக நடத்தி மரபுக் கவிதையை வளர்த்துவரும் ’சந்தவசந்தம்’ கூகிள் குழுமத்தில் சேர்ந்ததில் எனக்கு மரபுக் கவிதை புனைவதில் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டு லௌகிக-ஆன்மிகக் கவிதைகள் மரபில் எழுதிவருகிறேன். இடையில் மீண்டும் சிறுகதைகள் எழுதும் ஆவல் எழ அதையும் ஒருகை பார்த்து வருவதில் என் சிறுகதைகளின் எண்ணிக்கை இப்போது 12-ஐத் தாண்டிவிட்டது.
என் இந்த வலைப்பூவில் காணும் சிறுகதைகளின் உரிமை ஆசிரியருக்கே. எனினும் இவற்றைப் பிரதி எடுத்து மற்றவர்களுடன் பிரத்தியேகமாகப் பகிர்ந்துகொள்வதில் தடையில்லை. ஒரே ஒரு நிபந்தனை: பிரதிகளில் சிறுகதைகளை எடிட் செய்து குறைக்கவோ, அல்லது ஏதேனும் எழுதிக் கூட்டவோ, வேறு எந்த விதத்திலும் மாற்றவோ கூடாது. பிரதிகளில் கதாசிரியர் பெயர், கதை பிரசுரமான விவரம் போன்றவை மூலத்தில் உள்ளது போலவே காணப்படவேண்டும்.
சிறுகதைகளைப் படிக்கும் அன்பர்களின் ஆக்கபூர்வப் பின்னூட்டத்தை வரவேற்கிறேன்.
--ரமணி, 19 மே 2015
No comments:
Post a Comment