சிறுகதை உத்திகள்
ரமணி(இலக்கிய வேல், ஏப். 2017)
07. கதைத்திட்டம் (plot)
ஒரு கதைக்கருவைச் சிறுகதையாக்கும் போது, முக்கிய பாத்திரத்துக்கு நிகழ்ந்த எல்லாவற்றையும் அவை நிகழ்ந்த அதே கால வரிசையில் சொல்ல முடியாது என்பதால், அவற்றில் தேவையான சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, நிகழ்வுகள், அவற்றின் காலம், களம் இவற்றை முன்னும் பின்னும் அமைத்துச் சொல்ல வேண்டியதாகிறது. கதை நிகழ்வுகளை இப்படி வேண்டும் நிரலில் அமைப்பதே கதைத்திட்டம்.இவ்வகையில் கதைத்திட்டம் என்பது
- கதை அதன் போக்கில் வருணனை, உரையாடல், பாத்திரப் படைப்பு என்று விரிவதாகும்.
- நிஜ வாழ்வின் நிகழ்வுகள் போலின்றிக் கதையின் நிகழ்வுகள் திட்டமிட்ட ஒழுங்கில் சிக்கலாகி, முடிவில் ஒரு விளைவை ஏற்படுத்த அமைவதாகும்.
- உச்ச நெருக்கடியை நோக்கிச் செல்லும் நிகழ்வுகளுக்கும் அவற்றை எதிர்கொள்ளும் கதைமாந்தர்களுக்கும் இடையில் உள்ள தொடர்பாகும்.
- கட்டுக்கோபாக உள்ள கதைத் திட்டத்தில் ஏதேனும் ஒரு நிகழ்வை எடுத்துவிட்டாலும், அது முழுத்திட்டத்திற்கே வேட்டுவைப்பதாய் அமைவதாகும்.
எனவே, கதைத்திட்டம் என்பது, கதைத் தொடக்கத்தில் ஏற்படுத்தப்படும் முரண்பாடு, கதை நிகழ்வுகளால் ஏற்படும் உச்ச நெருக்கடி, அதன்பின் கதை முடிவாக எழும் இறுதித் தீர்வு (அல்லது புரிதல் உணர்வு) ஆகிய மூன்று அடிப்படைக் கூறுகளையும் உள்ளடக்கிய நிகழ்வுகளைத் திறம்பட வெளிப்படுத்துவதாக அமைவதாகும்.
கதைத்திட்ட அமைப்பு
அ. கதைத்திட்டம் கதை நிகழ்வுகளால் ஆவது.அந்த நிகழ்வுகள் வெறும் வருணனைகளோ, உரையாடல்களோ, அல்லது திறமையுடன் சொல்லப்படும் ஆசிரியர் கூற்றோ அல்ல. அவை ஒரு நெருக்கடியான நிலையில் உள்ள முக்கியப் பாத்திரத்தின் வினையாற்றலாக, அதன் விளைவு-எதிர் விளைவாகத் தொடர்ந்து எழுவன. அவை வெளிநிகழ்வுகளாக இன்றி உள்மனதில் நிகழும் போராட்டமாக இருக்கலாம். ஆனால் அதுபோன்ற மனப்போராட்டத்தைக் கதைப்பாத்திரம் வெளிப்படுத்துவது ஒரு வெளிநிகழ்வாக இருக்கும்.
ஆ. கதைத்திட்ட நிகழ்வுகள் செயற்கையாக ஏற்படுத்தப்படும் ஒரு நிரலில் அமைவன.செயற்கையாக என்பது இயற்கைக்கு மாறுபட்ட (unnatural) என்பதன் குறிப்பல்ல; மாறாக, அது கலைத்திறன் பெற்ற செயற்கை (art-ificial) என்பதைக் குறிப்பதாகும். ஓர் ஓவியன் வரைவதுபோல், ஒரு சிற்பி செதுக்குவதுபோல், கதையின் உட்கூறுகள் தகுந்தவோர் நிரலில் அமைந்து கதையின் பெரும் சித்திரத்தை (the big picture) வாசகர் மனத்தில் பதியவைப்பதாக அந்த நிரல் அமையவேண்டும்.
இ. கதைத்திட்டம் என்பதன் நோக்கமே கதையைப் படிக்கும் வாசகர் மனத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதே. அந்தத் தாக்கம் இல்லையென்றால் அந்தக் கதைத் திட்டத்தால் பயனில்லை.
ஈ. கதைத்திட்டம் மேற்சொன்னதுபோல் ஓர் உச்ச நெருக்கடியையும், அதன் பின் வரும் இறுதித் தீர்வையும் உள்ளடக்கியதாக அமையும்.
அவளைப் பார்க்கக் கடற்கரைக்குப் போனேன், பார்த்தேன், பேசினேன், இருவரும் ஓட்டலில் சாப்பிட்டோம், பின் வீடு திரும்பினோம் போன்ற சாதாரண நிகழ்வுகள் ஒரு கதைத் திட்டத்தை அமைப்பதில்லை.
அவளைப் பார்க்க நான் போனபோது...
- அவள் வரவில்லை என்றால் அது உடனே பல சாத்தியங்களை விளைவிக்கிறது.
- அவள் அவனுடன் அன்னியோன்னியமாகப் பேசிக்கொண்டிருந்தாள் என்றால் சாத்தியங்கள் இன்னும் அதிகரிக்கின்றன.
- அவள் வரவில்லை, அவள் அவனுடன்... என்னும் இரு நிகழ்வுகளும் அதன் பின் வரும் நிகழ்வுகளுடன் சேர்ந்து உச்ச நெருக்கடியை ஏற்படுத்துகின்றன்.
- இரண்டிலும் நான் என்ன செய்தேன் என்பது கதையின் இறுதித் தீர்வாக அமையும் சாத்தியம் இருக்கிறது.
- அந்த இறுதித் தீர்வு இழுவையாக இல்லாமல் போட்ட முடிச்சைச் சட்டென்று அவிழ்ப்பதாக இருக்குமாறு கதைத் திட்டத்தை அமைக்கவேண்டும்.
உன்னதக் கதைத்திட்டம்
ஒரு கதைத்திட்டம் எப்போது உன்னதம் என்னும் அந்தஸ்தைப் பெறுகிறது?1. எளிமை (Simplicity)
சுஜாதாவின் ’வழி தெரியவில்லை’ சிறுகதையின் திட்டத்தை ஓர் அஞ்சல் அட்டையில் எழுதிவிடலாம்! ஒருவன் சினிமா பார்க்கப் புறநகர் செல்லுகிறான். சினிமா முடிந்து வரும்போது இருளில் வழியைத் தவறவிட்டுத் தான் வந்திறங்கிய ரயில் நிலையத்தைத் தேடுகிறான். சற்றும் எதிர்பாராத ஓர் அனுபவத்தில் அவன் அதைக் கண்டறிகிறான்.
இவ்வளவுதான் கதையின் ப்ளாட். இதை வைத்து கருத்தைக் கவரும் ஒரு சிறுகதையை சுஜாதா பின்னி அதைச் சட்டென்று முடிக்கிறார்.
2. நம்பவைக்கும் தகைமை (Plausibility)
சித்தர் கருவூர்த்தேவர் பொதுமக்கள் அவரை தரிசனம் செய்யுமாறு நேரில் தோன்றுவது இந்நாளில் சாத்தியமா என்ன? ஆயினும் ’அதிர்வு’ சிறுகதையின் தி. ஜானகிராமன் அதை நம்பத்தக்க வகையில் அமைத்திருப்பது அவர் கதைத் திட்டத்தின் உயர்வாகும்.
3. தன்முதலாவது (Originality)
ஒரு ரயில் பயணத்தில் எதிரில் அமரும் நபரைச் சந்தித்து உரையாடுவது என்பது நம் எல்லோருக்கும் பொதுவான அனுபவம். அதை ’சிலிர்ப்பு’ என்ற தலைப்பில் தி. ஜானகிராமன் ஒரு சிறுகதையாகப் பின்னும்போது, அவர் கதைத்திட்டம் ஒரிஜினலாக அமைகிறது.
சுஜாதாவின் ’வழி தெரியவில்லை’ சிறுகதையை அதுபோன்ற எளிமையான கதைத் திட்டத்துடன், வேறு வகையில் அவராலேயே எழுதமுடியாது என்பது அதன் தன்முதலாகும் தன்மை.
4. கதையுச்சி (Climax)
முரண்பாட்டில் தொடங்கும் ஒரு சிறுகதை படிப்படியான நிகழ்வுகளால் ஓர் உச்சியை அடைந்து பின் சரேலென இறங்கி முடிகிறது. இந்த உச்சியும், உடன்முடிவும் ஓர் உன்னத கதைத் திட்டத்தில் சிறப்பாக அமையும்.
சுஜாதாவின் ’வழி தெரியவில்லை’ சிறுகதையின் கதைநாயகனை அந்த ரிக்ஷாக்காரன் இருளில் தன் வீட்டின் கதவைத் தட்டித் தன் மனைவியிடம் அழைத்துச் செல்லும்போது நாயகனும் வாசகரும் சம்பிரதாயமாக எதிர்பார்ப்பது எது என்பதில் கதையின் உச்சி அமைகிறது. அதன் பின், சற்றும் எதிர்பாராத விதமாக, மிக இயல்பாகக் கதை ஓரிரு வரிகளில் முடிகிறது!
5. ஈடுபாடு (Interest)
ஓர் உன்னதக் கதைத்திட்டம் கதையில் நுழைந்த உடனேயே வாசகர் அதை ஒரே மூச்சில் படித்துமுடிப்பதான ஈடுபாட்டை விளைவிப்பதாக அமையும். ஆசிரியர் எதிர்பார்க்கும் விதத்தில் அது வாசகரைத் தொடுவதாக அமையும்.
கதைத்திட்ட அமைப்பில் செய்யக்கூடாதவை
புதிதாகக் கதை எழுதுபவர்களும் சிறுகதையைச் சரியாகப் புரிந்துகொள்ளாது எழுதுபவர்களும் பொதுவாகச் செய்யும் தவறுகள் இவை.
- கதைக்கு சம்பந்தம் இல்லாதவற்றைச் சொல்லுவது
- வார்த்தை ஜாலங்களால் ஒரு மெலிந்த கதையுச்சியை மறைக்கப் பார்ப்பது
- கதையின் சிக்கல் சரியாக அமையாததால் முடிவு நம்ப முடியாததாகிவிடுவது
- கதையின் வியப்பாக அமையும் சிக்கலும் தீர்வும் இழுபறியாகி விடுவது
- கதை நிகழ்வுகள் தற்செயலாவோ, திடீர் நிகழ்வாகவோ இருப்பது
- கதையைத் தேவையில்லாமல் வளர்த்துவது
- காலம், களம், சூழ்நிலை, கதைமாந்தர் இவற்றின் ஒருமைப்பாட்டை மறந்துவிடுவது
- பிறர் எழுத்தைக் காப்பியடிப்பது, சாதாரண எழுத்தாளர்களைப் பின்பற்றுவது
- எளிதில் தெரிந்துவிடுவதை வரிந்துகட்டிக்கொண்டு சொல்லுவது
- சிறுகதையின் போதனையாக ஒரு செய்தியை ஆசிரியர் கூற்றாகச் சொல்லுவது.
கதைத்திட்ட வகைகள்
1. எதிர்பாராத திருப்பக் கதைத்திட்டம்
இந்த வகையில் கதையின் முடிவில் ஓர் எதிர்பாராத திருப்பம் இருக்கும். அது இயல்பாக அமையாதது புதியோர் செய்யும் தவறு.
சுஜாதாவின் ’கால்கள்’, ’எல்டொராடோ’; ஜெயகாந்தனின் ’சுமைதாங்கி’ போன்ற சிறுகதைகள் இவ்வகை.
2. பிரச்சினைக் கதைத்திட்டம்
கதையின் மையப் பாத்திரம் சந்திக்கும் ஒரு பிரச்சனையை மையமாக வைத்தெழும் இவ்வகையில் பிரச்சினை வாசகரைக் கவர்வதாகவும், தீர்வு முதலிலேயே புலப்படாதவாறும், ஆசிரியர் தரும் தீர்வு திருப்தி அளிப்பதாகவும் அமையும்.
தி. ஜானகிராமனின் ’குழந்தைக்கு ஜுரம்’. சுஜாதாவின் ’நிஜத்தைத் தேடி’, இரா.முருகனின் ’ஆழ்வார்’ போன்ற சிறுகதைகள் இவ்வகை.
3. மர்மக் கதைத்திட்டம்
ஒரு ரகசியத்தை மையமாக வைத்து முடிவில் அதை வெளிப்படுத்தும் இவ்வகையில் துப்பறியும் கதை, அமானுஷக் கதை, இவையல்லாத மர்மக் கதை போன்றவை அமையும்.
இத்தொடரின் உதாரணக் கதைகளில் ரமணியின் ’நாடியது கேட்கின்’, புதுமைப் பித்தனின் ’காஞ்சனை’ போன்ற சிறுகதைகள் இவ்வகை.
4. அதீத-கற்பனைக் கதைத்திட்டம் (fantasy)
இயல்புக்குப் புறம்பான நிகழ்வுகளையோ, எதிர்கால உலகையோ அல்லது ஓர் ஆதர்ச உலகையோ விவரிக்கும் இவ்வகையில் அறிவியல் கதைகளும், அதீத கற்பனையுடன் பின்னப்படும் பிறவகைக் கதைகளும் அமையும். சுஜாதாவின் ’ஜில்லு’, புதுமைப் பித்தனின் ’கட்டிலை விட்டிறங்காக் கதை’, ’கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ போன்ற சிறுகதைகள் இவ்வகை.
5. சரித்திரக் கதைத்திட்டம்
பண்டைய வரலாற்றில் உள்ள ஒரு நிகழ்வையோ, பாத்திரத்தையோ வைத்தெழும் இவ்வகையில் அமைவன தி. ஜானகிராமனின் ’அதிர்வு’, புதுமைப் பித்தனின் ’கனவுப் பெண்’ போன்ற சிறுகதைகள்.
6. நகைச்சுவைக் கதைத்திட்டம்
கதை நிகழ்வுகளையும் பாத்திரங்களையும் நகைச்சுவை ஒன்றை மட்டும் இலக்காக வைத்து மிகைப்படக் காட்டும் இவ்வகையை அமைப்பது எளிதல்ல. சுஜாதாவின் ’குதிரை’, ரமணியின் ’புதிய கோணங்கி’, ’கைக்கு எட்டியது!’, ’ஏட்டுச் சுரைக்காய்’ போன்ற சிறுகதைகள் இவ்வகை.
7. உணர்வுக் கதைத்திட்டம்
குணவியல்புகளும், உணர்ச்சிகளும் தூக்கலாக அமையும் இவ்வகையில் காதல், குடும்ப, சமூகக் கதைகள் அடங்கும்.
இத்தொடரில் உள்ள உதாரணக் கதைகளில் தி. ஜானகிராமனின் ’குழந்தைக்கு ஜுரம்’, எம்.ஏ. நுஃமானின் ’சதுப்பு நிலம்’, பிரமிளின் ’காடன் கண்டது’ போன்ற கதைகள் இவ்வகை.
8. குறியீட்டுக் கதைத்திட்டம்
கதைத்திட்டத்தில் அமையும் பொருட்களும், பாத்திரங்களும், நிகழ்வுகளும் குறியீடுகளாக அமையும் இவ்வகையில் சுந்தர ராமசாமியின் ’ரத்னாபாயின் ஆங்கிலம்’, மாலனின் ’கரப்பாம்பூச்சி’, கி. ராஜநாராயணனின் ’கதவு’ போன்ற பல சிறுகதைகள் அமைகின்றன.