Wednesday, November 9, 2016

சிறுகதை உத்திகள் 02.

சிறுதை உத்திகள் chiRukathai uthtikaL

சிறுகதை உத்திகள்

ரமணி (செப் 2016)
(இலக்கிய வேல், நவ. 2016)

02. சிறுகதையின் அடிப்படைக் கூறுகள்

ரு சிறுகதையில் முக்கியமாக மூன்று கூறுகள் இருக்கவேண்டும்: conflict, crisis, resolution (epiphany) என்று இவற்றை ஆங்கிலத்தில் சொல்வதைத் தமிழில்
  • முரண்பாடு,
  • உச்ச நெருக்கடி,
  • இறுதித் தீர்வு (அல்லது புரிதல் உணர்வு)
என்று சொல்லலாம்.

இந்த மூன்று கூறுகளும் அமையுமாறு கதையெழுத இன்னும் நான்கு கூறுகள் தேவை.

  • கதைப் பாத்திரங்கள்
  • கதைத் திட்டம் (plot)
  • கதைச் சூழ்நிலை
  • கதைக் குரல்
மேற்சொன்ன சின்னக் கதை ரகங்களில் இந்தக் கூறுகள் இருந்தால் அவை சிறுகதை வடிவும் பெறக்கூடும். இந்த இயலில் சிறுகதையின் அடிப்படைக் கூறுகளை அறிமுகப் படுத்துவோம். பின்னர் அவற்றைத் தனித்தனி இயல்களில் விவரமாக ஆராய்வோம்.

முரண்பாடு

முரண்பாடு என்பது வேறொன்றுமில்லை:
  • கதையின் முக்கிய பாத்திரம் தான் இப்போது இருக்கும் நெருக்கடியான நிலையில் இருந்து மீள்வதற்காக, ஒன்றை எதிர்பார்ப்புடன் விழைந்து செயல்படத் தொடங்க, அந்த மீட்சி நிகழ, நிகழலாமலிருக்க, சாத்தியக் கூறுகள் இருப்பதுதான்.
  • அந்த விழைவும் செயல்பாடும் பொதுவாக, வன்முறை சார்ந்ததாகவோ பகட்டாகவோ இருக்க வேண்டுவதில்லை. மிகவும் எளியதாகக் கூட இருக்கலாம்.
  • விழைவின் திண்மையும் செயல்பாடுமே முக்கியம்.
முரண்பாடு கதையின் தொடக்கத்திலேயே ஏற்படுத்தப்படுகிறது. கதையோட்டத்தில் அது விரிக்கப்படுகிறது. ஓர் உச்ச நெருக்கடி நிலையை அடைகிறது. கடைசியில் தீர்வு காணப்படுகிறது.

உச்ச நெருக்கடி

முரண்பாட்டைத் தீர்க்கக் கதையின் முக்கிய பாத்திரம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், செய்யும் காரியங்கள், பிற நிகழ்வுகள் போன்றவை அதை ஓர் உச்ச நெருக்கடியை நோக்கிச் செலுத்துகின்றன. இந்த உச்ச நெருக்கடி
  • முக்கிய பாத்திரம் மேற்கொள்ளும் செயல்களின் விளைவாக இருக்கலாம்.
  • வெளியிலிருந்து வருவதாக இருக்கலாம்,
  • அல்லது மனதில் நிகழ்வதாக இருக்கலாம்.
  • எப்படியாயினும் இது இயல்பாக நிகழ வேண்டும், கதாசிரியர் திணித்ததாக இருக்கக் கூடாது.
கதாபாத்திரங்கள் ஒருவருக்கொருவர் உடாடிச் செயல்படுவதன் விளைவாக இது நிகழ வேண்டும். சில சமயங்களில் இது இயற்கையால்/கடவுளால் ஏற்படுத்தப் பட்டதாக இருக்கலாம், ஆனால் அப்போதும் அது இயல்பாக நிகழ வேண்டும்.

இயல்பாக என்றால் இப்படி நிகழ்ந்தது நியாயமே அல்லது தவிர்க்க முடியாததே என்ற எண்ணத்தை, உணர்வை கதையின் முக்கிய பாத்திரத்திடமும் வாசகர் மனதிலும் தோன்றச் செய்வது.

இறுதித் தீர்வு (அல்லது புரிதல் உணர்வு)

இறுதித் தீர்வு என்பது கதையின் முக்கிய பாத்திரம் விழைந்தது
  • நிகழ்வதாக இருக்கலாம்.
  • நிகழாமல் போவதாக இருக்கலாம்.
  • நிகழ்ந்ததன் விளைவுகளாக இருக்கலாம்.
  • நிகழாததன் காரணத்தை முக்கிய பாத்திரம் புரிந்துகொள்வதால் அதன் மனதில் தங்கும் இறுதியான புரிதல் உணர்ச்சியாக இருக்கலாம்.
இன்றைய கதைகளில் பல சமயம் இறுதித் தீர்வினை வாசகனிடமே விட்டுவிடுவது உண்டு. அப்படி வரும்போது அந்தப் புரிதல் உணர்வு வாசகனுக்கு ஏற்படுகிறது.

முதலில் ஏற்பட்ட முரண்பாடு ஓர் உச்ச நெருக்கடியை அடைந்ததும் தீர்வாக

  • ஒரு மாற்றம் கதையில் நிகழவேண்டும், இது முக்கியம்.
  • அல்லது இந்த மாற்றம் நிகழ்வதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும்.
  • ஒரு முடிவு அல்லது அதற்கான வாய்ப்பு கதையின் முக்கிய பாத்திரத்துக்கோ வாசகனுக்கோ பிரத்யட்சமாக வேண்டும்.
எனவே, ஒரு சிறுகதை திடீரென்று நடுவில் தொடங்கி, ஒரு முரண்பாட்டையும் அதன் விளைவான அழுத்த உணர்வுகளையும் ஏற்படுத்தி விரைவாக அது ஓர் உச்ச நெருக்கடியை நோக்கிச் சென்று பின்னர் அதற்கொரு தீர்வினை (அல்லது தீர்வுக்கான வாய்ப்பினை) ஏற்படுத்தி முடிகிறது.

கதைப் பாத்திரங்கள்

ஒரு கதைக்கரு எவ்வளவுதான் வற்புறுத்துவதாக இருந்தாலும் ஒரு முக்கிய கற்பனைப் பாத்திரத்தைப் படைத்து அதன் மூலம்தான் கருவைக் கதையாக வளர்க்கமுடியும். இந்த முக்கியப் பாத்திரத்தின் எண்ணங்கள், உணர்வுகள், தூண்டுதல்கள், எதிர்வினைகள்--இவையே கருவாக இருக்கும் கதையை வளர்த்து உருவாக்கி நகர்த்துகின்றன. கதையின் முரண்பாடு, உச்ச நெருக்கடி, இறுதித் தீர்வு யாவும் இந்த முக்கிய பாத்திரத்திற்கே நிகழ்கின்றன..

கதைத் திட்டம் (plot)

ஒரு கதைக்கருவைச் சிறுகதையாக்கும் போது, முக்கிய பாத்திரத்துக்கு நிகழ்ந்த எல்லாவற்றையும் அவை நிகழ்ந்த அதே கால வரிசையில் சொல்ல முடியாது என்பதால், அவற்றில் தேவையான சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, நிகழ்வுகள், அவற்றின் காலம், களம் இவற்றை முன்னும் பின்னும் அமைத்துச் சொல்ல வேண்டியதாகிறது. கதை நிகழ்வுகளை இப்படி வேண்டும் நிரலில் அமைப்பதே கதைத் திட்டம்.

கதைச் சூழ்நிலை

கதைச் சூழ்நிலை என்பது கதை நிகழும் களம், காலம், சூழல் ஆகும். இவை முக்கிய பாத்திரத்தின் நிலை, எண்ணங்கள், உணர்வுகளை பாதிப்பதாகவும் அவற்றுடன் பொருந்துவதாகவும் அமையவேண்டும். அவ்வாறு அமைந்து, சூழல் கதையின் குரலையும் உணர்வையும் தாங்குவதாக இருந்தால், வாசகரைக் கதையினுள் ஈர்க்க முடியும்.

கதைக் குரல்

கதைக் குரல் என்பது வேறொன்றுமில்லை. மேற்சொன்ன பிற கூறுகள் கதையின் யார், ஏன், என்ன, எங்கு, எப்போது என்பவற்றைச் சொல்லும். எப்படி என்பதைக் கதைக் குரல் சொல்லும். அதாவது, கதைக் குரல், கதையைச் சொல்லும் விதம் என்பதாக, ஆசிரியரின் தனிப்பட்ட நோக்கு, மொழித்திறன், இலக்கிய நடை போன்றவற்றை உள்ளடக்கும். என் கதையை என் வழியில் நான் சொல்வதே கதைக்குரல். இதே கதையை இன்னொரு ஆசிரியர் சொல்லும் விதம் வேறாக இருக்கும்.

கதையை எழுதுதல்

கதைக்கரு மனதில் நன்றாக ஊறி, இந்தக் கதையை எழுதாமல் தீராது என்னும் நிலையில், ஒரு சிறுகதையை எழுத அமரும் போது, மரபுக்கவிதையில் உள்ளது போல் இதுபோன்ற விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றெல்லாம் இல்லை. அதேபோல் எழுதும் கதை முதல் முயற்சியிலேயே சரியாக அமைவதும் இல்லை. பொதுவாக, சிறுகதை முனைவோர் குறைந்தது இரண்டு வரைவுகளில் எழுதுவர். சிறுகதை உத்திகளை அறிந்துகொண்டு, தோன்றுவதெல்லாம் எழுதுவது முதல் வரைவு. இதை நன்றாகப் பரிசீலித்துத் திருத்தி முடிவாக எழுதுவது இரண்டாம் வரைவு. இந்த இறுதி வரைவு முடிந்ததும் கொஞ்சநாள் ஆறப்போட்ட பின் மீண்டும் படிக்கும் போது திருத்தங்கள் தேவைப்பட்டால் செய்யத் தயங்கக் கூடாது. இன்றைய கணிணி வரைவுகளை எத்தனை முறை வேண்டுமானாலும் எளிதில் திருத்த முடிவது எழுத்தாளருக்கு ஒரு பெரிய வசதி.

சிறுகதை எழுதும் ஆர்வமுள்ளோர் நிறையச் சிறுகதைகளைப் படிப்பது மட்டுமில்லாமல், அவற்றை வாசகர் நோக்கிலும், ஆசிரியர் நோக்கிலும் அலசிப் பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆசிரியர் நோக்கில் பார்க்கும் போதுதான் சிறுகதை எழுதுவதன் இலக்கணமும், பயன்படும் உத்திகளும் பிடிபடும். அதேபோல் தாம் எழுதி முடித்த சிறுகதை இந்த இரண்டு வித நோக்கிலும் படித்துப் பார்த்துத் திருப்தியாக உள்ளது என்று உறுதிசெய்துகொண்ட பின்னரே கதையைப் பதிப்பிக்கும் வேலையில் இறங்கவேண்டும்.

கதையைப் பதிப்பித்தல்

ஓர் அறிமுக எழுத்தாளரின் சிறுகதை ஒரு பத்திரிகையில் வெளிவருவது எளிதல்ல. இதன் மூல காரணம் அவர்கள் எதிர்பார்க்கும் கதைத் தரம் இல்லாததும் பத்திரிகையின் வணிக நோக்கமுமே. மேலும் ஒரு கதையை ஏற்றுக் கொள்ளும்/கொள்ளாத முடிவைச் சொல்வதற்குப் பல பத்திரிகைகளில் நீண்டநாள் (சில மாதங்கள்) எடுத்துக்கொள்கிறார்கள். இதற்கு ஒரு காரணம் அவர்களிடம் வரும் நூற்றுக்கணக்கான கதைகள் என்று எழுத்தாளர் ஒருவர் சொன்னதாக நினைவு.

இன்னொன்று. சொன்னால் பயந்து விடுவீர்கள்: வரும் கதைகளின் அபரிமித எண்ணிக்கை காரணமாகக் கதையைப் படித்து முடிவைக் குறிக்கும் பொறுப்பை பத்திரிகை அலுவகத்தில் உள்ள உதவி ஆசிரியர்கள் குழு தவிர அவர்களுக்கு உதவும் தட்டெழுத்தாளர்கள் (ஆஃபீஸ் பியூன்-கூட என்றாலும் நான் வியப்படைய மாட்டேன்!), மற்ற எழுத்தர்கள் போன்றோரும் பங்கெடுத்துக் கொள்கிறார்கள் என்று யாரோ சொன்ன ஞாபகம்! கதையை முதலில் படிப்பவர் அதை நிராகரித்து விட்டால் அதை மற்றவர்கள் படிக்கும் வாய்ப்பு குறைவு. கீழுள்ள ஒருவருக்குப் பிடித்திருந்தால் கதையை மற்றவர்களில் சிலர் படித்துக் குறிப்பெழுதி அது உதவி ஆசிரியர் மேசைக்கு வந்துசேரும்.

பொதுவாகக் கதையை ஓர் அறிமுகக் கடிதத்துடன் புதுமுக எழுத்தாளர்கள் அனுப்புவார்கள். இதில் பத்திரிகையையும் அதன் தலைமை ஆசிரியரையும் ஓஹோ என்று புகழ்ந்தாலும் பல சமயம் ஒன்றும் நடக்கப் போவதில்லை. நாம் அனுப்பிய கதையை ஏற்கும்/நிராகரிக்கும் முடிவு தெரியும் வரை நாம் அதை இன்னொரு பத்திரிகைக்கு அனுப்ப முடியாது என்றோர் சங்கடமான நிலை. எனவே, நாம் கதை அனுப்ப ஒரு பத்திரிகையைத் தேர்ந்தெடுக்கும் போது, நம் கதை அதற்குப் பொருந்துமா, அதில் வரும் கதைகளின் வகையில் உள்ளதா என்று தீர்மானம் செய்துகொள்ள வேண்டும்.

முதன்மையான மூன்று கூறுகளையும் சிறுகதையில் அமைக்க உதவும் உத்திகள் பற்றி இனி வரும் இயல்களில் பார்க்கலாம். அதற்கு முன்னர், இவற்றை தி.ஜா.வின் ’குழந்தைக்கு ஜுரம்’, ’சிலிர்ப்பு’ கதைகளில் அடையாளம் காண ஆர்வலர்கள் முனையலாம்.

ஜானகிராமன் கதையில்

தி.ஜா.-வின் இந்த இரண்டு கதைகளிலும் சிறுகதையின் மூலக்கூறுகளை இப்படி அடியாளம் கண்டுகொள்ளலாம்:

குழந்தைக்கு ஜுரம்
முரண்பாடு கதைத் தலைப்பிலேயே சுட்டப்பட்டு முதல் பத்தியில் சின்ன வாக்கியங்களில் வினைச்சொற்களில் அறிமுகப்படுத்தப் படுகிறது:

மனைவி சொன்னதைக் கேட்டார். குழந்தையைப் பார்த்தார். மணிபர்ஸைப் பார்த்தார். புத்தகம் போடும் பஞ்சாபகேசனை நினைத்தார். வாத்தியார் நெஞ்சு புகைந்தது. வயிற்றைப் பற்றிக் கொண்டு வந்தது.

"இனிமே இந்த வீட்டுக் குத்துச் செங்கல் ஏறுவனா!" என்று சூளுரைத்துவிட்டு வந்த புத்தகம் பிரசுரிக்கும் பஞ்சாபகேசனை குழந்தையின் வைத்தியச் செலவுக்குப் பணம்தேடி நாட வேண்டும் என்கிற கட்டாயம் வரும்போது, அப்படிச் சூளுரைத்த நிகழ்ச்சியில் பஞ்சுவின் பித்தலாட்டம் ஞாபகம் வர வாத்தியார் தயங்குவதில் உச்ச நெருக்கடி சூசகமாக அறிமுகப்படுத்தப் படுகிறது. மனைவியின் பரிந்துரையில் பஞ்சு இன்னும் பிரசுரிக்க வேண்டிய வாத்தியாரின் ஒரு புத்தகத்தைத் திருப்பி வாங்கும் சாக்கில் அவர் ஏதேனும் அட்வான்ஸ் பணம் தருவாரா என்று பஸ் பிடித்துச் செல்லும்போது நெருக்கடி பற்றிய சஸ்பென்ஸ் அதிகமாகிறது. பஞ்சுவின் வீட்டில் அவர் மனைவியே வியாதியில் படுத்த படுக்கையாக இருக்கிறாள் என்று அறியும் போது, சிறுகதையின் முக்கிய அம்சமான அந்தத் திருப்பம், உச்ச நெருக்கடியாக நிகழ்கிறது.

தன் குழந்தையை மறந்துவிட்டு வாத்தியார் பஞ்சுவின் மனைவியை வைத்தியரிடம் அழைத்துச் செல்ல முனையும் நிகழ்ச்சிகளில் கதையின் இறுதித் தீர்வு அறிமுகப் படுத்தப்பட்டு அதன்பின் தனக்குத் தெரிந்த ஒரு வைத்தியரிடம் குழந்தையின் ஜுரம்போக்கும் மாத்திரைகளைக் கடனில் வாங்கிக்கொண்டு பின்னிரவில் தன் வீட்டை நோக்கி நடந்தே செல்லும்போது வாத்தியார் மனதில் எழும் உணர்வுகளில் அவருக்கு எழும் புரிதல் உணர்வு விவரிக்கப்படுகிறது.

சிலிர்ப்பு
கதையின் முரண்பாடு மறைமுகமாக முதல் பத்தியின் கடைசி வாக்கியத்தில் அறிமுகப்படுத்தப் படுகிறது:

ரயில் ஜாதியில் கூட ஏழை, பணக்காரன் உண்டு போல் இருக்கிறது.

கதையின் கரு இது:

தாயை விடுமுறையில் பிரிந்த குழந்தையொன்று தந்தையின் அரவணைப்பில் தன் தாயிடம் மீண்டும் செல்கிறது. இன்னோரு ஏழைக் குழந்தை தன் தாயைப் பிரிந்து வேறோர் பணக்காரக் குடும்பத்தின் குழந்தைக்குத் தாய்மை சேவை செய்யச் செல்கிறது. இந்த இரண்டு குழந்தைகளுடனும் தொடர்பு கொண்ட பெரிய மனித உள்ளங்களின் கயமை, கையாலாகாத்தனம்... வறுமையின் கௌரவம், மனிதாபிமானம்...

தன் குழந்தையை வீட்டுக்கு ரயிலில் அழைத்துச் செல்லும் தந்தையின் பார்வையில், தன்மை இடத்தில் (first person) கதை நகரும் போது வறுமையில் வாடும், வயதில் இளைய, அனுபவத்தில் முதிர்ந்த அந்த இரண்டாவது குழந்தையைத் தந்தை ரயிலில் சந்திக்கும்போது கதை உச்ச நெருக்கடியை நோக்கிச் செல்கிறது.

கதையின் இறுதித் தீர்வாக ஏதும் சுட்டப் படாததே இந்தக் கதையின் சிறப்பு. வறுமையின் கௌரவமும் மனிதாபிமானமும் திறமையும் கயமையும் நிறைந்த பணக்காரப் பெரிய மனிதர்களைப் பிழைப்புக்கு நம்பியிருக்கும் போது வறுமைக்கு என்ன தீர்வு கிடைக்க முடியும்? தன் வாழ்வில் வறுமையை இன்னும் போதிய அளவு தாண்டாத தந்தைக்கு இந்த ரயில் பயணத்தில் ஏற்பட்ட அனுபவத்தில் அவர் வாழ்வின் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அதனால் அவருக்குத் தன் குழந்தை மீது பீறிடும் பாச உணர்வில் கதையின் புரிதல் உணர்வு விவரிக்கப் படுகிறது.

தந்தையுடன் வாசகன் தன்னை முழுவதும் ஐக்கியப் படுத்திக்கொண்டு கதையைப் படிக்க வைத்ததால் தந்தைக்கு ஏற்பட்ட சிலிர்ப்பு வாசகனுக்கும் ஏற்படுகிறது.

சிலிர்ப்பு சிறுகதையின் வரலாற்றை தி.ஜா. விவரிப்பதை இந்தக் கட்டுரையில் காணலாம்:

சிறுகதை எழுதுவது எப்படி? தி. ஜானகிராமன்

அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் (அ.கே.வி.) 1.

1. எதிர்பாராத திருப்பங்கள் சிறுகதைக்கு மிக அவசியமா? அல்லது தேவையற்றதா?

எதிர்பாராத திருப்பங்கள் சிறுகதைக்கு மிக அவசியமில்லை. அவசியமாக இருக்கும்போது கதைகள் சிறக்க முடியும். தேவையற்றது என்று ஒதுக்க வேண்டுவதில்லை. ஓர் எதிர்பாராத திருப்பம் கதையில் நிகழும் போது அதுபற்றிய சாத்தியம் கதையில் முன்னர் சுட்டப்பட்டிருப்பது வாசகனுக்குத் திருப்தியளிக்கும்.

அதே சமயம் வாசகன் எதிர்பார்த்த முடிவைத் தருவதிலும் ஒரு சிறுகதை சிறக்க முடியும். உதாரணமாக, என்னுடைய முகம் தெரியாப் பகைவர்கள் கதையில் அந்த சீக்கிய இளம் வன்முறையாளன் அவதார் சிங்கின் மரணம் வாசகன் எதிர்பார்க்கும் முடிவுதான். அவன் ஒன்றும் ஆகாமல் பிழைத்திருந்து சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியிருந்தால் அது எதிர்பாராத முடிவு. இது போன்று எதிர்பார்த்த முடிவுகளைத் தரும்போது கதையில் மாற்றம் அதன் முக்கியப் பாத்திரத்தின் படைப்பில் நிகழ்வது திருப்தியளிக்கும்.

முகம் தெரியாப் பகைவர்கள், ரமணி

2. நகைச்சுவை சிறுகதையின் வேகத்தைத் தடுக்குமா?

நகைச்சுவை, அதாவது humour என்பதன் மிகச் சிறந்த வரையறையாக நான் எண்ணுவது கீழே. கல்லூரியில் படித்த காலத்தில் எங்கள் ஆங்கிலப் பேராசிரியர் திரு. பானுமூர்த்தி அவர்கள் சொன்னது இது.

Humour is the quick perception of lack of proportion and kind expression of it.
இசைவின் குறையை விரைவாய் உணர்ந்து அதைப் பண்புடன் சொல்லுவதே நகைச்சுவை யாகும்.

இயல்பாக, நாம் தினமும் சந்திக்கும் விதமாக உள்ளவரை, ஓரளவு நகைச்சுவை எல்லா வித சிறுகதைகளிலும் இருக்கலாம் என்று தோன்றுகிறது. அதே சமயம், நகைச்சுவைக் கதையென்றே எழுதப் படுவதும் உண்டு. சுஜாதாவின் குதிரை இந்த வகை.

குதிரை, சுஜாதா
நகைச்சுவை எழுதுவது எப்படி?, சுஜாதா

*** *** ***

Sunday, November 6, 2016

சிறுகதை உத்திகள் 01.

சிறுகதை உத்திகள் chiRukathai uthtikaL

சிறுகதை உத்திகள்

ரமணி (செப் 2016)
(இலக்கிய வேல், அக் 2016)

முன்னுரை

ழுதுவோர் பலருக்கும் சிறுகதை எழுதும் ஆர்வம் இருப்பதால் சிறுகதை உத்திகளைப் பற்றிக் கொஞ்சம் அலசலாம் என்று தோன்றுகிறது. அதற்கு முன் ஒன்றைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். நான் ஏதோ பெரிய எழுத்தாளன், கணக்கற்ற சிறுகதைகள் படித்து அவற்றை விமரிசன நோக்கில் ஆராய்ந்தவன் என்று நினைத்துக்கொண்டு இந்தக் காரியத்தில் இறங்கவில்லை. ஏதோ எனக்குத் தெரிந்தை, நான் படித்தவற்றை, உத்திகள் பற்றி என் மனதில் ஆராய்ந்த எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதே இந்தச் சிறுநூலின் நோக்கம்.

தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் வரலாறு, போக்குகள், இன்றைய நிலை இவற்றை ஆராய்வதோ, ஒரு சிறுகதை எழுதுவது எப்படி என்று சொல்லித் தருவதோ என் நோக்கமில்லை. ஒரு மரபுச் சிறுகதையில் உள்ள கூறுகள் என்ன, அவற்றை எழுதுவதில் பயன்படும் உத்திகள் என்ன என்பனவற்றை அலசுவதே என் நோக்கம்.

சிறுகதை எழுதும் ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த மாதிரி தி. ஜானகிராமன். முதல் காரியமாக அவரது இந்தக் கதைகளைப் படித்து, ஒரு கதாசிரியர் பார்வையில் உங்களுக்குத் தோன்றும் கருத்துக்களை, எண்ணங்களை ஆராயுங்கள்.

தி.ஜானகிராமன்
குழந்தைக்கு ஜுரம்
இன்னொரு

சிலிர்ப்பு
இன்னொரு
*** *** ***

01. சிறுகதை என்பது

சின்னதாக அமையும் கதைகளில் பல ரகங்கள் உள்ளன.
  • சொந்த அனுபவங்களை டயரி-யில் பதிப்பதோர் கதை.
  • பயணத்தில் ஏற்பட்ட அனுபவங்களை வருணிப்பது கதை.
  • குழந்தைகள் பேசுவதே ஒரு கதை.
  • அறவழி நிற்க எழுதப்படும் நீதிக் கதைகள் ஒரு வகை.
  • செய்தித்தாள் மற்றும் பிற ஊடகங்களின் செய்திகளில் உள்ள கதைகள்.
  • இன்னும் காதலன்-காதலி பேச்சு, நண்பர்கள் அரட்டை போன்ற பல சமாசாரங்களில் கதைகளுக்குப் பஞ்சமில்லை.
இது போன்ற சின்னக் கதைகளுக்கும் ஒரு சிறுகதைக்கும் என்ன வேறுபாடு?

ஒரு கதை என்பது ஒன்றுக்கொன்று தொடர்புடைய நிகழ்வுகளின் நிரல் என்றால்,

ஒரு சிறுகதை என்பது கதை நிகழ்வுகளை ஓர் ஒழுங்கில் அமைத்து,

சொல்ல வந்த கதை கேட்பவருக்கு அல்லது வாசகருக்கு சுவாரஸ்யமாகவோ,

மகிழ்வூட்டுவதாகவோ அல்லது அறிவுறுத்துவதாகவோ அமைந்து

முடிவில் ஒருமித்த ஓர் உணர்வைத் தருமாறு செய்வதாகும்.

சிறுகதை ஆகாத இலக்கிய வடிவங்கள்

பத்து பக்கங்களுக்குள் அமையும் குறுநாவல் ஒன்று சிறுகதையாக முடியுமா? ஒரு கவிதை? ஒரு சம்பவத்தை அப்படியே வருணித்தல்? ஒரு காட்சி வருணனை? ஒரு வாழ்க்கைச் சரிதம்? நீதிக்கதை? இவையெல்லாம் சிறுகதை ஆகா. ஏனெனில்
  • ஒரு நாவல் வாசகனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உணர்வுகளைத் தருவதாகும். நாவலில் பலதரப்பட்ட கதை மாந்தர்கள், சம்பவங்கள், கிளைக்கதைகள் இருக்கலாம். இவையெல்லாம் சிறுகதையில் கூடாது.
  • ஒரு கவிதையில் கதையிருந்தாலும் அதன் நோக்கம், வடிவமைப்பு இவற்றால் அது சிறுகதை யாகாது. எனினும், இன்றைய சின்னஞ்சிறு கதைகளில் கவிதையின் சில கூறுகளைக் காணலாம்.
  • ஒரு சம்பவத்தை வைத்துச் சிறுகதை எழுதலாம். ஆனால் பொதுவாக நாம் பேச்சிலோ எழுத்திலோ விவரிக்கும் சம்பவங்கள் சிறுகதை ஒழுங்கில் அமைவதில்லை என்பதால் ஒரு சம்பவத்தை உள்ளபடிச் சொல்லுவது தன்னளவில் சிறுகதை யாகாது.
  • சிறுகதையில் வருணனை அளவோடு அமைவதால் ஒரு காட்சியை விவரமாக வருணிப்பது தன்னளவில் சிறுகதை யாகாது.
  • பிறப்பு முதல் மரணம் வரை ஒருவரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லுவது சிறுகதை யாகாது. ஏனெனில் சிறுகதையில் ஒரு முக்கிய சம்பவம், ஓரிரு கதைப்பாத்திரங்கள் மட்டுமே.
  • பொதுவாக நீதிக் கதைகளின் இறுதியில் வெளிப்படையான சொற்களில் கதையின் நீதி சொல்லப்படுவதால் இவை சிறுகதை ஆகா. சிறுகதையின் செய்தி வலிந்து சொல்வதாக அல்லாமல் தானே எழுவதாக அமையவேண்டும்.

எப்படிச் சொன்னால் சிறுகதை யாகும்?

சிறுகதை என்ற பெயரே அதில் ஒரு கதை இருப்பதைக் காட்டுகிறது. அந்தக் கதையை எப்படிச் சொன்னால் அது சிறுகதை யாகும்?
  • ஒரு முக்கிய நிகழ்வு
  • ஒரு முக்கிய கதைப்பாத்திரம்
  • கற்பனை
  • கதைத் திட்டம் (plot)
  • கதைச் சுருக்கம்
  • கதை அமைப்பு
  • ஒருமித்த ஓர் உணர்வு
இவை யாவும் ஒருங்கே அமைந்த கதையே ஒரு சிறுகதை யாகும். இவற்றைச் சேர்த்தால் ஒரு சிறுகதையின் மேற்சொன்ன வரையறை இப்படி மாறும்:

ஒரு சிறுகதை என்பது, சுருக்கமான கற்பனைக் கதையாக, ஒரு முக்கிய நிகழ்வை,

ஒரு முக்கிய கதைப்பாத்திரம் மூலம், திட்டமிட்ட கதை ஒழுங்கில், அழுத்தமான, ஒருமித்த,

ஓர் உணர்வைத் தந்து, வாசகருக்கு சுவாரஸ்யமாகவோ, மிகிழ்வூட்டுவதாகவோ அல்லது

அறிவுறுத்துவதாகவோ அமையுமாறு எழுதப்படும் உரைநடை இலக்கிய வகையாகும்.

சிறுகதையும் நடைமுறை வாழ்வும்

சிறுகதைக்கும் நடைமுறை வாழ்வின் நிகழ்வுகளுக்கும் வேறுபாடு என்னவென்றால்,
  • வாழ்வின் நிகழ்வுகள் திட்டமிட்டோ, தற்செயலாகவோ, எதிர்பார்த்தோ, எதிர்பாராத விதமாகவோ தோன்றுகின்றன.
  • இதனால் வாழ்வின் நிகழ்வுகளில் அவற்றின் முடிவு பற்றித் திருப்தியோ அதிருப்தியோ உண்டாகிறது.
  • சிறுகதையின் நிகழ்வுகள் ஒரு நோக்கத்துடன் அமைகின்றன.
  • இதனால் சிறுகதையைப் படிப்பதில் அதன் முடிவு பற்றிய ஒரு திருப்தி உண்டாகிறது.

சிறுகதையின் நோக்கமும் செய்தியும்

ஒரு சிறுகதையின் இலக்கு மேற்சொன்னவாறு வாசகரைக் கவருவதாகவோ, மகிழ்வூட்டுவதாகவோ அல்லது அறிவுறுத்துவதாகவோ அமைவதாகும். அப்படி அமைக்கும் போது கதாசிரியர் ஒரு செய்தி அல்லது படிப்பினையைத் தெரிவிக்க விரும்பினால் அந்தச் செய்தி அல்லது படிப்பினை நேரடியான வார்த்தைகளில் சொல்லப் படாமல் கதையின் போக்கிலிருந்து தானே மௌனமாக எழுவதாக இருக்க வேண்டும். இல்லையேல் சொல்ல வந்தது சிறுகதையாக அல்லாமல் நீதிக் கதையாகிவிடும்.

சிறுகதையின் நீளம்

ஒரு சிறுகதை எவ்வளவு நீளம் இருக்கவேண்டும் என்பதற்குத் தகுந்ததோர் விளக்கமாக அது ஒரே மூச்சில் படிக்க முடிவதாக இருக்கவேண்டும் என்பதைக் கொள்ளலாம்.

ஆங்கிலத்தில் சிறுகதை இலக்கியம் அறிமுகமான போது வெளிவந்த கதைகளின் நீளம் 20,000 வார்த்தைகளுக்கு மிகாமல் இருந்தன. பொதுவாகப் பத்திரிகைகளில் வெளிவரும் ஆங்கிலச் சிறுகதைகள் 2,000 முதல் 5,000 வார்த்தைகள் வரையும், எப்படியும் 10,000 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருந்தன.

இணையத்தின் தாக்கத்தில் ஏராளமான தனிமனித வலைதளங்கள், வலைப்பூக்கள் இணையக் குழுமங்கள், மின் பத்திரிகைகள் பெருகியுள்ள இந்நாளில் short story என்னும் ஆங்கிலச் சிறுகதையானது short-short story என்று சுருங்கிவிட்டதில், இத்தகைய சின்னஞ் சிறுகதைகளின் உச்ச நீளம் 600-1500 வார்த்தைகளுக்குள் அமைகிறது. 55 அல்லது 69 வார்த்தைகளில் சொல்லப்படும் கதைகளும் நிறைய உண்டு.

தமிழில் இத்தகைய சின்னஞ்சிறு கதைகள், ஒரு பக்கக் கதை, ஒரு நிமிடக் கதை போன்ற பெயர்களில் இன்றைய புகழ்பெற்ற ஜனரஞ்சகப் பத்திரிககளில் வெளிவருகின்றன. இவற்றில் சிறுகதையின் கூறுகள் முழுமையாகவோ, சில மட்டுமோ அமைவன. இவற்றை எழுதும் உத்திகளைப் பின்னொரு இயலில் காணலாம்.

முன்னாட்களில் புகழ்பெற்ற தமிழ்ப் பத்திரிகைகள் ஒரு சிறுகதைக்கு அச்சில் பக்கத்துக்கு இரண்டு நெடுவரிசை வீதம் ஏழு முதல் எட்டு பக்கங்கள் வரை அனுமதித்தன. ஒரு நெடுவரிசையைக் கையெழுத்தாக எழுதினால் பொதுவாக A4-தாள் அளவு அமையும். இதனால் ஒரு சிறுகதையை 14-16 முழுத் தாள்களில் எழுத முடிந்தது.

பின்னர் இந்த அளவு 5-6 அச்சுப் பக்கமாகச் சுருங்கியது. ஒரே நெடுவரிசைப் பக்கம் என்றால், சிறுகதையின் இந்த நீளம் கையெழுத்தில் 8-9 பக்கங்களுக்குள் அமையும். இணையப் பதிப்புகளில் வரும் கதைகள் மின்னச்சில் இன்று பொதுவாக 5-6 A4-தாள்களில் அமைவன.

தொண்ணூறு சதவிகிதம் சினிமாவும் அரசியலும் வணிகமும் ஆளும் இன்றைய ஜனரஞ்சகப் தமிழ்ப் பத்திரிகை உலகில் சிறுகதை பெரும்பாலும் செத்துவிட்டது எனலாம். வெளியிடும் கதைகளின் எண்ணிக்கையைக் கூட்ட, இந்தப் பத்திரிகைகள் இன்று ஒரு பக்கக் கதை-களையே வெளியிடுகின்றன. ஒரு பக்கத்தில் ஒரு சின்னஞ்சிறு கதை, அது சிறுகதை யாகுமாறு எழுத முடியும். ஆனால் இன்று வரும் பெரும்பாலான கதைகள் இந்த அந்தஸ்தைப் பெறுவதில்லை. அதைப் பற்றிப் பத்திரிகை ஆசிரியர்களும் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. கணையாழி போன்ற சில பத்திரிகைகள் மட்டும் இன்னும் சிறுகதையை அதற்குரிய வடிவில் வெளியிடுகின்றன.

சிறுகதைக் கரு

ஒரு சிறுகதை எழுதுவதற்கான கரு எங்கிருந்து, எப்படிக் கிடைக்கிறது, அதற்கான களம் எது என்றால், இன்றைய நாகரிக வாழ்வில் நாம் தினமும் காணும் எல்லா விதமான நிகழ்வுகள், இடங்கள், கணங்களில் எதுவும் ஓர் ஆசிரியர் மனதில் கதைக்கருவாக உருவாகலாம். எனினும் கதைக்கரு என்பதே கதையாகிவிடாது. அதற்கு ஆசிரியர் களம்-காலம்-கதைமாந்தர் கொடுத்து, ஒருமித்த ஓர் ஒழுங்கில் வளர்க்கும் போது ஒரு சிறுகதை எழ வாய்ப்புண்டு. கீழ்வரும் களங்களும் முயற்சிகளும் கதைக்கரு உருவாக உதவலாம்.
  • இயற்கை அழகு, வளமை, உயிர்கள், நிகழ்வுகள், உறவுகள்
  • தின வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள், நிகழ்வுகள், இடங்கள்
  • ஒரு புகைப்படத்தை ஆராய்தல்
  • செய்தித்தாளில் உள்ள ஒரு குறுஞ்செய்தி
  • தன்னைப் பற்றி ஆராய்வது: பிடித்தது, முயன்றது, பயந்தது போன்ற அனுபவங்கள்
  • மற்றவர்கள் கதைகளைப் படிக்கும் போது வரும் எண்ணங்கள்
  • கனவுகளில் வருவனவற்றை ஆராய்தல்
  • நகைச்சுவை மற்றும் பிறவகைத் துணுக்குகளை விரித்தல்
  • அரசியல், சமூகம், தொழில்துறை நிகழ்வுகள்
  • அதீத கற்பனை (fantasy)
உலகிலுள்ள அனைத்துக் கலாசாரங்களிலும் உலவும் பழங்கதைகள், நிகழ்வுகள், மழலையர் பாடல்கள் யாவும் இந்தக் கடலில் இருந்தே எழுந்தன என்று ஆய்வுகள் சொல்லும் மிகப் பெரிய நூலான சோமதேவ பட்டரின் கதாசரித்-சாகரம் ஒரு சிறந்த கதைக்கருக் களனாகும். இந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பை இங்குத் தரவிறக்கலாம்:
Ocean of the streams of story
(சமஸ்கிருத மூலம்)

நிறையப் பார்த்து, அனுபவைத்து, படித்து, சிந்திக்கும் போது கதைக்கரு என்னும் வித்தானது மனதில் தானே விழும். அப்படியோர் வித்து விழுந்ததாகத் தோன்றும் போது உடனே அதை செயற்கையாக வளர்த்துக் கதையாக்க முனைதல் கூடாது. கதைக்கருவாகும் எண்ணம் மனதில் நன்றாக ஊறவேண்டும். எழுத முனையும் கதை பற்றிய நோக்கம், செய்தி, பார்வை போன்றவற்றை அந்த வித்து ஒரு மணிக்கல் போல் தெளிவாகப் பிரதிபலிக்கும் போது, கதைக்கேற்ற முக்கிய பாத்திரமும் சம்பவமும் மனதில் உருவாகிக் கதையைத் திருப்தியாக எழுத முடியும்.
*** *** ***