சிறுகதை உத்திகள்
ரமணி(இலக்கிய வேல், மார். 2017)
06. கதைப் பாத்திரங்கள்
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ’நூறு சிறந்த சிறுகதைகள்’ என்றொரு பட்டியல் வெளியிட்டுள்ளார். அதிலுள்ள சில கதைத் தலைப்புகள் இவை:காசி, செல்லம்மாள், அக்கினிப் பிரவேசம், நகரம், கதவு, புலிக்கலைஞன், ஞானப்பால், பிரசாதம், புயல், நாயனம், பூனைகள் இல்லாத வீடு, நீக்கல்கள், கனகாம்பரம், முள், புற்றிலுறையும் பாம்புகள், பலாப்பழம், இறகுகளும் பாறைகளும், புலிக்கட்டம், நுகம், சோகவனம், பாற்கடல்.
இத்துடன் நம் ஒன்பது உதாரணக் கதைத் தலைப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்:
அதிர்வு, வழி தெரியவில்லை!, சுமைதாங்கி, நாடியது கேட்கின்..., உயிர், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், சதுப்பு நிலம், காடன் கண்டது, ஜில்லு.
ஒரு கணம் இந்தத் தலைப்புகளை ஆராயப் புகுந்தால், அவற்றில் பெரும்பாலானவை ஒரு மனிதரையோ, அல்லது மானுட நாட்டத்தையோ (human interest) விவரிக்கும் சிறுகதையைப் பற்றியது என்று புரியும். கி. ராஜநாராயணனின் ’கதவு’ கதையும் அதை நேசிக்கும் குழந்தைகளைப் பற்றியதாக அமைகிறது. இதுபோல் கோபி கிருஷ்ணனின் ’புயல்’ கதையும் மனிதர்களைப் பற்றித்தான். எழுதப்படும் சிறுகதைகளில் 99% சதவிகிதம், இங்ஙனம் கதை மாந்தரைப் பற்றி அமைவதாலேயே சிறக்கிறது என்று எளிதில் கண்டுகொள்ளலாம்.
சிறுகதை மாந்தர்
ஒரு கதைக்கரு எவ்வளவுதான் வற்புறுத்துவதாக இருந்தாலும் ஒரு முக்கிய கற்பனைப் பாத்திரத்தைப் படைத்து அதன் மூலம்தான் கருவைக் கதையாக வளர்க்கமுடியும். இந்த முக்கியப் பாத்திரத்தின் எண்ணங்கள், உணர்வுகள், தூண்டுதல்கள், எதிர்வினைகள்--இவையே கருவாக இருக்கும் கதையை வளர்த்து உருவாக்கி நகர்த்துகின்றன. கதையின் முரண்பாடு, உச்ச நெருக்கடி, இறுதித் தீர்வு யாவும் இந்த முக்கிய பாத்திரத்திற்கே நிகழ்கின்றன.சிறுகதை என்பது பெரும்பாலும் ஒரு மையக் கதைப் பாத்திரத்தைச் சுற்றி அமைவதாகும். வாசகரின் கவனம் முழுவதும் இந்த மையப் பாத்திரத்தின் மீதே இருக்கும்.
இந்தப் பாத்திரத்திற்கு எதிராகவும், இதனுடன் கதையில் ஊடாடுவதாகவும் மேலும் ஓரிரு துணைப் பாத்திரங்கள் சிறுகதையில் அமையலாம். பாத்திரங்கள் அதிகமானால் அவை, மையப் பாத்திரம் மீதுள்ள வாசகரின் கவனத்தைச் சிதைத்துக் கதையின் ஒருமையைக் குலைத்துவிடலாம்.
பாத்திரம் (character) என்று சொல்லும் போது அது ஓர் உயர்திணை அல்லது அஃறிணை உயிராகவோ அல்லது ஒரு சடப் பொருளாகவோ இருக்கலாம். கதையின் மையப் பாத்திரம் ஒரு சடப் பொருளாகவோ அல்லது அஃறிணை உயிராகவோ இருந்தாலும், அவை மனிதரைப் பற்றிப் பேசுவதாகவே பெரும்பாலும் கதை அமையும்! கதையை எழுதுவது ஒரு மனிதனே என்பதால் தானில்லாத ஓர் உலகத்தைப் பற்றி எழுதுவதை அவனது அகங்காரம் தடுக்கிறதோ என்னவோ?
கதைமாந்தர் தேர்வு
நம் வாழ்க்கையில் நாம் உறவு, நட்பு, சுற்றம், அலுவல், சமூகம் போன்ற பல வகைகளில் பலவிதமான மனிதர்களுடன் நெருங்கிப் பழகுகிறோம். இவர்கள் தவிர, தினமும் நம் பார்வையில், பேச்சில், பழக்கத்தில், புத்தகத்தில், ஊடகத்தில் என்று பல வகைகளில் பலவிதமான மனிதர்களை எதிர்கொள்கிறோம். இவர்கள் எவ்வளவு தூரம் சிறுகதையில் கற்பனைப் பாத்திரங்களாகப் பரிணமிக்கக் கூடும் என்பதை அறிய, சிறுகதை எழுத முனைவோர் இந்த மனிதர்களைக் கூர்ந்து நோக்கி அவர்களின் குணவியல்புகளைப் பற்றி மனத்தில் நினைத்துப்பார்க்கும் பழக்கத்தை மேற்கொள்ளவேண்டும். இதுபோல் தமது குண, மன இயல்புகளைப் பற்றியும் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.எந்தவொரு மனிதரையும் அப்படியே நேரடியாக ஒரு சிறுகதையில் கையாள முடியாது. ஏனெனில், ஒரு மனிதரின் ஆசாபாசங்கள், பிரச்சினைகள், துன்பங்கள் போன்றவை பெரிதும் எல்லோர்க்கும் பொதுவாக அமைவதால், அவற்றைப் பற்றிப் படிப்பதில் சுவாரஸ்யம் இருக்காது. எனவே, ஒரு சிறுகதையில் பாத்திரம் இயல்பாக அமையவேண்டுமானால் அதை மிகைப்படுத்தி வரையவேண்டும்.
இவ்வாறு மிகைப்படுத்திப் படைக்கும் சிறுகதை மாந்தர்
- மனத்தைக் கவரும் விதத்தில் ஒரு செயலை, ஓரிடத்தில், ஒரு சூழ்நிலையில் செய்வர்.
- நல்லது, அல்லது எது செய்தாலும் இவர்கள் வலுவானதோர் தனித்தன்மையுடன் இருப்பர்.
- தோற்றத்திலேயே இவர்கள் இயல்பு தெரியும் (இதற்கு விதிவிலக்குகளும் உண்டு).
- தாம் சார்ந்த வகையோரின் இயல்புகளுடன் அவர்களில் தனியாக நிற்பர்.
- இவர்களின் விருப்பு, வெறுப்பு, ஆசை, குறிக்கோள், நகைச்சுவை போன்ற குணவியல்புகள் எதிர்பாராத, ஆனால் பொருத்தமான வழிகளில் செல்லும்.
சிறந்த நகைச்சுவை எழுத்தாளரும் பத்திரிகை ஆசிரியருமான சாவி என்னும் சா.விசுவநாதன் அவர்கள் 1997-இல் ’கேரக்டர்’ என்றொரு நூல் வெளியிட்டார். பலவிதமான மனிதர்களை, தமக்கே உரிய கூரிய நோக்கில், நகைச்சுவடியுடன் அவர் இந்நூலில் வருணித்துள்ளார். சிறுகதை எழுத்தாளர்களுக்கு இந்த நூல் ஒரு வரப்பிரசாதம். இணையத்தில் தேடினால் இதன் அச்சுப்பிரதியை வாங்கலாம். அல்லது நூலை இந்த வலைதளத்தில் பதிவிறக்கலாம். https://commons.wikimedia.org/wiki/File:kErakTar.pdf
சிறுகதை மாந்தர், அவர்களுக்கு இடையிலுள்ள தொடர்பு
ஒரு சிறுகதையில் ஒரு மையப் பாத்திரமும், அதனுடன் ஊடாடும் ஓரிரு துணைப் பாத்திரங்களும் இருக்கும். இவை தவிர, கதையின் சூழலை நிறுவுவதில் இன்னும் சில பாத்திரங்கள் பொதுவாகக் குறிக்கப்பட்டோ ஆங்காங்கே தோன்றுவதாகவோ இருக்கும். இவ்வாறு எழும் கதைமாந்தர் இடையில் உள்ள தொடர்பு, கதையின் ஒருமையைக் குலைக்காத வகையில் அமையும்.ஒரு சிறுகதையின் பாத்திரங்கள்
- கதையில் வந்து பேசுவதாக அமையலாம்.
- கதையில் வந்து பேசாமல் இருப்பதாக அமையலாம்.
- கதையில் வராது குறிக்கப்படுவதாக இருக்கலாம்.
கதைமாந்தர் இடையிலுள்ள தொடர்பை ஓர் உதாரணம் மூலம் விளக்கலாம்.
ஐந்து வயதுப் பெண்குழந்தை ஜனனி, தன் பெற்றோர் படுக்கை அறையில் காலையில் கண் விழித்ததும், கட்டிலை விட்டு இறங்கி, அன்னையின் அழகுசாதன மேசைக் கண்ணாடி முன் நின்றுகொண்டு, தனக்குத் தானே ஏதோ பேசியவண்ணம், அழகுகாட்டித் தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்து ரசிக்கிறது. தந்தை இன்னும் தூங்கிக்கொண்டிருக்க, அருகில் தொட்டிலில் குட்டிப் பாப்பாவும் தூங்குகிறது. குழந்தை ஜனனிக்குத் தெரியாமல், அறையின் நிலைப்படி அருகில் நின்று, ஜனனியின் அன்னை தன் குழந்தையின் சேட்டைகளை ரசித்தபடி மெய்மறக்கிறாள்.
இந்த நிகழ்ச்சியை ஒரு சித்திரமாக மனத்தில் வரைந்து பாருங்கள். அந்தச் சித்திரத்தின் கவனமெல்லாம் குழந்தை ஜனனியில் மேல் என்பதால், அவளது உருவம் மிகுந்த விவரங்களுடன் பரிமளிக்கும். அடுத்த துணைப் பாத்திரமாக அவள் அன்னையின் உருவம் பின்னணியில் விளங்கும். அவள் தந்தை மற்றும் குட்டிப் பாப்பா தொலைவில் மழுப்பலாகத் தெரிவார்கள். இப்படித்தான் ஒரு சிறுகதையின் கதைமாந்தரும் அவர்களுக்கு இடையில் உள்ள தொடர்பும் அமையவேண்டும்.
கதைமாந்தர் வகைகள்
வாழ்வில் நாம் காணும் எந்தவொரு மனிதரும் தனியாக நிற்பவராக இல்லாமல்,- குடும்பம், சாதி, சமூகம், குலம், இனம், மொழி, நாடு, ஊர், மதம், நாத்திகம் என்று நம் முன்னோர் ஏற்படுத்தி இன்றும் நிலவும் வகுப்புகளிலும்
- அரசியல், தொழில், அலுவகப்பணி, வேளாண்பணி, கல்வி, சேவை போன்ற இன்றைய வகுப்புகளிலும்
இப்படிப் பொதுமனிதனாக இருக்கும் ஒருவனே தன்னளவில் ஒரு நாயகன், ஊர்சுற்றிப் பார்ப்பவன், ஆராய்ச்சியாளன், பாதுகாவலன், சாதிப்பவன், துன்புறுபவன், காதலிப்பவன் அல்லது வேறொரு வகையினன் என்று தனித்து நிற்பவனாக இருப்பான்.
இவ்வாறு தன் வகுப்புகளின் பொதுவியல்புகளுடன் தனது தனிப்பட்ட இயல்புகளும் சேர்ந்த கலவையே மனிதன். இந்தக் கலவைப் பாத்திரத்தை மூன்று விதங்களில் படைக்கலாம்.
அ. வகுப்பியல்புகள் தூக்கலாக
இவ்வகைப் பாத்திரங்கள் இலட்சியக்காரர்களாகவோ, சராசரி மனிதர்களாகவோ இருக்கலாம். ஆனால் முற்றிலும் வகுப்பியல்புகளைக் கொண்டே அமையும் பாத்திரங்கள் தம்மளவில் சுவாரஸ்யமானவராக ஒரு சிறுகதையில் அமைவது அரிது.
ஆ. தனி இயல்புகள் தூக்கலாக
மேற்சொன்ன பழைய, புதிய வகுப்புகளில் எவ்விதத்திலும் சேராதவனாக ஒரு மனிதனைப் பற்றி எழுதலாம். ஆனால் ஏதேனும் ஒரு வகுப்பின் பின்புலம் எதுவும் இல்லாது அமையும் பாத்திரம் இயற்கைக்கு மாறாகவே (eccentric) இருக்குமாதலால் அது வாசகரைக் கவர்வது அரிது.
இ. இரண்டின் கலவையாக
இவ்வகைப் பாத்திரங்களே வாசகர்களுக்குத் திருப்தியாக அமையக் கூடியவர்கள். வகுப்பியல்புகளையும், தனிமனித இயல்புகளையும் கலந்து கதைமாந்தரை உருவாக்கும் வாய்ப்பு ஒரு சிறுகதை எழுத்தாளருக்குப் பெரும்புதையல் கிடைத்தது போல.
நான் முதலில் ஓர் இந்தியன். அதற்குள்ளோர் கணினி மென்பொருள் வல்லுனன். தமிழன். அதுவும் தஞ்சை மண்ணைச் சேர்ந்தவன். தாழ்ந்த சாதி. பொறுப்பாகப் படித்ததால் முன்னுக்கு வந்தவன். என் சாதிமக்களில் மூத்தோரின் வெகுளித்தனம் மற்றும் அறியாமையையும், இளஞர்களின் அரசியல், சினிமாக் கவர்ச்சியையும் மூலதனமாகக் கொண்டு அரசியல்வாதிகள் தம் பிழைப்பை நடத்துவது குறித்து நான் எதுவும் செய்ய இயலாத வகையில் என் வேலை அமைந்திருப்பது என்னுள் சினத்தை எழுப்புகிறது. முதலில் என் வாழ்க்கையை நிலைப்படுத்திக்கொண்டு பின்னர் இந்த அநியாயங்களைத் தட்டிக்கேட்கவேண்டும் என்னும் விவேகம் விரவிய எழுச்சி என்னிடம் இருக்கிறது.
இதுபோன்று உருவாகும் பாத்திரங்கள் வாசகர் மனத்தில் நிற்கும் வாய்ப்புகள் அதிகம். இவை தவிர, கதாசிரியரின் தனிப்பட்ட இயல்புகளும், சமூக, மானுடப் பார்வைகளும் கதைப்பாத்திரங்களில் எதிரொளிக்கும் என்றும் சிறுகதை முனைவோர் புரிந்துகொள்ளவேண்டும்.
பாத்திரப் படைப்பு
சிறுகதைப் பாத்திரப் படைப்பு என்பது புறமும் அகமும் சேர்ந்தவொரு விஷேசமான வருணனை. இந்த வருணனையின் குறிக்கோள் கண்முன் வாழ்வது போன்ற (lifelike) கதைமாந்தர்களை உருவாக்குவது. ஒரு கதைப்பாத்திரம் கதையில் வரும் பிற பாத்திரங்களிடையே தூண்டும் உணர்வுகளை ஆசிரியரும் வாசகரும் அனுபவிப்பது நிஜம்போல் தோன்றவைக்கும் இந்தப் படைப்பின் உச்சம்.இதில் ஆசிரியரின் நோக்கம் பொறுத்து அந்தப் பாத்திரம்
- வாழ்வில் காண்பது போன்ற யதார்த்தம் (realism)
- காணவேண்டுவது போன்ற கோட்பாடு (idalism)
- அசாதாரண சூழலில் காணும் கற்பனை சார்ந்த தன்முனைவு (romanticism)
- கேலிச்சித்திரம் (caricature)
பாத்திரப் படைப்பின் கூறுகள்
அ. பாத்திர வருணனைஒரு கதைப்பாத்திர வருணனை மூன்று வழிகளில் அமையலாம்.
- நேரடி வருணனை
- மறைமுக வருணனை ஒரு பாத்திரத்தை இன்னொன்று வருணிப்பது
- குறிப்புகள் மூலம் உணர்த்துவது
ஆசிரியரே பாத்திரத்தை நேரடியாக வருணிப்பது.
"பெரியசாமிப் பிள்ளை வாயைத் திறந்து பேச ஆரம்பித்தால், அதுவும் அந்த நரைத்துப்போன, சுருட்டுப் புகையால் பழுப்பேறிய பெரிய மீசையை முறுக்கிக் கொண்டு பேச ஆரம்பித்துவிட்டால்– நிச்சயம், அவர் பேசுகின்ற விஷயம் இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த இரண்டு உலக மகா யுத்தங்களிலும் நேச தேச ராணுவத்தினர் புரிந்த வீரதீரச் சாகசங்கள் பற்றியதாகத்தான் இருக்கும்." என்று தொடங்கும் ’பூ உதிரும்’ சிறுகதையில் ஜெயகாந்தனின் பாத்திரப் படைப்பு இவ்வகை.
அல்லது பாத்திர வருணனை கதைப்போக்கில் வளருமாறு அமைப்பது
"என்னையே இரண்டு நிமிடங்களாகப் பார்த்துக்கொண்டிருந்தார், அந்த ஸ்வெட்டர் அணிந்த கிழவர். கலங்கிய வெண்பச்சைக் கண்கள், மெல்லிய உதடுகள், முகத்தில் வரிவரியாக சுமார் எண்பது வயதின் சுவடுகள், புருவம் இல்லை, புருவத்துக்குப் பதில் இரண்டு கீறல்கள், நரம்பு தெரியும் கைகள்,..." என்று செல்லும் சுஜாதாவின் ’கால்கள்’ சிறுகதைப் பாத்திரம் இவ்வகை.
பாத்திரம் பற்றிய முக்கியக் குறிப்புகளை மட்டும் ஆசிரியர் தந்து மற்றவற்றை வாசகர் கற்பனைக்கு விட்டுவிடுவது.
"நான் முத்துவேல். என் நண்பன் மனோகரன். இருவரும் நெருங்கிய நண்பர்கள், அதுதான் ஆச்சரியம்!
ஏனெனில் நான் (மனோகரன் மூடநம்பிக்கைகள் என்று மறுக்கும்) அனைத்து ஆன்மிக விஷயங்களையும் நம்புபவன்: எனக்குக் கோவில் ஸ்தல புராணங்கள், சாயி பாபா போன்ற மகான்கள் நிகழ்த்தும் அதிசயங்கள், பேய்-பிசாசுகள் பிடிப்பது அவற்றை ஓட்டுவது, மந்திரித்து வைத்தியம் செய்வது, மறுபிறவி--இன்னும் எது வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளுங்கள்--போன்ற அனைத்து விஷயங்களும் உண்மை.
மனோகரனுக்கோ ஒரு நியூட்டன், ஒரு ஐன்ஸ்டின், ஒரு ஸ்டீஃபன் ஹாகிங்--இன்னும் யாரை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளுங்கள்--போன்று யாராவது உறுதிப்படுத்தி யிருந்தால்தான் அது உண்மை, அறிவியல், நிச்சயம் நம்பலாம். எல்லாத் துறைகளிலும் பற்பல விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் முரண்பட்டுக் கருத்துக்களைச் சொல்கிறார்களே மனோ, இவற்றில் எதுதான் உண்மை என்று கேட்டால் ஜகா வாங்கிவிடுவான்! காலம் காலமாக நிறுவப்பட்டதாகக் கருதப் பட்ட விஞ்ஞான உண்மைகள் ஒரு நாள் தூக்கியெறியப் படுவதே விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்பது அவன் கட்சி.
சரி, விஷயத்துக்கு வருகிறேன். நாங்கள் இருவரும் சேர்ந்து வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி ஜோதிடம் பார்க்க முடிவுசெய்தோம்!"
ரமணியின் ’நாடியது கேட்கின்...’ சிறுகதையில் அதன் இரண்டு முக்கியப் பாத்திரங்களைப் பற்றி இதற்குமேல் வருணனையில்லை. பாத்திரங்களின் புறத்தோற்றம் வாசகர்கள் கற்பனைக்கு.
என்பது புறத்தோற்றத்தின் பின்னுள்ள மனத்தையும் குணக்கூறுகளையும் ஆசிரியர் நேரடியாகவோ, உரையாடல்கள் மூலமோ, அல்லது பிற பாத்திரங்களைக் கொண்டு பகுத்தாய்ந்து வருணிப்பதாகும். தன்மை நோக்கில் (first person point of view) கதை சொல்லும்போது பாத்திரங்கள் தம்மைத் தாமே பகுத்தாய்ந்துகொள்வது எளிதாக, இயல்பாக அமைகிறது.
பாத்திரங்களின் மனவோட்டம் மூலமே பெரிதும் கதையை நகர்த்திச்செல்வது எழுத்தாளர் உஷாதீபன் அவர்களுக்கு ஏராளமான வாசகர்களை சம்பாத்தித்துக் கொடுத்திருக்கிறது எனலாம். அவரது ’ரகசியம்’ சிறுகதையின் தொடக்கம் இது:
"படுக்கையில் தூக்கமின்றிப் புரண்டு கொண்டிருந்தான் ராகவன். அருகே மெயின் ஹாலில் அப்பாவும் அம்மாவும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். தான் உறக்கமின்றி இருக்கிறோம் என்பது எவ்வகையிலும் அவர்களுக்குத் தெரிந்து விடக் கூடாது. குறிப்பாக அம்மாவுக்கு. அவள் தனது ஒவ்வொரு சிறு அசைவையும் கூட எடை போட்டு விடுவாள். தன் முகத்தை வைத்தே என்ன பிரச்னை? என்று கேட்டு விடுவாள். வந்து இரண்டு நாட்கள் ஆன இந்தப் பொழுதில் அவள் கேட்காமல் இருப்பதுதான் ஆச்சரியம். அப்படியானால் தன் முகத்திலிருந்து எதையும் கண்டு பிடிக்க முடியவில்லையா? அல்லது ரெண்டு நாள் போகட்டும் பிறகு சாவகாசமாய் கேட்டுக் கொள்ளலாம் என்று இருக்கிறாளா? அல்லது அவன் பாடு, அவன் பெண்டாட்டி பாடு, நமக்கெதற்கு? என்று விட்டு விட்டாளா? இருக்கலாம். அவளுக்கும் வயசாயிற்று. எத்தனையோ பிரச்னைகளைச் சுமந்து, அனுபவித்து, கடந்து வந்தாயிற்று. பெண்டுகளுக்கும் பையன்களுக்கும் திருமணம் செய்து கொடுத்து அனுப்பி இப்பொழுதுதான் ஓய்ந்திருக்கிறாள்."
இ. நாடக வழிஉரையாடல், செயல்கள் மூலம் பாத்திரம் படைப்பது கடினமான, அதேசமயம் பலன்தரும் இலக்கிய உத்தியாகும்.
சுஜாதாவின் ’எல்டொராடோ’, ’எப்படியும் வாழலாம்’ கதைகளின் பாத்திரப் படைப்பில் உரையாடல் முக்கியப் பங்கு வகிக்கிறது.
பாத்திரம், களம், காலம், நிகழ்ச்சிகள் இவற்றின் ரசவாதம் பற்றிச் சுஜாதா சொல்வது:
"முழுக்க முழுக்க கற்பனையான எழுத்தில் எழுத முடியாது. இந்தத் தொகுப்பில் உள்ள அத்தனை கதைகளும் நான் பார்த்த, கேட்ட, பங்குபெற்ற சம்பவங்கள். அவைகளை அப்படியே எழுதாமல் பெயர், இடம், காலம் இவைகளை மாற்றி மற்ற நிஜவாழ்க்கை சம்பவங்களையும் உரையாடல்களையும் கலந்து எழுதியிருக்கிறேன். இந்த முறைதான் என் வெற்றிக்குக் காரணம்."