’ஷோகேஸ்’
சிறுகதைரமணி (Jun 2013)
[collage, அதாவது படத்திரட்டு என்னும் உத்தியைப் பயன்படுத்தி எழுதிய சிறுகதை.]
இது வந்து... எங்க வீட்டு ஷோகேஸ் படம்... படத்த நல்லா, விவரமாப் பாருங்க!... இதவெச்சு ஒரு கதை சொல்லப் போறேன். என்னோட கதை...
’மதுமிதா’ அப்படீன்னா அர்த்தம் தெரியுமா உங்களுக்கு? அதான் என்னோட பேர். அதுக்கு அர்த்தம்... ம்? எனக்கு எங்க தாத்தா சொல்லிக் குடுத்தாங்க...
ஐய... மதுன்னா நீங்க நெனைக்கற மாதிரி ஒயின் கிடையாது. மதுன்னா தேன்! சுரா-ங்கற வார்த்தைக்குதான் ஒயின்னு அர்த்தம். மிதான்னா filled with, நெறஞ்சு இருக்கறது. ஸோ, மதுமிதான்னா தேன் அல்லது இனிமை நெறஞ்சவள்னு அர்த்தம்...
"தேன் கலர்ல நீ இருந்ததாலயும், உங்க அம்மா-அப்பா விரும்பினபடி பொறந்த முதல் ஸ்வீட் கர்ள்-ங்கறதாலயும், அவங்க உனக்கு மதுமிதான்னு பேர் வெச்சாங்க!" அப்படீன்னு தாத்தா எனக்கு எக்ஸ்ப்ளெய்ன் பண்ணாங்க. எனக்கு ஏதாவது சந்தேகம் வந்தா... நான் எங்க தாத்தாவைத்தான் கேப்பேன். தாத்தாட்ட எதைப் பத்திக் கேள்வி கேட்டாலும் அவங்க பொறுமையா எனக்குப் புரியற மாதிரி விளக்கிச் சொல்லுவாங்க.
எனக்கு ஏழு வயசு. ஒரே பொண்ணு. மூணாங் கிளாஸ். ஃபர்ஸ்ட் ரேங்க். ரேணு ஸெகண்ட், என்னைவிடப் பத்து மார்க் கம்மி! ஆனால் அவள் என்னைவிட உயரம்! நாங்க ரெண்டு பேருமே நிறமா அழகா ஸ்மார்ட்டா இருக்கறதா எங்க அப்பாம்மாக்கு நினைப்பு. ’காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு தானே! கழுதை கூட குட்டியா இருக்கும்போது அழகாத் தானே இருக்கும்!’ அப்படீன்னு நானும் ரேணுவும் எங்களுக்குள்ள பேசிப்போம். ஏன்னா, எங்க கிளாஸ்லயே விமலாதான் ரொம்ப அழகு, நிறம், உயரம் எல்லாம். சுண்டினா ரத்தம் வரும்னு சொல்லுவாங்களே, அந்த நிறம். ஆனா அவள் படிப்புல சுமார்தான். கொஞ்சம் கர்வம்கூட. எங்ககூடல்லாம் அவ்வளவாப் பேசமாட்டா. எங்க கிளாஸை விட, மேல் கிளாஸ் கர்ள்ஸ்-தான் அவளுக்கு ஃப்ரெண்ட்ஸ்.
கல்லா-மண்ணா, கண்ணா மூச்சி, கிளித்தட்டு, பாண்டி, ரிங் டென்னிஸ், கேரம், செஸ், அஞ்சு கல்லாட்டம், சோழியாட்டம், பரமபத சோபான பட விளையாட்டுல ஏணியில ஏறி பாம்புல இறங்கறது, இது மாதிரி விளையாட்டெல்லாம் எனக்கும் ரேணுவுக்கும் ரொம்பப் பிடிக்கும். எங்க தெருவுல இருக்கற மத்த பொண்களோட சேர்ந்து இதெல்லாம் தினம் சாயங்காலம் விளையாடுவோம். ஓடி விளையாட எங்க தெரு அகலமான, பெரிய தெரு. ஒக்காந்து விளையாட எங்க வீட்டுத் திண்ணை பெரிய திண்ணை. அப்புறம் என்ன, ஜாலிதான்!
சாயங்காலம் விளையாடி முடிச்சதும் கோவிலுக்குப் போய்ட்டு வந்து வீட்ல ஸ்வாமி கும்பிட்டு ஸ்லோகம்லாம் சொல்லறது பிடிக்கும். இந்த ஊர் சிவன் கோவில்ல... ம்? விஸ்வநாதர், விசாலாட்சி, கணபதி, முருகன், கருப்பணசாமி, நவக்கிரகம் எல்லாம் ரொம்ப அழஹா இருக்கும். நானும் ரேணுவும் சேர்ந்து பிரகாரம், நவக்கிரகம் சுத்துவோம். பிரகாரம் ஒரு சுத்து, நவக்கிரகம் ஒம்பது.
வீட்ல சாமி வழிபாட்டுக்கு அப்புறம், படிப்பு சாப்பாடெல்லாம் எட்டரை மணிக்குள்ள முடிஞ்சிடும். ஒம்பது மணிக்குத் தாத்தாவோ பாட்டியோ என் பாய்ல உக்காந்து நான் தூங்கற வரைக்கும் கதை சொல்லுவாங்க. காலைல ஆறு மணிக்கெல்லாம் எழுந்திருவேன்.
ராத்திரி சாப்ட்டு முடிஞ்சதும் தாத்தா வர்ற வரைக்கும் டெய்லி சேர் மேல ஏறி நின்னுண்டு... இந்த ஷோகேஸ்ல இருக்கற பொம்மைகள், பொருட்கள் இதெல்லாம் ஒண்ணுவிடாம ஆழ்ந்து பார்ப்பேன். ஒவ்வொண்ணும் எனக்கு ஒரு கதை சொல்லும்! அதை நான் இப்ப உங்களுக்குச் சொல்லப் போறேன். இப்பவும் நான் ஷோகேஸைத்தான் உத்துப் பாத்திண்டிருக்கேன், ஆனால் சேர் மேல நின்னுண்டு இல்லை...
மேலே இடது பக்கத்திலேர்ந்து ஒவ்வொரு ஷெல்ஃபா வருவோம்.அந்தப் பேய்வீடு கடிகாரம் இருக்கில்ல? அது ஸ்கூல் ஆண்டுவிழாவின் போது ’English poem reciting competition for junior classes’ போட்டில நான் ஃபர்ஸ்ட் வந்ததுக்குத் தந்தாங்க. என்ன போயம் தெரியுமா? வால்டர் டி ல மேரோட 'Silver'... 'Slowly, silently, now the moon'-னு ஆரம்பிக்குமே அந்தப் பாட்டு. அதுல ஒரு முழுநிலா பொழியற இரவுல... மரத்தில இருக்கற பழங்கள்... கென்னல்ல தூங்கற நாய்... புறா... எலி... மீன் ... எல்லாம் எப்படி ஸில்வர் கோட்டிங் பூசிண்ட மாதிரி தெரியறதுன்னு நான் விதவிதமா மாஸ்க் அணிந்து நல்லா நடிச்சுக்காட்டி அந்த போயம் ஒப்பிச்சதால ஃபர்ஸ்ட் ப்ரைஸ்-ஸாம்.
பேய்கள்லாம் இருக்கா தாத்தான்னு கேட்டதுக்கு, பேய், பிசாசு எல்லாம் உண்மைதான்னு தாத்தா சொன்னாங்க. மனசில பெரிய நிறைவேறாத ஆசைகளோ, வெறியோ இருந்து அந்த நினைப்புலயே உயிர் போச்சுன்னா...ம்? அந்த உயிர் பேயா அலையுமாம்! தூக்குத் தண்டனைல சாகறவங்க, தற்கொலை பண்ணிக்கறவங்க, விபத்துல செத்துப் போறவங்க, இவங்கள்லாம் ஆவியா அலைய வாய்ப்பு அதிகமாம். அதனாலதான் ஓவரா, வெறித்தனமா எதுக்கும் ஆசைப்படக் கூடாதுன்னு தாத்தா சொல்லிக் கொடுத்தாங்க.
போன சம்மர் லீவுல, நான் தாத்தாட்ட நெறைய ஆன்மிக விஷயம் கேட்டுத் தெரிஞ்சிண்டேன். என்னாச்சு தெரியுமா... ம்? பக்கத்து ஊர்ல எங்க பெரியம்மா, அதாவது அம்மாவோட அக்கா இருக்கா. அவங்களுக்கு கோமதின்னு ஒரு பொண்ணு இருந்தா. என்னைவிட ரெண்டு வயசு பெரியவ. எனக்கு ரொம்ப ஃப்ரெண்ட் அவள். ஒவ்வொரு சனிக்கிழமை காலையும் தவறாம அவள் அப்பா அவளை எங்களோட விட்டுட்டுப் போயிட்டு, ஞாயிறு சாயங்காலம் பிக்-அப் பண்ணிப்பார். ஆறு மாசத்துக்கு முன்னாடி... ஒரு நாள் அவள் திடீர்னு செத்துப் போயிட்டா!...
அப்ப நான் ரெண்டு நாளைக்கு விடாம அழுதேன். போன வருஷம் ரேணுவோட தாத்தா தவறிப் போனப்ப நான் போய்ப் பார்த்தேன். அந்தத் தாத்தாவை மட்டும் மூங்கில் ஸ்ட்ரெச்சர்ல க்ரிமேட் பண்ண தூக்கிட்டு போனாங்க, ஆனால் கோமதியை ஒரு மூங்கில் கம்புல தூளி மாதிரி கட்டி அதுல வெச்சுதான் கொண்டு போனாங்க... இது ஏன் தாத்தான்னு கேட்டேன். தாத்தா சொன்னாங்க, குழந்தைகள் போயிடுத்துனா அப்படித்தான் தூக்கிண்டு போவான்னு. குழந்தைகள் பிறக்கற போதும் தூளி, போகற போதும் தூளியா-ன்னு ஜோக் அடிச்சேன்!
செத்ததுக்கப்புறம் என்னாகும் கூடத் தாத்தாட்ட கேட்டிருக்கேன் நான். தாத்தா சொன்னாங்க, நமக்கு முன்னாடி போன நம்ம பெற்றோர்கள், மற்ற உறவினர்கள், நண்பர்கள் இவர்கள்ள ஒருத்தரோ சில பேரோ வந்து வழிகாட்டி போன உயிரை பித்ருலோகத்துக்கு அழைச்சிட்டுப் போவாங்களாம். அங்க கொஞ்ச நாள் இருந்திட்டு, நாம பண்ணின புண்ணிய பலன்களை சொர்க்கத்திலயும், பாவ பலன்களை நாமே உருவாக்கிக்கற நரகத்திலயும் அனுபவிக்கணுமாம். அப்புறம் அந்த பலன்களைப் பொறுத்து நம்ம அடுத்த பிறவி அமையுமாம்.
சரி, இப்ப ஷோகேஸைப் பார்ப்போம். அந்தப் பேய்வீடு கடிகாரம் பக்கத்தில என்ன இருக்குன்னு சரியாத் தெரியலை இல்ல? இதோ ஃஜூம் பண்ணிக் காட்டறேன்.பஞ்சினால பண்ணி, சம்கிலாம் வெச்சு, ஜரிகை மீசை வெச்சு உருவாக்கி... ஒரு மரச் சட்டத்தில உக்காந்திருக்கற ரெண்டு பூனைக் குட்டிகள் தெரியுதா? ரேணு போனமாசம் என் பர்த்டேயின் போது தந்த பரிசு அது. அதுல என்ன எழுதியிருக்கு தெரியுமா? Friend, a simple word, but what a priceless treasure!? ரேணுன்னா ரேணுதான்!
பூனை பக்கத்தில ஒரு ஃபோட்டோ ஸ்டாண்ட். ஆனா அதுல இருக்கற குடும்பம் நாங்க இல்ல. அடுத்து, கீழ்த்தட்டுல இடது ஓரத்தில சாக்லேட் கலர்ல நெறைய செட்டியார் பொம்மைகள் இருக்கில்ல?... அதெல்லாம் நாங்க கொடைக்கானல் போனப்ப வாங்கினது. செட்டியார் பொம்மை வெச்சிண்டா அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க. பக்கத்தில சிப்பி, கிளிஞ்சல்னால செஞ்ச குட்டிப்பெண்கள், மயில், எட்ஸட்ரா. இதெல்லாமும் கொடைக்கானல்ல வாங்கினோம்.
லைட் எரிய மாதிரி ஒரு குளோப் தெரியுதா? அது ஆக்சுவலி கண்ணாடில செஞ்ச, சுத்திவிட்டா சுத்தற பூமி. அப்புறம் அந்தக் கண்ணாடி மீன்-கடிகாரம், லேடி-கடிகாரம், கீழே கையாட்டும் தங்கப் பூனை, அந்த ஸ்டஃப் பண்ண கங்காரு இதெல்லாம் எங்க வீட்டு கிரகப் பிரவேச கிஃப்ட்ஸ். யார் தந்தாங்கன்னு ஞாபகம் இல்லை.
அந்த சுத்தற பூமிக்குக் கீழே கண்ணாடிப் பெட்டிக்குள்ள மேகங்களுக்கு நடுவுல ஒரு பெரிய பிங்க் கலர் கோலிக்குண்டு தொங்கறது தெரியுதா? அது எப்படிஎந்த சப்போர்ட்டும் இல்லாம அந்தரத்தில் தொங்கிண்டிருக்கு கவனிங்க! அது ஆக்சுவலி ஒரு காசு போடற உண்டியல். எங்க சித்தப்பா என் போன வருஷ பிறந்த நாளைக்கு வாங்கித் தந்தது. அந்த பிங்க் கோலி அந்தரத்தில் தொங்கற இல்யூஷன் எப்படீன்னு நான் கொஞ்சம் கஷ்டப்பட்டுக் கண்டுபிடிச்சேன். ரெண்டு மூணு கண்ணாடித் துண்டுகளை ஆங்கிள்ல வெச்சு உருவாக்கினது அது. சித்தப்பா என்னைப் பாராட்டி ஐஸ்கிரீம் வாங்கித் தந்தாங்க...
சொல்ல விட்டுட்டேனே... அந்த லேடி-கடிகாரம் பக்கத்தில ஆணில தொங்கற டெக்ஸ்ட்-ஐக் கவனிங்க. இந்த ஷோகேஸை பாப்புலேட் பண்ணின போது அப்பா வாங்கினாங்களாம். அதுல என்ன எழுதியிருக்கு தெரியுமா?
Although you'll find our house a mess,
come in, sit down, converse.
It doesn't always look like this...
Some days it's even worse.
எங்க வீட்ல நவராத்திரியின் போது கொலு வெக்கற வழக்கம் இல்லை. ஆனால் ஒம்பது நாளும் சாயங்காலம் சுண்டல் பண்ணுவாங்க. எனக்கு எல்லா சுண்டலும் பிடிக்கும். ரேணு வீட்ல கொலு வெச்சு, டெய்லி சுண்டல் நைவேத்தியம் பண்ணி, அக்கம் பக்கத்தையெல்லாம் கூப்பிட்டு, வர்ற பொண்களைப் பாடச்சொல்லிக் கொண்டாடுவாங்க. நான் கூட பாடியிருக்கேன். ’காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா!’ பாட்டு. எதுக்கு சொல்ல வரேன்னா, அந்த பெரிய சரஸ்வதி பொம்மையை எங்க வீட்டு கொலுவில வெக்கலாம்னு பாட்டியோட ஃப்ரெண்ட் மாமி ப்ரசன்ட் பண்ணினாங்களாம். இப்போ அது எங்க ஷோகேஸ்ல.
சரஸ்வதி மடியில, வீணைக்குக் கீழே ஒரு பொருள் இருக்கில்ல? அது வந்து...ம்? எங்க தாத்தா பரம்பரை பரம்பரையா வெச்சிண்டு இருக்கற தமிழ் ஓலைச் சுவடி... அப்படீன்னு நான் சொன்னா நீங்க நம்பிடுவீங்க இல்ல? ஆனால் நான் எதுக்கு பொய் சொல்லணும்? அது ஒரு ஓலை விசிறி! ஏதோ ஒரு கல்யாணத்தில முகூர்த்தம் போது எல்லார்க்கும் தந்தாங்க. அதை ஓலைச்சுவடி மாதிரி செட்டப் பண்ணினது நான்தான். நல்லா இருக்கில்ல?
அந்தக் கையாட்டற பூனை பக்கத்தில ஒரு சின்ன டூ-இன்-ஒன் கேசட் ரெகார்டர் இருக்கில்ல, அது நாங்க திண்டுக்கல்ல வாங்கினது. வாலு போச்சு கத்தி வந்ததுங்கற கதை மாதிரி... கேசட் போயி, சீடி வந்தது... சீடி போயி, டீவீடி வந்தது... இப்ப அதுவும் போயி, பென்-ட்ரைவ்-ங்கற மெமரி ஸ்ட்க் வந்ததால... எங்க அப்பாம்மா ஆ..சையா வாங்கிச் சேர்த்த கேசட்லாம் இப்ப யா..ரும் கேக்கறதில்ல. என்னைத் தவிர! நான் மட்டும் சனி-ஞாயிறுல காலைலயும் சாயங்காலமும் ஒரு மணி நேரம் கேப்பேன். எனக்கு சாய்-பஜன்ஸ் பிடிக்கும், பாரதியார் பாட்டு பிடிக்கும், எம்.எஸ்., பாம்பே சிஸ்டர்ஸ், நித்யஶ்ரீ, சுதா ரகுநாதன், இவங்கள்லாம் பாடின பக்திப் பாட்டெல்லாம் அல்மோஸ்ட் நெட்டுரு. வர்ற சம்மர் லீவில என்னைப் பாட்டு கிளாஸ்ல சேர்த்துவிடறேன்னு பாட்டி சொல்லியிருக்காங்க.
கேசட் ஷெல்ஃப்ல விதவிதமா கேசட் ப்ளேயர்ஸ் பாக்கறீங்கல்ல? அதெல்லாம் இப்ப எது-வும் வொர்க் பண்ணாது. ஆனால் அதுல இருக்கற ரேடியோ வொர்க் பண்ணும்! போன வருஷம் தமிழ் நாட்டை நீலம் புயல் தாக்கினபோது, ராத்திரி எட்டு மணிநேரம் கரண்ட் இல்லை. பயங்கரக் காத்து! அப்ப புயல் பத்தி லேட்டஸ்ட் நியூஸ் கேக்க அந்த ரேடியோலாம்தான் உபயயோகமா இருந்தது.
சரி, இப்ப டாப்-ரைட் ஷெல்ஃபுக்கு வருவோம். பெரிசா, கருப்பா, தலைக்கு மேல ஆர்ச்செல்லாம் வெச்சு ஒரு சிலை தெரியுதா? அது சக்தி தேவியோட சிலை. கற்சிலை மாதிரியே இருக்கில்ல! பேப்பர் மாஷ்னால செஞ்சது, லைட் வெயிட். எங்க ஷோகேஸ்லயே எனக்கு ரொம்பவும் பிடிச்சது இந்த சக்தி தேவி சிலைதான். அதோட ஹிஸ்டரி என்ன தெரியுமா? எங்க தாத்தாஆ-பாட்டி கல்யாணம் போது...ம்? தாத்தாவோட அம்மாவோட ஃப்ரெண்டு, ஒரு புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் பெண்மணி... மௌன்ட் ரோடு பூம்புகார் ஷோரூம்-லேர்ந்து வாங்கி, கல்யாணப் பரிசாக் கொடுத்ததுன்னு தாத்தா சொன்னாங்க. தாத்தா அவங்களை ஆன்டின்னுதான் கூப்பிடுவாங்களாம்! அந்த எழுத்தாளர் இப்ப உயிரோடு இல்லை.இந்த சக்தி தேவி சிலையை நல்லா பாருங்க. உச்சீலேர்ந்து ஆரம்பிச்சு சிலை முழுக்க எத்தனை அலங்கார வேலப்பாடு! அவள் முகத்துல எவ்ளோ தேஜஸ், சாந்தி! அவளோட ஷார்ப் நோஸ் எவ்ளோ அழகு! எல்லாத்தையும் விட அவள் புன்னகையாச் சிரிக்கறா பாருங்க, அது அப்படியே மனசை இழுத்துப் பிடிக்கிது இல்ல? ராத்திரி ஒம்பதரை மணிக்கு நான் படுக்க போறதுக்கு முன்னாடி...ம்? தாத்தா கூடத்தில எல்லா லைட்டும் அணைச்சிட்டு... தேவிக்கு முன்னால இருக்கற எல்-யி.டி. டார்ச் விளக்கை என்னைவிட்டுப் போடச் சொல்லுவாங்க. ஜாக்கிரதையா ஷோகேஸ் கண்ணாடியை விலக்கி லைட்டைப் போடுவேன். அந்த ஒளியோட ஃபோகஸ்ல தேவீ அவ்வளவு அற்புதமா, கொள்ளை அழகோட இருப்பா, நீங்க மேல படத்தில பார்க்கற மாதிரி!
நான் ராத்திரி கூடத்தில பாட்டி பக்கத்தில இந்த ஷோகேஸ் கீழதான் தூங்குவேன். தூங்கறதுக்கு முன்னாடி பாட்டி சொல்லிக்கொடுத்த ’ஸர்வ மங்கள மாங்கல்யே’ ஸ்லோகம் மூணுதரம் சொல்லிட்டுதான் தூங்குவேன். சமயத்தில நடு ராத்திரி முழிப்பு வந்ததுன்னா... எதிர் சுவத்தில இருக்கற ஹால் நைட்-லாம்ப் வெளிச்சத்தில சக்திதேவி இன்னும் அழகாத் தெரிவா. காலைல ஆறு மணிக்கு எழுந்ததும் முதல்ல சக்தி தேவியைத்தான் பார்ப்பேன். அப்புறம் பல் தேய்ச்சு ஹார்லிக்ஸ் குடிச்சிட்டு வந்து அவள் முன்னாடி நின்னு பாட்டி சொல்லிக்கொடுத்த அபிராமி அந்தாதி செய்யுள் சொல்வேன்: ’தனம்தரும் கல்விதரும்’னு வருமே, அந்த செய்யுள்.
அடுத்து மேல வலதுபக்க ஷெல்ஃப்ல இருக்கற கடவுள் உருவங்கள் பத்திச் சொல்றேன். ஆணில தொங்கற அந்த சூரியன் ஒயிட் மெட்டல்ல பண்ணினது. சிப்பி, கிளிஞ்சல் வேலைப்பாட்டோட ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி கவனிச்சீங்களா? எவ்ளோ அழகு!சிவப்பு, பச்சை முக்கோணக் கண்ணாடிச் சில்லுகள் பதிச்ச சட்டத்துக்குள்ள ஒரு வெங்கடாசலபதி இருக்கா? அப்புறம் அந்த பிளாஸ்டிக் பேழைக்குள்ள இன்னொரு வெங்கடாசலபதி இருக்கா? அப்புறம் அந்த குங்குமச் சிமிழ்த் தட்டு... இதெல்லாமும் கிரகப் பிரவேசப் பரிசுகளா வந்தது. அப்புறம் பெரிசும் சிறிசுமா, கலர் கலரா, தங்க நிற வேலைப்பாடுகள் செஞ்ச ஸ்டாண்ட்ல நிக்கற மாதிரி ஐயப்பன், லக்ஷ்மி, பிள்ளையார், முருகன், பெருமாள் படங்கள் இருக்கில்ல? இதெல்லாம் கிரகப் பிரவேசம் போது அப்பாம்மா மத்தவங்களுக்குக் கொடுத்த பரிசுகள்.
இன்னும் ஒண்ணே ஒண்ணு மீதி இருக்கு. கீழ இடதுபக்கம் இருக்கற பிள்ளையார் உருவங்கள்... சட்டத்துக்குள்ள இருக்கற பிள்ளையார்லாம் கிரகப் பிரவேசம் போது பரிசா வந்தது. ஆணியில தொங்கற பிள்ளையார் ஒயிட் மெட்டல்ல செஞ்சது. அந்த குடைக்கீழ் உக்காந்திருக்கறவர், தலையாட்டும்மரப் பிள்ளையார், வெள்ளை மார்பிள் பிள்ளையார், அப்புறம் அந்தக் குட்டிக்குட்டிப் பிளாஸ்டிக் பிள்ளையார் பிரதிமைகள்--சிவப்பு, பச்சை, வெள்ளை, நாவல்பழ நிறங்கள்ல இருக்கில்ல, ம்?--இதெல்லாம் போன வருஷம் நாங்க திருச்சி மலைக்கோட்டைப் பிள்ளையார் கோவில் வாசல்ல இருக்கற கடைகள்ல தரிசனம் முடிச்சிட்டு வாங்கினோம். சாயங்காலம் நாலறை மணிக்குக் கீழே இருக்கற மாணிக்க விநாயகரை தரிசனம் பண்ணிட்டு, மலை மேல ஏறினோம். நானூத்துச் சொச்சம் படிகளையும் நான் அப்பாம்மா சொன்னதைக் கேக்காம, ஓடியாடி, மூச்சு வாங்க ஏறினது இன்னும் ஞாபகம் இருக்கு. மேலே போய் அந்த அழகான பிள்ளையாரை தரிசனம் பண்ணி, கற்பூரம் ஒத்தி, விபூதி இட்டுண்டு சுத்தி வர்ற போது, அப்பா என்னைத் தூக்கி வெச்சிண்டு, அந்த ஜன்னல்கள் வழியாத் திருச்சி நகர வீடுகள் குட்டிகுட்டியா தெரியறதைக் காட்டினாங்க. அப்பா, என்ன சுகமான காத்து! அப்புறம் வெளில வந்து கீழ்ப்படிகள் கிட்ட பாறைல உக்காந்து கூல்டிரிங்க் குடிச்சபடியே, இருட்டற வரைக்கும் ரொம்ப நேரம் கதை பேசினோம்...
பிள்ளையார் உருவங்கள் சேர்த்தா ஐஷ்வர்யமாம், அதனால அப்பாவும் அம்மாவும் வீடு வாங்கின புதுசில நெறைய பிள்ளையார் பிரதிமைகள் வாங்கிச் சேர்த்தாங்களாம். இப்ப எல்லாம் ஷோகேஸ்ல தூங்கறது!
தூங்கறதுன்னில்ல, நான் தினம் ஸ்கூலுக்குப் போறதுக்கு முன்ன, ஸ்வாமி அறையில கும்பிட்டப்பறம் ஷோகேஸ்ல இருக்கற எல்லா கடவுள் உருவங்களையும் ஒருதரம் பார்த்துக் கும்பிடுவேன். பிள்ளையார் குட்டிகளுக்கு ஸ்பெஷலா பத்து தோப்புக் கரணம் போடுவேன். அப்புறம் மூச்சு வாங்க ஸ்கூலுக்குக் கிளம்புவேன்! சாயங்காலமும் பத்துத் தோப்புக் கரணம் போடுவேன். நம்ம தோப்புக் கரணம்தான் இப்ப அமெரிக்கால ஸூப்பர் ப்ரெய்ன் யோகாங்கற பேர்ல ப்ராக்டீஸ் பண்றாங்களாம், தாத்தா சொன்னாங்க.
இவ்வளவு கதையும் எதுக்கு உங்களுக்குச் சொன்னேன்னு தோணுதா? முதல்லயே ஒரு க்ளூ கொடுத்தேன், கவனிச்சீங்களா தெரியலை: இப்பவும் நான் ஷோகேஸைத்தான் உத்துப் பாத்திண்டிருக்கேன், ஆனால் சேர் மேல நின்னுண்டு இல்லை...புரியுதா? இப்ப நான் உயிரோட இல்லை. ஹாரி பாட்டர் முதல் சினிமால பசங்கள்லாம் டின்னர் சாப்பிடும்போது ஹவுஸ் கோஸ்ட்-கள் எல்லாம் காத்தில மிதந்துண்டு பறக்குமே, அது மாதிரி நான் இப்ப காத்தில மிதக்கறேன்! காலைல நாலு மணிக்குத் தூக்கத்திலேயே உயிர் போய்ட்டது. ஆறு மணிக்கு நான், தானே வழக்கம்போல எழுந்திருக்காம இருக்கறதை அம்மா அல்லது பாட்டி நோட்டீஸ் பண்ணும்போதுதான் நியூஸ் தெரியும்!
நான் எப்படி என் உடல்லேர்ந்து வெளில வந்தேன், என்னாச்சுங்கறதெல்லாம் எனக்குத் தெரியல. ஏதோ வைரல் ஃபீவர்னு ஒரு வாரம் வீட்ல படுக்கைல இருந்தேன். டாக்டர் தினம் வந்து பரிசோதித்து மாத்திரை கொடுத்து, இதுவரை ரெண்டு ஊசி போட்டார். ஃபீவர் அடுத்த வாரமும் தொடர்ந்தா ஆஸ்பத்திரியில சேர்த்திடலாம்னு அவர் சொன்னபோது பயம்மா இருந்து. எனக்கு ஆஸ்பத்திரியே பிடிக்காது. ஆனால் நேத்து சாயங்காலத்திலேர்ந்து திடீர்னு ஜுரம் குறைஞ்சு நார்மல் மாதிரி இருந்தது. கஞ்சிக்கு பதிலா ரசம் சாதம் சாப்பிட்டேன். அப்புறம் படுக்கைல ஒக்காந்தபடியே ஷோகேஸை நான் ஒருதரம் பார்த்திட்டுச் சீக்கிரமே தூங்கிட்டேன். நடு ராத்திரிக்கு மேல தூக்கத்தில என்ன ஆச்சு தெரியல! ஆனால் இப்ப எனக்கு பயமோ துக்கமோ தெரியல. ஒரு வேளை எல்லாரும் காலைல எழுந்து ஒப்பாரி வெக்கும்போது தெரியுமோ என்னவோ?
தாத்தா சொன்னது ஞாபகம் வரது. போன உயிரை அழைச்சிட்டுப் போக, முன்னாடி போன உற்றார் உறவினர் நண்பர் யாராவது வருவாங்கன்னு தாத்தா சொன்னாங்க. ஆனால் எனக்கு அப்படி யாருமே இல்லையே?... என் அம்மா வழித் தாத்தா-பாட்டி, அப்பா வழித் தாத்தா-பாட்டி, இவங்க நாலு பேரும் எழுபது எண்பது வயசில இன்னமும் விச்சா இருக்கா. அப்பா-அம்மா, மத்த சொந்தக் காரங்க, அப்புறம் ரேணு... இவங்களுக்கெல்லாம் இன்னும் நெறைய டைம் இருக்கு. போன வருஷம் போன ரேணுவோட தாத்தாவுக்கு என்னை அவ்வளவா தெரியாது.
என்னடாது டைலமான்னு ஒரு நிமிஷம் கலங்கிப் போய்ட்டேன். எப்படியும் நான் வணங்கற சக்திதேவீ வழிகாட்டுவான்னு நம்பிக்கை எழுந்தது. கூடவே கோமதி ஞாபகம் வந்ததோ இல்லையோ இதோ அவளே வந்துட்டா என்னைக் கூட்டிட்டு போக! ’கோமதி உன்னை மாதிரி நாளைக்கு என்னையும் தூளில தூக்கிண்டு போவா இல்ல?’ன்னு கேட்டு சிரிக்கறேன். அவள் புரியாம என்னைப் பார்க்க, சுருக்கமா அவள்ட்ட நான் விவரம் சொல்ல, அவளும் என்னோட சேர்ந்து சிரிக்கறா...
அவளோட போறதுக்கு முன்னாடி ஒரு அட்டெம்ப்ட், என் உடலுக்குள்ள நுழையப் பார்க்கறேன். முடியல, ஆனால் எனக்கு ஒண்ணும் வருத்தம் இல்லை. என்னோட கடவுள் ஷோகேஸைப் பிரிஞ்சு போகணுமேன்னு நினைப்பு வந்த உடனேயே புரிஞ்சுண்டு கோமதி சொல்றா: ’மது, கவலைப் படாதே. இந்த ஷோகேஸ்ல இருக்கற ஒவ்வொரு பொருளும் உருவமும் உனக்கு அத்துப்படி இல்லையா? எங்க இருந்தாலும் அதையெல்லாம் நீ எளிதா மனசில பார்க்கலாமே! என்டயர் ஷோகேஸை நீ எளிதா மனசில கிரியேட் பண்ணிக்கலாம்...’ தலையாட்டிவிட்டு, மீண்டும் என் உடலை ஒருமுறை பார்க்கறேன்.
’யெஸ், உடல்தான் பெரும்பாலானான உயிர்களுக்குப் பிரிய முடியாத ஷோகேஸ்,’ என்கிறாள் கோமதி. நான்ங்கற உணர்வைத் தருவது அந்த உடல்தானே? ஒவ்வொரு உயிரும் நான்ங்கற உணர்வை அதோட உடலோடதானே இனம் கண்டுகொள்கிறது? ஆனால் ஜீவன் இல்லாவிட்டால் அந்த ஷோகேஸ்-க்கு மதிப்பு இல்லைதானே?’ தொடர்ந்து, ’நான் என் உடலைப் பிரிந்த போது இப்படித்தான் அவதிப்பட்டேன். உனக்கும் அப்படி இருக்கறது இயற்கைதானே?’ என்கிறாள்.
’இல்லை கோமதி’, என்கிறேன். ’உள்ள இருந்த போதும் சரி, இப்ப வெளில இருக்கும் போதும் சரி, எனக்கென்னவோ இந்த கடவுள் ஷோகேஸை விட உடல் ஷோகேஸ் ஒண்ணும் பெரிசாத் தெரியலை’, என்று சொல்லிவிட்டு அவளுடன் மிதந்து செல்கிறேன்.
No comments:
Post a Comment