சிறுகதை உத்திகள்
ரமணி(இலக்கிய வேல், மே 2017)
08. கதைச் சூழ்நிலை
கதைச் சூழ்நிலை என்பது கதை நிகழும் களம், காலம், சூழல் ஆகும். இவை முக்கிய பாத்திரத்தின் நிலை, எண்ணங்கள், உணர்வுகளை பாதிப்பதாகவும் அவற்றுடன் பொருந்துவதாகவும் அமையவேண்டும். அவ்வாறு அமைந்து, சூழல் கதையின் குரலையும் உணர்வையும் தாங்குவதாக இருந்தால், வாசகரைக் கதையினுள் ஈர்க்க முடியும்.ஒரு சித்திரத்தின் பின்னணி அசையா ஜடப்பொருளாகிய சித்திரப்படாம் (canvas). அதில் சித்திரத்தின் சூழலை ஓவியன் வண்ணங்களாலும் கோடுகளாலும் விளக்குகிறான். அதில் ஒலிகள் இல்லை, உணர்வு பார்ப்பவன் ரசனையைப் பொறுத்தது.
ஒரு திரைப்படத்தின் பின்னணி அசையும் ஜடப்பொருளாகிய திரை. இங்குச் சூழலை விளக்க இயக்குனன் சலனம், சித்திரம், வண்ணம், கோடுகளை ஒளியுடன், ஒலியுடன், இசையுடன் இழைக்கிறான். சூழலில் அவனுக்குள்ள பரிச்சயத்தைப் பொறுத்து, பார்ப்பவனின் உணர்வு வலு நிறைந்தோ குறைந்தோ அமையும். திரைப்படத்தில் காட்சிகள் மாறிக்கொண்டே இருப்பதால், பார்ப்பவன் பார்ப்பதை நிறுத்தி முன்னால் சென்றவற்றை மனத்தில் மீண்டும் அசைபோட்டு உணரமுடியாது. (படத்தட்டாகவோ கணினித் திரையிலோ பார்த்தால் முன்பின் செல்லமுடியும்.)
சூழலின் பின்னணி ஒரு சிறுகதையில்--பெருங்கதையிலும்--எப்படி அமைகிறது என்றால்,
வெள்ளித் திரையைவிடச் சிறந்த வாசகன் மனமானது,
- சித்திரம், வண்ணம், கோடுகள், ஒளி, ஒலியுடன் உணர்வையும் தன்னுள் எழுப்பி,
- வருணனை, உரைநடை, காட்சி இவற்றை,
- கதையாசிரியன் எதிர்பார்க்கும் அளவிலோ, அல்லது
- இன்னும் நுண்மையாகவோ ஈடுபட்டுத் தோய்கிறது.
- திரைப்படம் போலின்றி, அவ்வப்போது சூழல் விரிப்பில் நின்றும் நகர்ந்தும் திரும்பிவந்தும் புலன்-மன உணர்வுகளை நுகர்ந்து திளைக்கிறது.
சிறுவயதில் என்னை ஓட்டலுக்குச் சென்று இட்லி-சாம்பார் பார்சல் வாங்கிவர அனுப்பினார்கள். ’சாம்பாருக்காகத்தான் இட்டிலி என்று சொல்!’ என்று தந்தை சொல்லி அனுப்பியதன் தாத்பரியம் பிடிபடாமல் நான் ஓட்டலில் ’இட்டலிக்காகத்தான் சாம்பார்’ என்று மாற்றிச்சொல்லி, வாங்கிக் கட்டிவந்து, வீட்டில் வாங்கிக்கட்டிக்கொண்டேன்!
சிறுகதையும் அதன் சூழலும் இட்டிலி, சாம்பார்-சட்னி-மிளகாய்ப்பொடி போலத்தான்! சாம்பார் இட்லியாகச் செய்தால், பின்னணியான சாம்பாரின் சுவையில் இட்டிலியின் சுவை மூழ்கிவிடுகிறது! இதுவே இட்டிலியை விண்டு சட்னி வகைகள், மிளகாய்ப்பொடி சேர்த்தோ, சாம்பாரில் தோய்த்தோ உண்ணச் செய்தால் இட்டிலியின் தனிச்சுவை அதிகரிக்கிறது! சாம்பார்-சட்னி-மிளகாய்ப்பொடி இல்லாமல் இட்லியைத் தனியாக உண்ணமுடியாது என்றாலும், பின்னணி சேர்த்து உண்பதில் இட்லியின் சுவையே பிரதானமாக இருக்கவேண்டும்.
சூழ்நிலையும் வருணனையும்
சிறுகதையின் சூழ்நிலையை நிறுவதே வருணனை என்பதால் அதைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். பாத்திர வருணனை பற்றி விவரமாகக் ’கதைப் பாத்திரங்கள்’ இயலில் பார்த்தோம். இங்கு மற்ற வருணனைகள் பற்றி.விரித்துரைப்பது (discourse) என்பது புனைகதையில் நான்கு விதங்களில் அமையும்:
- பொது வருணனை (description),
- கதை வருணனை (narration),
- எடுத்துரைத்தல் (exposition), மற்றும்
- விவாதித்தல் (argumentation).
- அவள் முகவிலாசம், அங்க லாவண்யங்களை விவரித்தால் அது பொது வருணனை
- அவள் வாழ்க்கை, கதைக்குள் வந்தது பற்றி விவரங்களைச் சொன்னால் அது கதை வருணனை
- அவள் என்னுள் எழுப்பும் ஆசை, மரியாதை, அன்பு, தெய்வீக உணர்வுகளை விவரித்தால் அது எடுத்துரைத்தல்
- அவள் குன நலன்களையோ சிதைவுகளையோ சொல்லி ஆராய்ந்தால் அது விவாதித்தல்.
- குறிப்பால் உணர்த்துவதாக
- அடைமொழிகளால் ஆனதாக
- ஓர் எளிய சூசனத்தில் அறிவதாக
- நேரடியாக
- விளைவுகள் மூலம் உணர்த்துவதாக
- உவமை, உருவகம் போன்றோர் அணியைக் கொண்டதாக
- தன்மை, படர்க்கை போன்று கதைசொல்லும் நோக்கைப் பொறுத்ததாக
- ஏழு விதக் கூறுகளைக் கொண்டு எழுந்ததாக.
1. குறிப்பால் உணர்த்துவதாக
தி. ஜானகிராமன்: ’அதிர்வு’இருள் இல்லை. ஒளியில்லை. வெள்ளை இல்லை; கறுப்பு இல்லை; வேறு வர்ணமும் இல்லை. வேலியும் வரம்பும் மேலும் கீழும் இல்லாத வெறும் வெளியொன்றில் நிற்பது போலிருந்தது. அவளுடைய உடலில் பகபகவென்று பரந்துகொண்டிருந்த அதிர்வு மட்டும் நிற்கவில்லை. பற்றியிருந்த விரல் வழியாகப் பாய்ந்து அவள் உடல் முழுவதையும் நடுக்கி அதிர வைத்துவிட்டது.
2. அடைமொழிகளால் ஆனதாக
மௌனி: ’பிரபஞ்ச கானம்’அடிக்கடி அவன் தன் வாழ்க்கைப் புத்தகத்தைப் பிரித்து வெறித்துத் திகைத்து திண்ணையில் நிற்பதுண்டு. பின் புரட்டுதலில் கவலைக் கண்ணீர் படிந்து, மாசுபட்ட ஏடுகள், அவன் மனக்கண்முன் தோன்றும். முன்னே எழுதப்படாத ஏடுகளில், தன் மனப்போக்குக் கொண்டு எழுதுவதால், பளீரெனத் தோன்றுபவை சில, மங்கி மறைதல் கொள்ளுபவை சில. இரண்டுமற்று சில நேரத்தில், எதையோ நினைத்து உருகுவான்.
3. ஓர் எளிய சூசனத்தில் அறிவதாக
ஜெயகாந்தன்: ’சுமைதாங்கி’காலனின் தூதுவன்போல் ஒரு போலீஸ்காரன் அந்தக் காலனிக்குள் வந்து ஒவ்வொரு வீடாகக் கேட்டான். கேட்டான்... கேட்டானா?... அவன் தன் நெஞ்சும் உடலும் பதைபதைக்க ஒவ்வொரு வீட்டின் முன்பும் நின்று, "அம்மா! உங்க வீட்டிலே ஏதாவது கொழந்தை, ஆம்பளைக் கொழந்தை, பத்து வயசு இருக்கும், காக்கி நிசாரும் வெள்ளைச் சட்டையும் போட்டுக்கிட்டு... உண்டுங்களா?" என்று திணறினான் போலீஸ்காரன்.
4. நேரடியாக
சுஜாதா: ’இரண்டணா’"இரண்டணா ஒரு தனி நாணயம். பித்தளை. சதுர வடிவில் இருக்கும். ஒரணா போல அசிங்கமான நெளிநெளிகள்-இல்லாமல் கூர்மையான முனைகளை மழுப்பி ஒருபக்கத்தில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் தன் தலையில் கிரீடத்துடன் சைடுவாகாக பார்த்துக்கொண்டிருப்பார். அவர் கிரீடத்தை தூக்கிப் பார்த்தால் அப்போது தான் கிராப்பு வெட்டிக் கொண்டிருக்கலாம் என்று தோன்றும்."
5. விளைவுகள் மூலம் உணர்த்துவதாக
சுஜாதா: ’இரண்டணா’நான் சொல்லும் நாட்களில் சீரங்கம் திருச்சி பஸ் கட்டணம் இரண்டணா. பெனின்சுலர் கபேயில் தோசை இரண்டணா . கிருஷ்ணன் கோட்டை வாசலில் இலந்தைப்பழம் லேக்கா உருண்டை-கொடுக்காப்புளி எல்லாமே காலணாதான் அதாவது இரண்டணாவில் எட்டில் ஒரு பங்கு.
6. உவமை, உருவகம் போன்றொரு அணியைக் கொண்டதாக
சுஜாதா: ’அம்மா மண்டபம்’திகட்டியது பரமேஸ்வரிக்கு. டூரிஸ்ட் பஸ்ஸில்தான் எத்தனை குதூகலம்! வாத்தியக் கோஷ்டி, இளமைக் கலாட்டா, உள்ளத்தை, நெஞ்சத்தை வலிக்காமல் பற்றவைத்ததுபோல், ஐஸ் வைத்து ஜ்வாலைகள் அமைத்ததுபோல். அல்லது கடற் காற்றில் மைசூர் பாக்கு செய்ததுபோல், கிறுக்குப் பிடித்த கன்றுக்குட்டி சந்தோஷங்கள்...
சுஜாதாவில் வருணனைகள் போல்-எனும் சொல்லால் உவமைகளாக அமைந்தாலும், அவை hyperbole என்னும் உயர்வு நவிற்சி அணியைச் சார்ந்தவை.
7. தன்மை, படர்க்கை போன்று கதைசொல்லும் நோக்கைப் பொறுத்ததாக
முன்னிலை நோக்கில் சிறுகதை பெரும்பாலும் எழுதப்படுவதில்லை. சிறுகதையைப் படர்க்கை நோக்கில் எழுதும்போது ஆசிரியர் கடவுளின் பார்வையில் எதையும் எங்கும் கண்டு விவரிக்கலாம். தன்மை நோக்கில் அதே கதையை எழுதும்போது அந்த ’நான்’ அறிந்தவற்றை மட்டுமே ஆசிரியர் விவரிக்கமுடியும்.கதை சொல்லும் நோக்கு எதுவாயினும் ஆசிரியர் ஓர் உச்சநிலையில் இருந்துகொண்டு எல்லாவற்றையும் பார்ப்பது போலவோ, நெடுஞ்சாலைப் பயணத்தில் பார்ப்பவரும் பொருட்களும் நகர்வது போலவோ, சாலையின் ஓரத்தில் நிலையாக நிற்பவன் தன்னைக் கடந்து வாகனங்கள் செல்லுவதைக் காண்பதுபோல், பொருட்களைச் சலனத்தில் காண்பதாகவோ, அல்லது இவற்றின் கலவையாகவோ வருணனை அமையலாம்.
8. ஏழு விதக் கூறுகளைக் கொண்டு எழுந்ததாக
சிறுகதையின் வருணனை ஏழு விதமான கூறுகளை உள்ளடக்கியது: உற்றுநோக்கல், வாசிப்பு, கற்பனை, ஒப்புமை, தேர்வு, ஒருங்கிணைப்பு, சுருக்கம். புதிதாக எழுதுவோரும், தொடக்கநிலையில் உள்ளோரும் இந்த ஏழு விதத்திலும் தம் கதைசொல்லும் ஆற்றலை வளர்த்துக்கொள்ளும்போது, அவற்றின் உந்துதலில் எழும் சிறுகதைகள் சிறப்பாக அமையும் வாய்ப்பு அதிகரிக்கிறது.வருணனையின் விவரங்கள் சொன்னபின், இந்த இயலின் தொடக்கத்தில் சொன்னதுபோல், களம், காலம், பின்னணிச் சூழல் இவற்றுடன் கதைச் சூழ்நிலைக்கு உள்ள தொடர்பைக் காண்போம்.
கதைச் சூழ்நிலைக் கூறுகள்: களம்
கதை நிகழும் களத்தைப் பற்றிச் சொல்லும் விவரங்கள் அதன் வட்டார வண்ணத்தில் மொழி, பழக்கவழக்கங்கள், உடை போன்ற எல்லாவற்றையும் தொடுவதாகப் பரந்திருக்கவேண்டும். இரண்டு உதாரணங்கள்சுந்தர ராமசாமி: ’பிரசாதம்’
எழுபத்திமூன்று நாற்பத்தியேழு சுற்றிச் சுற்றி வந்தான். அன்றிரவுக்குள் அவன் ஐந்து ரூபாய் சம்பாதித்தாக வேண்டும்.
...
சந்திலிருந்து ஒரு குதிரை வண்டி திரும்பி மெயின் ரஸ்தாவில் ஏறிற்று. சாரதி சிறுபயல். மீசை முளைக்காத பயல். அவனும் விளக்கேற்றி வைத்திருக்கிறான்! வண்டி அருகே வந்தது.
"லேய், நிறுத்து." குதிரை நின்றது.
"ஒங்கப்பன் எங்கலே?" “வரலே."
"ஏனாம்?" "படுத்திருக்காரு/"
"என்ன கொள்ளே?" "வவுத்தெ வலி."
"எட்டணா எடு." "என்னாது?"
"எட்டணா எடுலே." "ஒம்மாண இல்லை."
"ஒங்கம்மெ தாலி. எடுலே எட்டணா."
"இன்னா பாரும்" என்று சொல்லிக்கொண்டே பயல் நுகக்காலில் நின்றுகொண்டு வேஷ்டியை நன்றாக உதறிக் கட்டிக்கொண்டான்.
"மோறையைப் பாரு. ஓடுலெ ஓடு. குதிரை வண்டி வச்சிருக்கான் குதிரை வண்டி. மனுசனாப் பொறந்தவன் இதிலே ஏறுவானாலே."
குதிரை நகர்ந்தது.
சுஜாதா: குண்டு ரமணிரமணி பார்த்து, சட்டி மூஞ்சி நிறையச் சிரித்து, ‘வாரும் கிருஷ்ணா! மத்தெடுத்துண்டு வரேள்! வாரும்!’ என்றவள், நாணு சற்றும் எதிர்பாராத விதத்தில் மத்தைப் பிடுங்கி உடைத்துப் போட்டு, அவரை அலாக்காகத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டாள். அப்புறம் எங்கிருந்தோ வந்த வெறியில் அப்படியே அவரைப் பந்தாடுவது போலக் கீழே எறிந்துவிட்டுப் புடைவை மண்ணைத் தட்டிக்கொண்டு புறப்பட்டுச் சென்றாள்.
நாணு வெலவெலத்துப் போய்,இதற்கப்புறம் இரண்டுநாள் ஜுரமாய் படுத்திருந்தாள். குஞ்சம்மாள் அவருக்கு ராத்திரியெல்லாம் ‘தூக்கித் தூக்கி’ப் போடுவதாக அருணாச்சல டாக்டரைக் கூப்பிட்டச் சொன்னாள்.
கதைச் சூழ்நிலைக் கூறுகள்: காலம்
கால விவரணம் நான்கு விதங்களில் அமையும்: கடந்த, நிகழ், எதிர் போன்ற பொதுக்காலம்; பருவம்; பகல், இரவு போன்ற வேளை; வரையறுத்த நேரம்.சரித்திரக் கதைகள் போலோ அல்லது வேறு வகையிலோ கடந்த காலத்தில் அமையும் சிறுகதைகளில் அக்காலத்திற்கு ஒவ்வாத நிகழ்வுகளோ, வருணனைகளோ இருக்காது. சமகாலக் கதைகளில் இக்காலச் சமூக, அரசியல், தனிமனிதச் சூழலில் நிகழ்வுகளும் வருணனையும் அமையும். அதீத கற்பனை (fantasy), அறிவியல் கதைகள் பெரும்பாலும் எதிர்காலத்தில் அமைந்தாலும் கதையின் நிகழ்வுகளும் வருணனையும் ’லாஜிகல்’-ஆக அமையும்.
கதை நிகழும் பருவம் நேரடியாகவோ, குறிப்பாகவோ, கதைமாந்தரின் உடல்-மன உணர்வுகளாலோ வருணிக்கப்படும். கதை நிகழ்வுகளின் வேளையும் அவ்வாறே.
கதையில் வரையறுத்த நேரம் சில மணிகளாக, ஒன்று அல்லது மேற்பட்ட நாட்களாக, மாதங்கள்-வருடங்களாகக் கூட இருக்கலாம். பொதுவாகக் கதை நிகழும் நேரம் குறைந்த அளவில், கதை முடிவுக்கு வெகுதூரத்தில் இல்லாததாகவும் அமையும்.