சார்பு எழுத்துகள்
சிறுகதைரமணி (May 2013)
மணிவண்ணன் சொல்வது:
ஐம்பத்தைந்து வயதைக் கடந்த ஒரு பேரிளம் பெண்ணும் மேலும் இரண்டு வயது தாண்டிய ஒரு மூத்தோனும் ஒருவரிடம் ஒருவர் மனம் பற்றுவதற்கு என்ன காரணம் என்று பலமுறை நாங்கள் இருவரும் யோசித்துப் பார்த்திருக்கிறோம். திருமணம் செய்துகொண்டு சேர்ந்து வாழ நினைக்கும் இந்த மனப்பற்று காதலாலோ காமத்தாலோ அல்ல என்பது மட்டும் எங்கள் இருவருக்கும் நன்கு புரிந்தது. பின் எதனால் இந்தப் பற்று? சொல்கிறேன்.
திருச்சி பெரிய கடைத்தெருவில் அரசுடமையாக்கப்பட்ட ஒரு வங்கியின் கிளை இருந்தது. ஒருநாள் அங்கு நான் என் பெயரில் புதியதொரு சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்காகச் சென்றேன். அப்போது ஹேமாவைக் கவுன்டரில் பார்த்தபோது அவள் நெற்றியில் இருந்த ’ஸ்டிக்கர்’ பொட்டின் நிறம் கருப்பு என்பதைக் கவனிக்கவில்லை. பத்தே நிமிடங்களில் என் தனிநபர் விவரங்களை விசாரித்துப் படிவங்களைக் கணினியில் பூர்த்திசெய்து கையெழுத்துகள் பெற்றுக் கொண்டு நான் கொடுத்த ஐந்தாயிரம் ரூபாயை முதலாகக் கொண்டு கணக்கைத் துவக்கி செக் புத்தகத்துடன் பாஸ் புத்தகத்தை என் கையில் கொடுத்தாள்.
அவள் தன் பணியில் ஈடுபட்டிருந்த போது கவனிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பேரிளம்பருவ வயது அவள் முகத்தில் கண்களில் காதோரத் தலைநரைப்பில் தெரிந்தாலும் அந்த விகற்பங்களை மீறி ஒரு கம்பீரமான, புகை படிந்த அழகு அவளிடம் இருந்தது. பணியின் புன்னகை முகத்துக்கு அணிசெய்த போதிலும் கண்களில் ஓர் இனம் புரியாத சோகம். அதற்கு அவள்தன் கணவனை இழந்த வருத்தமோ அல்லது கைம்பெண் வாழ்க்கையின் தனிமையோ சுமையோ காரணமாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன்.
ஒவ்வொரு முறையும் நான் வங்கிக்குச் சென்ற போது அவள் எனக்கு முன்னுரிமை தந்து உதவியது என்னை யோசிக்க வைத்தது. நானும் வாழ்க்கையில் துணையை இழந்தவன் என்பதால் ஏற்பட்ட பரிவு இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன். நான் குடியிருந்த அதே கீழாண்டார் வீதியில் அவளது சொந்த வீடு இருந்ததுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
ஒரு நாள் அவளைக் கேட்டேவிட்டேன்: "ஐந்தாறு பேர் காத்திருக்கும் போது எனக்கு முன்னுரிமை தருவது சரியா?"
நான் தாழ்ந்த குரலில் பேசியும் கேட்டுவிடக் காத்திருந்தவர்களில் இருவர் ஒரே குரலில் முன்மொழிந்தார்கள்: "நீங்க ஒங்க வேலையை முடிச்சுக்கங்க ஐயா. கல்லூரிக்கு நேரமாய்டுமில்ல?"
"நீங்கள் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியர்களின் தலைவர் என்பதால் உங்களைப் பல பேருக்குத் தெரியும். யாராயிருந்தாலும் ஓர் ஆசிரியருக்கு முன்னுரிமை தந்து சேவை செய்வதை ஆட்சேபிக்க மாட்டார்கள் என்று கண்டீர்கள் அல்லவா?"
புன்னகையுடன் நான் அவள் பதிலை ஏற்ற போதிலும் அதுமட்டும் காரணமல்ல என்று என் உள்மனம் கூறியது. அல்லது இது என் கற்பனைதானோ என்றும் ஓர் எண்ணம் உதித்தது.
ஒருநாள் மாலை தன்னிகழ்வாக நாங்கள் இருவரும் வீடு செல்லும் வழியில் கீழாண்டார் வீதியில் சேர்ந்து நடந்தோம். அப்போது ஹேமாவைப் பற்றி மேல்விவரங்கள் தெரிந்துகொண்டேன். அதே வங்கியின் மண்டல அலுவலகத்தின் கணிணிப் பிரிவில் அதிகாரியாகப் பணியாற்றிய அவள் கணவன் நான்கு வருடங்கள் முன்பு எந்த உடல்நலக் குறைவுமில்லாமல் இயற்கையாக ஒரு நாள் உயிர்நீத்தபோது அவள் ஒரே மகன் கார்த்திக் ’கம்ப்யூட்டர் எஞ்சினீர்ங் கோர்ஸ்’ கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்தானாம். இப்போது அவன் சென்னையில் கடந்த மூன்று வருடங்களாக ஒரு பிரபல ’ஐ.டி. கம்பெனி’யில் ’ஸாஃப்ட்வேர் எஞ்சினியர்’-ஆக இருக்கிறானாம். இன்னும் ஒரு வருடத்தில் அவன் ஒரு மூன்று வருட ஒப்பந்தத்தின் பேரில் அமெரிக்காவில் வேலைசெய்ய வேண்டியிருக்குமாம்.
"படிப்பு முடிஞ்சு காம்பஸ் ப்ளேஸ்மென்ட்லயே அவனுக்கு வேலை கிடச்சது. சென்னைல போஸ்டிங். ரெண்டு மாசம்கூட வீட்ல இருக்க முடியல. வேலைல சேர்ந்து ஒரே வருஷத்ல ஒரு வாட்டி நாலு மாசம் சிங்கப்பூர் போய்ட்டு வந்தான்..."
ஹேமாவின் பெற்றோர்களும் அவள் கணவனின் பெற்றோர்களும் காலப்போக்கில் இயற்கை எய்தியதால் கணவன் இறந்து ஒரே மகனும் சென்னைக்குச் சென்றுவிடத் தனிமையும் துக்கமும் அவளை வாட்டியது. அவள்கூடப் பிறந்த அக்கா அமெரிக்காவில் குடியேறிவிட்டாள். கணவனோ ஒரே மகனாக இருந்ததால் அவளுக்கு நெருங்கிய உறவினர்களே இல்லாமல் போனது.
"என் வேலைதான் எனக்கோர் ஆறுதலா இருந்தது. பாங்க்ல பலபேர் ஒரு குடும்பம் போலப் பழகியது இன்னொரு ஆறுதல். எனக்கோ சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் கிடைக்காது. கிளார்க்காவே முப்பது வருஷம் சர்வீஸ் போட்டாச்சு. இன்னும் மூணு வருஷம் தள்ளினா அடுத்த சம்பள உயர்வு செட்டில்மென்ட்ல பென்ஷன் கணிசமா ஏறும். அதுக்கப்பறம் தேவைப்பட்டா அம்பத்தெட்டு வயசில VRS (விருப்ப ஓய்வு) வாங்கிக்கலாம். இதெல்லாம் கார்த்திக் மனசுக்கு சமாதானமாகலை. மாடியும் கீழுமா இருக்கற இந்தப் பெரிய வீட்ல யார் துணையும் இல்லாம அம்மா தனியே வாழறது அவனுக்கு ரொம்பக் கவலையா இருந்தது."
சிங்கப்பூர் போய்வந்ததும் கார்த்திக் தன் அம்மாவின் மனதைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற முயன்று அவளை மறுமணம் செய்துகொள்ளத் தூண்டினானாம். அநேகமாக அவன் அடுத்த வருட நடுவில் அமெரிக்கா சென்று குறைந்தது மூன்று வருடம் வேலை பார்க்க வேண்டியிருக்குமாம். அதற்குப் பின்தான் அவன் திருமணம் செய்துகொள்ள முடியுமாம். வேலை காரணமாக அம்மா அவனுடன் வந்து இருக்க முடியவில்லையென்றால் மறுமணம் தான் தீர்வு என்று அவன் வாதாடினான். மனைவியை இழந்த ஒரு நல்ல மனிதராகப் பார்த்துத் துணையாக ஏற்றுக்கொண்டால் எந்தப் பிரச்சனையும் வர வாய்ப்பில்லை என்று அவன் கருதினான்.
"மனைவியோ கணவனோ யாராவது ஒருவர் மறைவில் முந்துவது எல்லோர்க்கும் நிகழ்வதுதானே? மீந்திருப்பவர் எல்லோரும் மறுமணம் செய்துகொள்ளவா விழைகிறார்கள்?" என்று லேசாகக் கிண்டினேன், அவள் மனதில் உள்ளது அறியும் வண்ணம்.
"இதேபோல்தான் நானும் அவன்ட்ட வாதாடினேன். இந்தக் காலத்துக் குழந்தைகள் நம்மைவிட புத்திசாலிகள் மட்டுமல்ல, வாழ்க்கையப் பிராக்டிகலா அணுகுபவர்கள். அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா?"
என் மனதில் நம்பிக்கை எழ முகத்தில் வியப்பைத் தேக்கிக் கேட்டேன்: "என்ன சொன்னான்?"
"குழந்தைகள் நலனில் அக்கறையுள்ள பெற்றோர்கள் இம்மாதிரி சமயங்களில் விதிவிலக்காக இருப்பது ஒன்றும் தப்பில்லையே? என்றான்."
"அதற்கு நீங்கள் என்ன சொன்னீர்கள்?"
"நான் தனியா வாழ்வதால் உன் நலனுக்கு என்ன கொறச்சல் கண்ணா?" என்றேன்.
"அதுக்கு என்ன சொன்னான்?"
"’நான் பேச்சிலரா அமெரிக்காவுல குறஞ்சது மூணு வருஷம்--அது எக்ஸ்டென்ட் ஆக வாய்ப்பிருக்கு--என் பர்சனல் லைஃப்ல காலம் தள்ள எவ்வளவு கஷ்டப்படுவேன்னு உனக்கு நல்லாத் தெரியும். எனக்கு பேசிக் குக்கிங் கூட இன்னும் சரியாப் பிடிபடல. நான் அமெரிக்கால இருந்துகிட்டு ஒவ்வொரு நாளும் என் கழுத்தளவு வேலைகளுக் கிடையில நீ ஒண்ணும் ஹெல்த் ப்ராப்ளம் இல்லாம இருக்கயா, ஸேஃபா இருக்கயா, உன் தேவைகளை எதும் விடாது கவனிச்சுக்கறயா, வேளா வேளைக்கு ஒழுங்கா சாப்பிடறயான்னுலாம் கவலைப்படறது என் நலனுக்குக் கொறச்சல் இல்லையாம்மா?’ அப்படீன்னு கேட்டான்.
"’உண்மைதான் கண்ணா. அப்போ ஒண்ணு செய். என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லறதவிட நீ ஒரு கல்யாணம் பண்ணிகிட்டு வெளிநாடு போ. அப்போ உனக்கும் எனக்கும் எந்த ப்ராப்ளமும் இருக்காது’ன்னு நான் சொன்னேன்.
"’இருவத்தஞ்சு வயசுல எனக்கென்னம்மா கல்யாணத்துக்கு அவசரம்? அப்படியே கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அவள் அங்கே தனியா நாள் முழுதும் வீட்ல அடஞ்சு கிடக்கணும். அப்புறம் நான் உங்க ரெண்டு பேரைப் பத்தியும் கவலைப்படணும், இன்னும் நாங்க ரெண்டு பேரும் உன்னைப்பத்திக் கவலைப் படணும். இதெல்லாம் இப்போ தேவையாம்மா?’"
அவளால் அவன் கேள்விகளுக்கு அவனை சமாதானப் படுத்தும் வகையில் பதில் சொல்லி மாளவில்லை. கடைசியாக அவள், "சரி கண்ணா! நீ நினைக்கற மாதிரி, இந்த ஊர்ல, எனக்கோ ஒனக்கோ தெரியவந்து, நமக்குத் தகுந்தவரா, ஒரு துணையிழந்த மனிதர், எனக்குத் துணையா இருக்க முடியும்னு, உனக்கும் எனக்கும் உறுதியாத் தெரிஞ்சா, நீ சொல்ற யோசனையைப் பரிசீலிப்போம்" என்று கூறி விடுப்பில் வந்திருந்த அவனைச் சென்னைக்கு அனுப்பிவைத்தாள்.
"கழுவற மீன்ல நழுவற மீனாச்சே நீ! ரெண்டு வருஷம் ரீஜினல் ஆஃபீஸ் லா டிபார்ட்மென்ட்ல வேலை பார்த்ததனால நல்லா நெளிவுசுளிவோட பேசக் கத்துக்கிட்டே. அப்புறம் உன் இஷ்டம். உனக்கு அதுமாதிரி யாராவது அகப்பட்டா எனக்கும் சம்மதம், அவர் எனக்குத் தெரிஞ்சவரா இருக்கணுங்கற அவசியம் இல்லைன்னு நான் இப்பவே உன்கிட்ட சொல்லிடறேன்" என்று அவன் ஆயாசத்துடன் கூறிவிட்டுச் சென்றானாம்.
மறுமணத்தில் ஹேமாவுக்கு விருப்பம் இல்லாமல் இல்லை என்று கோடிகாட்டிவிட்டாள். இப்போது அவளுக்குத் தகுந்த ’துணையிழந்த துணை’யாக என்னைத் தயார்படுத்திக் கொள்வது என் பொறுப்பாகியது. நாங்கள் இருவரும் ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருந்ததும், இருவருமே இந்த வயதில் சகஜமாக வரும் சர்க்கரை வியாதியோ ரத்த அழுத்த நோயோ வேறு எந்த உபாதையோ இல்லாமல் நல்ல உடல்நிலையில் இருந்ததும் பெரிய ’ப்ளஸ் பாயின்ட்’களாக இருந்தது.
*****
ஹேமா சொல்வது:
புயலடித்து ஓய்ந்து அமைதியாக ஓடிக்கொண்டிருந்த என் வாழ்க்கை ஓடம் இப்போது மறுபடியும் அலைகளில் தத்தளிக்கிறதோ என்று தோன்றியது. அல்லது இந்தப் புது அலைதான் அதைக் கரைசேர்க்குமோ என்றும் ஒரு நம்பிக்கை எழுந்தது.
தமிழ்ப் பேராசிரியர் மணிவண்ணன் போன்று மனதில் எந்த விகல்பமும் இல்லாது பழகும் நல்ல மனிதரைப் பார்ப்பது அரிது. அதுவும் அவரது அறிமுகமும் சமீபகாலப் பழக்கமும் எனக்கு ஒரு கொடுப்பினை என்றே தோன்றுகிறது. துணையிழந்த இவர் துணையிழந்த எனக்கு என் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் கார்த்திக் சொன்ன தகுந்த பாதுகாப்பாக இருக்கமுடியும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் வலுப்பட்டு வருகிறது
இவர் எங்கள் குடும்பத்தில் இணைந்தால் ஏற்படக்கூடிய மாறுதல்கள் பற்றிச் சிந்தித்தேன். என் மகன் கார்த்திக்கும், இப்போது சென்னையில் கடைசி வருடக் கம்ப்யூட்டர் இஞ்சினீரிங் கோர்ஸ் பண்ணும் அவர் மகள் வள்ளிநாயகியும் அண்ணன்-தங்கைகளாவார்கள். எனக்கோர் அம்மா ஸ்தானமும் அவருக்கு அப்பா ஸ்தானமும் கிடைக்கும். அவரோ நானோ எந்த வேற்றுமையும் பாராட்டாது இரண்டு குழந்தைகளையும் நன்கு பார்த்துக்கொள்வோம் என்பது நிச்சயம். நாங்கள் இருவருமே நல்ல உடல்நிலையில் இருந்ததால் அடுத்த ஐந்தாறு வருடத்தில் குழந்தைகள் இருவருக்கும் நல்ல வரனாகப் பார்த்து மணமுடித்து வைக்க முடியும் என்றும் உறுதியான நம்பிக்கை இருந்தது.
இதெல்லாம் இருக்கட்டும். முதலில் எங்கள் இருவரது ஈடுபாடுகளும் வாழ்க்கை பற்றிய கண்ணொட்டமும் எனக்கு அதன்பின் பொதிந்துள்ள ஆன்மீகத் தேடலும் எவ்வளவு தூரம் ஒத்துப் போகும் என்று சிந்திக்கவேண்டும். காதலும் காமமும் இல்லாது மனதால் நெருங்கி சமூகம் அங்கீகரித்த தம்பதியராக, தின வாழ்வில் அன்பில் பிணைந்த நண்பர்களாக இருவரும் வாழப் போகும் வாழ்க்கையில் இவைதானே முக்கியம்?
அவருடன் பழகிய இந்த நாலைந்து மாதப் பழக்கத்தில் இது ஒன்றும் பிரச்சினையாக இருக்காது என்று தோன்றியது. மலைக்கோட்டைப் பிள்ளையார் கோவில் உச்சியில் பரந்திருக்கும் பாறையில் காற்றாட நாங்கள் உட்கார்ந்து பேசியபோதும், மாலை வேளைகளில் காவேரிப் பாலத்தில் நின்றுகொண்டு காற்று வாங்கிக் கதிரவன் மறையும் கோலங்களை வியந்து ரசித்து அந்த இயற்கையின் அழகில் திளைத்தபோதும் அவரைப் பற்றி நிறையத் தெரிந்துகொண்டேன்.
என் கணவர் போலவும் கார்த்திக் போலவும் நெற்றியில் திருநீறு ஒரு கீற்றாகவேனும் அணியாவிட்டாலும் அவருக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு, முருகன் பேரில் உள்ள பற்றால்தான் மகளுக்கு வள்ளிநாயகி என்று பெயரிட்டதாகவும் சொல்லியிருக்கிறார். நாங்கள் கார்த்திக்கை வளர்த்தது போல் அவரும் தன் மகளை சமயம் சார்ந்த இல்லற, நல்லற வழியில் வளர்த்ததால் இன்றைய அவசர, நவீன, கட்டுபாடற்ற வாழ்வின் அலைகள் அவர்களை அதிகம் மாற்ற வாய்ப்பில்லை.
தோளில் தொங்கும் ஜோல்னாப் பையில் புத்தகங்கள், பேனா பென்சில் மற்றும் ஒரு நோட்டுப் புத்தகம். வெள்ளை வேட்டி. வெள்ளை அல்லது சந்தனக் கலர் முழுக்கை--சமயத்தில் அரைக்கை--ஜிப்பா. கோபமே காணாத முகம். திருப்தியும் மகிழ்ச்சியும் குமிழியிடும் கண்ணாடி அணியாத விழிகள். நெற்றியின் அகலமும் இலேசான காலைப் பனிமூட்டம் போல் ஆங்காங்கே நரைத்த தலைமுடியும். நெற்றியில் இல்லாத திருநீறு அவர் மேலுதட்டில் ஒட்டிக்கொண்டது போல இருபுறமும் சரியும் வெள்ளைநரை மீசை. இதை நான் அவரிடம் சொன்னபோது ஒலியுடன் சிரித்து, "உங்கள் கற்பனையின் விற்பனத்தைக் காணும்போது கவிதையும் எழுதவரும் போலிருக்கே?" என்றார்.
"எனக்கு மரபுக் கவிதைகள் படிப்பது பிடிக்கும். பாரதியார் மிகவும் பிடித்த கவிஞர். ரொம்பக் கொஞ்சமா தேவாரமும் திருவாசகமும் கம்பனும் படிச்சிருக்கேன். நீங்கள் கற்றுக்கொடுத்தால் நான் யாப்பிலக்கணம் கற்க ரெடி."
"வேறென்ன உலகியல் சுவைகள் உங்களுக்கு?"
"தொலைக்காட்சியில் பழைய தமிழ் சினிமாக்கள், பாட்டுகளின் ஒளிபரப்பு, விவாதங்கள், ஆன்மீகத் தொகுப்புகள் பார்ப்பேன். தினமும் இரவு பத்துமணி வரை இன்டர்நெட்டில் பெண்களுக்கான மன்றங்களில் இடும் அஞ்சல்களை மேய்வேன். சமயத்தில் நானும் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வேன். இணையத்தில் உள்ள தமிழ்ச் சிறுகதைகளும் நாவல்களும் நிறையப் படிப்பேன். கார்த்திக் நெறைய ஆங்கில, தமிழ்க் கதைகள், சமயத்தில் தமிழ்க் கவிதைகள் படிப்பான். தினமும் என் மாலை வழிபாட்டில் என் தோழி கல்பனா சொல்லித்தந்த சின்னச் சின்ன சமஸ்கிருத ஸ்லோகங்களும், தமிழ் வழிபாட்டுச் செய்யுள்களும் முணுமுணுப்பேன். காலையில் அன்றைய கிழமையும் நாளும் சொல்லும் வண்ணம் தமிழ், சமஸ்கிருத ஸ்தோத்திரப் பாடல்கள் கேட்பேன். அபிராமி அந்தாதியும் கந்த சஷ்டிக் கவசமும் எனக்கு மிகவும் பிடித்த ஸ்தோத்திரப் பாடல்கள்... என்ன, ரொம்ப பயமுறுத்தி விட்டேனா?"
"இதுமாதிரிச் சுவைகள் எனக்கும் உண்டு தாயே! ஆனால் எந்தச் சுவையும் சுமையாகும் அளவுக்கு நான் வைத்துக்கொள்வதில்லை. தமிழ்க் கவிதைகளைப் படிக்கவும், எழுதவும், என் தமிழ் அறிவை விருத்திசெய்வதற்கும், தமிழ் பற்றி ஆராய்வதற்குமே எனக்கு நேரம் போதவில்லை! என் மகளும் நிறைய ஆங்கிலத் தமிழ்க் கதைகள் படிப்பாள். மரபிலும் புதுக்கவிதை பாணியிலும் கொஞ்சம் கவிதையும் எழுதவரும் அவளுக்கு."
"கம்பன் வீட்டுக் கட்டுத்தறியே கவி பாடும்போது மகள் என்றால் கேக்கணுமா?"
"கம்பனுக்கும் எனக்கும் வெகுதூரம் அம்மா. எனக்குப் புதுக்கவிதை பிடிக்காது. ஏதோ மூன்று மரபுக்கவிதைத் தொகுப்புகளையும், சங்ககால நிகழ்ச்சிகளை வைத்து ஒரு சின்னக் கதைப் பாட்டும் பதிப்பித்திருக்கிறேன், அவ்வளவுதான். கவிஞர் என்பதை விடப் புலவர் என்றழைக்கப் படுவதே எனக்கு விருப்பம்."
"புலவர் என்றால் புரவலர் யாரோ?"
"வேறு யார், எங்கள் கல்லூரித் தாய்தான். தனிவாழ்வில் ஒரு புரவலரைத் தேடிக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லலாம்."
மணிவண்ணன் சாரின் மனைவி தன் ஐம்பதாம் வயதில் இரண்டு வருடங்களுக்கு முன்பு காலமான போது அவர் மகளும் சென்னையில் கல்லூரிப் படிப்பை மேற்கொண்டதால் தொடர்ந்து மூன்று வேளையும் ஓட்டலில் சாப்பிடும் நிலைமை ஏற்பட்டு சில மாதங்களிலேயே அவர் மஞ்சள் காமாலை கண்டும் பின் வயிற்றுப் போக்காலும் மிகவும் அவதிப் பட்டாராம். அந்த சமயத்தில்தான் மகள் மிகவும் கவலைக்குள்ளாகி அவரை மறுமணம் செய்துகொள்ளுமாறு கட்டாயப் படுத்தினாளாம். எங்களைப் போலவே அவர் குடும்பமும் ’புலால் மறுத்தல்’ மேற்கொண்ட குடும்பம் என்று தெரிந்துகொண்டேன். பின்னர் அவர் கொஞ்சம் கொஞ்சமாக ஓரளவுக்கு சமையல் செய்யக் கற்றுக்கொண்டாலும், மகள் ’இந்தக் கஷ்டமெல்லாம் உனக்கெதுக்குப்பா, உனக்குத் தமிழ் ஆராய்ச்சிக்கே நேரம் போதவில்லை, அதனால நான் சொல்றபடி பேசாமல் மறுமணம் செய்துகொள்’ என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறாளாம்.
"ஏனம்மா, ஒரு தாயற்ற குழந்தை பெரும்பாலும் தனக்கு ஒரு சித்தி வருவது குறித்து அமைதியற்றே இருக்கும். நாளை சித்திக்கொரு குழந்தை பிறந்தால் தன் கதி என்னாகுமோ என்ற கவலை வரும் அல்லவா? நீ எப்படி விதிவிலக்காக இருக்கிறாய்?"
"ஆசையைப் பாரு! எனக்கு வர்ற சித்தி அம்பது வயசத் தாண்டின ஒரு பேரிளம் பெண்ணாக இருக்கணும்னுல நான் நெனைக்கறேன்! அப்பதானே இந்த மாதிரிப் பிரச்சினைகள் இருக்காது?" என்று அவர் மகள் அவரைக் கேலிசெய்தாளாம்.
"நான் மறுமணம் செய்துகொண்டால் நிச்சயமாக அந்த மாதிரியொரு பேரிளம் பெண், அதுவும் கணவணை இழந்து வாழ்பவளைத்தான் ஆலோசிப்பேன் மகளே."
"பின்னே என்ன தயக்கம்?"
"பார்க்கலாம். முருகன் சித்தம் அதுவானால் நடக்கட்டும். நானாக எதுவும் முனையப் போவதில்லை. ஏதேனும் குதிர்ந்தால் அப்போது பார்த்துக்கொள்ளலாம்."
முருகன் சித்தம் அதுவாகி அவன் அன்னை அபிராமியின் சித்தமும் அதுவானால் நடக்கட்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
*****
மணிவண்ணன் ஹேமா சொல்வது:
மனங்கள் ஒன்றியபின் இன்னும் ஏன் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு? எனவே, இருவரும் ஒரே மாதிரியான வாசகங்கள் அமைந்த கடிதம் தயாரித்து எங்கள் கைப்பட எழுதி கார்த்திக் வள்ளிநாயகி குழந்தைகளுக்குத் தபாலில் அனுப்புவது என்று தீர்மானித்துக்கொண்டு இப்படியொரு கடிதம் எழுதினோம்:
அன்புள்ள கார்த்திக்/வள்ளி,
இந்தக் கடிதத்தை ஆற அமரப் படித்து மனதில் ஆராய்ந்து பார்த்து முடிவுசெய்து பின் உன் கருத்தைத் தெரிவிக்கவும்.
அபிராமி/முருகன் அருளால் நீ வற்புறுத்தி வருவது போல் நான் மறுமணம் செய்துகொள்ளத் தகுந்த துணையிழந்த ஒருவராக எனக்குத் தோன்றி அவரைப் பற்றிக் கடந்த ஐந்தாறு மாதங்களாக மேல்விவரங்கள் அறிந்துகொண்டதில் உங்கள் எண்ணம் ஈடேறலாம் என்று தெரிகிறது.
அவர் பெயர் மணிவண்ணன். இந்த ஊர்க் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியர்களின் தலைவர். கொஞ்சம் கூட விகல்பமே இல்லாமல் பழகும் நல்ல, அரிய மனிதர். இரண்டு வருடங்களுக்கு முன் மனைவியை இழந்தவர். ஒரே மகள் வள்ளிநாயகி சென்னையில் கம்ப்யூட்டர் எஞ்சினீரிங் கடைசி வருடம் படிக்கிறாள். அவரது அண்ணா, ஆறு வயது மூத்தவர், கனடாவில் தன் மகனுடன் வசிக்கிறார். நம்மை மாதிரியே அவருக்கும் வேறு சொந்தங்கள் இல்லையென்று தெரிகிறது. நீ விழையும் பாதுகாப்புத் துணையாக எனக்கு இவர் அமையலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. நீ இப்போது கல்யாணம் செய்துகொளவதற்கில்லை என்று சொன்னதால்தான் நான் இந்த ஏற்பாட்டுக்கு உடன்படுகிறேன். உன் கருத்தை அறிந்து மேலே போகலாம்.
(அல்லது)
அவர் பெயர் ஹேமா. பெரிய கடைத்தெருவில் அரசு நிறுவன வங்கியொன்றில் மூத்த எழுத்தராக வேலை பார்க்கிறார். அவருடன் அதே வங்கியின் மண்டல அலுவலகத்தில் கணினி அதிகாரியாக வேலை பார்த்துவந்த அவர் கணவன் நான்கு வருடங்கள் முன்பு இயற்கை மரணம் அடைந்தாராம். ஒரே மகன் கார்த்திக் சென்னையில் மூன்று வருடங்களாக மென்பொருள் இயந்திரப் புலவராக வேலை செய்கிறான். அவர் கூடப் பிறந்த அக்கா அமெரிக்காவில் குடியேறிவிட்டாராம். ஹேமா ஓர் அமைதியான, கடவுள் பக்தியுள்ள பேரிளம் பெண். அவர் உனக்குத் தகுந்த சித்தியாக அமையலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. இருபத்தொரு வயது முடிந்தும் உன் திருமணத்திற்கு இப்போது அவசரம் இல்லை என்று நீ சொன்னதால்தான் நான் இந்த ஏற்பாட்டுக்கு உடன்படுகிறேன். உன் கருத்தை அறிந்து மேலே போகலாம்.
இப்படிக்கு
உன்னிடம் மிகவும் பிரியமுள்ள அம்மா/அப்பா
கடித்தை எழுதிவிட்டோமே தவிர அதை உடனே தபாலில் அனுப்புவது வேண்டாம் என்று இருவருக்கும் தோன்றியது. இரண்டு வாரங்கள் போனபின் மீண்டும் ஒருமுறை அதைப் படித்து இறுதி முடிவென உறுதியுடன் தீர்மானித்துப் பின் அனுப்பலாம் என்று தோன்றியது.
*****
வள்ளிநாயகி சொல்வது:
’கண்டதும் காதல்’ என்பதெல்லாம் பிதற்றல் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். கார்த்திக்கை சந்திக்கும் வரை!
என் இறுதி செமஸ்டர் தேர்வுக்கான ப்ராஜக்ட் அவர் வேலை பார்க்கும் கம்பெனியில் அதே கிளையில் அவர் வழிகாட்டுதலின் கீழ் எனக்கும் என் அறைத் தோழி வளர்மதிக்கும் கிடைத்தபோது கார்த்திக்கை முதன்முதலில் சந்தித்தேன். எந்தப் ’பந்தாவும்’ இல்லாமல் எளிதாகத் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். தான் அந்தக் கம்பெனியில் மூன்று வருட அனுபவம் உள்ளவர் என்றும் இன்னும் ஒரு வருடத்தில் அமெரிக்கா போக வாய்ப்புண்டு என்றும் சொன்னார். நாங்கள் கடினமாக உழைத்தால் தனக்குத் தெரிந்த ஸாஃட்வேர் எக்ஸ்பர்டீஸ் எல்லாமும் எங்களுக்கு K.T. (knowledge transfer) செய்யத் தயார் என்று கூறினார். இந்தப் ப்ராஜக்ட் நன்றாகச் செய்தால் அவர் கம்பெனியிலே வேலை வாய்ப்பு இருக்கலாம் என்று நம்பிக்கையளித்தார்.
கார்த்திக்கைப் பார்ப்பவர்களுக்கு அவர் உயரம்தான் முதலில் கண்ணில் படும். நானே சராசரிப் பெண்களை விட உயரம் என்றால் அவர் என்னைவிட மூன்றங்குலம் உயரமாக அஞ்சு எட்டு இருப்பார் என்று பட்டது. வழவழவென்று சந்தன நிறத்தோல் (மறைந்த அவர் தந்தை உபயமாம்). அறிவும் ஆர்வமும் இதுபோலச் சுடர்விடும் முகத்தை இப்போதுதான் காண்கிறேன். சுருள்முடியில் ஒரு சுருள் வலதுபக்கம் சரிந்திருப்பது பார்க்க வசீகரம். பட்டுக் கத்தரிப்பது போலப் பேச்சு. அதே சமயம் பாசாங்கு இல்லாத நேரடியான பேச்சு. வேலையில் குறைகளை அன்புடனும் அக்கறையுடனும் எடுத்துச் சொல்லும் பாங்கு.
வளர்மதிக்குச் சென்னையில் ஒரு தோழியர் பட்டாளமே இருந்ததாலும் அவர்களில் சிலர் எங்கள் கம்பெனி இருந்த வளாகத்தில் வேறு கம்பெனிகளில் வேலை பார்த்ததாலும் அவள் பெரும்பாலும் லஞ்ச் அவர்களுடன்தான் எடுத்துக்கொள்வாள். சமயத்தில் என்னுடன் இந்தக் கம்பெனி கேன்டீனில் சாப்பிடுவாள். இப்படி வளர்மதி இல்லாத ஒரு லஞ்ச் அவரில் அவருடன் சேர்ந்து சாப்பிட்டபோது தன்னைப் பற்றிய பர்சனல் விவரங்களைச் சொல்லி என்னைப் பற்றி விசாரித்தார். இருவரும் ஒரு பெற்றோரை இழந்த ஒற்றுமையும், இருவரும் மீதமிருக்கும் தன் பெற்றோரிடம் உயிருக்குயிராய் அன்பு செலுத்துவதும், அந்தப் பெற்றோர்கள் இருக்கும் நிலையில் அவர்களை மறுமணம் செய்துகொள்ளத் தூண்டி வருவதும் எங்கள் வாழ்வில் பொதுவாக இருப்பதைத் தெரிந்துகொண்டோம்.
கம்ப்யூட்டர் ஸாஃப்ட்வேர் அறிவை வளர்த்துக்கொள்வதிலும், வேலையில் கிடுகிடென்று முன்னுக்கு வரவேண்டும் என்ற உத்வேகத்திலும், மற்ற பொழுதுபோக்கு அம்சங்களான ஆங்கிலத் தமிழ் ஃபிக்ஶன், மூவீஸ், மியூசிக், கிரிக்கெட், நல்ல ஹோட்டல்களில் திருப்தியாக டின்னர் சாப்பிடுவது, ஊர் சுற்றுவது, ஷாப்பிங் என்று எல்லா விஷயங்களிலும் எங்கள் சுவைகள் ஒத்திருந்தன.
பேசுவது பழகுவதில் தொடர்ந்தபோது, வீக்-என்ட் நாட்களில் ஹோட்டல்களில் மதியம் சாப்பிடுவதிலும், சினிமாக்கள் செல்வதிலும் இருவரும் சேர்ந்தோம். நாங்கள் இருவரும் சேர்ந்து முதலில் பார்த்த மூவி மயிலை ஐனாக்ஸ் தியேட்டரில் ஜேம்ஸ் பான்டின் ’ஸ்கை ஃபால்’. கையில் பாப்கார்ன், கோலா சகிதம் சில்லிடும் தியேட்டர் ஹாலின் அமைதியில் உட்கார்ந்து பார்த்தபோது, பரபரப்பான அந்த மூவியின் பிரம்மாண்டம் எங்களை அசத்தியது. தியேட்டர்களிலோ கடற்கரையிலோ அல்லது பூங்காக்களிலோ சில்மிஷம் செய்வது என்னைப் போலவே அவருக்கும் பிடிக்காத விஷயம். ’டிஃப்ரெண்டா இருக்கீங்களே!’ என்று அவரைச் சீண்டியபோது ’காதல் என்பது உன்னதமான சமூகம் அமைக்க இயற்கை அளித்துள்ள வரப்பிரசாதம். கிணற்றுத் தண்ணீரை வெள்ளமா கொண்டு போய்விடும்?’ என்றெல்லாம் வசனம் பேசினார். கேரியரில் செட்டில் ஆகும்வரை பர்சனல் லைஃபில் திட்டமிட்டு ’அடக்கி வாசிக்கவேண்டும்’ என்ற அவரது கருத்து எனக்கும் உடன்பாடாக இருந்தது.
பிறகென்ன? இருவரும் கல்யாணம் செய்துகொள்ள நினைப்பதைப் பெற்றோர்க்குத் தெரியப்படுத்த முடிவுசெய்தோம். இஞ்சினியர்ங் கோர்ஸிலும் இந்த ப்ராஜக்டிலும் என் பெர்ஃபாமன்ஸ் பொறுத்து அவர் பரிந்துரைத்து எனக்கு அவர் கம்பனியிலேயே தகுந்த வேலை வாங்கித் தந்து என்னையும் தன்னுடன் அமெரிக்கா அழைத்துச் செல்லமுடியும் என்ற நம்பிக்கையும் திட்டமும் அவர்வசம் இருந்தது.
கார்த்திக் சொல்வது:
வள்ளியை முதலில் சந்தித்தபோதே ஐ ஃபெல் இன் லவ் வித் ஹர்! எனக்கேற்ற உயரமும், மாநிறமும், குழந்தை முகமும் அகன்ற விழிகளும் கூர்மையான அறிவும் கொண்டு வளையவந்தாள். வள்ளிநாயகி என்ற பெயர் கொஞ்சம் கர்னாடகமாகத் தோன்றினாலும், கார்த்திக்-வள்ளி என்ற பெயர்ப் பொருத்தத்தை வியந்தேன். ஒத்துப்போன எங்கள் உலகியல் ஈடுபாடுகள் எங்களை மேலும் இணைத்திட, அலுவலக நண்பர்களாக ஆரம்பித்த எங்கள் நட்பில் காதல் மலர்ந்து, கடந்த மூன்று மாதத்தில் நாங்கள் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு வாழ்க்கையில் இணைய முற்பட்டு பெற்றோர் சம்மதம் பெற விழைந்தோம்.
"வள்ளி, ஒண்ணு கவனிச்சயா? நீயும் நானும் தனித்தனியா நம்ப பெற்றோரை மறுமணம் செஞ்சிக்க வறுபுறுத்தினோம். இப்போ நீயும் நானும் வாழ்க்கைல இணைஞ்சா, உங்கப்பா எங்கள் வீட்டு மாடில குடிவந்து நம்ம பெற்றோர் இருவரும் சம்பந்தி முறையில ஒருத்தருக்கொருத்தர் இன்னமும் உதவியாகவும் பாதுகாப்பாவும் இருக்கலாம் இல்லையா?"
"ஸோ, நமக்கு பெற்றோர் சம்மதம் தர்றது பிரச்சனையா இருக்காதுன்னு சொல்றீங்க."
"நிச்சயம் இருக்காது. இதைவிட பெட்டர் ஸொல்யூஷன் அவங்களுக்கு வேறென்ன இருக்கமுடியும்? அந்த வகையில பாக்கறப்ப, உனக்கு ஒருவேளை எங்க கம்பெனில வேலை கிடைக்காட்டாலும் நாம கல்யாணம் செஞ்சிகிட்டு நான் உன்னை அமெரிக்காவுக்கு கூட்டிப் போகலாம். அல்லது உனக்கு சென்னைல நல்ல வேலை கிடைச்சு நீ கொஞ்ச நாள் வேலை பாக்க நெனச்சா, நீ இதே மாதிரி ரூம்ல தங்கிகிட்டு மாசம் ஒரு தடவை பெற்றோரைப் போய்ப் பார்த்து வரலாம் இல்லையா?"
"யு ஆர் ரைட். எல்லாம் நல்லா திட்டம் போட்டுச் செய்யறீங்க. உங்ககிட்ட எனக்குப் பிடிச்ச விஶயங்கள்ல இதுவொண்ணு."
"இதைக் கொஞ்சம் டிராமாடிக்கா செய்வோம். என்ன தெரியுமா? நாம ரெண்டு பேரும் சேர்ந்து நம் பெற்றோருக்குக் கைப்பட ஒரு லெட்டர் எழுதுவோம். என்ன சொல்றே?"
"நல்ல ஐடியா! நம்ப எண்ணத்தை இதைவிட ரத்தினச் சுருக்கமாச் சொல்ல முடியாது! நம்ப ரெண்டு பேர் வீடும் ஒரே தெருவில இருக்கறதால, கூரியர் ஆஃபீஸ்ல சொல்லி ஒரே நாள்ல உங்கம்மா எங்கப்பா ரெண்டு பேர்க்கும் லெட்டர் டெலிவரி செய்யச் சொல்வோம்."
*****
மணிவண்ணன் ஹேமா சொல்வது:
ஒருவழியாக உறுதியான், இறுதியான முடிவுடன் நாங்கள் எங்கள் கடிதத்தை ஒரு திங்கட்கிழமை யன்று கூரியர் மூலம் அனுப்பத் தீர்மானித்த போது, முந்தைய சனிக்கிழமை ரத்தினச் சுருக்கமான அந்தக் கடிதம் எங்களுக்குக் கிடைத்தது.
அன்புள்ள அம்மா/அத்தை,
மற்றும்
அன்புள்ள அப்பா/மாமா,
இந்தக் கடிதம் உங்களுக்கு மிகவும் அதிகப் பிரசங்கித்தனமாகத் தோன்றுவது இயற்கை. பெற்றோரைக் கேட்காமலேயே உங்கள் குழந்தைகள் வாழ்க்கையில் இணைய முற்படுவதுபோல் தோன்றி ’என்ன அர்ரகன்ஸ், போக்கிரித்தனம்’ என்றெல்லாம் மனதைக் குழப்பிக்கொண்டு கோபமோ கவலையோ படாதீர்கள். இந்தக் கடிதத்தை நாங்கள் சேர்ந்து எழுத முடிவு செய்தது உங்களுக்காகவே! உங்கள் நலன் பற்றிய எங்கள் கவலைக்கொரு தீர்வு கிடைத்த மகிழ்ச்சியை இருவரும் சேர்ந்து உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்காகவே!
நான் என் கடைசி செமஸ்டர் ப்ராஜக்ட் செய்வது கார்த்திக் மென்பொருள் இஞ்சினியராக வேலை பார்க்கும் கம்பெனியில், அதுவும் அவர் வழிகாட்டுதலில் என்ற தற்செயலான நிகழ்வு மூன்று மாதத்துக்கு முன்பு எங்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தியது. அந்த அறிமுகம் நட்பாக வளர்ந்து காதலாக மலர்ந்து நாங்கள் வாழ்க்கையில் இணைய நினைத்து உங்கள் சம்மதத்தைப் பெறவே இந்தக் கடிதத்தை எழுகிறோம். இப்போது பார்க்கும்போது வாழ்க்கையில் எதுவுமே ’ஜஸ்ட் கோயின்சிடன்ஸ்’ இல்லை, நிகழ்வது எல்லாமே ஒரு காரணத்தை முன்னிட்டே என்று படுகிறது.
அம்மா, அப்பா!
இந்த அட்வான்ஸ்ட் வயதில் மறுமணம் செய்துகொள்வது என்பது சுற்றியுள்ளோர்க்கு எவ்வளவு அபத்தமாகப் படும் என்ற மெயின் காரணத்தாலும், ஏற்கனவே இத்தனை வருடங்கள் மணவாழ்வில் ஈடுபட்டுக் குடும்பம் நடத்தி மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு, இயற்கையாக நேர்ந்த ஒரு பிரிவினால் தம் குழந்தையை முன்னிட்டு மீண்டும் மறுமணம் செய்துகொள்வதற்கு உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்வது எத்தனை சிரமமான, சாத்தியம் இல்லாத அல்லது சாத்தியம் மிகக் குறைந்த விஷயம் என்பதை உணராமலும் நான் உங்களை அதற்குக் கட்டாயப் படுத்தியதை இப்போது நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்த விஷயத்தில் எங்கள் பக்கம் உள்ள தவறைப் பொறுத்தருளி எங்களை மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஆறு மாதங்களுக்கு முன்பு எங்களுக்கு ஒருவரையொருவர் தெரிய நேர்ந்திருந்தால் உங்களுக்கு எந்தவித மன சஞ்சலமும் இல்லாமல் போயிருக்கும். இப்போதாவது நேர்ந்த இந்தக் கொடுப்பினை மூலம் உங்களை எங்களுக்கு உதவச் சொல்வதற்கு பதிலாக நாங்கள் உங்களுக்கு உதவ ஒரு வாய்ப்பினை அபிராமி முருகன் அருளியது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.
அம்மா, மாமா!
வள்ளியின் தந்தை நாமிருக்கும் கீழாண்டார் தெருவிலேயே குடியிருப்பதாகச் சொன்னாள். நாங்கள் வாழ்வில் இணைவதற்கு நீங்கள் சம்மதித்தால், வள்ளியின் தந்தை நம் வீட்டிலேயே மாடியில் குடிவந்து சம்பந்தி முறையில் நீங்கள் இருவரும் ஒருவருக் கொருவர் உதவியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கலாம், அது மிகவும் இயல்பாகவும் இருக்கும் அல்லவா? நாங்கள் எதிர்காலத்தில் உங்களுடன் இருக்கமுடியும் காலம் வரை இந்த ஏற்பாடு நீடிப்பது இருவருக்கும் சம்மதம்தானே?
அப்பா, அத்தை!
இருவத்தொரு வயது முடிந்து சில மாதங்களே ஆகியிருக்க, தான் உங்களுக்காகத் தான் சீக்கிரம் மணம் செய்துகொள்ள சம்மதிக்கிறேன் என்று நினைக்கவேண்டாம். கார்த்திக்கை உங்களுத் தெரிந்திருந்தால் நான் அவரிடம் என் மனதைப் பறிகொடுத்தது நியாயமே என்று உங்களுக்குப் படும். அதேபோல, கார்த்திக் அம்மாவின் உயிருக்குயிரான மகன் என்பதும் எனக்கு நன்கு தெரியும். ஆகவே நான் உங்கள் பெயரைக் காப்பாற்றி அத்தைக்கு உகந்த மருமகளாக நடந்துகொள்வேன்.
கடைசியாக, எங்கள் காதல் சங்ககாலத் தலவன்-தலைவி போன்ற களவொழுக்கத்தில் பிறந்ததோ, அல்லது இந்நாளைய மேம்போக்கான டேட்டிங் ஈடுபாடுகளில் வளர்ந்ததோ அல்ல. மூன்று மாதப் பழக்கத்தில் நாங்கள் எவ்விதத்திலும் வரம்பு மீறாமல் ஒருவரை யொருவர் புரிந்துகொண்டோம். உங்கள் முழு சம்மதத்துடன்தான் நாங்கள் மணம்செய்து கொள்வோம். நம் குடும்ப மரபில் இதுவும் ஒரு பெற்றோர் ஏற்பாட்டுக் கல்யாணமாகவே நீங்கள் கருதலாம். என்ன, மாப்பிள்ளை பெண்ணைப் பெற்றோர் அறிமுகப்படுத்தும் படலம் மட்டும் இல்லை, அவ்வளவுதான்!
அம்மா, மாமா!
உங்கள் இருவருக்கும் ஒருவரை யொருவர் தெரியாதிருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது ஒரே தெருவில் வசிப்பதால் பார்வையளவில் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. தவிர, அவர்கள் முன்பு பாலக்கரையில் குடியிருந்தபோது நம் வங்கியில்தான் பற்று-வரவு செய்துவந்ததால், இப்போது ஒரு கஸ்டமர் என்ற முறையில் இருவருக்கும் அறிமுகம் இருக்கலாம். எப்படியிருந்தாலும், அம்மாவும் அப்பாவும் இந்தக் கடிதம் மூலம் ஒருவரை யொருவர் சந்தித்து, எல்லாவற்றையும் நன்றாக டிஸ்கஸ் செய்து, எங்கள் விஷயத்திலும் தம் விஷயத்திலும் சேர்ந்து ஒரு நல்ல முடிவெடுத்து எங்களுக்கு பதில் போடுமாறு வணங்கிக் கேட்டுக்கொள்கிறோம். அந்த முடிவு சம்மதமாகவே இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
இப்படிக்கு,
உங்கள் பிரியமுள்ள,
கார்த்திக், வள்ளி
*****
மணிவண்ணன் ஹேமா சொல்வது:
குழந்தைகள் கேட்டுக்கொண்டபடி நான் கடிதத்தை எடுத்துக்கொண்டு ஹேமாவின் வீட்டுக்குச் சென்றேன். கடந்த இரண்டு வாரங்களாக நான் அவருக்கு யாப்பிலக்கணம் பயிற்றுவிப்பதால் சனிக்கிழமையான இன்று வகுப்பு நாள் என்பது வசதியாக அமைந்தது. தானும் கடிதத்தைக் கையில் வைத்துக்கொண்டு கதவைத் திறந்துவிட்ட ஹேமா நான் உள்ளே நுழைந்து அமர்ந்ததும் என் எதிரில் அமர்ந்துகொண்டு விக்கி விக்கி அழுதார்!
"என்ன தவறு செய்தோம் மணிவண்ணன் சார்! எப்படி நாம் இதுபோல் ஒரு சாத்தியம் இருப்பதை நினைத்துக்கூடப் பார்க்கவில்லை?" என்றார் கண்ணீர் பெருக்கி.
"நாம் நம் கடிதத்தை அனுப்பியிருந்தால் அது அவர்களுக்கு எவ்வளவு பெரிய இடியாக இருந்திருக்கும் என்று எண்ணிப் பார்க்கவே அச்சமாகவும் கலக்கமாகவும் இருக்கிறது. நான் எழுதிய கடிதம் இதோ. நீங்கள் எழுதியதையும் எடுத்து வாருங்கள். முதல் வேலையாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்துவோம். அந்தக் கனலில் நம் மனச் சஞ்சலங்களும், நமக்கே தெரியாமால் ஏதேனும் சபலம் உள்ளுக்குள் இருந்திருந்தால் அதுவும் எரிந்து சாம்பலாகட்டும்! இன்னொரு விஷயம். நாம் இருவரும் மறுமணம் என்ற பெயரில் இணைய நினத்தோம் என்பது எக்காரணம் கொண்டும் நம் குழந்தைகளுக்குத் தெரிந்துவிடக் கூடாது. நமக்குள் எழுந்த அந்த நினைவும் சாம்பலாக வேண்டும்."
"நிச்சயமாக சார். இதோ அந்தக் கடிதம், என் கைப்பையிலேயே வைத்திருக்கிறேன். நீங்கள் எங்கள் குடும்பத்தில் இணைந்தால் ஏற்படக்கூடிய மாறுதல்கள் பற்றிச் சிந்தித்தேன் சார். கார்த்தி வள்ளிநாயகி அண்ணன் தங்கையாவார்கள் என்ற எண்ணம்தான் எனக்கு முதலில் தோன்றியது. அப்போது கூட எனக்கு அவர்களை வாழ்வில் இணைத்தால் என்ன என்று தோன்றவில்லை, பாவி நான்!"
"எனக்கும் அந்த எண்ணம் மனதில் படவே இல்லையே அம்மா! இத்தனை வயதில் எனக்குள் அப்படியென்ன சபலம் என்று இப்போது குழம்புகிறேன். போகட்டும். நடந்ததும் நடக்க இருந்ததும் பக்க விளைவுகள் இல்லாமல் முடிந்தது முருகன், அபிராமி அருளால்தான் என்று மனதைத் தேற்றிக்கொள்வோம். நாம் சம்பந்திகளாக இணைவது உலகம் ஒப்புவதாகவும், மிகவும் இயல்பாகவும் இருக்கும். அதை எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டான் கார்த்திக்!"
"சிறியவர்கள் விருப்பப்பட்ட பெரியவர்களின் ஏற்பாட்டுக் கல்யாணம்! வள்ளியும் மிக அழகாகச் சொல்லிவிட்டாள்!"
"அப்படியானால் பெண்ணின் தந்தை என்ற முறையில் முதலில் நான் உங்களிடம் கேட்கிறேன்: என் மகள் திருவளர்ச் செல்வி வள்ளிநாயகியை உங்கள் மகன் திருவளர்ச் செல்வன் கார்த்திக் அவர்கள் மணம் செய்துகொள்ள உங்களுக்கு சம்மதம்தானே?"
"அதைவிட வேறென்ன பேறு எங்களுக்கு வேண்டும் மணிவண்ணன் சார்! வள்ளி எனக்கு ஏற்ற மருமகளாக அமைவாள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. கார்த்திக் பரிந்துரைப்பது போல நீங்கள் இருவரும் எங்கள் வீட்டு மாடியிலேயே குடிவந்து விடுங்கள்."
"மாப்பிள்ளை சொல்லை மனைவியில்லாத மாமனார் தட்ட முடியுமா? முருகன் திருவுளப்படி நடக்கட்டும்."
"சரியாக ஆராயாமல் நாம் ஏன் மறுமணம் என்ற இனிஷியேடிவ் எடுக்கத் துணிந்தோம் சார்? அதற்குக் குழந்தைகள் நலன் மட்டும்தான் காரணமா அல்லது அதைவிட நம் சுயநலம் காரணமா என்ற குற்ற உணர்வு மட்டும் என்னை அரித்துக்கொண்டே யிருக்கும் சார். அது அவ்வளவு சீக்கிரம் மறையாது."
"நம் சுயநலம் ஒரு காரணமாக இருக்கலாம் அம்மா! அது போன்ற சஞ்சலங்களையும் சபலங்களையும்தான் நாம் இப்போது எரியிட்டு விட்டோமே! வாழ்வில் நம் உண்மையான நிலையை இப்போதாவது நாம் தெளிவாகப் புரிந்துகொள்வேம்."
"அந்த உண்மையான நிலைமை என்பது என்ன சார்?"
"எப்போது குழந்தைகள் பிறந்தார்களோ அப்போதிருந்தே நாம் குறுகி ஒலிக்கும் சார்பு எழுத்துகள்தான் அம்மா. அவர்கள்தான் உயிரும் மெய்யுமாகிய முதல் எழுத்துகள். குழந்தைகளுக்கு மணப்பருவம் வந்து கல்யாணமானவுடன் அவர்கள் கணவனும் மனைவியுமாகி ஒருவரை யொருவர் சார்ந்து ஒலிக்கும் உயிர்மெய் எழுத்துகளாகிறார்கள். அப்போது அதுவரை கணவன்-மனைவி மற்றும் அப்பா-அம்மா என்ற அதிகாரத்துடன் உயிர்மெய் எழுத்துகளாக முழு மாத்திரையுடன் ஒலித்த பெற்றோர்கள் மாத்திரை குறைந்து குற்றியலுகரமாக, இசையும் பொருளும் நிறைக்கும் அளபெடைகளாக, ஐகார, ஔகாரக் குறுக்கங்களாக ஆகிவிடுவதைப் புரிந்துகொண்டால் கூட்டு வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்காது. அப்படியே இருந்தாலும அவை குறைவாக, எளிதில் மறைவதாக இருக்கும்."
"உண்மைதான் சார். இப்போது எனக்கு வாழ்வெனும் யாப்பின் இலக்கணம் புரியத் தொடங்கியிருக்கிறது. வாருங்கள் நம் சம்மதத்தை மறுதபாலில் குழந்தைகளுக்குத் தெரியப்படுத்துவோம். நான் வள்ளி மருமகளுக்கும் நீங்கள் கார்த்திக் மருமகனுக்கும் ஒரே மாதிரியான கடிதம் தயாரித்து எழுவோம். அதுதான் நாம் மேற்கொள்ள நினைத்த அசட்டுத்தனமான முயற்சிக்குப் பிராயச்சித்தம்", என்றார் ஹேமா, வழியும் கண்ணீரைத் துடத்தவண்ணம்.