சிறுகதை உத்திகள்
ரமணி(இலக்கிய வேல், டிச. 2016)
03. சிறுகதையில் முரண்பாடு
ஒரு சிறுகதையின் மூன்று அடிப்படைக் கூறுகளில் முதலாவதான முரண்பாடு என்பது என்னவென்று இரண்டாம் இயலில் பார்த்தோம். அதாவது:முரண்பாடு என்பது வேறொன்றுமில்லை:
- கதையின் முக்கிய பாத்திரம் தான் இப்போது இருக்கும் நெருக்கடியான நிலையில் இருந்து மீள்வதற்காக, ஒன்றை எதிர்பார்ப்புடன் விழைந்து செயல்படத் தொடங்க, அந்த மீட்சி நிகழ, நிகழலாமலிருக்க, சாத்தியக் கூறுகள் இருப்பதுதான்.
- அந்த விழைவும் செயல்பாடும் பொதுவாக, வன்முறை சார்ந்ததாகவோ பகட்டாகவோ இருக்க வேண்டுவதில்லை. மிகவும் எளியதாகக் கூட இருக்கலாம்.
- விழைவின் திண்மையும் செயல்பாடுமே முக்கியம்.
முரண்பாடு உதாரணங்கள்
அதிர்வுதி. ஜானகிராமன்
பள்ளிகொண்ட ரங்கநாதனை யாரும் பார்த்ததாகத் தெரியவில்லை. கோவிலுக்கு வந்த அத்தனை பேரும் தூணோரமாக அமர்ந்திருந்த மனிதனை மொய்த்துக் கொண்டிருந்தார்கள். நெடுஞ்சாண்கிடையாக அவன் முன் விழுந்து எழுந்தார்கள். எழுந்து அங்கேயே நின்றார்கள்.
...
விலகுமோ என்று கூட்டத்தின் வெளி வட்டத்தின் அருகே சற்று நின்றாள். அவளைத் திரும்பிப் பார்த்தவர்கள் ஏதோ கல்லை மண்ணைப் பார்ப்பதுபோல் பார்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டார்கள். செங்கமலத்துக்குச் சற்று அதிர்ச்சியாக இருந்தது. அவளைப் பார்த்து எந்தக் கண் இரண்டாம் தடவை அவளைத் திரும்பிப் பார்க்காமல் இருந்தது?
வழி தெரியவில்லை!சுஜாதா
ஆனால், இந்தக் கதை அந்த சினிமாவைப் பற்றியது அல்லவே. சினிமா பார்த்துவிட்டு நான் ஸ்டேஷனுக்குத் திரும்பியபோது, எனக்கு ஏற்பட்ட விநோத அனுபவத்தைப் பற்றியது. படம் சற்று நீளமான படம். முடிந்து திரும்பும்போது, எனக்கு நல்ல பசி. கடைசி ரயிலைத் தவறிவிடப் போகிறேனே என்கிற கவலை. மாம்பலத்துக்குப் போய்ச் சப்பாத்தி சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று வேகமாக நடந்தேன்.
சுமைதாங்கிஜெயகாந்தன்
காலனின் தூதுவன்போல் ஒரு போலீஸ்காரன் அந்தக் காலனிக்குள் வந்து ஒவ்வொரு வீடாகக் கேட்டான். கேட்டான்... கேட்டானா?...அவன் தன் நெஞ்சும் உடலும் பதைபதைக்க ஒவ்வொரு வீட்டின் முன்பும் நின்று, "அம்மா! உங்க வீட்டிலே ஏதாவது கொழந்தை, ஆம்பளைக் கொழந்தை, பத்து வயசு இருக்கும், காக்கி நிசாரும் வெள்ளைச் சட்டையும் போட்டுக்கிட்டு... உண்டுங்களா?" என்று திணறினான் போலீஸ்காரன்.
கதையின் முதல் பக்கத்தில் அமைக்கப்படும் முரண்பாடு,- வாசகரைக் கதைக்குள் ஈர்க்கும் விதத்தில் அமையவேண்டும்.
- ’என்ன ஆச்சோ?’ என்று கதைக்குள் நுழைந்து பார்க்கச் செய்வதாய் இருக்கவேண்டும்.
- கதை எதைப் பற்றியது என்று ஓரளவுக்கு உணர்த்தும் வகையில் இருக்கவேண்டும்.
- சில சமயம் கதையின் முதல் வரிகளிலேயே முரண்பாடு அமையும்: மேலுள்ள ஜானகிராமனின் அதிர்வு சிறுகதையில் உள்ளது போல.
- அல்லது ஒரு விவரமான பீடிகையுதன் தொடங்கிக் கதைக்குள் வரலாம்: சுஜாதாவின் இரண்டணா சிறுகதை போல.
முரண்பாடு வகைகள்
முரண்பாடுகளைப் பொதுவாக இப்படிப் பாகுபடுத்தலாம்:- மனிதன்-மனிதன் முரண்பாடு
- மனிதன்-இயற்கை முரண்பாடு
- மனிதன்-கடவுள் முரண்பாடு
- மனிதன் தனக்குள் முரண்பாடு
- மனிதன்-சமூகம் முரண்பாடு
- மனிதன்-இயந்திரம் முரண்பாடு
- தொடக்கத்திலேயே ஏற்படுத்தப்படுகிறது.
- கதையோட்டத்தில் விரிக்கப்படுகிறது. ஓர் உச்ச நெருக்கடி நிலையை அடைகிறது.
- கடைசியில் தீர்வு காணப்படுகிறது.
முக்கிய பாத்திரம் முரண்பாட்டைத் தீர்க்கச் செயல்படுகிறது. எதிர்பாத்திரம் தடைகளை உருவாக்குகிறது. இத்தகைய வினை-எதிர்வினை நிகழ்வுகளின் சாத்தியங்கள் வாசகரை ஈர்த்து, அவர் கதையில் தோய்ந்து தன்னை முக்கிய பாத்திரத்துடன் இணைத்துக் கொள்ளுமாறு செய்கிறது.
முரண்பாடு வகைகளுக்கு உதாரணங்கள்
மனிதன்-மனிதன் முரண்பாடு நாடியது கேட்கின்...குருநாதன் ரமணி
நான் முத்துவேல். என் நண்பன் மனோகரன். இருவரும் நெருங்கிய நண்பர்கள், அதுதான் ஆச்சரியம்!
ஏனெனில் நான் (மனோகரன் மூடநம்பிக்கைகள் என்று மறுக்கும்) அனைத்து ஆன்மிக விஷயங்களையும் நம்புபவன்: எனக்குக் கோவில் ஸ்தல புராணங்கள், சாயி பாபா போன்ற மகான்கள் நிகழ்த்தும் அதிசயங்கள், பேய்-பிசாசுகள் பிடிப்பது அவற்றை ஓட்டுவது, மந்திரித்து வைத்தியம் செய்வது, மறுபிறவி--இன்னும் எது வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளுங்கள்--போன்ற அனைத்து விஷயங்களும் உண்மை.
மனோகரனுக்கோ ஒரு நியூட்டன், ஒரு ஐன்ஸ்டின், ஒரு ஸ்டீஃபன் ஹாகிங்--இன்னும் யாரை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளுங்கள்--போன்று யாரவது உறுதிப்படுத்தி யிருந்தால்தான் அது உண்மை, அறிவியல், நிச்சயம் நம்பலாம். எல்லாத் துறைகளிலும் பற்பல விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் முரண்பட்டுக் கருத்துக்களைச் சொல்கிறார்களே மனோ, இவற்றில் எதுதான் உண்மை என்று கேட்டால் ஜகா வாங்கிவிடுவான்! காலம் காலமாக நிறுவப்பட்டதாகக் கருதப் பட்ட விஞ்ஞான் உண்மைகள் ஒரு நாள் தூக்கியெறியப் படுவதே விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்பது அவன் கட்சி.
சரி, விஷயத்துக்கு வருகிறேன். நாங்கள் இருவரும் சேர்ந்து வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி ஜோதிடம் பார்க்க முடிவுசெய்தோம்!
மனிதன்-இயற்கை முரண்பாடு உயிர்கந்தர்வன்
ஒரு உச்சி வெயிலில் கடலோடித் திரும்பிய மீனவர் ஒருவர் தான் போட் ஜெட்டியில் அந்த சேதியைச் சொன்னார். தீவில் ஒரு திமிங்கலம் ஒதுங்கிக் கிடப்பதாக.
...
திமிங்கலம் ஒதுங்கிய மூன்றாம் நாள்தான் அவன் குடும்பத்தோடு தீவுக்குப் பயணமானான் புறப்படுமுன் இரண்டு நாளாய்ப் பிள்ளைகள் விடிந்து எழுந்ததும் திமிங்கலம் குறித்து கூடிக் கூடி உட்கார்ந்து கற்பனையும் பேத்தல்களுமாய் வாயொழுகப் பேசித் திரிந்ததை அவள் அடிக்கடி பார்த்துவிட்டு வாய் பொத்தித் திரும்பிக்கொண்டு சிரித்து வைத்தாள்.
மனிதன்-கடவுள் முரண்பாடு கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்புதுமைப்பித்தன்
மேலகரம் மே. க. ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே. க. ரா. கந்தசாமிப் பிள்ளையவர்கள், ’பிராட்வே’யும் ’எஸ்பிளனேடு’ம் கூடுகிற சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு வெகு தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்.
...
இப்படியாக மேற்படியூர் மேற்படி விலாசப் பிள்ளையவர்கள் தர்ம விசாரத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுதுதான் அவருக்குக் கடவுள் பிரசன்னமானார்.
திடீரென்று அவருடைய புத்தி பரவசத்தால் மருளும்படித் தோன்றி, "இந்தா, பிடி வரத்தை" என்று வற்புறுத்தவில்லை.
"ஐயா, திருவல்லிக்கேணிக்கு எப்படிப் போகிறது?" என்று தான் கேட்டார்.
மனிதன்-தனக்குள் முரண்பாடு சதுப்பு நிலம்எம்.ஏ. நுஃமான்
அவனுக்குச் `சுரீர்’ என்றது. தான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்ததை அவள் பார்த்துவிட்டதைக் கண்டதும் அவன் கண்கள் உயர்த்தி மேலே சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தான். பிறகு தனது மணிக்கூட்டையும் அதனோடு ஒப்பிட்டுப் பார்த்தான். தன்னைப்பற்றி அவள் பிழையாக நினைக்கக்கூடும் என்று அவன் நினைத்தான். அந்த நினைப்பு அவனைச் சுட்டது. அவள் அவ்வாறு நினையாமலும் இருக்கலாம். அவளுக்கும் என்னைப் பார்ப்பதில் ஒரு கவர்ச்சி உண்டாகி இருக்கலாம். நான் அவளைப் பார்த்ததனால் கவர்ச்சிகொண்டு அவள் மீண்டும் என்னைப் பார்க்கக்கூடும் என்றெல்லாம் அவன் நினைத்தான்.
மனிதன்-சமூகம் முரண்பாடு காடன் கண்டதுபிரமிள்
நான் கும்புட்டேன். "என்னை உடுங்க சாமி"ன்னேன்.
"சொன்னவங்ககிட்டே போய் சொல்லுடா, கபர்தார்னு சொல்லு."
"சரி சாமி"ன்னேன். அப்புறமா ஆரு சொன்னவன்ங்கறாங்க. ஆருமில்லீங்க, நானு பார்த்தேனுங்கன்னேன். பேச்சை மாத்திட்டாங்க.
"நீங்க ஏண்டா ஓணான், நாயி, பூனையைத் திங்கிறீங்க? ஆடு மாடு இல்லியா?"
"அதுக்கேதுங்க பைசா?"ன்னேன்.
கொஞ்ச நேரம் பேச்சில்லே, அப்புறம் மெதுவா கேள்வி. "நீ எப்படா கடேசி வாட்டி மலைக்காடு பக்கமாய் போனே? யார்றா மலைக்காட்டுக்குப் போறவன் வாறவன்? சுக்கானுக்கு யார்றா மலைக் காட்லேருந்து வந்து கஞ்சா பத்திரம் சப்ளை பண்றவன்?"
சுக்கான், பத்திரம், அது இதுன்னதும் - நல்ல பாம்பைப் புடிக்கறதுக்கு சாரைப் பாம்பு விடறாங்கடா காடான்னு உஷாராயிட்டேன்.
"சுக்கான் நல்லபாம்புத் தோலை வித்து வயத்தைக் களுவுற பாவி சாமி. எங்களுக்கு இப்பல்லாம் பாடேதுங்க? எங்காவது வயலிலே வரப்பிலே பாம்பைப் புடிச்சாதாஞ் சாமி"ன்னு கும்புட்டேன்.
"எலக்சனுக்கு நில்லுடா. ஓட் போடுவான், அப்புறம் நாட்டை எல்லாம் காடா மாத்துடா. போடா! போயி கரப்பான் பூச்சியைத் துண்ணுடா"ங்கறாரு ஏட்டு.
மனிதன்-இயந்திரம் முரண்பாடு ஜில்லுசுஜாதா
ஜன்னலுக்கு வெளியே தொடுவானத்தில் ஒரே ஒரு மேகம் கருப்புத் தீற்றலாகத் தெரிந்தது.ஆத்மா கதவைச் சார்த்தினான். வரப்போகிறது. தெரிந்துவிட்டது. அவர்கள் கணக்குப்படி சாயங்காலம் மழை வந்து விடும். அதற்குள் புறப்பட்டுவிட வேண்டும்.
திரும்பினான். நித்யா பெட்டியில் துணிகளை அடைத்துக் கொண்டிருந்தாள்.
"சீக்கிரம் நித்யா!"
"எதை எடுத்துக்கறது எதை விடறது?"
"மொத்தமே மூணு பேருக்கும் எட்டு கிலோதான். ரொம்ப அவசியமானதை மட்டும் எடுத்துக்க"
"அவசியமானதுங்கறது எது?"
அந்த கேள்விக்கு இந்த சந்தர்ப்பத்தில் ’மூச்சு’ என்பதைத் தவிர ஆத்மாவிடம் வேறு பதில் இல்லை .
No comments:
Post a Comment